திருப்போரூர், மே 13- செங்கல் பட்டு மாவட்டம் திருப்போரூரில் கடந்த 35 ஆண்டுகளாகச் செயல் பட்டு வந்த பிரபல தனியார் உப்பு சுத்திகரிப்பு மற்றும் பேக்கிங் தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்பட்டது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி யுள்ளது.
தனியார் தொழிற்சாலைகள்
திருப்போரூர் பகுதியில் 1991ஆம் ஆண்டு டி.சி.டபிள்யூ) என்ற பெயரில் இந்தத் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. பின்னர், குஜராத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ‘குஜராத் ஹெவி கெமிக்கல்ஸ் லிமிடெட்’ நிறுவனம் இதனை வாங்கி நடத்தி வந்தது.
தூத்துக்குடி மற்றும் வேதாரண்யத் திலிருந்து கொண்டு வரப்படும் கல் உப்பைத் தூள் உப்பாக மாற்றி, பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்களின் பெயர்களில் பேக்கிங் செய்து விநியோகிக்கும் பணி இங்கு நடைபெற்று வந்தது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக இந்த ஆலை அமைந்திருந்தது.
மோடி அரசின் நிதிநிலை வீழ்ச்சி சூழலாலும் ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளாலும் ஈரான் போரால் ஏற்கபட்ட ஏற்பட்ட ஏற்றுமதி சரிவுகளா தொழிற்சாலைக்கு வந்த வர்த்தக ஒப்பந்தங்கள் படிப்படியாகக் குறைந்தன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இப்பகுதியில் பயிற்சி விமானம் ஒன்று தொழிற்சாலை மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இயந்திரங்கள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்ததால் உற்பத்திப் பணிகள் முடங்கின.
நேற்று (12.05.2026) பணிக்கு வந்த தொழிலாளர்களுக்கு, நிர்வாகம் அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டது. “இன்றுடன் உற்பத்தி நிறுத்தப்படுகிறது, அனைவருக்கும் உரிய செட்டில்மென்ட் செய்யப் படும்” என அறிவிக்கப்பட்டு ஆலை மூடப்பட்டது.
நிரந்தர ஊழியர்கள் 17 பேருக்கு 3 மாத ஊதியம் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். 30-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்குக் கடந்த மாத ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
“திருப்போரூரின் அடையாளங் களுள் ஒன்றாகத் திகழ்ந்த இந்த ஆலை, 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தது.
தற்போது திடீரென கதவுகள் அடைக்கப்பட்டதால், எஞ்சியுள்ள தொழிலாளர்கள் அடுத்தகட்ட வாழ்வாதாரத்திற்கு எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம்,” எனப் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.
