காவியம் படைத்த கலைஞர்

இரா.முல்லைக்கோ, பெங்களூரு

கட்டுரை

“என் தோளுக்களித்த மலர் மாலையை பெரியார் அவர்களின் தாளுக்களிக்கிறேன்” என்று இலட்சிய முழக்கமிட்ட சர். ஏ.டி.பன்னீர்செல்வம் காலத்திற்குப் பிறகு – தென்னகத்தின் சமுதாயப் புரட்சியை உண்டாக்கிய தத்துவ மேதை தந்தை பெரியார் அவர்களுக்குப் பெருந்துணையாக, பல்லவப் பேரரசின் தலைநகரான காஞ்சியிலிருந்து வந்த ஒரு ‘கரிபால்டி’ காரிருளைக் கிழித்த செங்கதிரான அறிஞர் அண்ணாவின் செவ்வேள் அருமைத் தம்பிதான் கலைஞர் கருணாநிதி என்னும் வெண்பனிப் போர்த்திய கவிப்பெரும் மலை.

அவர் கரங்களில் வாளில்லை, வேல் இல்லை. கவசம் அணியவில்லை. கேடயம், ஏந்தவில்லை. இராணுவ உடையில்லை. ஆணவப் பார்வையில்லை. திருவாரூரில் பிறந்த திருக்குமரனது கரத்தினில் பேனா மட்டும் துணையாய் நின்றது.

கலைஞர் அரசியல் தலைவர் மட்டுமல்ல

கலைஞர் ஒரு தமிழ் அருவி

அவர் ஒரு இலக்கிய மேதை

அவர் தன்னிகர் அற்ற நாவலர்

அவர் மேதைகள் போற்றும் நூலாசிரியர்

அவர் நாநிலம் போற்றும் நாடக ஆசிரியர்

அவர் அகிலம் போற்றும் அருட்கோ

கலைஞர் கலைகளின் தலைமகன்

எல்லாவற்றிற்கும் மேலாக பண்பில் சிறந்த அருமைமிகு அண்ணாவின் அரும் பெரும் தம்பியாம் கலைஞர் காவியம் பலக் கண்ட புரட்சியாளர்.

அவரின் பிறந்த நாள் தான் ஜூன் திங்கள் மூன்றாம் நாள்.

அந்த அரிய பெருநாளை தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டில் அய்ந்தாம் நாள் தொடங்கி பத்தாம் நாள் வரை திராவிடர் கழகத்தின் சார்பில் அய்ந்து மாநிலங்களில் தொடர் விழாவாகக் கொண்டாட பணித்துள்ளார் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இயக்கத்தின் நாளைய தலைமுறையின் நம்பிக்கை நாயகன் ஆசிரியர் அவர்களின் ஒப்பாரும் மிக்காரும் மிக்க அன்புக் கட்டளையை ஏற்று இயக்க போர்வாள்களாம், கழக அடலேறுகளாம் பேச்சாளப் பெரும் சுடர் மணிகள் எழுச்சிமிகுப் புரட்சித் தீயை மூட்டுவார்கள்.

கலைஞர் பெருமகனார் திரையுலகில் தடம் பதித்த பின்னர்தான் மூடநம்பிக்கையின் முடைநாற்றம் வீசிய, காலத்திற்கு ஒவ்வாத புராணப் படங்களை மாற்றி 1952இல் சொல்காவியமாம் பராசக்தித் தொடங்கி 2010 வரை 71 திரைக்காவியத்தைப் படைத்துத் திரைத்துறையில் எழுச்சி நடை உருவாக்கினார். 23 படங்களுக்கு 54 பாடல்களை எழுதியுள்ளார்.

“மகிமை கொண்ட மண்ணின் மீது எதிரியின் கால்கள் மலர் பறிக்குமா?” என்ற வசனம் காஞ்சித் தலைவன் திரைப்படத்திலும், “வீணையில் எழுவது வேணுகானமா, திருவாவடுதுறையாருக்கு தோடி ராகமா, திருவெங்காட்டு மகுடி நாதமா?” என இலக்கிய நயமிகு வசனத்தை பெண் சிங்கம் எனும் திரைப்படத்திலும் எழுதி சிறக்கச் செய்தார்.

