மிகுந்த விழிப்போடும், எச்சரிக்கையோடும், கவனத்தோடும், தேவையான கண்டிப்போடும் ஆட்சி நடத்த வேண்டியது புதிய ஆட்சியாளர்களுடைய கடமை!
மிகுந்த விழிப்போடும், எச்சரிக்கையோடும், கவனத்தோடும், தேவையான கண்டிப்போடும் ஆட்சி நடத்த வேண்டியது புதிய ஆட்சியாளர்களுடைய கடமை! ஆள்வோர் யாராயினும், அது மக்கள் நல அரசாகவே இருக்க வேண்டும்! தீயணைப்புத் துறைக்குக் கால அவகாசம் உண்டா? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் ஒரு மாத காலம் நடந்திருக்கிறது த.வெ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி! 2021 முதல் 2026 வரை நடைபெற்ற தி.மு.க.வின் ‘திராவிட மாடல்’ ஆட்சி பல்வேறு சாதனைகளைப் பல்வேறு துறைகளிலும் ஆற்றியிருந்தது. எனினும், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தது. பிரபல நடிகர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 இடங்கள் கிடைத்தன. பின்னர் பலரின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியமைத்தது த.வெ.க.!
ஆட்சிக்கு வரும் முன், கடந்த ஆட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், அவற்றைக் களைய உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அளவில் பெண்களுக்குப் பாதுகாப்பான முதல் மாநிலம், முதல் நகரம் சென்னை, மூன்றாம் நகரம் கோவை என்று புள்ளிவிவரம் சொன்னாலும், ‘பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ என்பதாகத் த.வெ.க. முன்வைத்த பிரச்சாரத்தை மக்கள் நம்பினர். குறிப்பாக சமூக ஊடகங்களில் பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் புழக்கம், டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்கப்படுகிறது என்று இவற்றை வைத்து தான் பெருமளவு பிரச்சாரம் செய்யப்பட்டது.
அன்றாடம் பாலியல் வன்கொடுமைச் செய்திகள்
ஆட்சி மாறிய பின் இவற்றில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது கேள்விக்குறி! குறிப்பாக, பாலியல் வன்கொடுமைகளும், சட்டம் ஒழுங்குச் சீர்கேடும் அன்றாட அவலச் செய்திகளாகிவிட்டன.
கோவையில் கடந்த மே மாதம் 19 ஆம் தேதி 10 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கறம்பக்குடி அருகே வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளிப் பெண்ணைக் காரில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை (மே 19), மெரினா கடற்கரையில் குதிரை ஓட்டி கொடுத்த பாலியல் தொல்லையால் 6 வயதுச் சிறுமி பாதிப்பு (மே 31), கோவை ராமநாத புரத்தில் மேலும் ஒரு சிறுமிக்குப் பாலியல் தொல்லை என்று அடுக்கடுக்காகச் செய்திகள் அன்றாடமும்!
காவலர்களுக்கும் பாதுகாப்பில்லை; காவலர்களாலும் பாதுகாப்பில்லை!
‘சிங்கப்பெண் சிறப்புப் படை’ பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த காவல்துறை ஆய்வாளர் மீது புகார், சென்னையில் சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக வடபழனி காவல் நிலையத் தலைமைக் காவலர் வேலப்பன் என்பவர் பணி நீக்கம், திருச்செந்தூரில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாசத் தகவல் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த காவலர் இடைநீக்கம் (ஜூன் 13), சிவகங்கையில் பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 பேர் கைது, தேவகோட்டையில் பாலியல் தொல்லை புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் புகார் பெறாமல் அலைக்கழித்த காவல்துறை (மே 19), ஓசூர் அருகே காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு லிஃப்ட் கொடுப்பதாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநர் (மே 16) என்று காவல்துறையினருக்கும் பாதுகாப்பில்லை; காவல்துறையினராலும் பாதுகாப்பில்லை என்ற சூழல் அச்சமூட்டுகிறது.
வாக்களித்த பெண்கள் முதல் பலரும் கிளர்ந்தெழுந்து சாலையில் மறியல் செய்யும் நிலைதான்!
த.வெ.க. தொண்டர்கள் ஈடுபடும் குற்றச் செயல்கள்
பல இடங்களில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்ட பலர், ஆளும் த.வெ.க.வைச் சேர்ந்தவர்கள் என்ற செய்தி மேலும் மக்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே கர்ப்பிணி பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த யோகேஸ்வரன் என்ற த.வெ.க. தொண்டர் கைது (15.06.2026), மயிலாடுதுறையைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட 42 வயது சிலம்பரசன் என்ற த.வெ.க. தொண்டர் கைது (28.05.2026), இவற்றில் உச்சமாக, சேலம் அருகே நெய்க்காரப் பட்டியைச் சேர்ந்த த.வெ.க.வைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பல பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததும், வன்கொடுமையில் ஈடுபட்டதும், அவற்றைப் படம் எடுத்து மிரட்டியதும், 50–க்கும் மேற்பட்ட பெண்கள் இத்தகைய கொடுமைக்கு ஆளாகியிருப்பதும் செய்திகளில் வெளிவந்துள்ளது.
நேற்று முன்தினம் (15.6.2026) மட்டும் மணிமங்கலத்தில் 10 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை, ஆண்டிப்பட்டியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்குப் பாலியல் தொல்லை, பூவிருந்தவல்லியில் 7 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை, கோவில்பட்டி அருகே 16 வயதுச் சிறு மிக்குப் பாலியல் தொல்லை, கும்மிடிப்பூண்டியில் 3 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொன்று புதரில் வீசப்பட்டுள்ளார்.
ஜூன் 13 வரையிலான 34 நாட்களில் நடந்த பாலி யல் குற்றங்கள் மட்டும் 207, இதில் குழந்தைகள் பாதிக்கப்பட்ட குற்றங்கள் 106, த.வெ.க.வினர் தொடர்பு டைய குற்றங்கள் 107 என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.
சட்டம் – ஒழுங்கு சீர்கேடு
இன்னொரு புறம், சென்னை விமான நிலையம் அருகே இரண்டு இளைஞர்கள் வெட்டிக் கொலை (மே 16), கிருஷ்ணகிரியில் 2 உடல்கள் மீட்பு (மே 13), நீலகிரியில் 9 ஆம் வகுப்பு மாணவர் அடித்துக் கொலை (மே 11), திருச்சியில் ரவுடி வெட்டிக் கொலை, திருப்பத்தூரில் டி.எஸ்.பி. அலுவலகம் எதிரே பெண் வெட்டிக் கொலை (மே 28), கள்ளக்குறிச்சி அருகே 2500 ரூபாய் பணத் தகராறில் பெண் கொலை செய்து புதைப்பு (ஜூன் 12), கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த 17 வயதுச் சிறுவன் வெட்டிக் கொலை (மே 21), கோயம்பேட்டில் கார் ஏற்றிக் கொலை, திருவாரூரில் மேஸ்திரி கொலை (மே 30), சிதம்பரம் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த 25 வயதுப் பெண் வெட்டிக் கொலை (ஜூன் 8), சென்னை மணலியில் தொடர் குற்றவாளி ரவுடி பிரசாந்த் சாலையில் ஓட ஓட வெட்டிக் கொலை (மே 22) இன்னும் ஏராளமான செய்திகள் குவிந்தபடி உள்ளன. மேலே குறிப்பிட்டவை ஊடகங்களில் வந்திருப்பனவற்றில் மிகச் சில மட்டுமே! இவையும் உணர்ச்சிவசத்தில் நடைபெற்ற கொலைகள் அல்ல; திட்டமிட்டு செய்யப்பட்டவை – குற்ற நோக்கத்துடன் நிகழ்த்தப்பட்டவை – கூட்டுச் சேர்ந்து நடந்த கொலைகள்!
இவை தவிர, ஆணவப் படுகொலைகள் பல தென்மாவட்டங்களில் நடைபெற்றுள்ளன. ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாட்டில் நடந்திருக்கும் இத்தனை குற்றச் சம்பவங்கள், பாலியல் தொல்லைகளைப் பார்த்துத் தமிழ்நாடு அரண்டு போயுள்ளது!
ஒரு மாத காலத்தில் இவ்வளவு கண்டனத்திற்குள் ளான ஆட்சியை இதுவரை தமிழ்நாடு சந்தித்ததில்லை. டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று சொல்லி வந்தவர்கள், இன்று, “அந்த 10 ரூபாய் எதனால் வாங்கப்படுகின்றன” என்று இப்போது விளக்கம் கொடுக்கிறார்கள்.
விவசாயிகள் ஏமாற்றம்;
மின்வெட்டால் மக்கள் அவதி!
‘விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்’ என்று த.வெ.க. அறிவித்திருந்தது. அதன் தேர்தல் அறிக்கையில், சிறு குறு விவசாயிகளுக்கு 100% சதவீதமும், பெரு விவசாயிகளுக்கு 50% சதவீதமும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்றதும் திடீ ரென, ரூ.50,000 வரையில் கடன்பெற்றோருக்கு மட்டுமே தள்ளுபடி என்று அறிவித்திருப்பதும், அதற்கு மேல் பெற்றிருப்போருக்குக் கடன் தள்ளுபடித் தொகை யைக் குறைத்திருப்பதும் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் விவசாயிகள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என்று தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்துத் துறையில் குழப்பங்கள், தொடர் மின் வெட்டுகள் என்று பல துறைகளிலும் புதிய அரசு பெரும் சிக்கல்களையும், கடும் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. தொழில்துறையில் தமிழ்நாட்டை விட்டு முக்கியமான ஒப்பந்தங்கள் பறிபோகின்றன. விவசாயத் துறையில் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்குப் பணம் கேட்கப்படுவதாகக் குற்றச்சாட்டு சொல்லிவந்த நிலையில், அது மேலும் அதிகம் கேட்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆய்வு என்ற பெயரால், ஆளுங்கட்சியினர் ஒவ்வொரு அலுவலகத்திலும் போய் செய்துவரும் அடாவடித் தொல்லைகளும் மக்களிடம் வெறுப்பை, எதிர்ப்பையே முளைவிடச் செய்துள்ளன.
ஒன்றிய அரசுடன் இணக்கமான போக்கு என்பது, தமிழ்நாட்டின் உரிமையைப் பலி கொடுப்பாதாக இருந்துவிடக் கூடாது என்ற கவலை எல்லோருக்கும் எழுந்துள்ளது. ‘மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை’ மாற்றிய ஒன்றிய அரசின் நடவடிக்கை போன்றவற்றுக்கு ஏற்பளிக்கக் கூடாது – மறைமுகமாக ஒன்றிய அரசின் செயல்களுக்குத் தலையாட்டிவிடக் கூடாது!
தி.மு.க. கூட்டணியில் பங்கேற்று வெற்றி பெற்றாலும், தமிழ்நாட்டில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பா.ஜ.க. ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்ற காரணத்தால்தான் த.வெ.க. கூட்டணிக்கு நான்கு கட்சிகளைச் (இ.கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., வி.சி.க., அய்.யு.எம்.எல்.) சேர்ந்த எட்டு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவளித்தனர். அதில் இரண்டு பேர் அமைச்சர்களாகவும் ஆகியுள்ளனர்.
ஆனாலும், யாரை ஊழல்வாதிகள் என்று சொல்லி, எதிர்த்து த.வெ.க. ஆட்சிக்கு வந்ததோ, அந்த முன்னாள் அமைச்சர்கள் பலர், அக்கட்சிகளிலிருந்து விலகி வரும்போது, அவர்களைக் கட்சியில் சேர்த்துக் கொள்வ தும், சிலரை எம்.எல்.ஏ. பதவிகளை விட்டு விலகச் செய்து, தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்வதுமாகத் தொடர்ந்து வரும் செய்திகள் ஏற்கத்தக்கதா?
பொது ஒழுக்கத்தையும், நேர்மையையும் சிதைப்பவை அல்லவா?
மக்கள் இவற்றைத்தான் இந்த அரசிடம் எதிர்பார்த்தார்களா?
பெண்களும், இளைஞர்களும் விரும்பியதாகச் சொல்லப்படும் இந்த ஆட்சியின் முதல் ஒரு மாத கால ஆட்சி, மக்கள் நலனுக்கு உவப்பானதாக இல்லை என்பதே நடுநிலையில் சிந்திக்கக் கூடிய நம்மைப் போன்றவர்களின் கவலையாக இருக்கிறது.
ஆறு மாத காலம் அவகாசம் –
சட்டம் ஒழுங்குப் பிரச்சினைக்குப் பொருந்தாது!
“புதிதாக அரசியல் கட்சி தொடங்கி ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள், அவர்களில் 99 விழுக்காட்டினருக்கு முற்றிலும் இது புதிய களம். அரசு இயந்திரம் எப்படிச் செயல்படும் என்பதிலோ, நிர்வாகம் என்றால் என்ன என்பதிலோ அவர்களுக்குச் சற்றும் அனுபவம் இருக்காது. எனவே இவற்றைப் புரிந்துகொள்ளவும், நிதிநிலைமையை அறிந்துகொண்டு, புதிய மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தவும் கால அவகாசம் வேண்டும் என்பதால் தான், ‘‘ஆறு மாத காலம் காத்தி ருப்போம்; அவர்கள் அறிவித்தவற்றைச் செயல்படுத் தட்டும்” என்று ஜனநாயகப் போக்கில் நாமும், தி.மு.க. தலைவரும், மேனாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்பட பலரும் தெரிவித்தார்கள்.
அந்த ‘கால அவகாசம்’ என்பது புதிய அரசின் புதிய திட்டங்களுக்குத் தானே தவிர, சட்டம் ஒழுங்குக்கும், மகளிர் பாதுகாப்புக்கும் இல்லை. இவை மக்களின் பாதுகாப்பு தொடர்பானவை. இதில் கால அவகாசம் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? தீயணைப்பு வீரர்கள் கால அவகாசம் கேட்க உரிமை உண்டா? காவல்துறை தாங்கள் ஆற்ற வேண்டிய தடுப்பு மற்றும் அவசரக் கடமையை ஆற்றத்தானே வேண்டும்? அதை நெறிப்படுத்தவும், விரைவுபடுத்தவும் தானே முதலமைச்சர் அந்தத் துறையைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்? பின், ஏன் தொடர் பாலினக் கொடுஞ்செய்திகள்?
