இந்திய மருத்துவக் கழகம் எதிர்ப்பு!
மதுரை, மே 13 நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யும் முடிவை ஏற்க முடியாது என்றும், வினாத்தாள் கசிந்த மாநிலங்களில் மட்டும் மறுதேர்வை நடத்த வேண்டும் என்றும் இந்திய மருத்துவக் கழக (அய்.எம்.ஏ.) நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
2026-2027ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் (NEET) தேர்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் கேட்கப்பட்ட 200 வினாக்களில், சுமார் 80 சதவீத வினாக்கள் தேர்வுக்கு முன்பாகவே ராஜஸ்தான் மாநிலத்தில் கசிந்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அம்மாநில காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வினாத்தாள் கசிவு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்வதாகவும், இதற்கான மறுதேர்வு மீண்டும் நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. தேசிய தேர்வு முகமையின் இந்த ஒட்டுமொத்த ரத்து நடவடிக்கைக்கு இந்திய மருத்துவ கழக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: ஒரு சில மாநிலங்களில் நடந்த வினாத்தாள் கசிவுக்காக, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களின் உழைப்பை வீணடிக்கும் வகையில் தேர்வை ரத்து செய்வது நியாயமற்றது.
வினாத்தாள் கசிவு எங்கு நடைபெற்றதோ, அந்த குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் மறுதேர்வை நடத்த வேண்டும். ஒட்டுமொத்தமாக தேர்வை ரத்து செய்வது மாணவர்களிடையே தேவையற்ற மன உளைச்சலையும், கால விரயத்தையும் ஏற்படுத்தும். எனவே, ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
