சென்னை, மே 17- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அண்மையில் புதிய முதலமைச்சராகப் பதவியேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்காமல், முந்தைய தி.மு.க. அரசு வழங்கி வந்த ரூ.1,000 தொகையையே தற்போதும் வழங்கியுள்ளதால் தமிழ்நாட்டுப் பெண்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்த திமுக, தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் “மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தை 2023 செப்டம்பர் 15 முதல் அமல்படுத்தியது. இதன் மூலம் சுமார் 1 கோடியே 31 லட்சம் பெண்கள் மாதந்தோறும் பயன் பெற்று வந்தனர்.
இந்நிலையில், அண்மையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, தவெக ஆட்சிக்கு வந்தால் அனைத்துக் குடும்பப் பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை உடனடியாக ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும் என்றும் விஜய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
ஏமாற்றமளித்த முதல் கையெழுத்து
கடந்த மே 10ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன் போடும் முதல் கையெழுத்தே, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டத்திற்கான அறிவிப்பாகத்தான் இருக்கும் என்று தமிழ்நாட்டுப் பெண்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், அதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாதது பெண்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இதுகுறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு விளக்கமளித்த முதலமைச்சர் விஜய்,
“பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைத்தொகை குறித்து முழுமையாகச் சரிபார்க்கக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது” என்று தெரிவித்தார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், தேர்தல் வாக் குறுதிப்படி உரிமைத் தொகையை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
வங்கிக் கணக்கில் வந்த ரூ.1000
தாமதமானாலும் முதல மைச்சர் விஜய் அறிவித்தபடி தங்களுக்கு ரூ.2,500 கிடைக்கும் என்று பெண்கள் நம்பிக்கையுடன் காத்திருந்த சூழலில், மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை நேற்று முன்தினம் (15.5.2026) பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.
ஆனால், தேர்தல் வாக்குறு தியில் கூறப்பட்ட ரூ.2,500க்கு பதிலாக, முந்தைய தி.மு.க. அரசின் நடைமுறைப்படியே 1 கோடியே 31 லட்சம் பெண்களுக்கும் தலா ரூ.1,000 மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளது.
பணம் கணக்கில் வந்ததை ஒருசில பெண்கள் வரவேற்றாலும், ஆட்சிக்கு வந்தவுடன் உயர்த்தி வழங்குவதாகக் கூறிவிட்டு, தற்போதும் பழைய தொகையையே வழங்கியிருப்பது தங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாகப் பெரும்பாலான குடும்பத் தலைவிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
