மின்வெட்டு, குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து மின்துறை அமைச்சரை பெண்கள் முற்றுகை!

திருப்பரங்குன்றம், ஜூன் 1- திருப்பரங்குன்றம் தொகுதியில் தொடர் மின்வெட்டு, குடிநீர் தட்டுப் பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை கண்டித்து, அமைச்சர் நிர்மல்குமாரை பெண்கள் முற்றுகையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தனக்கன் குளம் ஊராட்சியில் உள்ள வெங்கல மூர்த்தி நகரில், ஊராட்சி பொது நிதியில் இருந்து ஏற்கெனவே உள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கொண்டு செல்ல திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்திற்கான பணிகளை மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் நேற்று (31.5.2026) காலை துவக்கி வைத்தார். பின்னர் தேர்தலில் வெற்றிக்காக நன்றி கூற வெங்கலமூர்த்தி நகர் மக்களை சந்திக்க சென்றார். அப்போது அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் அமைச்சரை முற்றுகையிட்டு, ‘‘எங்கள் பகுதிக்கு குடிநீரே வருவதில்லை. காசு கொடுத்துத்தான் வாங்கி குடிக்க, குளிக்க முடிகிறது. தெருவிளக்குகள் அனைத்தும் எரியாமல் கிடக்கிறது. அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. கோடைகாலம் என்பதால் வியர்வையிலும், கொசுக்கடியிலும் பெரியவர்கள், குழந்தைகள் தவித்து வருகிறோம்.
மேலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுடன், சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பது, பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையை ஏற்படுத்தி இருக்கிறது’’ என்று சரமாரியாக பல்வேறு குற்றச் சாட்டுகளை தெரிவித்தனர்.
பதில் சொல்ல முடியாமல் திணறிய அமைச்சர் நிர்மல்குமார், ‘‘தற்காலிகமாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கி இருக்கிறது’’ என சமாளித்தார்.
நன்றி சொல்ல சென்ற இடத்தில் திடீரென இப்படி தன்னைச் சூழ்ந்து கொண்டு குறைகளை அள்ளிக் கொட்டுவதை சற்றும் எதிர்பாராத அமைச்சர் அங்கிருந்து வேகவேகமாக கிளம்பிச் சென்றார். பெண்களின் சரமாரியான கேள்வியால் அப் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சரை பொதுமக்கள் சூழ்ந்து சரமாரி கேள்வி எழுப்பிய நிலையில், ‘‘அதெல்லாம் அப்புறம் கேள்வி கேட்டுக்கலாம்… முதல்ல திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சருக்கு நன்றி சொல்லுங்கள்’’ என்று அங்கிருந்த தவெகவினர் அப்பகுதி மக்களிடம் சத்தமிட்டு கூறினர். இது பெண்களிடம் மேலும் ஆத்திரத்தை அதிகரிக்கச் செய்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *