அவசரச் சட்டம்மூலம் மேலும் 4 உச்சநீதிமன்ற நீதிபதிப் பதவிகள்!
சமூகநீதி, முதல் களப் பலியாகக் கூடாது!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
சமூகநீதி, முதல் களப் பலியாகக் கூடாது!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
அவசரச் சட்டம்மூலம் மேலும் 4 உச்சநீதிமன்ற நீதிபதிப் பதவிகள் கொண்டு வரப்படுகின்றன. அதில் சமூகநீதி முதல் களப் பலியாகக் கூடாது! மதச்சார்பின்மையும், சமூக நீதியும் காக்கப்படும் வகையில் நியமனங்கள் நடைபெறவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
நம் நாட்டு ஜனநாயக அமைப்பில் – டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் போன்ற புரட்சிச் சிந்தனையாளரால் – பல்வேறு உள் ஒத்துழையாமைக்கிடையிலும் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், உச்சநீதிமன்றம் என்ற தலைமை நீதி பரிபாலன அமைப்பின் முக்கியக் கடமை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களையும், நோக்கங்களையும், இலக்குகளையும் பின்பற்றி, ஆட்சிகளால் இயற்றப்படும் சட்டங்கள் முன்னெடுத்துச் செல்லுகின்றனவா? மாறாக அதற்கு நேர் முரணாக அமைந்துள்ளனவா? என்று ஆய்ந்து தீர்ப்பளிக்கவேண்டிய முக்கிய கடமை, அதன் ஓர்ந்து கண்ணோடாத பணியாகும்!
மக்களின் கடைசி நம்பிக்கைக் களமும் அதுதான்! ஜனநாயகத்தையும், மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைகளையும் இடராமல், சட்டத்தின் செயலாக்கம் இருக்கிறதா என்று பார்ப்பது அதன் நீதி வழுவாத் தன்மை என்ற தனித்தன்மையாகும்.
ஆனால், நீதிபதிகள் நியமனங்களிலும் சரி, அளிக்கப்பட்ட தீர்ப்புகளிலும் சரி, மக்களின் முழு நம்பிக்கையைப் பெற முடியாத ஒரு வேதனையான நிலைதான் நிலவுகிறது!
அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இந்திய ஒன்றியத்தின் அடிப்படைக் கொள்கைகள் முக்கியமாகத் தெளிவுப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
சமூகநீதிதான் முதன்மையானது!
அந்தக் கண்ணோட்டத்தில் பன் மதங்கள், பல மாநிலங்கள், பல மொழிகள், பல கலாச்சாரம் கொண்ட பன்முகத்தன்மை கொண்ட, நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டப்படி, மூன்று நீதிகளில் (Social, Economic and Political) சமூகநீதிதான் முதன்மையானது.
அதனை உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதி கள் நியமனத்தில் ‘கொலிஜியம்’ பரிந்துரை செய்யும் கட்டத்திலும், பிறகு சட்டத்துறையைக் கடந்து, இறுதி கட்ட நியமனம் வரை சமூகநீதி கடைப் பிடிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்குக் கிடைக்கும் விடை ஏமாற்றம்தான்!
நீதிபதிகள் நியமனமும், மாநில அரசுகளின் பங்களிப்புமூலம்தான் என்ற நியாயப்பூர்வ நியமனமாக நடைபெறும் என்ற அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளதையே தலைகீழாக்கி, ஒரு மாநில அரசின் ஒப்புதல் கூட இன்றி, பரிந்துரைக்கும் வாய்ப்பும் பறிக்கப்பட்டது – சில தீர்ப்புகள்மூலம்!
கொலிஜியத்தில் முதல் களப் பலியானது
சமூகநீதி என்பது அதிர்ச்சியானது!
சமூகநீதி என்பது அதிர்ச்சியானது!
பிறகு ‘கொலிஜியம்’ என்ற ஒருமுறை – அரசிய லமைப்புச் சட்டக் கர்த்தாக்கள் உருவாக்கிய நியமன முறையில் இல்லாத ஒன்று புகுத்தப்பட்டு, அதில் முதல் களப் பலியானது சமூகநீதி என்பது அதிர்ச்சியான உண்மை.
இதற்கான மக்கள் கோரிக்கைக் குரல் வலுத்த பிறகு, அண்மையில்தான் ‘கொலிஜிய’த்தில் சமூகநீதிக் கொள்கை அதிகாரப்பூர்வமாக ஏற்று அறிவிக்கப்பட்டது, ஒடுக்கப்பட்ட சமூக நீதிபதிகள் நியமனம் மூலம்!
எத்தனை பேர்? எத்தனை சதவிகிதம்?
இன்று 34 நீதிபதிகள், தலைமை நீதிபதிகள் உள்பட உள்ளனர்.
அதில், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மையினர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் எத்தனை பேர்?
எத்தனை சதவிகிதம்?
அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள், நியமனங்களில் பின்பற்றப்பட்டுள்ளனவா என்றால், இல்லை, இல்லவே இல்லை என்பதுதான் கிடைக்கும் ஒரே பதில்.
அரசியலமைப்புச் சட்டம் 16(4) பிரிவில் இடம்பெற்றுள்ள ‘Adequate Representation’ என்ற சொற்றொடர், வெறும் ஏட்டுச்சுரைக்காய்தானா?
‘Adequate’ என்ற லத்தின் மொழி மூலச் சொல்லுக்குச் சரியான அர்த்தம், ‘Till it is equalized’ ‘போதுமான அளவு’ என்பதற்கு, ‘ஏற்றத் தாழ்வு அகற்றிட, முதல் கட்டமாக மற்றவர்களுக்கு சமமாக்கப்படல்’ என்பதேயாகும்!
இதில் யாருடைய பிரதிநிதித்துவம் போதிய அளவில் இல்லையோ, அவர்களும் மற்றவர்களுக்குச் சமமாக வரும் வரையில், ஏற்கெனவே முந்தி ஆதிக்கம் செலுத்துவோருக்கு வாய்ப்புத் தராமல், வஞ்சிக்கப்பட்ட வர்களுக்கு வாய்ப்பு வழங்குவதுதான் ‘Adequate Representation’ என்பதின் உண்மைப் பொருளாகும்.
அந்த அளவுகோல், நீதிபதிகள் நியமனங்களில் பின்பற்றப்பட்டதா? என்றால், மிஞ்சுவது பெருத்த ஏமாற்றம்தான் – சமூக அநீதிதான்!
தற்போது, அவசரச் சட்டம் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34–லிருந்து, 38 ஆக உயர்த்தப்படவிருப்பதற்குக் காரணம் ஏராளமான வழக்குகள் தேக்கம், அந்நிலை மாறவேண்டும் என்பதுதான் என்று சொல்லப்படுகிறது!
காவி மனம் கொண்டவர்களா?
கார்டு ேஹால்டர்களா? என்று பார்த்து…
கார்டு ேஹால்டர்களா? என்று பார்த்து…
‘சந்தடி சாக்கில் கந்தப்பொடி தூவுவது’ என்ற பழமொழியை நினைவுபடுத்துவதுபோல், தங்கள் கொள்கையான காவி மனம் கொண்டவர்களா? ‘‘கார்டு ேஹால்டர்களா?’’ என்று பார்த்து புதிய நியமனங்கள் செய்யப்படுமோ என்ற பேச்சு அடிபடுகின்ற நிலையில், முதல் களப் பலி, சமூகநீதிதான் என்று ஆகிவிடக் கூடாது!
நியாயத் தராசு சமூகநீதிக்கு எதிராகச் சாய்ந்துவிடக் கூடாது! வழக்குகள் தேக்கமின்றி ‘பைசல்’ ஆக வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்துக் கிடை யாது!
சமூகநீதிப் போராளிகளால்
நிம்மதி அடைய முடியாத
அச்ச உணர்வே முந்துகிறது!
நிம்மதி அடைய முடியாத
அச்ச உணர்வே முந்துகிறது!
ஆனால், அந்த சாக்கில், சமூகநீதியின் எதிரிகள் நுழைந்து இப்போது ‘மதச்சார்பின்மை’ என்ற அடிப்படைக் கொள்கையை நீர்த்துப் போகச் செய்யும் பலப்பல வியாக்கியானங்களையும், விளக்கங்களையும் நாள்தோறும் தரும் வழக்கு வாதங்கள் போக்கு உள்ளதை யதார்த்தக் கண்ணோட்டத்தோடு பார்த்தால், சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மை காப்பாளர்களால் நிம்மதி அடைய முடியாத அச்ச உணர்வே முந்துகிறது!
அது தவறு என்பதை நிரூபிக்கும் வகையில், புதிய நியமனங்கள் அமைவது நல்லது – விரும்பத்தக்கது!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
19.5.2026
