பிரமிடின் இயற்கையான அதிர்வெண் 2.0 முதல் 2.6 ஹெர்ட்ஸ் ஆக இருக்கும்போது, அதன் கீழ் உள்ள நிலப்பகுதியின் அதிர்வெண் வெறும் 0.6 ஹெர்ட்ஸ் ஆக உள்ளது. இந்த முற்றிலும் மாறுபட்ட அதிர்வெண் காரணமாக, இடிந்து விழாமல் பாதுகாக்கப்படுகிறது.
கீசாவின் மகா பிரமிட் கட்டி முடிக்கப்பட்டு 4,500 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. நீண்ட வரலாற்றில் அது பல சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, கடந்த 1992-ஆம் ஆண்டு ஏற்பட்ட 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் போது, பிரமிடின் வெளிப்புறக் கற்கள் சில சேதமடைந்தாலும், அதன் மய்யப்பகுதி எவ்வித பாதிப்பும் இன்றி அப்படியே உறுதியாக இருந்தது.
இவ்வளவு மாபெரும் ஒரு கட்டடக்கலை அதிசயத்தால் இத்தனை நூற்றாண்டுகளாக நிலநடுக்கங்களை எப்படித் தாங்கி நிற்க முடிகிறது என்பது பல ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்களைக் குழப்பி வந்த ஒரு கேள்வியாகும். தற்போது இதற்கு விடை காணும் வகையில், எகிப்திய புவி இயற்பியலாளர் ஆசெம் சாலாமா அவரது குழுவினர் இணைந்து நடத்திய ஆய்வு, புகழ்பெற்ற அறிவியல் இதழான ‘சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்’-ல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வு, நிலநடுக்கங்களின்போது பிரமிட் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தும், சுவாரசியமான வடிவமைப்பு ரகசியங்கள் குறித்தும் முக்கியத் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
ஆய்வில் விஞ்ஞானிகள் ஒரு முக்கிய விஷயத்தைக் கண்டறிந்துள்ளனர். பிரமிடின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என மொத்தம் 37 இடங்களில் நிலவும் பின்னணி அதிர்வுகளை அவர்கள் அளவிட்டனர். இதற்காக காற்று, போக்குவரத்து, மனித நடமாட்டம் மற்றும் பூமியின் இயற்கையான அதிர்வுகளைப் பதிவு செய்யும் ‘HVSR’ எனப்படும் அதிநவீன தொழில்நுட்ப முறையை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர். அப்போது, பிரமிட் இயற்கையாகவே அதிர்வுறும் அதிர்வெண் 2.0 முதல் 2.6 ஹெர்ட்ஸ் வரை இருப்பது தெரியவந்தது. ஆனா, அதே நேரத்தில் பிரமிடின் கீழ் இருக்கும் சுற்றியுள்ள நிலப்பகுதியின் முதன்மை அதிர்வெண் வெறும் 0.6 ஹெர்ட்ஸ் ஆக மட்டுமே உள்ளது.
அறிவியல் ரீதியாக, நிலநடுக்கத்தின் போது பூமியின் அதிர்வெண்ணும், ஒரு கட்டடத்தின் அதிர்வெண்ணும் ஒன்றாகப் பொருந்தினால், அது அந்த கட்டடத்தின் அதிர்வை பல மடங்கு அதிகரிக்கும். இதற்கு ‘ரெசோனன்ஸ்’ (Resonance – ஒத்ததிர்வு) என்று பெயர். இது நடந்தால் கட்டடம் சுக்குநூறாக உடைந்துவிடும். ஆனால், பிரமிடில் பூமியின் அதிர்வெண்ணும், பிரமிடின் அதிர்வெண்ணும் முற்றிலும் மாறுபட்டு இருப்பதால், நிலநடுக்கத்தின் ஆற்றல் பிரமிடுக்குள் எளிதாகக் கடத்தப்படுவதோ அல்லது அதிகரிக்கப்படுவதோ இல்லை. இதுவே பிரமிடு இடிந்து விழாமல் பாதுகாக்கிறது.
பிரமிடின் உட்புறக் கட்டமைப்பு, நிலநடுக்க அதிர்வுகளைத் தாமாகவே கையாண்டு, கட்டடத்திற்குப் பாதிப்பு ஏற்படும் முன்பே அந்த ஆற்றலைத் தணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ஆய்வில் உறுதியாகியுள்ளது. பிரமிடின் உள்ளே இருக்கும் அரசரின் அறைக்கு சற்று மேலே ‘ரிலீவிங் சேம்பர்ஸ்’ (Relieving chambers) அமைந்துள்ளன. இந்த அறைகள் நிலநடுக்கத்தின்போது அதிர்வுகளை பெருமளவு குறைத்து, மிகச்சிறந்த ‘ஷாக் அப்சார்பர்’ போலச் செயல்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.
நிலநடுக்க அதிர்வுகள் மட்டுமின்றி, பிரமிடில் பயன்படுத்தப்பட்டுள்ள கடினமான ‘கிரானைட்’ (Granite-கருங்கல்) பாறைகள் நிலநடுக்க அலைகள் தங்களுக்குள் உறிஞ்சிக் கொள்ளாமல், அவற்றை எதிரொலித்து (Reflect) வெளியேற்றுகின்றன. இந்த கிரானைட் கற்களில் குவார்ட்ஸ் படிகங்கள் அதிக அளவில் இருப்பதாலும், அவற்றின் அடர்த்தியான மூலக்கூறு அமைப்பாலும் இவை ஒருவித ஒலியியல் விளைவுகளையும் (Acoustic effects) ஏற்படுத்துகின்றன.
நவீன கட்டடக்கலை வடிவமைப்புகள் வெறும் அதிர்வெண்களைப் பொறுத்து மட்டும் அமைவதில்லை; நிலநடுக்கத்தின் தீவிரம், கட்டடத்தின் எடை, அதன் நெகிழ்வுத்தன்மை (Flexibility) மற்றும் கட்டடத்தின் புவியீர்ப்பு மய்யம் (Centre of mass) ஆகியவற்றையும் பொறுத்தே அமைகின்றன. அந்த வகையில், கீசா பிரமிடுக்கு மிகச்சிறந்த மற்றும் சாதகமான ஒரு கட்டமைப்பு உள்ளது. அதன் அகலமான அடிவாரம் (Broad base), மிகக் குறைவான உயரத்தில் அமைந்துள்ள புவியீர்ப்பு மய்யம் (Low centre of mass), மேல்நோக்கிச் செல்லச் செல்ல குறுகலாகும் வடிவம் (Tapering form) மற்றும் துல்லியமான சமச்சீர் வடிவமைப்பு (Symmetrical plan) ஆகியவை நிலநடுக்கங்களை மிக எளிதாக எதிர்கொள்ள உதவுகின்றன. 4500 ஆண்டுகளுக்கு முன்பே பிரமிடைக் கட்டிய பண்டைய பொறியாளர்கள், நிலநடுக்கங் களைத் தாங்கும் மிகச் சிறந்த மற்றும் திறமையான பொறியியல் நுட்பங்களைப் பயன்படுத்தி இதனை உருவாக்கியுள்ளனர் என்பதை இந்த ஆய்வு நிருபித்துள்ளது.
