சென்னை, மே 15 தமிழ்நாட்டில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று (14.5.2026) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த திட்டங்களை வடிவமைத்து, அவற்றை முழுவீச்சில் நடைமுறைப்படுத்துவதில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
இந்த நிலையில், ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் 2 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாநில அரசு அலுவலர்கள், ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில், கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிட்டு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 2 சதவீதம் உயர்ந்து இனி 60 சதவீதமாக வழங்கப்படும்.
இதன்மூலம் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள். இதனால், ஆண்டுக்கு ரூ.1,230 கோடி தமிழ்நாடு அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் நலன்கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர் அலுவலர் ஒன்றியத்தின் தலைவர் த.அமிர்தகுமார், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு தலைவர் சா.அருணன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜான் வெஸ்லி, தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் ராமஜெயம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் இந்த அறிவிப்பை வரவேற்று, நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 9 அய்ஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
சென்னை, மே 15 தமிழ்நாட்டில் 9 அய்ஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் நிலச் சீர்திருத்தத் துறை ஆணையர் எஸ்.விஜயகுமார், இப்போது தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலராகவும், தொழில் துறை செயலர் வி.அருண் ராய் இப்போது உயர் கல்வித் துறை செயலராகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலர் என்.சுப்பையன் இப்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலராகவும், முன்னாள் முதலமைச்சரின் தனிச் செயலராக இருந்த பி.உமாநாத் இப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல், சிறப்பு திட்டங்கள் துறை செயலர் ஆர்.ஜெயா இப்போது டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராகவும், சேலம் மாவட்ட ஆட்சியர் ஏ.அருண் தம்புராஜ் இப்போது செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநராகவும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கே.இளம்பகவத், சேலம் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கலை மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குநராக ஆர்.பிருந்தா தேவி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வரின் தனிச் செயலராக இருந்த எம்.எஸ்.சண்முகம் இப்போது சுற்றுலாத் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளனர். இவர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநராகவும் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
