ஆம்பூர், மே 5- திருப்பத்தூர் மாவட்டத்திற் குட்பட்ட 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குகள் மொத்தம் 22 சுற்றுகளாக எண்ணப்பட்டன.
விவிபேட் சீட்டுகள் மூலம்
21 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், திமுக வேட்பாளர் வில்வநாதன் 72,340 வாக்குகள் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான தவெக வேட்பாளர் இம்தியாஸை விட (64,742 வாக்குகள்) 7,598 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அதிமுக வேட்பாளர் வெங்கடேசன் 44,832 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தில் இருந்தார்.
இரவு 7.30 மணியளவில் இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது, எதிர்பாராத விதமாக இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டது.
இதனால் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்ய முடியாத சூழல் ஏற்பட்டதால், தேர்தல் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் விவிபேட் இயந்திரத்தில் இருந்த வாக்குச்சீட்டுகளை எண்ண முடிவு செய்யப்பட்டது.
தி.மு.க. வெற்றி
இரவு 8.15 மணியளவில் விவிபேட் சீட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட பின், இறுதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதன்படி: வில்வநாதன் (திமுக): 73,187 வாக்குகள் இம்தியாஸ் (தவெக): 65,860 வாக்குகள் இறுதியாக, திமுக வேட்பாளர் வில்வநாதன் 7,327 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இயந்திரக் கோளாறால் ஏற்பட்ட சிறு தாமதத்திற்குப் பிறகு வெளியான இந்த முடிவு, திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
