ஜெய்ப்பூர், மே 8 ராஜஸ்தான் மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், ‘ஜல் ஜீவன்’ திட்டத்தைச் செயல்படுத்தியதில் சுமார் ரூ.960 கோடி ஊழல் நடந்ததாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் மகேஷ் ஜோஷி கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தானில்
அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், பொது சுகாதாரப் பொறியியல் துறை அமைச்சராக மகேஷ் ஜோஷி பதவி வகித்தார்.
ஒன்றிய அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் வீடுகளுக்குக் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் ஒப்பந்தங்களைப் பெற்றுத்தர லஞ்சம் வாங்கியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஏற்ெகனவே இந்த வழக்கில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இவரைக் கைது செய்து, ஏழு மாத சிறைவாசத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றம் இவருக்கு பிணை வழங்கியிருந்தது.
இந்த ஊழல் தொடர்பாகப் பிப்ரவரி மாதம் மாநிலம் முழுவதும் 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் ஏற்ெகனவே 10 பொறியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் அமைச்சர் கைது
சில நாட்களுக்கு முன்பு, இத்துறைக்கான கூடுதல் தலைமைச் செயலர் சுபோத் அகர்வால் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் மகேஷ் ஜோஷி ஜெய்ப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது அவரை காவலில் எடுத்துள்ள அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது வாரிசு அரசியல் இல்லையா?
அரசியலில் தொடர்பே இல்லாத
நிதிஷ்குமார் மகனுக்கு
அமைச்சர் பதவியாம்!
பாட்னா, மே 8 பீகார் அரசியலில் “சுத்தமான அரசியல்” பேசுவதாகக் கூறிக்கொள்ளும் நிதிஷ் குமார், தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். அரசியலில் துளியும் அனுபவம் இல்லாதவர் எனக் கருதப்படும் அவரது மகன் நிஷாத்துக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது, நிதிஷ் குமாரின் நேர்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
வாரிசு அரசியல் விமர்சனம் எங்கே போனது?
கடந்த காலங்களில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கட்சியை விமர்சிக்கும் போதெல்லாம், “அரசியல் என்பது பொது சேவைக்கானது, குடும்ப வாரிசுகளை வளர்ப்பதற்கானது அல்ல” என்று மேடைதோறும் முழங்கியவர் நிதிஷ் குமார். ஆனால், இப்போது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சில முகங்கள், அவரது அந்தப் பழைய பேச்சுகளை அவருக்கேத் திருப்பிப் போடும் வகையில் அமைந்துள்ளன.
தகுதியா? அல்லது தனிப்பட்ட விசுவாசமா?
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களில், அரசியலில் எந்தப் பின்னணியும் இல்லாத, மக்கள் பணிகளில் ஈடுபடாத நிதிஷ்குமாரின் மகனுக்கு “அமைச்சர்” என்ற உயரிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இது கட்சியின் சீனியர் தலைவர்கள் மற்றும் நீண்டகாலமாக உழைத்த தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
“திறமைக்கும் அனுபவத்திற்கும் முன்னுரிமை அளிக்காமல், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் பதவி வழங்கப்படுவது பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமையும்.” என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் ஆயுதம்
நிதிஷ் குமாரின் இந்த நடவடிக்கையை லாலு பிரசாத்தின் கட்சியினர் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். “எங்களை வாரிசு அரசியல் என்று விமர்சித்த நிதிஷ் குமார், இப்போது தகுதி இல்லாதவர்களுக்குப் பதவி கொடுப்பது எந்த வகை அறம்?” என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். நிர்வாக அனுபவம் இல்லாத ஒருவரால் ஒரு துறையைச் செம்மையாக வழிநடத்த முடியுமா?
தன் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள நிதிஷ் குமார் செய்யும் சமரசங்கள் பீகார் மக்களை ஏமாற்றுவதாக அமையாதா? கொள்கை அரசியலை விட, பிழைப்புவாத அரசியல் மேலோங்கிவிட்டதா?
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தரப் பகைவனும் இல்லை என்பது பழமொழி. ஆனால், பீகாரைப் பொறுத்தவரை “நிரந்தரமான கொள்கையும் இல்லை” என்பதை நிதிஷ் குமார் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருப்பதாகவே சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
