ஆசிரியர் விடையளிக்கிறார்

4 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

கேள்வி 1: “தேர்தலுக்கு முன் வீர வசனங்களைப் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய் தற்போது நடக்கும் பாலியல் வன்முறை, ரவுடிகளினால் பேருந்து கண்ணாடி உடைப்பு, விவசாயிகளின் கடன் தள்ளுபடி இவற்றையெல்லாம் சரிசெய்ய என்ன செய்யப் போகிறீர்கள்” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேட்கிறாரே?

– ஓவியன், அரும்பாக்கம்

பதில் 1: எதிர்க்கட்சித் தலைவர் அவரது பணியைச் செய்து வருகிறார்.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பதவி ஏற்ற அண்ணா, “எதிர்க்கட்சி என்பது ஆளுங்கட்சிக்கு பிரேக் போடுகிறது. அது வெறும் ‘லாலி’ பாடுவதற்காக அல்ல” என்று எதிர்க்கட்சியின் பணி – பாங்கு பற்றிக் கூறினார்.அந்தக் கடமையை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சரிவரச் செய்கிறார்!

கேள்வி 2: 1929ஆம் ஆண்டு தந்தை பெரியார் மலேசியாவில் கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் சென்ற போது, பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர் களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்த தாமே?

– திவ்யபாரதி, பழனி

பதில் 2: ஆம். முழு வரலாறு தெரிந்தால் மேலும் மகிழ்வீர்கள். ‘மலேயா சிங்கப்பூரில் பெரியார்’ நூலைப் படியுங்கள். முழு விவரமும் கிடைக்கும்.

கேள்வி 3: தமிழ்நாடு முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டீசர்ட் அணிந்து அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதை எதிர்த்து நீதிமன்றம் வரை கொண்டு சென்ற ஸநாதனவாதிகள், உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பழனிப் படிக்கட்டில் அமர்ந்திருப்பவர்கள் போல் உடையணிந்து வலம் வருவதைப் பற்றியும், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் மேற்கத்திய முறையில் கோட் சூட் அணிந்து செயல்படுவதைப் பற்றியும் வாய் திறக்காமல் கள்ள மவுனம் காத்து வருகிறார்களே?

– மன்னை சித்து, மன்னார்குடி-1

பதில் 3: “மருமகள் உடைத்தால் பொன்சட்டி, மாமியார் உடைத்தால் வெறும் மண்சட்டி” பழமொழியைக் கேள்விப்பட்டதில்லையா சித்து?

கேள்வி 4: கருநாடக மாநில காங்கிரஸ் அரசு மேகதாது அணை கட்டுவதிலேயே குறியாக இருக்கிறதே, இதில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?

– முகிலன், சென்னை–14

பதில் 4: பிரதமரிடம் கூட இதுபற்றி முதல் அமைச்சர் முதல் சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார். சட்டப்பூர்வமான அடுத்தடுத்த நடவடிக்கைகாகத் தமிழ்நாடு அரசு அதற்கு ஆயத்தமாக வேண்டியது கட்டாயம்.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 5: கடந்த ஆட்சியின்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்ற பாலியல் கொலைகளைக் கண்டித்து ‘‘ஸ்டாலின் சார்’’ என்று கையை உயர்த்திப் பேசிய ஜோசப் விஜய், த.வெ.க. ஆட்சிப் பொறுப்பேற்று 15 நாள்களில் 15 கொலைகள் நடைபெற்று இருக்கிறதே, இப்போது என்ன சொல்வார்?

– அழகியநம்பி, கடையம்

பதில் 5: முன்பு கேள்வி கேட்டார். இப்போது பதில் சொல்ல வேண்டிய இடத்தில் மக்கள் அமரவைத்து அவரை சோதித்துக் கொண்டுள்ளனர்!

கேள்வி 6: “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையின் அரசியல் அணுகுமுறை சரியில்லை” என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு விலகியுள்ளாரே, அதுகுறித்து தங்கள் கருத்து?

– ரகுராம், முண்டியம்பாக்கம்

பதில் 6: வருந்தத்தக்க விசயம். வெளியில் உலவ வேண்டிய சிறுத்தைகள் தங்களைத் தாங்களே கூண்டில் அடைத்துக் கொண்டது நல்லதல்ல.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 7: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு நடைபெறும் அரசியல் கூத்துகளைப் பார்க்கும்போது, ஒரு நூற்றாண்டிற்கு முன் தந்தை பெரியார் தொலைநோக்குப் பார்வையுடன் கூறிய, “ஆசை வெட்கமறியாது… பதவி ஆசை எதுவும் அறியாது…” என்ற வைர வரிகள் 100 சதவீதம் பொருந்திப் போகிறதே?

– மன்னை சித்து, மன்னார்குடி- 1

பதில் 7: “முதியவர் சொல்லும் முதுநெல்லிக் கனியும் முன்னே கசந்து பின்னே இனிக்கும்!” புரிகிறதா?

கேள்வி 8: தொலைக்காட்சிகளைத் திறந்தால், ஜூன் 2ஆம் தேதி வருகிற ‘குரு பெயர்ச்சி’ ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்று குழுக்களாக ஜோதிடர்கள் சொல்லும் நிகழ்ச்சியைப்பற்றியே விளம்பரமாக இருக்கிறதே?

– பா.கண்மணி, திருக்கழுக்குன்றம்

தில் 8: நமது தொலைக்காட்சிகள் அரசியலமைப்புச் சட்டத்தின் 51A(H) பிரிவு சொல்லும் அறிவியல் மனப்பான்மையைப் பரப்பும் லட்சணம்தான் அது. “நாய் விற்ற காசு குலைப்பதில்லை – கருவாடு விற்ற காசு நாறுவதில்லை!”

கேள்வி 9: மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தமீம்அன்சாரி ஒரு பேட்டியில், “தி.மு.க. – அ.தி.மு.க. இடையே நடப்பது அண்ணன் – தம்பி பிரச்சினைதான். இதில் டில்லி தலையிட்டு, இரண்டு திராவிடக் கட்சிகளையும் ஒழிக்கின்ற முடிவை எடுக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளாரே?

– ஆதவன், மயிலாடுதுறை

பதில் 9: 100க்கு 100 சரியான கணிப்பு. “பிரிப்பதும் இணைப்பதும் நாமே, அணைப்பதும் நாமே, அழிப்பதும் நாமே!” என்று அரசியல் சித்து விளையாட்டு ஆரிய மாயையின் புது வடிவத்தின் அரங்கேற்றம்.

கேள்வி 10: புதியதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு, ஒன்றிய பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளுக்குப் பணிந்து போகுமா? எதிர்த்துப் பணி செய்யுமா?

– மு.செல்வம், திருக்கடையூர்

பதில் 10: பொறுத்திருந்து பார்ப்போம்! ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாகத் தங்களை அறிவு நாயணத்தோடு அறிவித்துள்ள தி.மு.க. கூட்டணித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களே ‘அவகாசம் கொடுப்போம்!” என்று கூறியுள்ளாரே!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *