சென்னை, மே 7- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் தமிழ்நாடு ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
உச்ச நீதிமன்ற வழக்குரைஞரான ஆர். கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
அறுதிப் பெரும்பான்மை இல்லை: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மைக்கு 118 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில், தவெக அந்த எண்ணிக்கையை எட்டவில்லை.
உறுப்பினர்கள்
எண்ணிக்கை குறையும்!
விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். விதிகளின்படி அவர் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால், தவெக-வின் பலம் 107 ஆகக் குறையும். பெரும் பான்மையை நிரூபிக்க விஜய்க்கு மேலும் 11 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
அரசியல் சாசனக் கொள்கை களை நிலைநாட்டும் வகையில், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை முறையாக நிரூபிக்காத வரை, விஜய்க்கு முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
