கிருஷ்ணகிரி, மே 16 – கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறு வனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் தன்னெழுச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
90 சதவீதம் பெண் தொழிலாளர்கள், பிரமாண்ட உள்கட்டமைப்புடைய டாட்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தேன்கனிக்கோட்டை வட்டம் நாகமங்கலம் அருகிலும், சூளகிரி வட்டம் லாலிக்கல் அருகிலும் சில கிலோ மீட்டர்கள் இடைவெளியில், மொத்தம் சுமார் 5,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு ‘டாட்டா எலக்ட்ரானிக்ஸ் 1’ மற்றும் ‘டாட்டா எலக்ட்ரானிக்ஸ் ஜாஸ்மின்’ ஆகிய இரண்டு பிரிவுகளிலும் 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட சுமார் 25,000 இளம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சுமார் 18,000 தொழிலாளர்கள் நேரடி யாக உற்பத்திப் பிரிவிலும் 7,000 தொழிலாளர்கள் உற்பத்தி அல்லாத துப்புரவு, தூய்மைப் பணிகள், பேக்கிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட இதர பணிகளிலும் ஈடு பட்டுள்ளனர். ஒட்டுமொத்தப் பணியாளர்களில் 10 சதவீதத்தினர் தவிர, மீதமுள்ள 90 சதவீதம் பேர் இளம் பெண் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் தொழிலாளர்களுக்குப் புறக்கணிப்பு
தொழிற்சாலையில் உள்ளூர் மற்றும் மாநிலத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மொத்தத் தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பங்கு கூட கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. தமிழ்நாட்டுத் தொழலாளர்களுக்கு முன்னுரிமை தராமல், ஒப்பந்ததாரர்கள் மூலம் 50 சதவீதத்திற்கும் அதிகமான வடமாநிலப் பெண் தொழிலாளர்கள் இங்கு இறக்கு மதி செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். (இங்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்த, 25 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே பணிக்கு எடுக்கப்படுகின்றனர்). தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளுக்காக ஒன்று கூடுவதைத் தடுக்கும் வகையில் நிர்வாகம் திட்டமிட்டுச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. மாவட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான உள்ளூர் தொழிலாளர்கள் மட்டுமே நிரந்தரப் பணியாளர்களாக உள்ள நிலையில், எஞ்சிய 95 சதவீதத் தொழிலாளர்கள் நிர்வாகத்தால் கட்டப்பட்டுள்ள தொழிற்சாலையின் பிரமாண்ட விடுதிகளிலும், மாவட்டத்தின் பல பகுதிகளில் தொழிற்சாலைக் கண்காணிப்பில் உள்ள விடுதிகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறைந்த ஊதியம் மற்றும்
மருத்துவ வசதியின்மை
மருத்துவ வசதியின்மை
நேரடி உற்பத்திப் பிரிவில் உள்ள நிரந்தரத் தொழிலாளர்களுக்கு உற்பத்திக்கேற்ற அடிப்படை சுகாதார மருத்துவ வசதிகள் இருந்தாலும், அவர்களுக்கான ஊதியம் மிகக் குறைவாகவே உள்ளது. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. அதே நேரம் நிரந்தரத் தொழிலாளர்க ளுக்கு ரூ.18,000 முதல், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சிலருக்கு ரூ.25,000 வரையிலும் ஊதியம் அளிக்கப்படுகிறது. துப்புரவு மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சீருடை, துப்புரவுக் கருவிகள் ஆகியவற்றுக்கான பணம்கூட அவர்களின் ஊதியத்திலிருந்து பிடிக்கப்படுவதாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், போதிய ஓய்வு நேரம், ஓய்வறைகள் அல்லது மருத்துவ வசதிகள் எதுவு மின்றியே தங்களை வேலை வாங்குவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
முந்தைய போராட்டமும் அரைகுறைத் தீர்வும்
உற்பத்தி அல்லாத இதர பிரிவுகளில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தொழிலாளர்கள் தங்களின் பணிக்கான கருவிகளோ அல்லது வசதிகளோ கேட்டால், ‘‘நிர்வாகத்திற்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை; எதுவாக இருந்தாலும் உங்கள் ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்’’ என அதிகாரிகள் கைகழுவி விடுகின்றனர். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுமே பேருந்து வசதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களுக்குப் பேருந்து வசதி கோரியும், சீருடை மற்றும் கருவிகளுக்கான ஊதியப் பிடித்தத்தை நிறுத்தக் கோரியும், ஓய்வறை, ஊதிய உயர்வு மற்றும் பெண் தொழிலாளர்களுக்கான மருத்துவ உதவிகளை வலியுறுத்தியும் ‘டாட்டா எலக்ட்ரானிக்ஸ் ஜாஸ்மின்’ கிளையில் 3 நாட்கள் தன்னெழுச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அந்தப் போராட்டத்தின் விளைவாகப் பேருந்து வசதி மட்டுமே செய்து தரப்பட்டது. ஊதிய உயர்வு மற்றும் மருத்துவ உதவிகள் உள்ளிட்ட மற்ற முக்கியக் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
3 ஆவது முறையாகப் போராட்டம்
இந்நிலையில், தங்களின் முதன்மைக் கோரிக்கையான ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வலியுறுத்தி, டாட்டா எலக்ட்ரானிக்ஸ் ஜாஸ்மின் கிளையில் மே 13 அன்று ஒப்பந்தத் தொழி லாளர்கள் மீண்டும் ஒரு மிகப்பெரிய தன்னெழுச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். காலை முதலே தொழிற்சாலை வாயில் முன்பு திரண்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, டாட்டா தொழிற்சாலை நிர்வாகத்தினர், மேலாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஆகி யோர் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் அவசரப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
