லக்னோ, மே 20- உத்தரப் பிரதேச மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (எம்.எல்.ஏ.) ஓய்வூதியம் மற்றும் சலுகைகள் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
அட்டூழியம்
உத்தரப் பிரதேச மாநில எம்.எல்.ஏ.க்கள் (உறுப்பினர்களின் ஊதியம், படிகள் மற்றும் ஓய்வூதியம்) சட்டம் 1980-இன் பல்வேறு பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்கக் கோரி, ‘லோக் பிரஹாரி’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பொதுச் செயலாளர் எஸ்.என்.சுக்லா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ரஞ்சன் ராய் மற்றும் ஏ.கே.சவுத்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பின்வரும் முக்கிய வாதங்களை முன்வைத்தார்:
பொதுச் சேவைக்கான அங்கீகாரம்
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் என்பது தர்மமோ அல்லது கருணைப் பலனோ அல்ல. அவர்கள் தங்களின் பதவிக் காலத்தில் ஆற்றிய பொதுச் சேவையைப் பாராட்டி வழங்கப்படும் சட்டப்பூர்வமான வசதி அது.
சட்டமன்ற அதிகாரம்
இந்த விதிகள் அனைத்தும் மாநில சட்டமன்றத்தால் முறைப் படி சட்டம் இயற்றப்பட்டு நடை முறைப்படுத்தப்பட்டவை. எனவே, இவற்றை தன்னிச்சையானவை என்று கூற முடியாது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, மனுவைத் தள்ளுபடி செய்து தங்களின் தீர்ப்பில் குறிப்பிட்டதாவது:”மாநில சட்டமன்றம் தனது ‘உறுப்பி னர்கள் மற்றும் முன்னாள் உறுப் பினர்களுக்காக’ சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை சட்டமாக இயற் றுவதற்கு அரசியலமைப்பு ரீதியாக எந்தவொரு தடையும் இல்லை.”
இதன் மூலம் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க் களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்குவது செல்லும் என நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
