தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு நிலைமை கவலைக்கிடமாக உள்ளது! த.வெ.க. அரசுக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!

2 Min Read

சென்னை, ஜூன் 17– தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலைமை மிகுந்த கவலைக்குரிய கேள்விகளை எழுப்புகின்றன என்று தவெக அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மமக தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா நேற்று (16.6.2026) வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து வெளிவரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளன.

சட்டம் ஒழுங்கு நிலைமை

நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னை, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், தாம்பரம், பூவிருந்தவல்லி உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்றுள்ள கொடூரச் சம்பவங்கள், தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து மிகுந்த கவலைக்குரிய கேள்விகளை எழுப்புகின்றன. “தமிழ்நாட்டில் இன்று எத்தனை பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுள்ளன?” என்று மக்கள் வேதனையுடனும் பதற்றத்துடனும் கேட்கும் சூழல் உருவாகியுள்ளது.

வளர்ச்சி, முதலீடு, தொழில்நுட்ப முன்னேற்றம் என பெருமையாகப் பேசப்படும் தமிழ்நாட்டில், பெண்களும் பெண் குழந்தைகளும் பாதுகாப்பற்ற சூழலில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது எந்த அரசுக்கும் முதன்மை பொறுப்பாகும். “சிங்கப்பெண்” போன்ற திட்டங்களை அரசு மிகுந்த விளம்பரத்துடன் அறிவித்திருந்தாலும், பெண்களும் குழந்தைகளும் அச்சமின்றி வாழும் சூழல் புதிய ஆட்சியில் உருவாகாதது கவலைக்குரியது.

குற்றங்கள் நடந்த பின் நடவடிக்கை எடுப்பதை விட, அவை நடைபெறாத சூழலை உருவாக்குவதே அரசின் உண்மையான கடமையாகும். பள்ளிகள், பொது இடங்கள், போக்குவரத்து மய்யங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பை பலப்படுத்துவதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

ஒரு நாகரிகமான சமூகத்தின் உண்மையான அளவுகோல் அதன் பெண்களும் குழந்தைகளும் எவ்வளவு பாதுகாப்பாக வாழ்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. அந்த அடிப்படை பொறுப்பை நிறைவேற்றுவதில் அரசு தோல்வியடையக் கூடாது. பெண்கள் அச்சமின்றி வாழவும், குழந்தைகள் பாதுகாப்பாக வளரவும் முடியாத சூழல் நீடித்தால், அது எந்த அரசுக்கும் பெருமை அல்ல; அந்த அரசின் மிகப்பெரிய தோல்வியாகவே வரலாறு பதிவு செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *