கொல்கத்தா, மே.15- மேற்கு வங்காளத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என்று பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது.
‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம்
கடந்த மாதம் நடந்த மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் 15 ஆண்டுகளாக நடந்த மம்தா அரசை வீழ்த்தி, பா.ஜ.க. வெற்றி பெற்றது. அக்கட்சியை சேர்ந்த சுவேந்து அதிகாரி புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.
இந்நிலையில், அவரது அரசு, அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ‘வந்தே மாதரம்’ பாடல் பாடுவதை கட்டாயமாக்கி உள்ளது.
இதுபற்றி பள்ளி கல்வித் துறை இயக்குநர், அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைவர் களுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மேற்கு வங்காளத்தில் அனைத்து பள்ளிகளிலும் வகுப்பு தொடங்குவதற்கு முன்பு காலை நேர ‘பிரார்த்தனை’ கூட்டத்தில் ‘வந்தே மாதரம்’ பாடலை அனைத்து மாணவர்களும் பாடுவது கட்டாய மாக்கப்பட வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காட்சிப் பதிவு எடுங்கள்
முதலமைச்சர் சுவேந்து அதிகாரி செய்தியாளர்களிடம் கூறுகை யில், “வரும் 18.5.2026 முதல் மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளி களிலும் ‘வந்தே மாதரம்’ கடவுள் வணக்கபாடலாக அறிமுகப்படுத்தப் படும்” என்றார்.
பள்ளிகளில் ‘வந்தே மாதரம் பாடுவதை ஆவணப்படுத்தும் வகையில் காட்சிப்பதிவு எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முன்பு, மேற்கு வங்காளத்தில் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய தேசிய கீதம் மட்டும் பாடப்பட்டு வந்தது. சமீப ஆண்டுகளில், மம்தா அரசு, ‘பங்களார் மாதி பங்களார் ஜோல்’ என்ற மாநில பாடலை அறிமுகம் செய்தது.
ஒன்றிய அரசு கொண்டாட்டம்
இதற்கிடையே, ஒன்றிய அரசு, தேசிய அடையாளங்களை கவுர விக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடியது. வந்தே மாதரம் பாடுவதற்கு இடையூறு செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டத்திருத்தம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
இந்த பின்னணியில், வந்தே மாதரம் பாடலை பள்ளிகளில் பாடுவதை மேற்கு வங்காள அரசு கட்டாயமாக்கி உள்ளது.
