சொந்தக்காரர்கள் வீட்டுக்குக்கூட எங்கள் பிள்ளைகளை
அனுப்ப விரும்பாமல் பழகுமுகாமுக்கு அனுப்புகிறோம்!
அனுப்ப விரும்பாமல் பழகுமுகாமுக்கு அனுப்புகிறோம்!
தஞ்சை, மே 4 பழகு முகாமின் நிறைவு நாளான 5 ஆம் நாளில் பெற்றோர்கள், மனம் நெகிழ்ந்து பேசினர். அப்போது, “எங்கள் பிள்ளைகளை சொந்தக்கா ரர்கள் வீட்டுக்கு அனுப்புவதற்கு கூட எங்களுக்கு விருப்பமில்லை. ஆனால், ‘பழகு முகாம்’ என்றால், உட னடியாக அனுப்பி வைக்கிறோம். இங்கு மட்டும்தான் மூடநம்பிக்கைகள் குழந்தைகளின் உள்ளத்தில் விதைக்கப்படுவதில்லை. அந்த அளவுக்கு ‘பழகு முகாம்’ பயனுள்ளதாக இருக்கிறது” என்று, நெகிழ்ச்சியுடன் பேசினர்.
பல்வேறு ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகள்!
‘பெரியார் பிஞ்சு’ மாத இதழ், ‘பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்’ (நிகர்நிலை பல்கலைக்கழகம்) இரண்டும் இணைந்து, 8 வயது முதல் 12 வயது வரையிலான பெரியார் பிஞ்சுகளுக்கு, 27.04.2026 முதல், 1.05.2026 வரையிலான, 5 நாட்களாக, கலைத்திறன்; சிந்தனைத் திறன்; விளையாட்டுத் திறன்; நகைச்சுவைத் திறன்; படைப்புத்திறன்; தற்காப்புத் திறன்; உடற்பயிற்சித்திறன்; சுற்றுலாத் திறன்; நீச்சல் திறன் உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான திறன்களை பெறும் வகையில், நிகழ்ச்சிகளை, ‘பழகு முகாம்’ எனும் பெயரில், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தியது. இந்நிகழ்ச்சி, கடந்த 33 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கரோனா தொற்று காரணமாக, 2019, 2020 ஆகிய இரண்டு ஆண்டுகள் நடைபெறவில்லை. அதன் பிறகு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு (2026), ஏப்ரல் 27ஆம் தேதி துவங்கி, மே 1 ஆம் தேதி இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.
5 வகையிலான
90 மரக்கன்றுகளை நட்டனர்!
90 மரக்கன்றுகளை நட்டனர்!
மே 1 ஆம் தேதி, வழக்கம்போலவே அதிகாலை 5:50 மணிக்கு, எல்லாப் பணிகளையும் முடித்துவிட்டு நடைப் பயிற்சிக்கு பெரியார் பிஞ்சுகள் தயாரானார்கள். அவர்கள் தங்கி இருக்கும், சொர்ணா ரங்கநாதன் விடுதியில் தொடங்கி, புலவர் இமயவரம்பன் தோட்டத்தின் வழி யாக பேராசிரியர்கள் குடியிருப்புக்கு பின்புறம் வந்து, ஆலமரத்தை வந்தடைந்து, அங்கிருந்து வேளாண்மைத் துறை வளாகத்தின் முன்புறம் உள்ள காலி மனைப் பகுதிக்கு நடைப்பயிற்சியாகவே வந்து சேர்ந்தனர். அங்கு அனைவரும் மருதமரம், இலுப்பை, நாவல், பூங்கண், மயில் கொன்றை ஆகிய 5 வகையிலான 90 மரக்கன்றுகளை நட்டனர். அதன் பிறகு, உள் விளையாட்டரங்கத்தின் முகப்புக்கு வந்து சேர்ந்தனர். அங்கு கராத்தே, சிலம்பம், யோகா ஆகிய பயிற்சிகளை மேற்கொண்டு விட்டு மறுபடியும் சொர்ணா ரங்கநாதன் விடுதியை அடைந்தனர்.
காலை உணவுக்குப் பிறகு, முதல் வகுப்பாக நாகம்மையார் உணவுக் கூட வளாகத்தில் உள்ள, ஆலமரத்தின் பின்னணியில் ஒரு பலகையில் வைக்கப்பட்டிருக்கும் பலூன்களை, துப்பாக்கியால் சுடும் பயிற்சி நடைபெற்றது. வியப்புக்குரிய வகையில் முதல் வாய்ப்பிலேயே பலரும் பலூன்களை சுட்டு வீழ்த்தினர். அதைத்தொடர்ந்து, கன்புயூசியஸ் அரங்கத்தில் இரண்டாம் வகுப்பு நடைபெற்றது. இதில், மனநல ஆலோசகர் லில்லி புஷ்பம் அவர்கள், பெரியார் பிஞ்சுகளின் தலைமைப் பண்பை வெளிப்படுத்தும் வகையில் பாடம் நடத்தினார்.
‘‘5 நாள் பழகு முகாமை 10 நாட்கள் ஆக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள்!
அதைத்தொடர்ந்து, அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிறைவு விழா தொடங்கியது. பல்கலைக்கழகப் பதிவாளர் சிறீவித்யா தலைமையேற்று உரையாற்றினார். அவர் தனது உரையில், ஒருங்கி ணைப்பாளர்கள் அனைவரையும் பாராட்டினார். பெரியார் பிஞ்சுகளை வாழ்த்தினார். அத்துடன், பழகு முகாம் பற்றிய கருத்துகளை, பெரியார் பிஞ்சுகளிடமே உரையாடல் மூலம் அறிந்து மகிழ்ந்தார். பெரும்பாலான பெரியார் பிஞ்சுகள், ‘‘5 நாள் பழகு முகாமை 10 நாட்கள் ஆக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் வைத்தனர். முன்னதாக, அரசியல் அறிவியல் கல்வித் துறை மாணவி வைஷ்ணவி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அறிவியல் மற்றும் மனிதநேயத்துறை புல முதன்மையர் புவனேஸ்வரி, கணினி அறிவியல் மற்றும் பயன்பாடுகள் துறையின் புல முதன்மையர் சந்திரகுமார் பீட்டர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அதைத்தொடர்ந்து, திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பழகு முகாமின் ஒட்டுமொத்த பயன்பாடு பற்றியும் விவரித்து, “வீடுகளுக்கு சென்ற பின்னும், பெரியார் பிஞ்சுகள் இங்கே கற்றுக் கொண்டதைத் தொடர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்து, தனது உரையை நிறைவு செய்து கொண்டார். நிறைவாக, கல்வியியல் துறை மாணவி அகிலா அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார். அதே போல கல்வியியல் துறையைச் சேர்ந்த வேல்முருகன், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சிறப்பித்தார். பல்கலைக்கழகப் பதிவாளர் சிறிவித்யா வித்யா அவர்கள், பெரியார் பிஞ்சுகள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்களை வழங்கி மகிழ்ந்தார்.
வாசிப்பு பழக்கம் அதிகமாக வந்திருக்கிறது!
தொடர்ந்து, பெற்றோர்கள் சார்பில் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு செய்யப்பட்டதற்கு பிறகு, புதுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், சென்னை ஆவடியைச் சேர்ந்த தமிழ்மணி ஆகியோர், பழகு முகாம் பற்றிய சிறப்புகளை; அதனால் தங்கள் பிள்ளைகள் பெற்ற பயன்களை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு பேசினர். புதுக்கோட்டை கிருஷ்ணவேணி பேசும்போது, “நாங்கள் எங்கள் பிள்ளைகளை சொந்தக்காரர்கள் வீட்டுக்கு அனுப்புவதற்கு கூட விரும்புவதில்லை. பழகு முகாம் என்று சொன்னால் உடனடியாக அனுப்பி விடுகிறோம்” என்று தெரிவித்தார். கோபாலகிருஷ்ணன் பேசும்போது, “இதற்கு முந்தைய ஆண்டுகளில் எனது மகளை பழகு முகாமுக்கு அனுப்பினேன். அவருக்கு வாசிப்பு பழக்கம் அதிகமாக வந்திருக்கிறது. அதற்காகவே எனது மகனையும் இங்கு அனுப்பி வைத்தேன்” என்று பேசினார். அதேபோல தமிழ்மணி பேசும்போது, “பிள்ளைகளை எங்கு அனுப்பினாலும் மூடநம்பிக்கைகள் தொடர்பான விஷயங்கள்தான் அவர்களிடம் விதைக்கப்படுகிறதே தவிர, பழகு முகாமில் தான் ஆக்கபூர்வமான சிந்தனைகள் விதைக்கப்படுகின்றன” என்று பாராட்டினார்.
“நாங்க பெரியார் பிஞ்சுடா!
அஞ்சாத நெஞ்சுடா”
அஞ்சாத நெஞ்சுடா”
அதைத்தொடர்ந்து, கடந்த 5 நாட்களில், பெரியார் பிஞ்சுகளின் நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, “நாங்க பெரியார் பிஞ்சுடா! அஞ்சாத நெஞ்சுடா” என்று பெரியார் வலைக்காட்சி வெளியிட்ட பாடலைப் பின்னணியாகக் கொண்டு, மூன்று நிமிடக் காட்சி பதிவை, நவீன், ஜான் ஜோஸ்வா ஆகியோர் தயார் செய்திருந்தனர். அந்தக் காட்சிப்பதிவு திரையிடப்பட்டது. பெரியார் பிஞ்சுகள் அந்தப் பாடலை கொண்டாடித் தீர்த்து விட்டனர். அரங்கமே அவர்களின் ஆரவாரத்தால் நிறைந்தது. பெற்றோர்களும் நெகிழ்ச்சியுடன் அந்தக் காட்சிப் பதிவை கண்டு களித்தனர். தொடக்கத்தில், தமிழ்மொழி வாழ்த்தும், இறுதியில் நாட்டுப்பண் வாழ்த்தும் பல்கலைக்கழகத்தின் மாணவர்களால் பாடப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் வேந்தருடன்
பெரியார் பிஞ்சுகள் எடுத்த குழு ஒளிப்படம்!
பெரியார் பிஞ்சுகள் எடுத்த குழு ஒளிப்படம்!
அதைத்தொடர்ந்து, பெரியார் பிஞ்சுகளின் குழு தலைவர்கள் குழந்தைகளைப் பற்றிய தயார் செய்திருந்த மதிப்பீடுகளும், பல்கலைக்கழகத்தின் வேந்தருடன் பெரியார் பிஞ்சுகள் எடுத்த குழு ஒளிப்படமும் பெற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பெரியார் பிஞ்சுகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் அனைவரும் ஒன்றாக மதிய உணவு உண்ணும் நிகழ்வு நடைபெற்றது. அடுத்து முறைப்படி, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, சொர்ணா ரங்கநாதன் விடுதியில் இருந்து விடுவித்துக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. அதில் குழுத் தலைவருக்கும் அந்தக் குழுவில் இருக்கும் பெரியார் பிஞ்சுகளுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த உணர்வுபூர்வமான பிணைப்பின் காரணமாக, இரண்டு பக்கமும் கண்ணீர் கசிய, அந்தப் பிரிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பெற்றோர்களில் பலர், “எனது குழந்தையை இங்கு கொண்டு வந்து விடும்பொழுது, இங்கே இருக்க மாட்டேன் என்று அழுது அடம் பிடித்து அழுதனர். ஆனால், இப்பொழுது வீட்டுக்கு திரும்புவதற்கு மனமில்லாமல் தயங்கி தயங்கி நிற்கின்றனர்” என்று, நெகிழ்ந்தனர். சிலர் தங்கள் உள்ளத்தை கொள்ளை கொண்ட ஒருங்கிணைப்பாளர்களை மறுபடியும் சந்திப்போமா? இல்லையோ? என்ற அய்யத்தில், ஒளிப்படம் எடுத்துக் கொள்வதிலும், தங்கள் குறிப்பேட்டில் கையெழுத்து பெற்று கையெழுத்தும் பெற்றுக் கொள்வதிலும் கவனமாக இருந்தனர்.
“அடுத்த ஆண்டும் நிச்சயமாக வருவோம்” என்றும், “எனக்கு வயது ஆகிவிட்டது. அடுத்த ஆண்டும் என்னை சேர்த்துக் கொள்வீர்களா?” என்றும், ஒருங்கிணைப்பாளர்களிடம் வாடிய முகங்களுடன் ஓயாமல் கேட்டுக் கொண்டே… இருந்தனர். ஒருவழியாக எல்லோரும் விடை பெற்று சென்று விட, மழலைகளின் இருப்பிடமாக இருந்த சொர்ணா ரங்கநாதன் விடுதி வெறிச்சோடிப் போனது.
