42 வயது ஆணுடன் 13 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் மணமகள் உள்பட 13 பேர்மீது வழக்கு

இந்தூர், மே 22 மத்தியபிரதேசத்தில் 13 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து குழந்தை திருமண தடுப்பு படையின் பொறுப்பாளர் மகேந்திர பதக் கூறுகையில், “இந்தூரில் வசிக்கும் 13 வயது சிறுமியின் தாய் தன் இணையர் இறந்து விட்டதால் 2ஆவது திருமணம் செய்து கொண்டார். இதனால் சிறுமி தனது தாத்தா, பாட்டி வீட்டில் உடன்பிறப்புகளுடன் வசித்து வந்தார்.சிறுமியின் தாத்தா, தனது ஒரு பேரனின் திருமணத்துக்கு ஈடாக 42 வயது ஆணுடன் சிறுமியை திருமணம் செய்து கொடுக்க சம்மதித்துள்ளார். இந்தத் திருமணம் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி நடக்க இருந்தது. அதிகாரிகள் எச்சரித்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது.

ஆனால், அந்த உத்தரவை மீறி அடுத்த நாளே(ஏப்.26) இரவு சிறுமியை இந்தூரில் இருந்து உஜ்ஜயினிக்கு அழைத்து சென்று, அங்கு 42 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து தாத்தா, பாட்டி வீட்டுக்கு வந்த சிறுமியை மீண்டும் மாமியார் வீட்டுக்கு செல்லும்படி சொல்லி, சிறுமியைத் தாக்கி உள்ளனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மணமகன், சிறுமியின் தாத்தா, பாட்டி, உள்பட 13 பேர் மீது குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

தமிழ்நாட்டு மாநிலங்களவை இடத்திற்கு ஜூன் 18-இல் இடைத்தேர்தல்

தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

சென்னை, மே 22 தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்திற்கு வரும் ஜூன் 18-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம் தனது பதவி விலகியதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கான இந்த மாநிலங்களவை உறுப்பினர் இடம் காலியானது. இந்த இடத்தைப் நிரப்புவதற்காக தற்போது இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இடைத்தேர்தலுக்கான முக்கிய தேதிகள் பின்வருமாறு:

வேட்புமனு தாக்கல் தொடக்கம்: ஜூன் 1 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: ஜூன் 8 வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை: ஜூன் 9

வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்: ஜூன் 11 வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை: ஜூன் 18 ஜூன் 18-ஆம் தேதி அன்று காலை வாக்குப்பதிவு நடைபெற்று, அன்றைய நாளிலே மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசியல் களம் மீண்டும் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

60 நாளில் வேலை கிடைக்காவிட்டால் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்

எச்1பி விசா பெற்றவர்கள் கலக்கம்

வாசிங்டன், மே 22 மெட்டா, அமேசான் போன்ற நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், 60 நாளில் வேறு வேலையில் சேராவிட்டால் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய இக்கட்டான நிலைக்கு எச்-1பி விசாதாரர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பல ஆண்டுகளாக இந்திய பொறியாளர்களும், சாப்ட்வேர் டெவலப்பர்களும் அமெரிக்காவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்க உதவினர். நல்ல ஊதியம், வசதியான வாழ்க்கை காரணமாக அமெரிக்காவிலேயே நிரந்தரமாக குடியேற பலரும் முயல்கின்றனர். அந்த கனவில் அங்கேயே வீடு வாங்கினர். குடும்பத்துடன் குடிபெயர்ந்தனர். அமெரிக்காவிலேயே பலரும் குழந்தையையும் பெற்றுள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில், நிரந்தர குடியுரிமை பெறாதவர்கள் வேலையை இழக்கும் போது, வெறுமனே அவர்களது வேலை மட்டும் பறிபோவதில்லை, அமெரிக்காவிலிருந்தே வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கும் அவர்கள் தள்ளப்படுகின்றனர். எச்-1பி விசா மூலமே அமெரிக்காவில் தங்கி பணியாற்ற முடியும். எச்-1பி விசா விதிமுறைகளின்படி, விசாதாரர் வேலை இழந்தால் அடுத்த 60 நாட்களுக்குள் வேறு வேலையில் சேர்ந்து விட வேண்டும். இல்லாவிட்டால், அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்.

தற்போதைய சூழலில் 60 நாட்களில் அடுத்த வேலை என்பது குதிரைக் கொம்பாக மாறிவிட்டது. இல்லாவிட்டால் சுற்றுலா விசாவாக மாற்றி மேலும் சில காலம் வேலை தேட முடியும். எனவே, அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கை, எச்-1பி விசா மூலம் பணியாற்றும் இந்திய அய்டி தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் சிலிக்கான் வேலியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட அய்டி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *