லஞ்சப் புகாரில் சிக்கிய 3 மருத்துவர்களின் பெயர் மறைப்பு! ஒன்றிய அரசின் பட்டியலில் குளறுபடியால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி! 

2 Min Read

புதுடில்லி, மே 25- பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான 30 மருத்துவர்களின் பட்டியலில் இருந்து 3 பேரின் பெயர்கள் யாரும் அறியாத முறையில் நீக்கப்பட்டிருப்பது, மருத்துவத் துறையிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

ரூ.1.9 கோடி வெளிநாட்டுச் சுற்றுலா லஞ்சம்

பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ‘அப்வி பார்மா’ (AbbVie Pharma) தங்களுடைய மருந்து களைப் பரிந்துரைக்க ஏதுவாக, 30 மருத்துவர்களுக்கு சுமார் 1.9 கோடி ரூபாய் மதிப்பிலான பாரிஸ் மற்றும் மொனாக்கோ நாடுகளுக்கான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணங்களை லஞ்சமாக வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஒன்றிய அரசு நடத்திய தீவிர விசாரணையில், மருத்துவர்கள் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட 30 மருத்துவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு உயர் மட்டக் குழு கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.

பட்டியலில் குளறுபடி

உயர்மட்டக் குழு உத்தரவிட்டு ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட அமைச்சகத் துறை சார்பில் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு (NMC) ஒரு பட்டியல் அனுப்பப்பட்டது. ஆனால், அதிர்ச்சியூட்டும் விதமாக அந்தப் பட்டியலில் 30 மருத்துவர்களின் பெயர்களுக்குப் பதிலாக 27 பேரின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன.

நீக்கப்பட்ட அந்த 3 முக்கிய மருத்துவர்களின் பெயர்கள் எப்படி, யாரால் நீக்கப்பட்டன என்பது குறித்து துறை சார்பில் எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இதுபற்றி தேசிய மருத்துவ ஆணையத் தலைவர் டாக்டர் அபிஜித் ஷெத் விளக்கியுள்ளதாவது:

“கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் எங்களுக்கு 27 மருத்துவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் மட்டுமே கிடைத்தது. அந்தப் பெயர்களை, அந்தந்த மாநில மருத்துவ கவுன்சில்களின் விசாரணைக்கும் உரிய நடவடிக்கைக்கும் உடனடியாக அனுப்பி வைத்துள்ளோம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

லஞ்சப் புகாரில் சிக்கிய மருத்து வர்கள் எந்தெந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விவரத்தையோ அல்லது அவர்களின் பெயர்களையோ வெளியிட ஒன்றிய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதற்கிடையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட தகவலின்படி, கேரள மருத்துவ கவுன்சிலுக்கு ஒரே ஒரு மருத்துவரின் பெயர் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவரிடம் தற்போது விளக்கம் கேட்டு விசாரணை நடந்து வருவதாக கேரள கவுன்சில் உறுதிப் படுத்தியுள்ளது.

ஒன்றிய அரசின் இந்த வெளிப் படைத்தன்மையற்ற மற்றும் பொறுப்பற்ற செயலால், ஊழல் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய மருத்துவர்கள் தப்பித்துவிட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தங்களது கடும் கண்டனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *