மறைந்தவர் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் உடற்கொடையை பெற்றிட காத்திருந்த மருத்துவ மாணவர்கள்

காரைக்குடி, மே 13- பெரியார் பெருந்தொண்டர் கைவல்யம் உடலை அவரது பிள்ளைகள் உடற்கொடையளிக்க வந்தபோது புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் கல்லூரி முதல்வர் கலைவாணி தலைமையில் நூற்றுக் கணக்கான மருத்துவ மாணவர்கள் வரிசையில் நின்று வரவேற்று கைகூப்பி வணங்கி உடலைப் பெற்றுக் கொண்ட சம்பவம் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் கைவல்யம் சங்கரன். 84 வயதாகும் இவர் உடல் நலக்குறைவால் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது வயது மூப்பின் காரணமாக சிகிச்சை பலனின்றி 26.04.2026 அன்று மறைவுற்றார். அவரது உடல் 27.04.2026 அன்று மருத்துவக் கல்லூரியில் முதல்வர் டாக்டர் கலைவாணி முன்னிலையில் மருத்துவக் குழுவினரிடம் மருத்துவ மாணவர்களுக்குப் பயனடையும் வகையில் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து கைவல்யத்தின் மகன் அறிவழகன் கூறுகையில் எனது தந்தை கைவல்யம் கூட்டுறவுத் துறையில் சார்பதிவாளராகப் பணியில் சேர்ந்து பின்னர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராகப் பணிபுரிந்து பணி நிறைவு பெற்றார். அவரது விருப்பம் தனது உடல் மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதாகும். அதற்குக் காரணம் அவரது பணியின் போது நீண்ட காலம் புதுக்கோட்டையில் பணி புரிந்ததாலும், தனது இறுதி நிகழ்வானது எந்த வித ஜாதி மதச் சம்பிரதாயங்களும் சடங்குகளும் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற விருப்பமாகும்.

அவர் தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப் பட்ட நிலையில் பகுத்தறிவாளராகவும், தமிழுணர்வாளராகவும் கடைசி வரை இருந்தார். எனது தாத்தாவும் திராவிடர் கழகத்தில் பொறுப்பாளராக இருந்து பணியாற்றியவர் தான். அந்த வகையில் காலம் காலமாக எங்களது குடும்பம் திராவிடர் கழக குடும்பமாகும். எனக்கு அறிவழகன் என்றும், தங்கைக்கு மைவிழி என்றும், தம்பிக்கு அன்பழகன் என்றும், அழகிய தமிழ்ப் பெயரைச் சூட்டி வளர்த்து வந்தார். மூவரும் நல்ல நிலையில் இருக்கிறோம். இந்நிலையில்தான் அவர் இறந்து விட்டார். இதில் அவருக்கு அனைத்துக்கும் துணையாக இருந்தது எங்களது தாயார் கலாவதி.

இப்போது குடும்பத்தில் உள்ள அனைவரும் எங்களது தந்தையின் வழியைப் பின்பற்றித்தான் இருந்து வருகிறோம். உடற்கொடை செய்வதில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தது. ஆனால் நாங்கள் உறுதியாக இருந்தோம். அதனால் மருத்துவக் கல்லூரிக்கு இறுதி மரியாதை செய்ய அனைவரும் வந்திருந்தனர்.

எனது தந்தையின் உடலுக்கு மருத்துவத் துறையினர் கொடுத்த மரியாதையைப் பார்த்தவுடன் அனைவரும் வியப்படைந்ததோடு எங்களது குடும்பத்தினரைப் பாராட்டவும் செய்தனர். இதற் கெல்லாம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவும் பெரும் பங்காற்றியிருக்கிறார். குறிப்பாக மருத்துவத் துறைக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம் என்றார்.

இந்த உடற்கொடை குறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் கலைவாணி கூறுகையில் ஒரு காலத்தில் மக்களுக்கு உடற்கொடை செய்வதில் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்வு ஏற்பட்டு உடற்கொடை செய்யத் துவங்கியிருக்கிறார்கள்.

2017ஆம் ஆண்டிலிருந்து இப்போதுவரை சுமார் 25 உடல்களை கொடையாகப் பெற் றிருக்கிறோம். 15 மாணவர்களுக்கு ஓர் உடல் அவர்களது கல்வி சார்ந்து தேவைப்படுகிறது. அந்த வகையில் உடற்கொடை செய்யும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கக்; கடமைப் பட்டிருக்கிறோம்.

இன்று உடற்கொடையாக அளித்துள்ள கைவல்யத்தின் குடும்பத்தினர் அவர் இறந்து விட்டார் என்றவுடனேயே விழிக்கொடை அளித்தனர். குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்கள் இரண்டும் பெறப்பட்டு விட்டன. அந்தக் கண்களின் மூலம் இரண்டு பேருக்கு விழிகள் கிடைத்திருக்கின்றன. அந்தக் விழிகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பார்வையை வழங்கிக் கொண்டிருக்கும். அந்த வகையில் அந்தக் குடும்பத்தினருக்கு இரண்டு வகையில் நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம் என்றார்.

உடற்கொடை செய்ய வந்த கைவல்யத்தின் குடும்பத்தினருடன் அவரது உறவினர்களும் நண்பர்களும் அரசியல் கட்சிப் பிரமுகர்களும் நூற்றுக் கணக்கில் வந்திருந்ததும் முன்னிலையில் நூற்றுக் கணக்கான மருத்துவ மாணவர்கள் உடலைப் பெற்றுக் கொண்டதும் இரு தரப்பினரையும் நெகிழ்ச்சியடைச் செய்தது.

இந்த நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட கழகத் தலைவர் மு.அறிவொளி, மாநில ப.க. துணை அமைப்பாளர் அ. சரவணன் மாவட்டத் துணைத் தலைவர் கண்ணன், காரைக்குடி மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, பொதுக்குழு உறுப்பினர் தி.செயலெட்சுமி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, சாமி.திராவிடச்செல்வம், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஒன்றாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பழனிவேல், ராகவன் ஆதிமூலம், அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த இளஞ்செழியன், காரைக்குடி மாவட்ட கழகத் தலைவர் வைகறை, மாவட்டச் செயலாளர் பி செல்வமணி, காரைக்குடி மாநகரத் தலைவர் ஜெகதீசன், கல்லல் ஒன்றிய செயலாளர் வீ. பாலு, பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் மு. சு.கண்மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பொன்சங்கு தமிழ்மாறன், கந்தசாமி உள்ளிட்ட ஏராளமான தோழர்களும் பகுத்தறிவு சிந்தனையாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு அன்னாரின் உடலுக்கு கழகக் கொடிகள் போர்த்தியும் மாலை மரியாதை செய்யும் தங்களது வீர வணக்கத்தை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *