லண்டன், மே 6- நிதி நெருக்கடி மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரிப்பு காரணமாக, புகழ்பெற்ற ஊடக நிறுவனமான பிபிசி, பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.
பிபிசி-யின் மிகப் பெரிய செலவுக் குறைப்பு முயற்சிகளில் ஒன்றிற்கான திட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அந்த நிறுவனம் 2026-ஆம் ஆண்டிற் கான பெரும் ஆட்குறைப்பு நடவடிக் கைகளை அறிவித்துள்ளது. பிபிசி நிறுவனம் ரூ.6700 கோடியை சேமிக்கும் திட்டத்தை செயல்படுத்த 2000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
சுமார் 600 மில்லியன் யூரோ சேமிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2,000 ஊழியர்களை குறைக்க பிபிசி திட்டமிட்டு உள்ளது. இதில், செய்திப் பிரிவு விகிதாச்சாரத்திற்கு அதிகமான 15 சதவீதக் குறைப்பை எதிர்கொள்ளும் என தகவல் வெளியாகி இருக்கிறது. கூகுளின் முன்னாள் நிர்வாகியான மாட் பிரிட்டின், வரும் மே 18 அன்று தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்கத் தயாராகி வரும் நிலையில், இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.
அவர் பிபிசி நிறுவனத்தின் தலைமை இயக்குநராக பொறுப் பேற்ற உடன் இந்த நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் என தெரிகிறது. பிபிசி, உலகெங்கிலும் கணிசமான எண்ணிக்கையிலான தொழிலாளர்களைப் பணியமர்த்தி யுள்ளது. மேலும், தனது பார்வையா ளர்களுக்கு சமீபத்திய செய்திகளை வழங்குவதற்காக, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பணியாளர் வலையமைப்புடன் இணைந்து செயல்படுகிறது. இந்த சூழலில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, குறிப்பாக பிபிசி செய்திப் பிரிவில் இந்த ஆட்குறைப்புகள் எதிர்பார்த்ததை விடக் கடுமையாக இருக்கலாம் என்றும், தலைமைப் பொறுப்புகளில் மாற்றங்கள் ஏற்கெனவே நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிபிசி எடுக்க திட்டமிட்டு உள்ள ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கான முக்கிய காரணம், அந்த நிறுவனம் மேற்கொள்ள உள்ள செலவு குறைப்பு உத்தி ஆகும். பிபிசி எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிகள் காரணமாகவே இந்த ஆட்குறைப்பு முடிவு எடுக்கப்பட்டது. நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதற்கு அதிக உற்பத்தி பணவீக்கம், உரிம கட்டண வருவாய் குறைவு (Licence fee pressure), மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஆகியவை காரணமாகக் கூறப்படுகின்றன.