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள, வரவேற்கப்பட வேண்டிய “சிங்கப்பெண் அதிரடிப்படை”க்கு உள்ள அதிகாரம் என்ன, அது எப்படி செயலாற்றப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்! அரசு முன்னெடுக்கும் திட்டங்களை, அதன் செயல்முறை யைப் பார்த்துத் தான் விமர்சிக்க முடியும்.
ஆனால், மிகுந்த கவலையோடும், அச்சத்தோடும் மக்கள் இந்த அரசைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் தங்கள் கையில் கொடுத்திருக்கும் அதிகாரத்தைக் கொண்டு, அமைதியான வாழ்க்கை வாழும் வகையில் ஆட்சி (Governance) நடத்த வேண்டும் என்றுதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அறிவுரைகள் தேவையில்லை;
ஆக்கமிகு செயல்பாடுகளே தேவை!
திடீரென முதலமைச்சர் உள்ளிட்ட பலரும், தனி மனித ஒழுக்கம் பற்றி பேசுகிறார்கள். இதே அக்கறையும், கவலையும்தானே முன்னுரிமை பெற்றிருந்திருக்க வேண்டும். இப்போது தான் தனி மனித ஒழுக்கத்தால் பிரச்சினை எழுகிறதா? தேர்தலுக்கு முன்பு, கடந்த ஆட்சியை விமர்சிப்பதற்காகப் பேசும்போதும் இருந்த தும்கூட இதே மனிதர்களின் சுபாவம்தானே? அப்படி தனி மனித ஒழுக்கத்தைச் சிதைத்ததில் யாருக்கு முக்கியப்பங்கு உள்ளது? திரைத்துறையின் பங்கு என்ன? கூட்டம் கூடுவதிலும், பொது இடங்களில் நடந்துகொள்வதிலும் கூட இன்னும் முறைப்படுத்தப் படாதவர்களாகவே இருக்கும் சொந்தக் கட்சிக் காரர்களையும், ஆதரவாளர்களையும் ஒழுங்குபடுத்த, நெறிப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதையும் புதிய ஆட்சி, குறிப்பாக முதலமைச்சர் கவலையோடு சிந்திக்க வேண்டும்.
தனி மனித ஒழுக்கத்தைக் கொண்டுவருவதற்கு என்ன செய்யப்பட வேண்டும்? எல்லோரிடமும் அதை எதிர்பார்க்க முடியாது என்பதால் தானே, சட்டமும், நீதித் துறையும், காவல்துறையும் செயல்படுகின்றன! அவற்றைக் கையில் வைத்துக் கொண்டு இப்போது தனி மனித ஒழுக்கம் என்று பேசுவதும், த.வெ.க. ஆதரவாளர்கள் சிலர் சமூக ஊடகங்களில் “பெண்களின் உடைகள் சரியாக இருக்க வேண்டும்; பெண்களை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும்” என்றெல்லாம் ‘ஹிதோபதேசம்’ செய்யத் தொடங்கியிருப்பது, இவை பிரச்சினையை மடைமாற்றும் செயல் மட்டுமல்ல; பெண் அடிமைத்தனத்துக்கு உரைப்பாயிரம் பாடுவதும் ஆகும். இவற்றை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். இத்தகைய பேச்சுகள் எல்லாம் பிற்போக்கானவை என்ற விழிப்புணர்வு இங்குவந்து பல காலமாகிவிட்டது. தனி மனித ஒழுக்கத்தை, சமூக ஒழுக்கத்தை அரசின் சற்று கண்டிப்பான நடவடிக்கைகளின் மூலமே பெற முடியும் என்பது சிங்கப்பூர் போன்ற நாடுகள் நமக்கு உணர்த்தும் பாடம் அல்லவா?
மிகுந்த விழிப்போடும், எச்சரிக்கையோடும், கவ னத்தோடும், தேவையான இடங்களில் கண்டிப்போடும் ஆட்சி நடத்த வேண்டியது ஆட்சியாளர்களுடைய கடமை! இதை வலியுறுத்திடுவது மக்கள் உரிமை.
ஆள்வோர் யாராயினும், அது மக்கள் நல அரசாக இருக்க வேண்டும். கவலையும், பொறுப்பும் உள்ள நம்மைப் போன்ற பெரியார் தொண்டர்களின் வேண்டுகோளும், எதிர்பார்ப்பும் அதுதான்! பொறுத்திருந்து பார்க்க இயலாத குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைப்புடன் புதிய ஆட்சி உரியன செய்வது அவசரம், அவசியம்!
மாற்றம் முதலில் அங்கிருந்து தொடங்கட்டும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
17.6.2026
