சுற்றத்திற்குள் பாலியல் குற்றவாளிகள் உருவாவதைத் தடுப்போம்!

பாலியல் வன்கொடுமைகள் நாளும் தொடர்கதையாகின்றன.   ஒரு மணிக்கு எத்தனைக் கொடுமைகள், ஒரு நிமிடத்திற்கு எத்தனைக் கொடுமைகள் என்று பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் தரப்படும் புள்ளி விவரங்கள் நம் சமூகத்தின் நிலையை நாடி பிடித்தே உணரச் செய்கின்றன. மனதை உலுக்கும் நிகழ்வுகள் நடக்கும்போது மட்டும் ஊடகங்கள் அவற்றை மீண்டும் மீண்டும் பேசுவதால், நாமும் அதுகுறித்து அதிகம் பேசுகிறோம்; சமூகத்தைப் பழிக்கிறோம்; கடும் தண்டனைகள் வேண்டும் என்கிறோம்.

இந்தியா முழுமையும் கூட பாலியல் வன்கொடுமைகளுக் கெதிரான சட்டங்களும், தண்டனைகளும் மேம்பட்டு இருப்பதாக ‘யூனிசெஃப்’ அமைப்பு கூறுகிறது.  2019-இல், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) திருத்தப்பட்டு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான இணையவழிக் குற்றங்களைக் கையாள்வதற்கும் குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான முதல் நகரம் சென்னை; மூன்றாவது நகரம் கோவை. முதல் மாநிலம் தமிழ்நாடு என்பது தான் கடந்த ஆட்சிக் காலத்தில் நாம் எட்டிய சாதனை. ‘ஒப்பீட்டளவில் குற்றங்கள் குறைவு’ என்ற அடிப்படையில்தான்  இந்தத் தர வரிசை தரப்படுகிறது. முழுமையாகக் குற்றங்கள் அற்ற நிலையில் இருக்கிறோம் என்று இதற்குப் பொருளன்று. ஆனால், அந்தப் பாதையில் நாம் முன்னிற்கிறோம்.

எனினும், இவற்றை முன்னிறுத்திச் செயல்பட களத்தில் போதுமான மனிதவளம் (செயல்பாட்டாளர்கள்) இல்லாததாலும்,  எல்லா தரப்புகுழந்தைகளுக்கும் இத்தகைய பாதுகாப்பு, தடுப்பு, மறுவாழ்வு சேவைகள் இல்லாததாலும், சட்டங்களைச் செயல்படுத்துவதில் சவால் உள்ளது. இதன் விளைவாக, பல லட்சக்கணக்கான குழந்தைகள் வன்முறை, அத்துமீறல், சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.

ஆட்சி மாற்றங்களால் சரி செய்யப்படக் கூடியது அல்ல இப்போதுள்ள நிலைமை. சமுதாய மாற்றமே அவசியம். உணர்ச்சிக் கொந்தளிப்புகளாலும், சட்டங்களைக் காவல்துறை நிறைவேற்றவில்லை என்ற கூப்பாடுகளாலும் இவற்றைச் சரிசெய்துவிட முடியாது. குற்றம் நடந்ததற்குப் பிறகே  காவல்துறையின் செயல்பாடு  அதிகம் கோரப்படுகிறது. ஆனால், குற்றங்கள் குறிப்பாகக் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் நடப்பதற்கான காரணங்கள் என்ன? இக் குற்றங்களை இழைப்போர் யார்? என்றால் அவர்கள் எங்கிருந்தோ இருந்து வரவில்லை. நம் அருகிலேயே இருக்கிறார்கள். நம் குடும்பங்களிலேயே இருக்கிறார்கள். நெருக்கமானவர்களாக, நம் குழந்தைகளால் அடையாளம் காணக் கூடியவர்களாகவே பெரும்பாலும் இருக்கிறார்கள் என்பதுதான் சுடும் உண்மை. அதனால்தான் இது மேலும் ஆபத்தான பிரச்சினையாக உள்ளது.

குழந்தைகளைக் கடத்துபவர்கள், தொடர் குற்றவாளிகள் போன்றோரைக் காவல்துறையால் எளிதில் அடையாளம் கண்டு நசுக்க முடியும். அத்தகைய நடவடிக்கைகள் மூலமே இதுவரை பெருங் குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளன என்பதைத் தான் நாம் மேலே சொன்ன புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அப்படி நடக்கும் குற்றங்கள்மீது  அரசு  கடும் நடவடிக்கைகளைத் தொடர வேண்டும். ஆனால், நம்மைச் சுற்றி உள்ளவர்கள், உறவினர்கள், நெருக்கமான நண்பர்கள் போன்றோரால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளைத் தடுப்பது எப்படி? அத்தகைய குற்றவாளிகளாக நாமோ, நம்மைச் சுற்றியுள்ளோரோ ஆகாமல் தடுப்பது எப்படி என்று சிந்திக்க வேண்டிய கட்டாயம் இப்போது நம் கடமையாகிறது.

இந்தியாவில் பாலியல் வன்முறை குறித்த தரவுகள் குறைவாகவே உள்ளன, அதிலும், குடும்பங்களுக்குள் நடக்கும் பாலியல் வன்முறைகளும், அத்துமீறல்களும் முறையாகப் பதிவு செய்யப்படுவதேயில்லை – வெளியில் தெரியும் வகையிலான பெருங்குற்றங்கள் நடக்கும் வரை! தேசிய குடும்ப சுகாதார (2019–2021) ஆய்வின்படி, 18 முதல் 29 வயதுக்குட்பட்ட பெண்களில் 1.5% பேர், 18 வயதுக்கு முன்பே பாலியல் வன்முறையை எதிர்கொண்டுள்ளனர். (இது பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் அளவு மட்டுமே என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்!)

‘தப்புகள்’ நடப்பதற்கான வாய்ப்புகளைக் குறைத்தலே இதில் முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகளுடன் யாரும் அநாவசியமான நெருக்கம் காட்டுவது, ரகசியமாக அழைத்துச் செல்லுதல், உடனிருத்தல், பரிசுப் பொருட்களை வழங்குதல், தனிமையில் இருப்பதற்கான சூழலை உருவாக்க முனைதல், குழந்தைகளை ஏமாற்றி அவர்கள் தவறு செய்துவிட்டதாக நம்பவைத்து, அதைக் கொண்டு மிரட்டுதல் போன்றவற்றைத் தவிர்ப்பதும், தடுப்பதும் பெரும்பாலான குற்றங்களைத் தடுத்துவிடும். யாரும் இல்லாத சமயங்களில் குழந்தைகள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் குடும்பங்களும்,  பள்ளிகளும் கற்றுத்தர வேண்டும். அழைத்தால் செல்லக் கூடாது; பரிசுப் பொருட்களை ஏற்கக் கூடாது என்பது உள்ளிட்ட எச்சரிக்கைகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும். எல்லைகளை மீறும் குணமுடையோரை, அந் நபரைச் சுற்றியுள்ள பெண்களால் உணர முடியும் என்கிறது ஆய்வு. ‘நம் உறவினர் ஆயிற்றே’ என்று அசட்டையாக இல்லாமல், அவர் பெருங் குற்றவாளி ஆகும் முன், (முதலில் சீண்டல், பிறகு அத்துமீறல், அடுத்து வன்கொடுமை, பிறகு அவற்றை மறைக்கக் கொலை) எச்சரிக்கை உணர்வோடு அவர்களுக்குக் கவுன்சிலிங், பொதுவான அறிவுரைகள், குடும்ப சந்திப்பு – பொது நிகழ்வுகளில் இளையர்களை நெறிப்படுத்துதல், பராமரித்தல், உரையாடுதல், திறன்பேசி, இணைய – சமூக ஊடகப் பயன்பாடுகளைக் கண்காணித்தல் உள்ளிட்டவை மூலம் குடும்பங்களுக்குள் நடக்கும் பாலியல் குற்றங்களைத் தடுக்க முடியும். ஆசிரியர்கள், பெற்றோர், குடும்பங்கள், சமூக இயக்கங்கள், அரசு என அனைவருக்கும் இதில் பங்குள்ளது. இன்னும் விரிவாக, உரத்து சிந்தித்து, ஓர் இயக்கம் போல தொடர்ந்து செய்ய வேண்டிய பணி! அதற்கான பொறுமையும், தொடர் செயல்பாடும் மட்டுமே சமூகத்தின் குற்றங்களைக் குறைக்கும். பாலியல் குற்றவாளிகள் நம் சுற்றங்களில் உருவாவதையும் தடுக்கும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *