இந்து இணையர்களை இசுலாமிய குழந்தையின் சட்டப்பூர்வ பாதுகாவலராக நியமித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஓர் இந்து இணையர்களுக்கு குழந்தை இல்லை. இதனால், அவர்கள் குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தனர். அவர்களது பக்கத்துவீட்டைச் சேர்ந்து இசுலாமிய பெண் ஒருவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. கணவரை இழந்த நிலையில் அந்தப் பெண் வறுமை காரணமாக குழந்தைகளை முறையாக பராமரிக்க முடியாத நிலையில் இருந்தார்.இதனால், அவர் தனது மூன்றாவது பெண் குழந்தையை இந்து இணையர்களுக்கு தத்துக் கொடுத்தார். இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரி மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்தார். ஆனால், இணையர்கள் இந்துக்கள் என்றும், குழந்தையும், தத்து கொடுப்பவரும் இசுலாமிய மதத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த மனுவை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து இந்து இணையர்கள் தரப்பில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், கே.கே.ராம கிருஷ்ணன் ஆகியோர், ‘‘இசுலாமிய பெண்ணுக்குப் பிறந்த குழந்தை, பிறந்தது முதல் இந்து இணையர்களின் அரவணைப்பிலும், அன்பிலும் வளர்ந்து வந்திருக்கிறது. அக்குழந்தை அப்பா, அம்மா என்றே அவர்களை அழைக்கிறது. தன்னைப் பெற்ற தாயை ‘ஆன்ட்டி’ என்று அழைக் கிறது. தனது வறுமை சூழலில் குழந் தையின் எதிர்காலம் சிறப்பாக அமைய இந்து இணையர்களை பாதுகாவலராக நியமிக்க இசுலாமிய பெண்ணும் முழு மனதுடன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
‘பாதுகாவலர்கள் சட்டம்’ என்பது மதம் சார்ந்தது அல்ல. இதில் குழந்தையின் நலனே மிக முக்கியமானது. இசுலாமிய சட்டத்தில் தத்தெடுப்பு முறை நேரடியாக அங்கீகரிக்கப்படாவிட்டாலும், ‘கபாலா’ என்ற முறையில் குழந்தையின் நிதி மற்றும் வாழ்வாதாரத் தேவைகளைப் பார்த்துக்கொள்ள ஒருவரை நியமிக்க அனுமதி உண்டு. குழந்தையின் நலனுக்காக நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தலாம். இசுலாமிய இணையர்களின் பெண் குழந்தையின் சட்டப்பூர்வ பாதுகாவலராக இந்து மதத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்படுகிறார். அக்குழந்தை உரிய வயது (மேஜர்) ஆகும் வரை இந்த பாதுகாப்பு நீடிக்கும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.
இந்தப் பிரச்சினையில் மதம் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியம் இல்லை; மனிதத்தைத் தான் கவனிக்க வேண்டும். தந்தையை இழந்த பிள்ளைகள், தாயின் அரவணைப்பில் வளர வேண்டிய நிலை. ஆனால், தாய்க்கோ போதிய வருமானம் இல்லை.
குழந்தைகளின் எதிர்காலம் முக்கியமில்லையா? அந்த எதிர்காலத்திற்கு உத்தரவாதம் கொடுக்கவும், அரவணைக்கவும் உதவிக்கரங்கள் நீள்கின்றன என்கிறபோது, அங்கே மதம் வந்து குறுக்கே படுத்து முட்டுக்கட்டை போட அறம் சார்ந்த நோக்கில் இடம் இல்லை.
‘மனிதநேயமா, மதமா?’ என்ற கேள்விக்கு – ‘மனிதநேயமே’ என்பதுதான் மனிதத் தன்மைப் பார்வையில் விடையாக இருக்கிறது.
‘‘கடவுளை மற – மனிதனை நினை’’ என்று தந்தை பெரியார் கூறியதுதான் இந்த இடத்தில் நிமிர்ந்து நிற்கிறது.
அந்த வகையில், உயர்நீதிமன்றம் உன்னதமான தீர்ப்பை வழங்கியுள்ளது பாராட்டத்தக்கதாகும்.
