‘‘என்னுடைய திருமணம் என்பது சட்டப்படிக்கான
ஒரு பெயரே, மற்றபடி இந்தத் திருமணம் என்பது,
இயக்க எதிர்காலத்தைக் கருதிச் செய்யப்பட்ட ஒரு பாதுகாப்பு ஏற்பாடே ஆகும்!’’
சென்னை, மே 29 ‘‘என்னுடைய திருமணம் என்பது சட்டப்படிக்கான ஒரு பெயரே, மற்றபடி இந்தத் திருமணம் என்பது, இயக்க எதிர்காலத்தைக் கருதிச் செய்யப்பட்ட ஒரு பாதுகாப்பு ஏற்பாடே ஆகும்’’ என்று தந்தை பெரியார் அவர்கள் கூறியதைச் சுட்டிக்காட்டி உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற 200 ஆவது கூட்டம்!
கடந்த 23.5.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற 200 ஆவது கூட்டத்தில், ‘‘தந்தை பெரியார் சிந்தனையின் கூர்மை’’ என்னும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
‘பெரியார்’ திரைப்படத்தில் காணலாம்!
அன்னை மணியம்மையார் அவர்களின் தந்தையார் 1942 இல் இயற்கை எய்தினார். தந்தையின் மறைவுக்குப் பிறகு மணியம்மையார் அவர்கள் உடனடியாகப் பெரியாரின் இயக்கப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர் வேலூரில் எஸ்.எஸ்.எல்.சி. (SSLC) படித்துக் கொண்டிருக்கும் போதே, அங்கிருந்த சூழ்நிலைகளைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, இயக்கப் பணிகளை ஒழுங்குபடுத்தத் தொடங்கினார். இதனை ‘பெரியார்’ திரைப்படத்தில் கூட மிக செறிவாகக் காட்டியிருப்பார்கள்.
அறிஞர் அண்ணா
வியந்து பாராட்டியுள்ளார்!
1943 முதல் 1949 வரையிலான அந்த ஆறு ஆண்டுகளில், பெரியாருக்கு அவர் செய்த தொண்டு ஒரு செவிலியரைப் போலவும், ஒரு தாயைப் போலவும் இருந்தது. இதனை அறிஞர் அண்ணா அவர்களே வியந்து பாராட்டியுள்ளார். இந்த அரங்கத்தில் இருக்கும் உங்கள் அனைவருக்கும் அது தெரிந்திருக்கும்.
அண்ணா அவர்கள், ‘‘ஏம்பா, வீரமணி, அய்யாவுக்கு ஏறத்தாழ 30 ஆண்டுகள் கடுமையான வயிற்று வலி யும், வயிற்றுப்புண் (Ulcer) தொல்லையும் இருந்தது. அதனால் அவர் அதிகமாகச் சாப்பிட மாட்டார். இப்பொழுது எப்படி இருக்கிறார்?’’ என்ற கேட்டார்.
நான் சொன்னேன், ‘‘இப்பொழுது நல்லா இருக்கிறார்’’ என்றேன்.
‘‘அதற்கு முழு முதற்காரணம் அன்னை மணியம்மையார் தான். அந்த அம்மா மட்டும் அருகில் இருந்து கவனித்துக் கொள்ளவில்லை என்றால், பெரியார், இத்தனை ஆண்டுகள் நம்மிடையே வாழ்ந்தி ருக்க மாட்டார்’’ என்று அண்ணா அவர்களே நெகிழ்ந்து கூறினார்.
தன் இளமைப் பருவத்தையே
தியாகம் செய்த ஒரே தலைவர்!
மணியம்மையார் அவர்கள் பெரியாரிடம் அந்த அளவிற்கு உரிமை எடுத்துக் கொண்டு, ஒரு மகளைப் போலவும், தாயைப் போலவும் பார்த்துக் கொண்டார். உலகத்தில் பல தியாகங்கள் உண்டு; மகளிர் பல தியாகங்களைச் செய்துள்ளனர். ஆனால், இயக்கத்திற்காகவும், அய்யாவிற்காகவும் தன் இளமைப் பருவத்தையே தியாகம் செய்த ஒரே தலைவர் அன்னை மணியம்மையார் மட்டும்தான்.
பெரியார் யாரையும் அவ்வளவு எளிதில் நம்பிவிட மாட்டார். பல தேர்வுகளைத் தன் மனதிற்குள்ளேயே வைத்து நடத்துபவர் அவர். ஒருவருடைய தோற்றத்தை வைத்தும், அவருடைய செயல்களைக் கவனித்தும் மட்டுமே பெரியார் ஒரு முடிவுக்கு வருவார். அந்தத் தேர்வுகளில் எல்லாம் வென்று காட்டியவர்தான் நம் அன்னை மணியம்மையார்.
அதுமட்டுமல்ல, தன்னுடனிருப்பவர்களைத் தொடர்ந்து பணியில் வைத்திருக்க வேண்டும் என்று அவர் நினைத்தால், அவர்களின் தவறுகளைக்கூடப் பொறுத்துக் கொள்வார். யாராவது அவரிடம் சென்று, ‘‘அய்யா, என்ன இது? இப்படி நடக்கிறதே!’’ என்று கேட்டால், அதற்கு அவர் ஆங்கிலத்தில், ‘‘Given long rope’’ என்றுதான் பதிலளிப்பார். அதுதான் வேடிக்கை! ‘அவர்களுக்கு இன்னும் நீளமாகக் கயிறு விடப்பட்டிருக்கிறது’ என்று நாம் தமிழில் சொன்னால், அதன் ஆழமான பொருள் மற்றவர்களுக்கு எளிதில் விளங்காது என்பதால்தான் அவர் அப்படி ஆங்கிலத்தில் கூறுகிறார்.
அந்த அளவுக்கு ஒரு சகிப்புத்தன்மை! பொதுவாக, அவர் எடுத்தவுடனேயே அடுத்த நாள் காலையிலேயே கோபப்பட்டு, ‘ஏன் இந்தத் தவற்றைச் செய்தாய்?’ என்று கேட்க மாட்டார். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலும், எல்லாவற்றையும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே வருவார்.
‘அன்னை’ என்று அழைக்காமல்,
வேறு எப்படி அழைப்பது?’
அம்மா அவர்கள் வந்ததிலிருந்து, உணவுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் மற்ற ஏற்பாடு களையும் கவனித்தார். அய்ந்து லட்ச ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள புத்தகங்களை அச்சடித்து, அந்தப் புத்தக மூட்டைகளைச் சுமந்து கொண்டு சென்றார்கள். தந்தை பெரியார் அவர்கள் கதர் மூட்டையைச் சுமந்ததைப் போல, அன்னை மணியம்மையார் அவர்கள் புத்தக மூட்டைகளைச் சுமந்து கொண்டு அங்கு சென்றார். அதைப் பற்றிப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய வரிகளைப் படிக்கும்போது நம் கண்ணில் கண்ணீரே வந்துவிடும்.
‘‘புத்தக மூட்டையைச் சுமந்து வந்து புத்தகக் கடையில் அமர்ந்து சுவடிகளை விற்றுக்கொண்டி ருப்பார். அப்போது தந்தை பெரியாருக்குப் பாராட்டு மாலைகள் குவியும். ஆனால், அங்கே விழுந்த மாலைகளில் ஒன்றையாவது எடுத்து அந்தத் தாய்க்குப் போட்டிருப்பார்களா? இவர்களை ‘அன்னை’ என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?’’ என்று கேட்டார் புரட்சிக்கவிஞர்.
பெரியார் அவர்கள், தனக்கு வயதாகிவிட்டதை உணர்ந்து, ‘‘நான் அடுத்த வருடம் இருப்பேனோ, இல்லையோ…’’ என்று அவர் தன் எழுத்தில் குறிப்பிட்டி ருந்தார். ஆனால், அதற்கடுத்தும் முப்பது ஆண்டுகள் அவர் தொடர்ந்து எழுதினார் என்பதுதான் வியக்கத்தக்க வேடிக்கை!
நாமெல்லாம் ஒரு குடும்பம் மாதிரி; நெருக்கமான வர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒரு செய்தி இருக்கிறது. அதை உங்களுக்குச் சொல்கிறேன்.
நான் ஒருமுறை அய்யா பெரியாரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் ஏதோ ஒரு பெயரை யோசித்துக்கொண்டே, ‘‘இப்பெல்லாம் எனக்கு நினை வாற்றல் ரொம்ப தடுமாறுதுப்பா, அதிகமா மறதி ஏற்படுது’’ என்றார்.
அவர் தன் 90 ஆவது வயதில் தனக்கு மறதி வந்துவிட்டது என்று சொன்னதைக் கேட்டு, எனக்குத் தெரியாமலேயே நான் சட்டென்று சிரித்துவிட்டேன்.
என்னைப் பார்த்த அவர் உடனே, ‘‘என்னப்பா, நான் சொன்னதைக் கேட்டுச் சிரிச்சிட்டே?’’ என்று கேட்டார்.
உங்களுக்கு மறதி அதிகம் என்று நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை!
அதற்கு நான், ‘‘இல்லை அய்யா… நான் உங்கள் கூடவே உட்கார்ந்து நீங்கள் பேசுவதையெல்லாம் எழுதுகிறேன், கவனிக்கிறேன். அந்தக் காலத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் பெயரில் இருந்து, வைக்கம் போராட்டத்தின் போது உங்களை யார் யாரெல்லாம் வரவேற்றார்கள் என்பது வரை அத்தனை யையும் துல்லியமாகக் கூறுகிறீர்கள். ‘வில்லியம் பிட்டு’ என்ற ஒரு போலீஸ் அதிகாரி இருந்தான் என்று நீங்கள் சொல்வதை நான் கடந்த 30 ஆண்டுகளாக உங்களுடனே இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். அந்த அதிகாரியின் பெயரை உங்களைத் தவிர, கூட இருக்கிற வேறு யாருக்கும் தெரியாது; இன்னுங் கேட்டால் கேரளத்துக்காரர்களுக்கே அவர் பெயர் தெரியாது! அப்படிப்பட்ட வரலாற்றுப் பெயர்களையெல்லாம் இப்போதும் நினைவில் வைத்திருக்கும் உங்களுக்கு மறதி அதிகம் என்று நீங்கள் சொல்வது எனக்கு விளங்க வில்லை அய்யா’’ என்றேன்.
அவர் அதைக் கேட்டுப் புன்னகைத்தாரே தவிர, வேறு எதுவும் கூறவில்லை. இதிலிருந்து, அவர் இன்னும் அந்த முழுமையை (Perfection) நோக்கியே சிந்திக்கிறார் என்பது புரிகிறது. பழைய நினைவுகள் அனைத்தும் மிகத் தெளிவாக இருக்கின்றன; அவற்றைப் பற்றி மட்டுமே அவர் விரிவாகப் பேசுகிறார். அந்த அளவிற்கு அவருடைய சிந்தனையும், நினைவாற்றலும் இன்னும் கூர்மையாகவே இருக்கின்றன.
அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், மணியம்மை யாரை இயக்கத்திற்காகச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இதற்காகத் தன் வழக்குரைஞர்களை அழைத்து ஆலோசிக்கிறார்.
47 ஆண்டுகள் மணியம்மையார், அய்யாவுடன் எல்லா வழிகளிலும் துணையாக இருந்தார்!
நான் முதன்முதலில் அய்யாவிடம், அம்மாவைச் சந்தித்தது ஒரு நல்வாய்ப்பு. 1944ஆம் ஆண்டு நடைபெற்ற கடலூர் மாநாட்டில்தான் அம்மா அறிமுகப்படுத்தப்படுகிறார். அப்போது அம்மா அய்யாவுடன் வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. அதன்பிறகு தொடர்ந்து 47 ஆண்டுகள் அவர் அய்யாவுடன் எல்லா வழிகளி லும் துணையாக இருந்தார்.
அம்மா, இயக்கத்திற்குள் வருவதற்கு முன்பே, அய்யாவுக்குப் பல சூழ்நிலைகள் புரிந்திருந்தன. இயக்கத்திற்குள் ஒரு புதிய மாறுபட்ட போக்கு உருவாகி வருவதை அவர் முன்பே நாடி பிடித்துப் பார்த்து உணர்ந்திருந்தார்.
1949 ஆம் ஆண்டில்
ஒரு தெளிவான முடிவிற்கு வருகிறார்!
அதனால், ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார். பல பேரை அவர் நம்புகிறார். அவர்களுடைய பெயரை எழுதி வைக்கிறார். பிறகு அவர்களை கவனிக்கிறார்; அவர்கள் சரியாக இல்லை என்பதைப் புரிந்துகொள்கிறார். அவர்களுடைய பெயரை அடித்துவிட்டு, புதிய பெயரை எழுதி வைக்கிறார். பெரிய பெரிய ஆட்கள் அவர்கள் எல்லாம். நான் அந்தப் பெயர்களையெல்லாம் வெளியே சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. 1948 ஆம் ஆண்டிலேயே இந்த சிந்தனை வந்து, 1949 ஆம் ஆண்டில் ஒரு தெளி வான முடிவிற்கு வருகிறார்.
அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்று நினைத்து, வழக்குரைஞர்களை அழைத்துக் கேட்கிறார். ‘‘எனக்குப் பிறகு, என்னுடைய சொந்த டிரஸ்ட்டில் இருக்கிற வருமானம், இயக்கத்திற்கு வர வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?’’ என்று கேட்கிறார்.
‘‘நீங்கள் யாரையாவது தத்தெடுத்து, அவருடைய பெயருக்கு மாற்றலாம்’’ என்று ஆலோசனை சொன்னார்கள் வழக்குரைஞர்கள்.
‘‘தத்து எடுத்துக்கலாமா?’’ என்று அய்யா கேட்கிறார்.
‘‘ஆமாம்’’ என்கின்றனர் வழக்குரைஞர்கள்.
‘‘அப்படி என்றால், பெண்ணைத் தத்தெடுக்கலாமா?’’ என்று கேட்கிறார் அய்யா.
‘‘‘இந்து லா’வில், ஆண்களைத்தான் தத்தெடுக்கலாமே தவிர, பெண்களை தத்தெடுக்க முடியாது’’ என்று வழக்குரைஞர்கள் சொல்கிறார்கள்.
‘‘அப்படியென்றால், என்ன செய்யலாம்?’’ என்று அய்யா கேட்கிறார்.
‘‘இல்லை அய்யா, மனைவியாக இருந்தால், அந்த சொத்துகள் உங்களுக்குப் பிறகு அவரை சேரும்’’ என்றனர் வழக்குரைஞர்கள்.
‘‘ அவ்வளவுதானே, மனைவி என்று பதிவு செய்யுங்கள் என்று சொன்னார்.
இயக்க எதிர்காலத்தைக் கருதி செய்யப்பட்ட ஒரு பாதுகாப்பு ஏற்பாடுதான்!
அதைச் சொல்லிட்டு, அறிவு நாணயத்தோடு சொல்கிறார், ‘‘என்னுடைய திருமணம் என்பது சட்டப்படிக்கான ஒரு பெயரே, மற்றபடி இந்தத் திருமணம் என்பது, இயக்க எதிர்காலத்தைக் கருதி செய்யப்பட்ட ஒரு பாதுகாப்பு ஏற்பாடே ஆகும்’’ என்றார்.
அப்பொழுது எனக்கு 16 வயது. இந்தப் பிரச்சினை நடைபெற்றது 1949 ஆம் ஆண்டு. பெரியார் அறிக்கை களை மூன்று முறை படிப்போம். ஏனென்றால், மூன்று முறை படித்தால்தான், நமக்கு விளங்கும். ஒரு சென்டன்ஸ், ஒரு பாராவாக இருக்கும். ஆகவே, அப்படிப்பட்ட ஒருவர், முடிவு எடுத்து விட்டார். நபரை முடிவு செய்துவிட்டார். சோதனை வைத்தார், அந்தச் சோதனையில் தேர்வாகிவிட்டார்கள்.
உடனே அடுத்தபடியாக என்ன நினைக்கிறார்?
‘‘இல்லை அய்யா, ரொம்ப எதிர்ப்பு வரும்’’ என்று சொல்கிறார்கள்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கிறபோது, அதற்கு எதிர்ப்பான ஒரு சூழல்; அதைப்பற்றி இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அது வித்தியாசமாக முடிந்தது.
எதிர்ப்பு வந்தவுடனே, அதற்குப் பதில் விளக்கங்கள் தரப்பட்டன, அவை சாதாரணமானவையல்ல.
‘‘அன்னை மணியம்மையாரின் தொண்டறம்!’’
‘‘அன்னை மணியம்மையாரின் தொண்டறம்’’ என்ற புத்தகத்தை நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள். உங்களுக்குத் தெரிந்த தகவல்களைத்தான் நான் சொல்கிறேன். கூர்மை எப்படி இருக்கும் என்பதற்குச் சொல்லவேண்டுமானால், இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில், அவர் முடிவு செய்துவிட்டார். அன்னை மணியம்மையார் அவர்கள், அன்றைக்கு கே.ஏ.மணியம்மையார் என்பதுதான்.
மணியம்மையார் அவர்களுக்குப் பெற்றோர் வைத்த பெயர் காந்திமதி. குடியாத்தம் அண்ணல் தங்கோ அவர்கள், தமிழ் பெயராக வைக்கவேண்டும் என்பதற்காக ‘அரசியல் மணி’ என்று வைத்தார். K என்பது கனகசபை. பழைய விடுதலை எடிட்டர் & பப்ளிசர்ஸ் கே.ஏ.மணி என்றுதான் இன்பிரிண்ட்டில் இருக்கும். 1949 ஆம் ஆண்டில்தான், ஈ.வெ.ரா.மணியம்மையார் என்று மாறுகிறது.
மணியம்மையாரை அழைத்து, ‘‘கையெழுத்துப் போடுங்கள்’’ என்று அய்யா சொல்லுகிறார். உடனே அம்மா அவர்களும் கையெழுத்துப் போட்டார். மணி யம்மையார் பெயரில் பதிவு செய்துவிடுகிறார் அய்யா.
அதனால், மிகப்பெரிய அளவிற்கு எதிர்ப்புகள் வந்தது. அந்த எதிர்ப்புகளைப் பற்றி அய்யா அவர்கள் கவலைப்படாததினால்தான், இந்த இயக்கம் அம்மா அவர்கள் காலத்து வரையில், தொடர்ந்து அந்த வருமானம் இயக்கத்திற்கு வரக்கூடிய வாய்ப்புகள் வந்தது மட்டுமல்ல, அதைப் பதிவு செய்தார்கள். அந்தப் பதிவினால்தான், இன்றைக்கு நாமெல்லாம் இங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.
யார் ஆட்சிக்கு வந்தாலும்,
பெரியார் திடலுக்குப் போகிறார்கள் என்று வியக்கிறார்கள்!
இன்றைக்குப் பெரியார் திடல், என்பது எல்லா வகையான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அதனால்தான், ஆத்திரத்தோடு இன எதிரிகள் பார்க்கிறார்கள். பெரியார் திடலை அலட்சியப்படுத்துகிறவர்கள் எல்லாம் கூட, ‘‘அது என்ன பெரியார் திடல்? யார் ஆட்சிக்கு வந்தாலும், பெரியார் திடலுக்குப் போகிறார்கள்; ஓர் ஆட்சிதான் போனது என்று நினைத்தோம். ஆனால், புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களும் அதே பெரியார் திடலைத் தேடிப் போகிறார்களே?’’ என்று வியந்து பார்க்கின்றனர்.
அது போன்ற ஒரு சூழல் இன்றைக்கு உரு வாக்கப்பட்டிருக்கிறது. அந்த வாய்ப்புகளுக்கும் அம்மையார்தான் காரணம்.
(தொடரும்)
