சென்னை, ஜூன் 17- ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) இந்திய நிர்வாகப் பணி (அய்.ஏ.எஸ்.), இந்திய காவல் பணி (அய்.பி.எஸ்.), இந்திய வெளியுறவுப் பணி (அய்.எப்.எஸ்.) உள்ளிட்ட உயர்நிலை குடிமைப் பணிகளுக்கான தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டுக்கான (2026ஆம் ஆண்டு) சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 1016 பதவிகளை நிரப்புவதற்கான அறி விப்பை கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அறிவித்தது.
இத்தேர்வுக்கு இந்தியா முழுவதும் இருந்து சுமார் 8 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த மாதம் 24ஆம் தேதி நடந்தது.
முதல்நிலை தேர்வு இந்தியா முழுவதும் 79 நகரங்களில் நடந்தது. முதல்நிலை தேர்வு காலை மற்றும் மாலை என இரண்டு அமர்வுகளாக நடந்தது.
காலையில் நடந்த பொது அறிவுத் தாள் கடினமாக இருந்ததாகவும், பிற்பகல் நடைபெற்ற திறனறித் தேர்வு ஒப்பீட் டளவில் எளிதாக இருந்த தாகவும் தேர்வர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் முதல் நிலை தேர்வுக்கான முடிவினை ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் தனது இணைய தளமான www.upsc.gov.in, www.upsconline.nic.inஇல் வெளியிட்டுள்ளது.
மேலும், முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்ற வர்கள் முதன்மைத் தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை வருகிற ஜூன் 19 முதல் 28ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.
சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வில் இந்தியா முழுவதும் 13,343 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 656 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
