தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கண்டனம்!

2 Min Read

மேகதாது பிரச்சினை: ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் துரோகம்!
கருநாடக துணை முதலமைச்சரின் பேச்சுக்கு –

சென்னை, மே 25– மேகதாது அணையைக் கருநாடகம் கட்டுவது என்பது, ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் துரோகம் என்று தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:–

மேகதாதுவில் அணை கட்டும் புதிய விரிவான திட்டத்தை ஒன்றிய அரசிடம் வழங்கப் போவதாக கருநாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் சொல்லி இருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் டி.கே.சிவக்குமார் அவர்கள் சொல்லி இருப்பது அவரது ஆணவப் போக்கைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்து விட்டது. பலவீனமான கூட்டணி அரசுதானே அமைந்துள்ளது என்ற எண்ணத்தில் சிவக்குமார் இப்படி பேசி இருப்பது போலத் தெரிகிறது. தங்களது காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் அங்கம் வகிப்பதால் எதிர்ப்பு இருக்காது என்று நினைத்து, துடுக்குடன் வார்த்தை களை விட்டுள்ளார் அவர்.

மேகதாதுவில் அணை கட்டும் விஷயத்தில் கருநாடக அரசு உறுதி யாக இருப்பதாக சிவக்குமார் சொல்லி இருக்கிறார். காவிரி நதியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட எங்கள் தலைவர் எந்தவிதத் தியாகம் செய்யவும் தயங்க மாட்டார்.

மேகதாது அணையைக் கருநாடகம் கட்டுவது என்பது, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் துரோகம்.

டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சம்!

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநி லங்களின் முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப்பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறித் தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தினை கருநாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

காவிரி உரிமைகளை நசுக்கும் விதமாக அமைந்துள்ள கருநாடக மாநில துணை முதலமைச்சரின் பேச்சுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் இப்போதாவது வாய் திறந்து கண்டிக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் போராட்டங்கள் விழ லுக்கு இறைத்த நீராகி விடக்கூடாது. காவிரி விவகாரத்தில் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும், அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒரே குரலில் ஒலிக்கி றது- ஒரே உணர்வில் இயங்குகிறது என்பதை, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தங்களுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கருநாடக அரசுக்கு அழுத்தமாகத் தெரிவிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்டும் அவர்களது முயற்சியை துவக்கத்திலேயே முறியடிக்க வேண்டும்.

இப்போதாவது – இதற்காகவாவது தமிழ்நாடு முதலமைச்சர் வாய் திறந்து பேசுவாரா என மக்கள் காத்தி ருக்கிறார்கள்.

இவ்வாறு தி.மு.க. முதன்மைச் செய லாளர் கே.என்.நேரு தெரி வித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *