த.வெ.க.விற்கு நாங்கள் ஆதரவு கொடுத்தது குடியரசுத் தலைவர் ஆட்சி வருவதை தடுப்பதற்காகவே! ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் உரையிலேயே ஜோசப் விஜய் குறை கூறுவது ஆரோக்கியமற்றது! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் கருத்து

3 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

திருச்சி, மே 12- த.வெ.க.விற்கு நாங்கள் ஆதரவு கொடுத்தது குடியரசு ஆட்சி தலைவர் வருவதை தடுப்பதற்காகவே! பொறுப்பேற்ற முதல் உரையிலேயே  ஜோசப் விஜய் குறை கூறுவது ஆரோக்கியமற்றது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘சிறந்த முறையில் மக்களுக்கான நலத்திட்டங்களையும், கல்வி, தொழில், பொருளாதாரம், விவசாயம் என பல்வேறு துறைகளில் தமிழ்நாடு செழிப்புற ஆட்சி செய்த தி.மு.க அரசு தொடர வேண்டும்’ என மக்களிடம் வாக்குகள் கேட்டு எங்கள் கட்சியின் சார்பில் இரண்டு உறுப்பினர்கள் சட்ட மன்றத்திற்குத் தேர்வாகியுள்ளனர்.

ஆனாலும், உங்கள் கட்சி ஆட்சி அமைத்திட தனிப் பெரும்பான்மையை மக்கள் வழங்கவில்லை என்ற போதிலும் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தி, மக்களாட்சி மாத்திரமே நமக்கானதாக இருக்க முடியும் என்பதால் புதிய அரசு அமைந்திட நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருக்கிறோம். இதுதான் சாத்தியமாகும் என்ற நிலையில் மிக நீண்ட பரிசீலனைக்குப் பிறகு எங்கள் கட்சியின் அவசர உயர்மட்டக் குழு கூட்டம் கூடி அரசு அமைக்க ஆதரவு தருவதாக முடிவு எடுத்து அறிவித்தோம்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் புதிய அரசு அமைப்பதில் தமிழ்நாடு ஆளுநர் மேலும் தாம திக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து அவரின் அரசியல் முதிர்ச்சியையும் மக்களாட்சியின் மேல் அவர் கொண்டி ருக்கும் அக்கறையையும் வெளிக்காட்டி இருந்தார்.

அதன் அடிப்படையிலேயே தி.மு.க கூட்டணியில் அங்கம் வைக்கும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய நாங்கள் எவ்வித நிபந்தனையும் இன்றி புதிய அரசு அமைத்திட ஆதரவுக் கரம் நீட்டியுள்ளோம். ஆனாலும், நாங்கள் கொள்கை அடிப்படையில் தி.மு.க தலை மையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியிலேயே தொடர்வதாகவும் அறிவித்திருக்கிறோம்.

அதன் பிறகே, ஆளுநர் அவர்கள் உங்களை அழைத்து புதிய அரசை அமைத்திருக்கிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று உங்களின் முதல் உரையிலேயே “தமிழ்நாடு அரசின் கஜானா முழுவதும் துடைக்கப்பட்டு இருப்பதாகவும், ரூபாய் 10 லட்சம் கோடி கடன் வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டு குறை கூறி தொடங்கியிருப்பது ஆரோக்கியமற்றது.

எந்த அரசும் தேவைக்கேற்ற நிதி யைப் பெற கடன் வாங்காமல் இருப்பதில்லை; அந்தக் கடனும் துறை சார்ந்த உயர்நிலை அதிகாரிகளும் பொரு ளாதார வல்லுநர்களும் ஒருசேர கலந்து ஆய்வு செய்தே அரசு நிர்வாகத்தின் வரம்புக்கு உட்பட்ட நிலையில் முடி வுகள் எடுத்து கையாளப்படுவது வழக்கம்.

இப்போதுதான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளீர்கள். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் வருவாய் மற்றும் நிதிநிலை சார்ந்த பலதரப்பட்ட சரியான தகவல்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் மூலம் மிகத் தெளிவாகத் தெரிந்து கொண்டு தான் உங்களின் வார்த்தைகள் வெளி வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

உங்கள் தலைமையிலான புதிய ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள், பொருளாதார மேம்பாடு, கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி போன்ற பார்வையில் மாத்திரமே ஒரு முதலமைச்சரின் உரை அமைந்தால், அனைத்து தரப்பினராலும் வரவேற்கத்தக்கதாக இருக்கும்.

எனவே, எடுத்த எடுப்பிலேயே குறைகள் சொல்லி ஆட்சியைத் தொடங்காமல், மக்கள் எதிர்பார்த்திடும் நல்ல, ஆரோக்கியமான, எல்லோருக்கு மான சிறந்த ஆட்சியாக அமைந்திடவே விரும்புகிறோம்.

எனவே, ஆரோக்கியமான அரசி யலை முன்னிறுத்தி, சிறப்பான நிர்வாகத்தை நடத்தி, நாட்டு மக்களின் நலனை மாத்திரமே முக்கியமாகக் கொண்டு, மதக் காழ்ப்புணர்ச்சி களுக்குக் கொஞ்சமும் இடம் தராமல் முந்தைய ஆட்சியில் நடை முறைப்படுத்தப்பட்ட சிறப்பான மக்கள் நலத் திட்டங் களை தொடரச் செய்து அனைத்து தரப்பினரின் வர வேற்பையும், பாராட்டுகளையும் பெறுகின்ற நல்லாட்சியைத் தர வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்க ளின் எதிர்பார்ப்பு.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *