புதுடில்லி, ஜூன் 2- தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் வி.மோகனா உட்பட 5 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர்.
இது தொடர்பான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான கொலீஜியம் கூட்டம் கடந்த மே 22, 27ஆம் தேதிகளில் நடைபெற்றது.
இதில், பஞ்சாப் -அரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசேகர், மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, ஜம்மு காஷ்மீர் லடாக் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் பல்லி, தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் வி.மோகனா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதி களாக நியமிக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த பரிந்துரைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, 5 பேரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தர விட்டுள்ளார்.
நீதிபதி எண்ணிக்கை 37 ஆனது
புதிய நீதிபதிகளுடன் சேர்ந்து, தலைமை நீதிபதி நீங்கலாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆகிறது. புதிதாக நியமிக்கப்பட்ட 5 நீதிபதிகளுக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் இன்று (2.6.2026) பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
