மயிலாடுதுறை, மே 4- மயிலாடுதுறை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் பிறந்தநாள் விழா 2/5/2026 அன்று மாலை 6 மணிக்கு மயிலாடுதுறை வருவாய்த்துறை அலுவலர் சங்க அரங்கத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இரெ.செல்லதுரை தலைமை ஏற்க பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் ஞான.வள்ளுவன், மாவட்ட கழகத் தலைவர் கடவாசல் குணசேகரன், மாவட்டச் செயலாளர் கு.இளமாறன், ஆகியோர் முன்னிலை வகிக்க, தோழர் சே.ஆராமதி அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்வின் தொடக்கத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகப் பொதுச் செயலாளர் கோவன் எழுச்சிப் பாடல்களை இசைத்தபடியே உரையாற்றி உணர்வூட்டினார். அதனைத் தொடர்ந்து பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன் தொடக்க உரையாற்ற கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வன் சிறப்புரையாற்றினார். எழுத்தாளர் கி.தளபதிராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தங்க.செல்வராஜ் நன்றி தெரிவித்தார்.
தந்தை பெரியாரின் கொள் கைகளை கவிதை வரிகளாய் வரித்துக் கொடுத்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். 1891ஆம் ஆண்டு புதுவையில் பிறந்தவர். பெரியாரை விட 12 வயது இளையவர். தனது 37ஆவது வயதில் புதுவை மாநிலம் காரைக்காலையடுத்த நிரவியில் ஆசிரியராக பணியாற்றியபோது 1928ஆம் ஆண்டு மயிலாடுதுறை யில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் உரையைக் கேட்டு, இவர்தான் நம் தலைவர்! என்ற உணர்வு பெற்று, அதுவரை அவர் மண்டைக்குள் புதைந் திருந்த பழைய புராணக் குப்பைக் கூளங்களை ஒரு நொடி யில் தூக்கி எறிந்து பெரியார் தொண்டர் ஆனார்!
மயிலம் சுப்பிரமணிய துதி பாடிக் கொண்டிருந்த இந்தப் புலவனின் எழுதுகோல் அன்று முதல் புரட்சிப் படைப்புகளைப் படைக்க ஆரம்பித்தது. புராணப் புலவன் புரட்சிக் கவிஞன் ஆனதன் தொடக்கம் இதுதான்!
கடவுள் இல்லை என்பான் யாரடா? தில்லை கண்டு பாரடா!
என்று தண்டபாணி தேசிகர் பாடிய பாடலுக்குப் பதிலடியாக
இல்லை என்பேன் நானடா அத்
தில்லை கண்டு தானடா!
என்று பாடினார்.
மயிலாடுதுறையில் 1971 ஆம் ஆண்டு இதே பகுத்தறிவாளர் கழக அமைப்பால் நடத்தப்பட்ட புரட்சிக் கவிஞர் விழாவில் புரட்சிக் கவிஞர் படத்தைத் திறந்து வைத்து பேசியுள்ளார் தந்தை பெரியார் அவர்கள்.
“பாரதிதாசன் அவர்கள் புரட்சிகரமான கருத்துகளை வெளிப்படுத்திய முதல் கவியும் கடைசி கவியும் ஆவார். அவருக்கு அடுத்து அவருக்கு ஈடாக வேறு எந்த கவிஞரும் தோன்றவே இல்லை. பாரதிதாசன் புதுமைக் கருத்துகளையும் புரட்சிக் கருத்துகளையும் மக்கள் சமுதா யத்திற்கு தேவையான சமதர்மக் கருத்துகளையும் துணிந்து வெளியிட்டுள்ளார். அவருக்கு ஏற்றாற்போல சுயமரியாத இயக்கமும் திராவிட இயக்கமும் இருந்து வந்துள்ளது. அவர் கடவுள், மதம், சாஸ்திரம், பெண்ணடிமை, மூடநம்பிக்கை இவற்றைக் கண்டித்து நன்றாக பாடியுள்ளார். பாரதி தாசன் எந்த இடத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் பகுத்தறிவுக்குப் புறம்பான கருத்துகளை எடுத்துப் பாட முற்படவே இல்லை. சமுதாய மாற்றத்திற்கான கருத்துகளைத் துணிந்து கூறிய பெரும் புலவர் அவர். இன்றைக்கு பகுத்தறி வாளர்களுக்கு எடுத்துச் சொல்லத் தக்க சாதனமாக புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் அமைந்துள்ளன. நமது மக்கள் இப்படிப்பட்டவருக்கு பாராட்டும் பெருமையும் அளிக்க வேண்டிய அளவுக்கு அளிக்காதது வருந்தத்தக்க தாகும். காரணம் அவர் பகுத்தறிவுவாதியான படி யால் அவருடைய பணிக்கு கிடைக்க வேண்டிய மதிப்பு கிடைக்கவில்லை. பாரதிதாசனைப் போல் புதிய கருத்துகளை எடுத்துச் சொல்லிப் பரப்ப ஆளே இல்லையே. பாரதிதாசன் போல நமது நாட்டில் புரட்சிப் புலவர்கள் தோன்றி இருந்திருப்பார்களே ஆனால் நமக்கு 2000, 3000 ஆண்டுகளாக இருந்து வரும் இழித்தன்மை இருந்து வந்திருக்குமா? பாரதிதாசனுக்கு விழா கொண்டாடுகிறோம் என்றால் அது நமது வளர்ச்சிக்கு விழா கொண்டாடுகிறோம் என்பதே அதன் பொருள்.” எனப் புரட்சி கவிஞரைப் பற்றி பெரியார் குறிப்பிட்டதையும் சுட்டிக்காட்டி பல்வேறு செய்திகளை தோழர்கள் சிறப்பாக எடுத்துரைத்தனர்.
அரங்கம் நிறைந்த இந் நிகழ்வில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெக.வீரபாண்டியன், தமிழ் மண் தன்னுரிமை இயக்க அமைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன், திமுக நிர்வாகிகள் சிவ.கோபாலகிருஷ்ணன், கொக்கூர் கலைக்குமார், மயிலாடுதுறை நகர கழகத் தலைவர் சீனி.முத்து, செயலாளர் பூ.சி.காமராஜ், ஒன்றிய தலைவர் அ.சாமிதுரை, சீர்காழி ஒன்றிய தலைவர் ச.சந்திரசேகரன், குத்தாலம் ஒன்றிய தலைவர் தி.சபாபதி, குத்தாலம் ஒன்றிய துணைத் தலைவர் மா.பாலசுந்தரம், கொள்ளிடம் ஒன்றியத் தலைவர் பூ.பாண்டுரங்கன், விவசாய அணி அமைப்பாளர் கு.இளஞ்செழியன், சென்னை ஜெயராமன், பகுத்தறிவாளர் கழக தோழர்கள் மாதிரிமங்கலம் எஸ்.மூர்த்தி, முனைவர் மதிவாணன், சித்தர்காடு செல்வராஜ், சீர்காழி வீரசேனன், ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் மகாலிங்கம், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், குத்தாலம் பன்னீர்செல்வம், பி.ராஜேந்திரன், கே.ஜி.நாகராஜ், தெ.மகேஷ், நா.இளையராஜா, சரவணகுமாரி, பெரியார் பிஞ்சுகள் தமிழினி, தமிழ் நிலவன், சாமி.கணேசன் மற்றும் ஏராளமான தமிழ் இன உணர்வாளர்கள், பகுத்தறி வாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் பங்கேற்ற அனை வருக்கும் சிற்றுண்டி தேநீர் வழங்கப்பட்டது.
விழா தொடங்குவதற்கு முன் மாலை 5 மணிக்கு பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி.மோகன் தலைமையில் மாவட்ட கழகம் மற்றும் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது மாவட்ட திராவிடர் கழக தலைவர் கடவாசல் குணசேகரன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கஃஇரெ.செல்லதுரை, பகுத்தறிவாளர் கழக மேனாள தலைவர் சந்தான கோபால கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறையில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார் பில் மாதம் தோறும் முதல் சனிக்கிழமை மாலை நிகழ்ச்சி நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
