வன்முறையிலும் கல்லாக் கட்டும் பா.ஜ.க. ரூ.947 கோடி நிவாரண நிதியை ‘ஏப்பம் விட்ட’ மணிப்பூர் அமைச்சர்கள்

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

இம்பால், மே 4 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் மெய்தி சமூகத்திற்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் உத்தரவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி – ஸோ பழங்குடியினர் நடத்திய போராட்டங்கள் அடுத்த மாதம் (மே 3 ஆம் தேதி) பெரும் வன்முறையாக மாறியது. 280–க்கும் மேற்பட்டோரை உயிரிழக்கச் செய்த இந்த வன்முறை, 3 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் ஓயவில்லை. சரியாக 2026ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி முதல் மணிப்பூர் வன்முறை தொடங்கி 3 ஆண்டுகள் நிறை வடைந்த நிலையில், அங்குள்ள கள நிலவரம் குறித்து எழுத்தாளர் பாட்ரிசியா முகிமின் கட்டுரையில் முக்கிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.947 கோடி ‘ஏப்பம்!’

அதில்,”2023 டிசம்பரில் நிவாரண முகாம்களில் பிறந்த குழந்தைகளுக்கு இப்போது 2 வயதாகிறது; அவர்களுக்குத் திரும்புவதற்கு இன்னும் வீடுகள் இல்லை. இளைஞர்கள், குழந்தைகள் தங்கள் வாழ்க்கையின் விலைமதிப் பற்ற மூன்று ஆண்டுகளை இழந்துள்ளனர். இதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒன்றிய அரசு ரூ.947 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் ரூ. 424 கோடி முகாம்களை இயக்கு வதற்கும், ரூ.523 கோடி மறு வாழ்வுப் பணிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இத்தகைய நிதிகள் பெரும்பாலும் மணிப்பூர் பாஜக அமைச்சர்கள், அதிகாரிகளின் தனிப்பட்ட பாக்கெட்டுகளுக்கு மட்டுமே சென்றுள்ளது. முகாமிற்கு செல்லவில்லை என்பதால், அங்கு சாதாரண அடிப்படை வசதிகள் இல்லை.

வீடுகள் இல்லை

வன்முறையின் போது சுமார் 7,894 வீடுகள் முழுமையாக எரிக்கப்பட்டன. 2,646 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. சுருக்கமாகச் சொன்னால் 10,000–க்கும் மேற்பட்ட வீடு களை மணிப்பூர்வாசிகள் வன்முறையால் இழந்துள்ளனர். ஆனால் அனைவருக்கும் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டதாக ஒன்றிய அரசு கூறுகிறது. இது பொய். இதுவரை சுமார் 3,000 தற்காலிக வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. அந்த வீடுகள் சூறைக்காற்றுக்கும், மழை வெள்ளத்திற்கு கொஞ்சம் கூட தாங்காது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், தகவல் அறி யும் உரிமைச் சட்டத்தின்படி மாநிலத்தில்  குறைந்தது 58,881 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

கசப்பான உண்மை

மணிப்பூரில் கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த மனித உரிமை மீறல்கள் கற்பனைக்கும் எட்டாதவை. வன்முறை குறைந்து மாநிலம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பினாலும், மக்கள் இழந்த பொருளாதார மற்றும் உணர்வுப்பூர்வமான இழப்புகளை ஒருபோதும் ஈடு செய்ய முடியாது. சிறு பான்மையினர் மீதான அக்கறையற்ற பெரும்பான்மைவாத ஆட்சியின் கீழ் மக்கள் வாழக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்பதே கசப்பான உண்மை. சொந்த மாநிலத்திலேயே மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். நிவாரண முகாம்களில் தங்கியுள்ள 65,000-க்கும் மேற்பட்ட மக்க ளின் துயரங்களுக்கு இன்னும் முடிவே ஏற்படவில்லை. நாள்தோறும் சிறையில் இருப்பதை போன்று கண்ணீரோடு உள்ளனர்.

மோடியின் நடிப்பு

பிரதமர் மோடி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றாலும், மணிப்பூரின் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு நேரம் ஒதுக்கவில்லை. அவரது அணுகு முறை வெறும் ‘நடிப்பு’ போல உள்ளது. மாநிலங்களின் பிரச்சினைகளை அமைதி யாகக் கையாளுவதை விட, திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்கும் அல்லது தேர்தல் பிரச்சாரங்களுக்குமே மோடி முக்கியத்துவம் அளிக்கிறார். மோதல்களைத் தீர்க்கும் உத்தி களை அமைதியாக வகுப்பதற்குப் பதிலாக, அரசியல் செய்திகளைப் பரப்புவதிலேயே பிரதமர் ஆர்வம் காட்டுகிறார். மோதல் மேலாண்மையைத் தனது சக அமைச்சரான உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அவர் விட்டுவிடுகிறார். இது பின்னாளில் மோசமான பின்விளைவை ஏற்படுத்தும்” என பாட்ரிசியா முகிம் கட்டுரையில் கண்டனத்துடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *