அய்தராபாத், மே 26- தெலங்கானா மாநிலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.100 கோடி அளவிற்கு சொத்து குவித்த வழக்கில், சிறப்பு துணை ஆட்சியர் வம்சிமோகனை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தெலங்கானா மாநிலம் மேட்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்தின் நகர்ப்புற நில உச்சவரம்பு பிரிவில் சிறப்பு துணை ஆட்சியராகப் பணி யாற்றி வருபவர் வம்சிமோகன். இவர் தனது பதவியைப் பயன்படுத்தி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகப் புகார்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, அய்தராபாத் வனஸ்தலிபுரத்தில் உள்ள அவரது இல்லம், மேட்சல் அலுவலகம் மற்றும் ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட மொத்தம் 11 இடங்களில் ஒரே நேரத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்தத் தீவிர சோதனையின் போது வம்சி மோகனுக்குச் சொந்தமான பெருமள விலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கணக்கில் வராத ரொக்கப் பணம் பல கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் என மொத்தம் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொகுசு சொத்துகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
சோதனையின் ஒரு பகுதியாக வம்சி மோகனுக்குச் சொந்தமான 2 வங்கி லாக்கர்களை அதிகாரிகள் திறந்து பார்த்தபோது, அவை காலியாக இருந்தன. ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நடத்த வருவதை முன்கூட்டியே மோப்பம் பிடித்த அவர், லாக்கரிலிருந்த தங்கம், பணம் மற்றும் சொத்து ஆவணங்களை பினாமிகளின் இடங் களுக்கு மாற்றியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக் கின்றனர்.
சோதனைகளின் முடிவில், போதிய ஆதாரங் களுடன் வம்சி மோகனை காவல் துறையினர் 23.5.2026 அன்று முறைப்படி கைது செய்தனர்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக் கப்பட்டார். இவருக்கு உதவிய பினாமிகள் மற்றும் சொத்து விவரங்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
