* கருநாடக மாநில அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சி தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கொடும் செயல்!
* ‘‘மேகதாது அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது’’ என்று முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது வரவேற்கத்தக்கது!
ஒரு நாள் முழு கடையடைப்பை நடத்தி
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த எதிர்ப்பைக் காட்டவேண்டும்!
கருநாடக மாநில அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சி தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கொடும் செயல்! ‘‘மேகதாது அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது’’ என்று முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது வரவேற்கத்தக்கது! ஒரு நாள் முழு கடையடைப்பை நடத்தி தமிழ்நாட்டின் எதிர்ப்பைக் காட்டவேண்டும்! அனைத்துக் கட்சிகள், இயக்கங்களை ஒருங்கிணைத்து திராவிடர் கழகம் இதற்கான முன்னெடுப்பை எடுக்கும்! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும்
கொடும் செயல்!
கருநாடக மாநில அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சி என்பது தமிழ்நாட்டு விவசாய தளத்திற்கு மிகப்பெரிய தடுப்புக் கொடுமையாக ஆகும் என்பதாலும், ஏற்கெனவே காவிரி நடுவர் மன்றமும், நதிநீர் மேலாண்மை ஆணையமும் தமிழ்நாட்டிற்கு வழங்க உத்தரவிட்ட நீர்ப்பங்கீட்டைக்கூட சரி வர கருநாடகம் வழங்காமை கொடுமை தொடரும் நிலை யில், மேகதாது அணையைக் கட்ட ஒன்றிய அரசு அனுமதித்தால், தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கொடும் செயலாக ஆகிவிடும் என்ற உணர்வு டெல்டா விவசாயிகளின் கவலையாக இருக்கிறது.
31.5.2026 அன்று திராவிடர் கழகம் சார்பில் அறப்போராட்டம் நடைபெற்றது!
திராவிடர் கழகம் தொடர்ந்து வற்புறுத்தி, வாதாடி வந்ததையும், போராட்டக் களத்தில் முதல் கட்ட அறப்போர் கிளர்ச்சியை கீழத்தஞ்சை திருவாரூரில் 31.5.2026 அன்று நடத்தியதையும் யாரும் மறந்திருக்க முடியாது!
வாதாடியதைத் தாண்டி, போராடியும் வரும் கட்டத்தில் அரசியல் கட்சி அல்லாத நம்மைப் போன்ற வர்கள், விவசாய அமைப்புகளை ஒருங்கிணைத்து, கூட்டு முயற்சிகளில் தேவைப்படும் மக்கள் சார்ந்த நடவடிக்கைகளை தோழர்கள் மேற்கொண்டு வருகின்றனர் (பிரச்சாரம் உள்பட பலவற்றில்).
ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது
வரவேற்றுப் பாராட்டத்தக்கதாகும்!
இன்று (19.6.2026) தமிழ்நாடு சட்டப்பேரவையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் முன்மொழிந்த, மேகதாது அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்ற தீர்மானத்தின்மீது நடைபெற்ற விவாதத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உள்பட காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் முதல் அத்துணைக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரே குரலில் தீர்மானத்தை ஆதரித்து உரையாற்றினர். ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது வரவேற்றுப் பாராட்டத்தக்கதாகும்.
தமிழ்நாட்டிலும் ஒரே அணியாக நின்று,
வென்று காட்டவேண்டும்
கருநாடகத்தில், காவிரி நீரைத் தமிழ்நாட்டிற்கு (நியாயமாகக்கூட) வழங்கிட எதிர்ப்புக் காட்டுவதில், அனைத்துக் கட்சிகளும், முன்னாள், இந்நாள் முதல மைச்சர்கள், அமைச்சர்கள் உள்பட, ஒரே அணியில், ஒரே குரலில் இருப்பதுபோலவே, தமிழ்நாட்டிலும் ஒரே அணியாக நின்று, வென்று காட்டவேண்டும். இன்றைய சட்டப்பேரவை நடப்பு ஒரு நல்ல தொடக்கமாகும், தொடரவேண்டும்!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் கருத்து வரவேற்கத்தக்கதாகும்!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவர்கள் கூறிய ஒரு கருத்து, ஆட்சியாளர்களின் சிந்தனைக்கும், செயலுக்கும் உரியதாக்கப்படல் முக்கியம். தமிழ்நாட்டு அனைத்து சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பி னர்கள் ஓரணியாக, டில்லித் தலைநகருக்குச் சென்று, மேகதாது அணைக்கட்டும் கருநாடக அரசின் முடிவிற்கு, தமிழ்நாட்டோர் தெரிவிக்கும் எதிர்ப்பில் உள்ள நியா யத்தை ஒன்றிய அரசுக்கு, பிரதமர் மற்றும் முக்கிய தொடர்புக்குரியவர்களையும் சந்தித்து எடுத்துரைக்க வேண்டும்.
ஒரு நாள் முழு கடையடைப்பு நடத்தப்படவேண்டும்!
மக்களின் பேராதரவு, பங்களிப்பைக் காட்ட, குறைந்தது காவிரி டெல்டா பகுதியில், ஒரு நாளைக் குறிப்பிட்டு, முழு கடையடைப்பை மாலை 5 மணிவரை நடத்தி, ஓட்டுமொத்தமாக மேகதாது அணை கட்டும் முயற்சி, தமிழ்நாட்டு விவசாயப் பொதுமக்களின் வயிற்றில் அடிக்கும் வன்கொடுமை என்பதை ஒன்றிய அரசுக்கு உணர்த்தவேண்டும்.
ஓர் ‘‘அரசியல் கட்சி’’ அழைத்தால், மற்ற அரசியல் கட்சிகள் யோசிக்கக் கூடும்.
எனவேதான், அரசியல் கட்சியாக அல்லாத, தேர்த லிலே போட்டியிடாத ஓர் இயக்கத்தின் சார்பில் இந்த வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறோம்.
அருள்கூர்ந்து, வணிகப் பெருமக்களும், பொதுமக்க ளும் இதற்கு முழு ஆதரவினைத் தந்து, மக்கள் மன்றம் ஒருமித்த கருத்துடன் ஓரணியில் திரண்டுள்ளது என காட்டவேண்டிய கடமை எல்லோருக்கும் உண்டு.
விரைவில், அனைவருக்கும் அன்பு வேண்டுகோளாக, அறப்போராட்டம் நடைபெறும் தேதி குறித்து திராவிடர் கழகம் அறிவிக்கும்.
புதிய அரசுக்கு வேண்டுகோள்!
முன்பும்கூட, காவிரி நதிநீருக்காகத் திராவிடர் கழகம் இம்மாதிரி விடுத்த வேண்டுகோளுக்கு, தமிழ்நாடு அரசே முன்வந்து நாடு தழுவிய அளவில் போராட்டத்திற்கு ஆதரவினைத் தந்த முன்மாதிரி உண்டு என்றும் நினைவு படுத்துகிறோம். அது நடைபெற்றது 1992, செப்டம்பர் 14 அன்று. அரசுப் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்புக்கூட அளிக்கப்பட்டதுண்டு. இத்தகு ஒரு வியத்தகு சாதனையைத் திராவிடர் கழகம் நடத்திக் காட்டியது. தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும், அதே போன்றதோர் வேண்டுகோளாக இதனைத் திராவிடர் கழகம் முன்வைக்கிறது!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
19.6.2026
