‘‘தந்தை பெரியார் சிந்தனையின் கூர்மை’’ கேட்போரை வியக்கவைக்கும் தமிழர் தலைவரின் விரிவுரை!முனைவர் க. அன்பழகன்

5 Min Read

சென்னை, ஜூன்15 தமிழ்நாட்டின் சொற்பொழிவாளர்களில் தொடர் சொற்பொழிவினை ஆற்றிடும் வல்லமை மிகு உரைவீச்சாளர் வரிசையில் தனி இடம் பிடித்திருக்கும் வியத்தகு சொற்பொழிவாளர்தான் ஆசிரியர் அய்யா கி. வீரமணி அவர்கள்.

நாமறிந்த வகையில் மிக முக்கியமான தலைப்பில் தொடர் சொற்பொழிவினை நடத்திய அறிஞர் பெரு மக்கள் மிகச் சிலரே. அத்தகு அறிஞர்களுள் தலையாயவர் என்ற இடத்திற்குரியவரான திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள்.  ஆற்றியுள்ள சொற்பொழிவுகளில் பெரியாரியல், சங்கராச்சாரி–யார்?, பிரார்த்தனை மோசடி, காங்கிரஸ் வரலாறும் – கறை படிந்த அத்தியாயங்களும், ‘திராவிட மாயையா? ஆரிய மாயையா? விடுதலைப்போரும் திராவிட இயக்கமும்’ போன்ற சிலவற்றை சான்றாக கூறலாம்.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில் ‘‘தந்தை பெரியார் சிந்தனையின் கூர்மை’’ என்ற தலைப்பில் பத்து நாட்கள் நடைபெறவுள்ள தொடர் சொற்பொழிவின் முதற்பொழிவைச் சென்ைன பெரியார் திடலில் 23.5.2026 அன்று மாலை தொடங்கி  மிக நேர்த்தியாக – அரிய செய்திகளின் தொகுப்பாக அன்னை மணியம்மையார் அரங்கில் நிகழ்த்தினார்கள். அரங்கம் நிரம்பி, பாதிக்கு மேற்பட்ட கேட்பாளர்கள் வெளியில் அமர்ந்து கேட்டனர்.

வழக்கம்போல் ஆசிரியர் தனது – ஆதாரக் குவியல் களை நகைச்சுவை ததும்ப எடுத்து  உரைத்ததோடு அடுத்த பொழிவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆவலைத் தூண்டியது என்பதே பேச்சின் அலாதியான சிறப்பாகும்.

இரண்டாம் சொற்பொழிவு 11.6.2026 அன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. ஆசிரியர் அய்யா அவர்கள் 7 மணிக்குத் தொடங்கி 8 மணிக்கு உரையை நிறைவு செய்தார்கள்.

தனது உரை முழுவதும் சாமி. சிதம்பரனார் 1939இல் எழுதிய ‘தமிழர் தலைவர்’ எனும் நூலிலிருந்த சில செய்திகளை அடிப்படையாகக் கொண்டு  அமைந்திருந்தது.

இன்றைய அதி நவீனத் தொழில் நுட்பமான செயற்கை நுண்ணறிவினை (Artificial Intelligence)  பேராபத்தாகப் பார்க்கும் ஒரு நிலையிருப்பதையும், அந்நிலைக்கு வாய்ப்பில்லாது போக வேண்டுமானால், செயற்கை நுண்ணறிவு என்பது சமுதாய முன்னேற்றப் பாதையில் அமைவதால் மட்டுமே சாத்தியமாகும் என்றும் எடுத்துரைத்தார்.

அதைப்போல, சிந்தனையின் கூர்மை என்பது சமுதாயத்திற்குப் பயன்படும் வகையில் இருக்க வேண்டும். இல்லாது போனால் அதனால் சமூகக் கேடு  உருவாக வாய்ப்புண்டு. தந்தை பெரியாரின் சிந்தனைக் கூர்மை என்பது சமூக நலம் – சமூக மாற்றம்  – சமூகப் புரட்சி வயப்பட்டதாகையால் பெரியாரின் சிந்தனைக் கூர்மை உலக மக்களின் உயர்வுக்கு உரமானது என்று உரையின் தொடக்கத்தில் சிறந்ததொரு கருத்து விளக்கத்தைச் சொல்லி பெருத்த கையொலியோடு தொடங்கினார்.

பெரியாரின் பல்துறையிலும் முக்கியமான சிந்தனையாளர். மிக முக்கியமாக மதத் துறையில் ஆழமான சிந்தனையாளர். மதம் மாற்றத்திற்கு எதிரானது. அது அடிப்படைவாதம் (Fundamentalism),  பிற்போக்குத் தன்மை உடையது. எனவே, மதம் – மதம் சார்ந்த கடவுள், ஜாதி போன்றவைகளை அறவே ஒழிப்பதும் சமத்துவம் காண்பதும்தான் பெரியாரின் சிந்தனை.

பெரியாரைப்பற்றி ‘‘தமிழர் தலைவர்’’ நூலில் முன்னுரையில் சாமி சிதம்பரனார் கூறும்போது, வாயளவில், நூலளவில் பெரியாரின் நேர்மைத் திறத்தை – உண்மை நிலையை சிறப்பாக எடுத்துக் கூறி, (சொல்லிலும்  – எழுத்திலும் என்பதை வாயளவில் – நூலளவில் என்று ஆழமாக அழகுத்தமிழ் சொல்லாடாலில் எழுதியிருப்பதை) ஆசிரியர் அவருக்கே உரிய நகைச்சுவையோடு கூறிட அரங்கம் கையொலியில் அதிர்ந்தது.

பெரியாரின் பார்வை உலகப் பார்வை, உலக மானுடப்பற்று. அதை புரட்சிக் கவிஞர் எழுதிய ஆத்திச்சூடியில் வரும் ‘உலகம் ஓர் குலம்’ எனும் வரிகளோடு ஒப்பிட்டுக் காட்டியது உரையின் உச்சந்தொட்ட இடங்களில் ஒன்றானது.

பெரியாரின் சிந்தனை காரணமாக அவரோடு எதிர்படக் கூடியவர்கள் தேசியவாதிகள் – முதலாளிகள் – மதவாதிகள் என்று பட்டியலிட்டுக் காட்டினார்.

புரட்சிகரமான சிந்தனைக்குரியவராக ஆனவர்கள் பலர் ஏற்கெனவே இருந்த நிலையிலிருந்து மாறியவர்கள். மதவாதி – மதப் புரட்சியாளர்,  சமுதாயவாதி – சமுதாயப் புரட்சிக்காரர், பொருளாதாரவாதி –  பொதுவுடைமைக்காரர் ஆவதைப் பார்க்கிறோம். ஆனால், தந்தை பெரியார் இயற்கையாகவே புரட்சிச் சிந்தனை பெற்ற புரட்சியாளர் ஆவார். அதுவே அவரது தனித்தன்மை கொண்ட சிந்தனைக் கூர்மைக்குக் காரணமானது என்று கூறினார்.

தந்தை பெரியார் 29 பதவிகளைத் துறந்தார். உயர் பதவி வகித்த பி. இராஜகோபாலாச்சாரியார் (இவர் வேறு; ராஜாஜி வேறு) ‘‘உங்களுக்கு ராவ்சாகிப் – ராவ்பகதூர் போன்ற பட்டங்களைத் தர இருக்கும் நேரத்தில் நீங்கள் இப்படி 29 பதவிகளை துறக்கலாமா?’’ என்று கேட்டபோது, ‘‘நான் பதவிக்காக கட்சி விட்டு கட்சி மாறுபவனல்ல – கொள்கைக்காக வாழ்பவன்’’ என்றார்  பெரியார் – என்று எடுத்துக் கூறியபோது கையொலி அடங்க சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

தந்தை பெரியார் நகரச் சபைத் தலைவராக இருந்தபோது நடைபாதை நடப்பதற்கே என்றும்,  நடைபாதையில் முகாமிட்ட விலங்குகளை ‘‘பவுண்டில்’’ அடைக்கவும் நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டபோது, பெரியாரின் துணைவியார் நாகம்மையார் பெரியாரைப் பார்த்து ‘‘இது சரியா?’’ என்றபோது, ‘‘ஏன் உன் ஆடும் மாட்டிக் கொண்டதா?’’ என்று நயம் பொங்க கிண்டலடித்தார் என்ற செய்தியை ஆசிரியர் நகைச்சுவையாக கூறியபோது சிரிப்பலை அரங்கை அதிர விட்டது.

சுதந்திர இந்தியாவின் முதல்  நிதி அமைச்சர் சர். ஆர்.கே. சண்முகம் செட்டியாரை மகாத்மா காந்தி சந்தித்தபோது, ‘‘உங்்களின் பரந்த உலக அறிவுக்கு யார் குரு?’’ என்று கேட்டபோது, சட்டென சர். ஆர்.கே.சண்முகம் ‘‘ஈ.வெ.ரா. பெரியார்’’ என்றபோது, காந்தியார் ‘‘எனக்கும் அவரோடு 25 ஆண்டுகள் நட்பு’’ என்றாராம். இச்செய்தியை அரங்கம் நிறைந்த அறிஞர்கள் ஆச்சரியத்தோடு கேட்டனர். மேலும், பெரியாருக்குப் பெருமை சேர்ப்பது என்னவெனில்,

  1. செயலில் உண்மை
  2. நீதியை நிலைநாட்டுவதில் அடங்கா ஆர்வம்.
  3. சிறிதும் தன்னலம் இல்லா வாழ்க்கை.

என்று சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் பெரியார் பற்றிக் கூறியுள்ளார் என்பதை    சாமி. சிதம்பரனார் நூலிலிருந்து படித்துக் காட்டினார்.

தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்பட்ட திரு.வி.க. அவர்கள் தந்தை பெரியார் பற்றிக் கூறியதைச் சாமி.சிதம்பரனார் ‘‘தமிழர் தலைவர்’’ நூலில் மிக மிக நயம்பட, தமிழ் மணக்கக் கூறியுள்ளதை ஆசிரியர் அவர்கள் அப்படியே படித்துக் காட்டிவிளக்கியபோது கை தட்டலும், இன்பச் சுவையோடு தலையசைத்து அரங்கத்தவர்கள் கேட்டப் பாங்கும் அருமை! அருமை!!

நிறைவாக நேர நெருக்கடியில் – பெரியாரின் சிந்தனைக் கூர்மையை சொன்னால் ஒரிரு நாட்கள் போதாது என்ற நிலையில், பெரியாரின் மொழிச் சிந்தனையின் கூர்மையால் விளைந்த எழுத்துச் சீர்திருத்தத்தின்  பயன் தான் இன்றைய கணினித் தமிழ் வளர்ச்சி என்று நிறுவினார். ஆயிரக்கணக்கான தமிழறிஞர்கள் பலர்  பிறந்தும் – இறந்தும் இன்றைய தமிழ்த் தட்டச்சில்,  கணினி அச்சில் கம்பீரமாய் தமிழ் வளர்ந்தோங்க பெரியார் மொழிச் சிந்தனையின் கூர்மையல்லவா காரணம் என்று தொடர் சொற்பொழிவினை ஆசிரியர் அவர்கள் நிறைவு செய்தார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *