கூட்டுறவு பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி தலைமை செயலகத்தை விவசாயிகள் முற்றுகை

சென்னை, மே 27 தவெக தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி அனைத்து விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து, தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பயிர்க்கடன்

தவெக ஆட்சிக்கு வந்தால் சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் என 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளவர்களின் பயிர் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தார். அதன்படி தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பதவியேற்ற பிறகு, தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை மீறி கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் வரையிலான பயிர் கடன் தள்ளுபடி என்றும், அதற்கு மேல் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் மட்டும் தள்ளுபடி என்று நேற்று முன்தினம் (25.5.2026) அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி நாராயணசாமி தலை மையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று  (26.5.2026) முன்அறிவிப்பின்றி சென்னையில் உள்ள தலைமை செயலகம் அருகே ஒன்று கூடினர். இதை கவனித்த பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் என்ன என்று விவசாயிகளிடம் விசாரித்தனர். அப்போது கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடனை தவெக தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க வந்ததாக தெரிவித்தனர்.

ஆனால் காவல்துறையினர் தற்போது முதலமைச்சரை பார்க்க முடியாது, அவரை பார்க்க முன்அனுமதி பெறவேண் டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தலைமை செயலகத்ைத முற்றுகையிட்டனர்.

அப்போது, விவசாயிகள் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்தால் தான் நாங்கள் இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று கூறி தொடர் முற்றுகையில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் காவல்துறையினர் விவசாய சங்க நிர்வாகிகள் சிலரை மட்டும் உள்ளே மனு அளிக்க அனுமதி அளிக்க முடியும் என்று கூறிவிட்டனர். இதனால் விவசாயிகள் அனைவரும் தலைமை செயலகம் முன்பு ஒன்று கூடியதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே விவசாயம் சங்க நிர்வாகியான நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பயிர்க் கடனை பொறுத்தமட்டில் சிறு, குறு விவசாய பயிர்க் கடன்கள் தான் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிக்கவில்லை. சிறு விவசாயிகள் என்றாலும் கூட ஏக்கருக்கு கரும்பு சாகுபடி செய்தால் ரூ.60 ஆயிரம் வரை செலவாகிறது. எனவே தற்போது செய்துள்ள பயிர் கடன் தள்ளுபடியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தற்போது உள்ள முதலமைச்சர் புதிய முதலமைச்சராக இருப்பதால், மறு பரிசீலனை செய்து விவசாயிகளின் கடன்களை கடந்த கால ஆட்சியாளர்கள் எப்படி எந்தவித பாகுபாடும் இல்லாமல் தள்ளுபடி செய்தார்களோ அதேபோல் அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், நீண்ட கால பிரச்சினையான மேகதாது அணை பிரச்சினை, தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்கும் தடை நீக்கக்கோரிய பிரச்சினை, நதிகள் இணைப்பு கோரி முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். முதல்வரை சந்திக்க அனுமதிக்காமல் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளும் நிலை தற்போது உள்ளது’ என்று குறிப்பிட்டார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *