கீழடி, ஜூன் 14- சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில் பண்டைய கால தமிழ்நாட்டின் திறனைப் பறை சாற்றும் இரும்பு உலைக் கலன் 12.6.2026 அன்று கண்டறியப்பட்டது.
கீழடியில் 11-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த மார்ச் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. தற்போது சுமா ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் 9 குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வு நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே நடைபெற்ற அகழாய்வுகளில் ஏராளமான இரும்புப் பொருள்களும், தொழிற்சாலை இருந்ததற்கான கட்டமைப்புகளும் கண்டறியப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, தற்போது இரும்பு உலைக் கலன் கண்டறியப்பட்டது. இந்த உலைக் கலன் இரும்புத் தாதுக்களை உருக்கப் பயன்படுத்தப்படுபவையாகும்.
சங்க காலத்தில் இந்த உலைக் கலனைப் பயன்படுத்தி கத்தி, அரிவாள், வேளாண் கருவிகள் உள்ளிட்ட இரும்புப் பொருள்களைத் தயார் செய்திருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தற்போது கண்டறியப்பட்ட இந்த உலைக் கலன் மூலம், கீழடி பகுதி வெறும் குடியிருப்புப் பகுதியாக மட்டுமல்லாமல், முக்கிய தொழில் துறை மய்யமாக இருந்திருக்கலாம் என்பது உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே அகழாய்வுகளில் கிடைத்த இரும்புப் பொருள்களுடன் இந்த உலைக் கலனை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, கீழடியில் இரும்பு உற்பத்தி, உலோகத் தொழில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றிருப்பது தெரியவருகிறது.
லண்டனில் இந்திய வம்சாவளி
இளைஞர் குத்திக்கொலை
லண்டன், ஜூன் 14- மேற்கு லண்டனின் சவுத்தால் பகுதியில் இந்த வாரத் தொடக்கத்தில் 26 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
கொல்லப்பட்டவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குர்பேஜ் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நார்த் ரோட்டில், டார்மர்ஸ் வெல்ஸ் லேன் சந்திப்புக்கு அருகில் நிகழ்ந்தது.
இச்சம்பவத்தில், 30 வயது மதிக்கத்தக்க மேலும் ஒரு நபரும் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து ஏதேனும் துப்பு கிடைத்தால் தகவல் தெரிவிக்குமாறு நேரில் பார்த்த சாட்சிகளுக்குகாவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் சம்பவ இடத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணை களுக்குப் பிறகு, ஆறு பேர் மீது எந்த நடவடிக்கையும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர், அதேசமயம் ஒருவருக்குப் பிணை வழங்கப்பட்டு, அவர் மீண்டும் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கத்திக்குத்து சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