பார் போற்றும் பழம் தமிழுக்கு செம்மொழி எனும் மகுடம் சூட்டி மகிழ்ந்தார் கலைஞர். வீழ்ந்தாலும் விதைபோல் விழுவோமே தவிர, முளைப்பதற்காக விழுவோமே தவிர ஆல் போல் தழைப்போம்… அழிவதற்கு விழ மாட்டோம் என தத்துவ முழக்கமிட்டார் கலைஞர்.

“பாராட்டிப் போற்றி வந்த பழமைலோகம்

ஈரோட்டு பூகம்பத்தால் இடியுது பார்‘‘ – எனும் எழுச்சிமிகு வீரகாவியம் கண்ட பெருமகனார் தான் கலைஞர் அவர்கள்.

அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் 1925ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கம் கண்டு, 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாட்டினை டபுள்யு.பி.சவுந்தரபாண்டியன் தலைமையில் நடத்தினார். இன்றைய “திராவிட மாடல்” கண்ட தமிழ்நாடு அரசின் எண்ணிலா எழுச்சியூட்டும் திட்டங்களை தீர்மானமாக்கினார்.

பெண்ணுரிமை போற்றுவதை முதன்மையாகக் கொண்டு, தொடக்கப் பள்ளிகளில் மகளிர்களே ஆசிரியராக நியமிக்கப்பட வேண்டும், பெற்றோர்களின் சொத்தில் குடும்ப மகளிருக்கு பங்கு அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தினை பெரியார் அவர்கள் கொண்டு வந்து, மக்கள் மத்தியில் பேசு பொருளாக்கினார். இதனை மனதில் கொண்ட கலைஞர் அவர்கள் 1989ஆம் ஆண்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து சட்ட வடிவம் கொண்டு வந்தார்.

“பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு

திறக்கப் பட்டது! சிறுத்தையே வௌியேவா!

எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்

புலியெனச் செயல்செய்யப் புறப்படு வௌியே!

நம்பினை பகலினை நல்ளிருள் என்றே

சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!

சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!”

எனப் புரட்சிப் பாவலர் பாவேந்தரின் எழுச்சி கீதம் பாடினார்.

மகளிர் சொத்து உரிமைச் சட்டத்தினை உச்சநீதிமன்றமே மேற்கோள் காட்டி 2012இல் சிறப்பான ஒரு தீர்ப்பினைக் கூறியதை பார் போற்றிடக் கண்டோம். கலைஞரின் மணிமகுடத்தில் வைர மணி கூட்டிய நிகழ்வாகும்.

‘மானமிகு சுயமரியாதைக்காரர்’ மாட்சிமை மிக்க கலைஞர் அவர்களின் 16 வயதில் தொடங்கிய அற்புத வரலாற்றில் அன்பு, மரியாதை, பொறுமை, மகிழ்ச்சி, மனநிறைவு, பகுத்தறிவு, ஒற்றுமை, மவுனம், விசுவாசம் எனும் நன்றி பாராட்டல், புத்திசாலித்தனம் எனும் பத்து ஆயுதங்களை மனதில் ஏற்று “எனது மூளையே எனது டைரி” என்று மனத்திடத்துடன் கருங்குயில் காலை 4.00 மணிக்கு விழிப்பது போல் விழித்தெழுந்து 1957-1962 முதல் குளித்தலையில் கால் பதித்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் எனும் பெரும் பணி. 1962-1967 தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர், 1967-1969 தமிழ்நாடு அரசு பொதுப் பணித் துறை அமைச்சர், 1969-1971 தமிழ்நாடு முதலமைச்சர், 1971-1976 இரண்டாம் முறை தமிழ்நாடு முதலமைச்சர், 1977-1983 தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், 1984-1986 தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர், 1989-1991 மூன்றாம் முறையாக தமிழ்நாடு முதலமைச்சர், 1996-2001 நான்காம் முறை தமிழ்நாடு முதலமைச்சர், 2006-2011 அய்ந்தாம் முறையாகத் தமிழ்நாடு முதலமைச்சர் என்றும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக 13 முறையும் வெற்றி எனும் சாதனைப் படைத்து, அய்ந்து முறை தமிழ்நாடு முதலமைச்சர் எனும் வைடூரியம் பதித்த மணி மகுடம் தரித்து “முயன்றால் முடியாதது இல்லை. முயற்சிப்போம். முடிவுக்காக அல்ல. நம் முன்னேற்றத்திற்காக… அடுத்து அடி வைப்போம்” என வாழ்ந்து காட்டிய அரசியல் பெருந்தகைக் கலைஞர் அவர்கள்.

அகிலமே வியக்கும் ஆற்றல் வாய்ந்த பெரும் திட்டங்களாம் சமத்துவபுரம், தனியாரிடம் கிடந்த பேருந்து போக்குவரத்தினை பொதுவுடைமையாக்கி, மண்டலம் ஆறாக்கி, எண்ணிலா தோழமைகளுக்கு பணி வாய்ப்பு, உழவர் சந்தை, மீன் சந்தை உருவாக்கம், கைரிக்சா ஒழிப்பு, இலவச கண்ணொளித் திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு அமைப்பு, குடிசை இல்லா மாற்று அடுக்குமாடித் திட்டம், கோவையில் முதல் வேளாண்மைப் பல்கலைக்கழகம், சேலம் இரும்பு தொழிற்சாலை, அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 30 விழுக்காடு வாய்ப்பு அளித்தல், ஆசியாவிலேயே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக் கழகம், மகளிர்களுக்கு காவலர்களாக பணி வாய்ப்பு, டைடல் பூங்கா, சமச்சீர்கல்வி முறை, இந்தியாவிலேயே முதன் முதல் சென்னை அண்ணா சாலையில் அண்ணா மேம்பாலம், ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையமாக கோயம்பேடு பேருந்து நிலையம் அமைப்பு, உலகே வியக்கும் சென்னை கிண்டி கத்திபாரா மேம்பாலம், ஒகனேக்கல் தர்மபுரி கூட்டு குடிநீர் திட்டம், சிறு பெரும் 32 அணைகள் அமைப்பு, கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டம், இதுபோல் எண்ணிலா சமூகம், சமுதாயம் சார்ந்த வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கி மகிழ்ச்சி கண்டார் காவிய நாயகன் கலைஞர்.

சட்டப்பேரவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி நேரத்தில் “நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலின் அசையும் சொத்து, அசையா சொத்து எவ்வளவு” என்று கேட்டார். அறநிலையத் துறை அமைச்சர் போதுமான பதில் இல்லாமல் தவித்ததைப் பார்த்த கலைஞர், அமைச்சரை கையமர்த்தி உட்கார வைத்து விட்டு, “நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலின் அசையும் சொத்துகள் அங்கு வந்து செல்லும் பக்தர்கள். அசையா சொத்து அங்கே நின்று கொண்டிருக்கும் ஆஞ்சநேயர்” என்றார்.  மன்றமே அதிரும் ஆரவாரம் பேரவை கண்டது. கலைஞரின் சூழல் அறிந்து விடையளிக்கும் பாங்கு. இதுபோல் எண்ணற்றவை.

“மனசாட்சி உறங்கும் சமயத்தில் மனக்குரங்கு ஊர் சுற்ற கிளம்புகிறது‘‘

“புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும். உலகத்தையே புத்தகமாகப் படித்தால் அனுபவம் தழைக்கும்”

“முடியுமா நம்மால் என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம். முடித்தே தீருவோம் என்பது வெற்றிக்கான தொடக்கம்”

என மகிழ்வூட்டும் அறிவு மணம் கமழச் செய்வார் கலைஞர்.

இந்திய நிலப்பரப்பு திருவள்ளுவர் சிலையின் கால் பீடத்தில் தொடங்கி வடக்கே காஷ்மீர் செல்கிறது. 133 அடி உயர சிலைதான் தென் முனையின் அடையாளம்.

கவிஞர் வாலி பாடுகிறார் “எனக்குத் தெரிந்த எல்லோரும் காகம் உட்கார சிலை அமைப்பார்கள். கலைஞர் ஒருவர் தான் மேகம் உட்கார சிலை அமைத்தார்” என்றார்.

இதுதான் காவிய நாயகரின் சிறப்பு!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *