ஆட்சிகள் மாறினாலும் – சமூகநீதித் திட்டங்களும் தொடரவேண்டும்!

3 Min Read

கல்வித் துறையில் அரசியல் கண்ணோட்டமின்றி மக்கள் நலனே முன்நிற்க வேண்டும்!
‘உலகமே பாராட்டி வியந்த காலை உணவுத் திட்டத்தைத் தொடர்வோம்’ என்ற அறிவிப்பு சரியான நிலைப்பாடு!

கல்வித் துறையில் அரசியல் கண்ணோட்டமின்றி மக்கள் நலனே முன்நிற்க வேண்டும்! ‘உலகமே பாராட்டி வியந்த காலை உணவுத் திட்டத்தைத் தொடர்வோம்என்ற அறிவிப்பு சரியான நிலைப்பாடு! ஆட்சிகள் மாறினாலும்சமூகநீதித் திட்டங்களும் தொடரவேண்டும்  என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்

அவரது அறிக்கை வருமாறு:

தேர்தல்கள் 5 ஆண்டுக்கு ஒருமுறை – நியாயமான ஜனநாயக முறையில் நடைபெறுவது வாடிக்கை. அதில் மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்பது எளிதில் முன்கூட்டியே கணிக்க முடியாத புதிராக அமைவதும் அதன் தனித்தன்மையாகும்.

ஆரோக்கிய அரசியலுக்கு
அடையாளம் ஆகாது!

ஒரு தேர்தல் முடிவுக்குப் பின், மக்கள் வாக்களித்து வேறு ஒரு கட்சியை ஆட்சியில் அமர வைக்கும்போது, (அது முழு அறுதிப் பெரும்பான்மையாக இருந்தாலும் அல்லது கூட்டணி ஆட்சியாக அமைந்தாலும்) முந்தைய அரசின் திட்டங்களையெல்லாம்பற்றி ஆக்கப்பூர்வமற்றோ அல்லது வன்மை உணர்வோடோ அத்திட்டங்களைக் கைவிடுதலோ அல்லது தலைகீழாக மாற்றுவதோ – வீம்பு செய்வதோ ஆரோக்கிய அரசிய லுக்கு அடையாளம் ஆகாது!

தமிழ்நாட்டில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதல மைச்சர்  திரு.ஜோசப் விஜய் அவர்களது தலைமையிலான த.வெ.க. மற்றும் கூட்டணிக்  கட்சிகளின் ஆதரவுடன் அமைந்த ஆட்சியில், மிகவும் முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டிய கல்வித் துறையில்   (உயர்கல்வி, பள்ளிக்கல்வித் துறை போன்ற முக்கிய துறைகளில்) அரசியல் கண்ணோட்டமின்றி, மக்கள் நலக் கண்ணோட்டமே மேலோங்கி இருக்கவேண்டும்.

சரியான நிலைப்பாடாகும்!

அதில், ஒன்றிய பா.ஜ.க. அரசின்  மும்மொழித் திட்டத் திணிப்புக்கு, தலையாட்டாது, ஒப்புதல் தராது – ‘‘இருமொழிக் கொள்கையே தொடரும்’’ என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். ‘‘முந்தைய மு.க.ஸ்டாலின் தலைமையிலிருந்த ஆட்சி பின்பற்றிய முக்கிய திட்டமான உலகமே பாராட்டி வியந்த பள்ளி மாணவர்களுக்கான ‘காலை உணவுத் திட்டம்’ இந்த ஆட்சியிலும் தொடரும்’’ என்று, இன்று (25.5.2026) அவர் அறிவித்திருப்பது சரியான நிலைப்பாடாகும்!

இது செயற்பாட்டுக்கு வரவேண்டும்.

நீதிக்கட்சி ஆட்சியில் சர்.பிட்டி தியாகராயர் முதன்முதலில் 1920–1923 காலகட்டங்களில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து செயல்படுத்தினார். அன்றைய அதிகாரம் குறைவாக இருந்த இரட்டை ஆட்சியின்  நிதி மறுத்தல் காரணமாகப் பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது.

பிறகு, 1954 இல் பதவிக்கு வந்த கல்வி வள்ளல் காமராசர் ஆட்சியில், பகல் உணவுத் திட்டம், மக்கள் திட்டமாக அனைவரின் நிதி உதவி  பெற்றுத் தொடங்கியது. பிறகு அரசு கல்வி நிதியளிக்கும் திட்டமாகத் தொடர்ந்தது.

ஆட்சிகள் மாறிய நிலையில், தி.மு.க. – அ.தி.மு.க. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். மற்றும் அடுத்து வந்த ஆட்சி மாற்றங்களிலும், இத்திட்டம் நிறுத்தப்படாமல், ‘‘சத்துணவுத் திட்டம், இரண்டு முட்டை (அ) இரண்டு வாழைப்பழம்’’ என்று தொடர்ந்தது.

பள்ளி மாணவர்களுக்கான
காலை உணவுத் திட்டம்!

அதைத் தாண்டி, மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில், ‘திராவிட மாடல்’ ஆட்சி யில், பகல் உணவுத் திட்டத்துடன், ‘‘காலை உணவுத் திட்டத்தையும்’’ கொண்டு வந்ததனால், சிறு குழந்தைகளின் பசி போக்கி, வகுப்புக்குச் சென்று கவனம் செலுத்திப் படிக்க வாய்ப்பை ஏற்படுத்தியது.

இதன் விளைவு, குழந்தைகளின் கல்வி மீதான  ஈர்ப்பு, வளர்ச்சி, ஏராளமான பிள்ளைகள் தவறாது வகுப்புக்குச் சென்றனர். பிஞ்சு உள்ளங்களுக்கு, பள்ளியும், வகுப்புப் பாடங்களும் விருப்பமிக்கவையாக ஆயின.

ஆட்சியாளர்கள் சிந்திப்பார்களாக!

இதுபோன்ற திட்டங்கள் அனைத்தையும், புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளவர்கள் தொடர்வது மிகவும் தேவையானது.

சமூகநீதித் திட்டங்களும் இதுபோல தொடர வேண்டியது முக்கியம். ஆட்சியாளர்கள் சிந்திப்பார்களாக!

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு, பொதுவான வர்களின் சுட்டிக்காட்டலுக்கு ஆளுங்கட்சி ‘அரசியல்’ பதில்கள் தராமல், ஆக்கப்பூர்வ ஆளுமை பதில்களையும், செயல்களையும் செய்வது அதன் முக்கிய பணியாக இருக்கவேண்டும்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை    

25.5.2026   

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *