மாணவர்களே, உங்கள் போட்டியாளர் உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கிறார்!
ஏழை, கூலித் தொழிலாளியின் மகனும், மகளும் படிக்கிற இந்தப் பல்கலைக் கழகம் – வேந்தர் கி.வீரமணியின் வாழ்நாள் சாதனை!
பெரியார் மணியம்மை பல்கலைக் கழக (நிகர்நிலை) வளாகத்தில்
தஞ்சை, மே 2 ‘‘மாணவர்களே, உங்கள் போட்டி யாளர் உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கிறார்! ஏழை கூலித் தொழிலாளியின் மகனும், மகளும் படிக்கிற இந்தப் பல்கலைக் கழகம் – வேந்தர் கி.வீரமணியின் வாழ்நாள் சாதனை!’’ என்றார் கவிப்பேரரசு வைரமுத்து.
கடந்த 30.4.2026 அன்று காலை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலை பல்கலைக் கழகத்தில்) புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 136 ஆவது பிறந்த நாள் விழா சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ‘ஞானபீட’ விருதாளர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
நிகரில்லாத வேந்தர் எங்கள் பகுத்தறிவு ஆசான் ‘தகைசால் தமிழர்’ ஆசிரியர்!
பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் நிகரில்லாத வேந்தர் எங்கள் பகுத்தறிவு ஆசான் ‘தகைசால் தமிழர்’ ஆசிரியர் வீரமணி அவர்களே! பல்கலைக் கழகத்தின் துணைத் தலைவர் என் அன்புச் சகோதரர் அன்புராஜ் அவர்களே! பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ராமச்சந்திரன் அவர்களே! ‘‘ஆசிரியர் பணி அறப்பணி – அதற்கே உன்னை அர்ப்பணி’’ என்ற தாரக மந்திரத்திற்கேற்ப தங்களை ஆசிரியப் பணிக்கே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற பேராசிரியப் பெருமக்களே! நிர்வாகிகளே, என் கண்ணுக்குக் கண்ணான மாணவக் கண்மணிகளே! வெற்றித் தமிழர் பேரவையின் நெற்றித் திலகங்களே! பாசத்திற்குரிய பத்திரிகையாளர்களே, ஊடக உறவு களே! உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் பாலின சமத்துவம் நிறைவேறி இருக்கிறது!
இந்த நாடு எதற்குப் போராடிக் கொண்டிருக்கிறதோ, அந்த வெற்றியை, இந்தப் பல்கலைக்கழக வளா கத்தில் பார்க்கிறேன். எதற்குப் போராடுகிறது நாடு? பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதிகார மய்யங்களில், ஆட்சி மன்றங்களில், பொது வாழ்வில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நாட்டின் பெரும் கொள்கை – போராட்டம் – எதிர்பார்ப்பு – ஏக்கம். ஆனால், 33 விழுக்காடு அல்ல – எங்கள் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழக வளாகத்துக்குள் – எங்கள் பெண்களுக்கு நாங்கள், 50 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுப்போம் என்று, இந்தப் பல்கலைக்கழகம் செய்து காட்டி இருக்கிறது. 50 விழுக்காடு மாணவர்கள்; 50 விழுக்காடு மாணவியர். இங்கேயே பாலின சமத்துவம் நிறைவேறி இருக்கிறது என்பதுதான் உண்மை தோழர்களே!
இந்தப் பல்கலைக்கழகத்தின் பெருமைகளை, நீங்கள் உணர்ந்து கொண்டிருப்பீர்கள்! உங்கள் பெற்றோர்கள் உணர்ந்து கொண்டிருப்பார்கள்! நான் உணர்ந்ததைச் சொல்ல வேண்டும் என்பதை என் கடமையாக, நான் நினைக்கிறேன்.
பெரியார் வருவதற்கு முன்னால்,
இந்தச் சமூகம் தாழ்ந்து கிடந்தது!
கல்வி என்பதுதான் இந்த உலகத்தின் புதிய திறவுகோல். பெரியார் வருவதற்கு முன்னால், இந்தச் சமூகம் தாழ்ந்து கிடந்தது – கல்வியின் மாறுபாட்டால், தாழ்ந்து கிடந்தது.
எங்கள் ‘தகைசால் தமிழர்’ வேந்தர் வீரமணி அவர்களின் வாழ்நாள் சாதனைதான் இந்தப் பல்கலைக்கழகம்!
ஒரு வர்க்கம் கல்வி கற்ற வர்க்கம்; இன்னொரு வர்க்கம் கல்வி கல்லாத வர்க்கம் – மூட வர்க்கம். இந்தப் பேதத்தை ஒழிப்பதற்குத் தான், பெரியார் பெண் கல்விக்குப் போராடினார். கல்விக்குப் போராடினார் – சமத்துவத்துக்குப் போராடினார். அந்த சுயமரியாதைக் கனவின் நீட்சிதான், இந்தப் பல்கலைக்கழகம். அந்தப் பகுத்தறிவின் உயரம்தான், இந்தப் பல்கலைக்கழகம். எங்கள் ‘தகைசால் தமிழர்’ வேந்தர் வீரமணி அவர்களின் வாழ்நாள் சாதனைதான் இந்தப் பல்கலைக்கழகம்.
கல்வி விளைவதற்கு இந்தக் களர் நிலம் தானா கிடைத்தது? என்று எள்ளி நகையாடினர்!
சற்று நேரத்திற்கு முன்பு தோழர்களே, இந்த அரங்குக்குள் நான் வருவதற்கு முன்னால், அன்புக்குரிய சகோதரர் அன்புராஜ், இந்த வளாகத்தைச் சுற்றிக் காட்டினார். வியந்து போனேன்; இது பல்கலைக்கழகமா? ஒரு வனாந்தரமா? இது கல்விக் கூடமா? சோலை வெளியா? அது அல்ல முக்கியம் தோழர்களே, 110 ஏக்கர் கொண்ட இந்தப் பெரிய வளாகத்தை – வேந்தர் அவர்கள் கல்விக்கழகமாக நிறுவுவதற்குத் தேர்ந்தெடுத்தபோது, பெரியவர்களால், ஊர் மக்களால் எள்ளி நகையாடப்பட்டார் நம்முடைய வேந்தர்! ஏன் தெரியுமா? ‘கல்வி விளைவதற்கு இந்தக் களர் நிலம் தானா கிடைத்தது? இங்கே பூ முளைக்காதே, மரம் வராதே, நீர் கட்டாதே! களர் நிலமாயிற்றே! இந்தக் களர் நிலத்தையா வேந்தர் தேர்ந்தெடுத்தார்?’ என்று எள்ளி நகையாடினார்கள். அப்படி எள்ளி நகையாடியவர்களுக்குப் பதிலை, அவர் வார்த்தைகளால் சொல்லவில்லை; கருத்தால் சொல்லவில்லை; தன் கரத்தால் சொன்னார். இதுதான் வளாகம்! இங்குதான் எங்கள் தலைமுறை உருவாகப் போகிறது. கல்வி இல்லாத பெண்கள், களர் நிலம். புரட்சிக்கவிஞர் பாட்டு. ‘‘கல்வி இல்லாத பெண்கள், களர் நிலம். அந்நிலத்தே புல் விளைந்திடலாம்; நல்ல புதல்வர்கள் வளர்தல் இல்லை’’ என்பது புரட்சிக்கவிஞர் பாட்டு.

புல் விளையாத நிலத்தில்,
நல்ல புதல்வர்களை விளைய வைத்தார்; புதல்விகளை விளைய வைத்தார்!
களர் நிலத்தைத் தேர்ந்தெடுத்தார்; புல் விளையாத நிலத்தை வேந்தர் தேர்ந்தெடுத்தார். இந்த இடத்தில் நல்ல புதல்வர்களை விளைய வைத்தார்; புதல்விகளை விளைய வைத்தார்; கல்வியை விளைய வைத்தார்; பகுத்தறிவை விளைய வைத்தார்; சுயமரியாதையை விளைய வைத்தார்; மானத்தை விளைய வைத்தார். இங்கே படித்து வெளியேறிய பிள்ளைகள் உலகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நாளை உங்களுக்கு வேறு வேறு இடம் உண்டு. தமிழ்நாட்டில் பிறந்தவர்கள், எனக்குத் தெரிகிறது, உங்கள் முகங்களைப் பார்க்கிற போது, உங்கள் ஏழ்மையின் ரேகைகளைப் பார்க்கிற போது முதல் தலைமுறை மாணவர்கள் என்பதை உங்களைப் பார்த்து, அடையாளம் கண்டு கொள்கிற போது, எனக்கொன்று தோன்றுகிறது. உங்கள் இடம் தஞ்சாவூரில் இல்லை; உங்கள் இடம் திருச்சியில் இல்லை; உங்கள் நாற்காலி மதுரையில் இல்லை; உங்கள் சிம்மாசனம் சென்னையில் இல்லை; உங்கள் சிம்மாசனம் இந்த உலக உருண்டையில் எங்கோ இருக்கிறது என்று நான் புரிந்து கொள்கிறேன். மாணவக் கண்மணிகளே, உங்களுக்கு ஒரு செய்தி கொண்டு வந்தேன்; இந்தச் செய்தியை உங்கள் நெஞ்சில் எழுதிக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வுக்குப் பக்கத்தில் வலம் வருவது மாதிரி, இந்த வார்த்தைச் செட்டுகளைக் குறித்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்குப் போட்டி யார்?
உங்களுக்குப் போட்டி யார்? வல்லத்தில் படிக்கிற ஒரு மாணவனுக்குப் போட்டி, தஞ்சையில் இல்லை. வாசிங்டன் டி.சி.யில் இருக்கிறார். இங்கே படிக்கிற ஒரு பெண்ணுக்குப் போட்டி, மதுரையில் இல்லை; மாஸ்கோவில் இருக்கிறார். செங்கிப்பட்டி மாணவனுக்குப் போட்டி, சென்னையில் இல்லை; சிகாகோவில் இருக்கிறார். நீங்கள் உலக நீரோட்டத்தோடு கலக்க வேண்டும். இந்தப் பல்கலைக் கழகத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் வென்றால், உங்களோடு பெரியார் வாழ்கிறார்! நீங்கள் வென்றால், உங்களோடு மணியம்மை வாழ்கிறார்! நீங்கள் வென்றால், உங்களோடு எங்கள் வேந்தர் வாழ்கிறார்! உங்களோடு, எங்கள் புரட்சி கவிஞர் பாரதிதாசன் வாழ்கிறார்!
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் ஒரு விஞ்ஞான கோயில் – ஒரு பகுத்தறிவு கோயில்!
ஒரு கல்விக் கூடத்தை உருவாக்குவது போல, ஒன்று இந்த நாட்டில் வேறு இல்லை. இந்த நாட்டில், அதிகமாக உண்டாக்கப்பட்டவை – கோயில்கள். கோயில்கள் ஏன் உண்டாக்கப்பட்டன? என்றால், கோயில்கள் பன்முகக் கூடாரமாக, ஒரு சமுதாயத்திற்குப் பயன்பட்ட காலம் உண்டு. கோயில்தான் நீதிமன்றம்; கோயில்தான் கருவூலம்; கோயில்தான் கடவுளுக்கு மட்டுமல்ல, கோயில்தான் மன்னர்களின் எதிரிகள் படையெடுத்து வந்தால், மன்னர் குடும்பத்திற்கு அடைக்கலம் தருகிற அந்தப்புரம். கோயில்தான் கேளிக்கை மன்றம். ஆனால், கோயில் ஒரு நாளும் கல்விக் கூடமாக இருந்தது இல்லை. ஏனென்றால், அங்கே தமிழ் கூட ஓதப்படவில்லை. தமிழன் கட்டிய கோயில், தமிழன் எழுப்பிய மாளிகை, தமிழன் கைபிடித்து வைத்த கடவுள் – அங்கே தமிழில் ஓதப்படவில்லை; சமஸ்கிருதம் ஓதப்பட்டது. எனவே, கோயிலில் கல்வி இல்லை. உண்மையான கோயில், எங்கள் பள்ளிக்கூடங்களும், பல்கலைக் கழகங்களும் தான்! இந்தப் பல்கலைக் கழகம் ஒரு விஞ்ஞானக் கோயில். இந்தப் பல்கலைக் கழகம் ஒரு பகுத்தறிவு கோயில். ‘‘அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் – ஆலயம் பதினாயிரம் நாட்டல்; அன்ன யாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.’’
கூலித் தொழிலாளியின் மகளுக்கும், ஏழைத் தொழிலாளியின் மகனுக்கும் தான் – இந்தப் பல்கலைக்கழகம்!
அய்யா, இதைத்தான் நான் குறித்துக் கொள்கிறேன். பாரதியார் பாடிய பாடலில், நான் ஒரு வார்த்தையைக் குறித்துக் கொள்கிறேன். சிவப்பு மையால் அடிக்கோடிட்டுக் கொள்கிறேன். ‘‘அன்னயாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு!’’ பணக்காரன் படித்துக் கொள்வான்; முன்னேறிய சமூகம் படித்துக் கொள்ளும்; பண்ணையார் மகன் படித்துக் கொள்வான்; 500 வேலி நிலம் வைத்திருக்கிறவன் படித்துக் கொள்வான்; வங்கியில் வேலை பார்க்கிறவன் மகன் படித்துக் கொள்வான். எங்கள் கூலித் தொழிலாளியின் மக்கள், எங்கள் விவசாயப் பெருங்குடியின் மக்கள், கூலி வேலை செய்கிறவரின் மகன், மகள் – வீட்டில் பத்துப் பாத்திரம் தேய்த்து மகளைப் படிக்க வைக்கிற தாய், முதுகில் மூட்டை சுமந்து, மகனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிற தந்தை – இவர்களுக்குத்தான் இந்தக் கல்லூரி; கூலித் தொழிலாளியின் மகளுக்கும், ஏழைத் தொழிலாளியின் மகனுக்கும் தான் இந்தப் பல்கலைக்கழகம்!
நீங்கள் படித்து மேம்பட வேண்டும்; சமூகம் ஒருமைப்பட வேண்டும்; பிள்ளைகளே, இந்தப் போட்டி உலகத்தில், நீங்கள் நீந்தி வர வேண்டும். இந்தியாவில் மொத்தம் 1,338 பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. மொத்தம் எவ்வளவு? 1,338 பல்கலைக் கழகங்கள்! 52,081 கல்லூரிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கின்றன. உயர்கல்விக்கு 4.46 கோடி மாணவர்கள் பதிவு செய்கிறார்கள். 95 லட்சம் மாணவர்கள் மட்டுமே, பட்டதாரிகளாக வெளியேறுகிறார்கள். இந்த 95 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு எவ்வளவு தெரியுமா? வெறும் 56 விழுக்காடு. உங்களில் 44 விழுக்காடு வேலை இல்லாமல் வெளியே நிற்கப் போகிற வாய்ப்பைத்தான் இந்தத் தேசம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.
56 விழுக்காடு மாணவர்களுக்குத்தான்
வேலை வாய்ப்பு!
படித்தோம், தேர்வில் வெற்றி பெற்றோம், வேலை வாய்ப்பு வந்துவிடாது. உடனே நீங்கள் நிலைபெற முடியாது. நீங்கள், கல்வியை முடித்து விட்டீர்கள்; காலம் உங்களுக்குச் சொந்தமில்லை. பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினால், உங்கள் நாற்காலி ஒன்றும் உங்களை வரவேற்கப் போவதில்லை. 44 விழுக்காட்டு மாணவர்கள், வாழ்வில் வாய்ப்பில்லாமல், தடுமாறுகிற சூழலைத்தான் இன்றைய இந்தியா உருவாக்கி வைத்திருக்கிறது. உங்களுக்குச் சவால், பல்கலைக்கழகம் அல்ல; உங்களுக்குச் சவால், வறுமை அல்ல; உங்களுக்குச் சவால், உங்கள் குடும்பம் அல்ல; உங்களுக்குச் சவால், இந்தியா! இந்தியாதான் உங்களுக்குச் சவால்! இந்தக் கருத்தை வைரமுத்து இங்கே சொல்லிவிட்டுப் போவதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டாம்; ‘‘நல்லவேளை வைரமுத்து, நீங்களாவது எங்கள் இருப்பிடம் சொன்னீர்களே! நீங்களாவது எங்கள் உண்மையைச் சொன்னீர்களே! நீங்களாவது, எங்கள் கனவைக் கலைத்தீர்களே! ‘நனவுக்கு வா’ என்று எதார்த்தத் தரைக்கு இழுத்தீர்களே!’’ என்று நீங்கள் வீட்டுக்குச் சென்று எனக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்தச் சூழலை எதிர்கொள்ள நீங்கள் பல்வகையான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பட்டப் படிப்பு என்பது நீங்கள் அடித்துக் கொள்கிற விசிட்டிங் கார்டு!
இந்தப் பட்டம் என்பது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அடித்துக் கொள்கிற விசிட்டிங் கார்டு. விசிட்டிங் கார்டு வேலைவாய்ப்பைத் தராது; விசிட்டிங் கார்டு மாதா மாதம் உங்களுக்குக் காசோலை வழங்காது. விசிட்டிங் கார்டு மட்டும் உங்களுக்கு மணமகனைத் தேடித் தராது; விசிட்டிங் கார்டு மட்டும் உங்களுக்கு மணமகளைத் தேடி தராது. இந்தக் கல்விக்கு வெளியே ஒரு தொழிற்கல்வி – ஒரு கூடுதல் கல்வி – இணைக்கல்வி கற்றுக்கொள்ள வேண்டும் நீங்கள்! ஒரு பி.ஏ., ஒரு பிஎஸ்.சி., ஒரு எம்எஸ்,சி,. இங்கிலீஷ் லிட்ரேச்சர், கம்ப்யூட்டர் சயின்ஸ், சி.சி., இதெல்லாம் மட்டும் போதாது. உலகம் அதற்கு மேலே உங்களிடம் எதிர்பார்க்கிறது. அந்த எதிர்பார்ப்பை நீங்கள் ஈடுகட்ட வேண்டும் என்று உங்களை நான், விரும்பி வேண்டி கேட்டுக் கொள்கிறேன் தோழர்களே!
இந்திய அரசியல்
ஆசிரியர் அய்யாவைச் சுற்றி வருகிறது!
உங்களுக்கு ஓர் உண்மையைச் சொல்ல வேண்டும். எனக்கு ஒரு தலைப்புக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். ஆசிரியர் தலைப்புக் கொடுத்தால், சாதாரணமாகக் கொடுப்பாரா? அவர் தலையங்கம் எழுதினால், அதை இந்தியா திரும்பிப் பார்க்கும். அவர் ஓர் அறிக்கை விட்டால், தமிழ்நாட்டு எதிர்க்கட்சிகள் எல்லாம் மனப்பாடம் செய்யும். அவர் ஒரு மேடையில் பேசுகிறார் என்றால், ஊடகங்கள் எல்லாம் உற்றுப் பார்க்கும். அவருக்குப் பெரிய பதவி இல்லை; அவருக்குப் பெரிய அதிகாரம் இல்லை. தமிழ்நாட்டு ஆட்சியில் அவர் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இந்திய அரசியல் அவரைச் சுற்றி வருகிறது என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. கரவொலி செய்து உங்கள் வேந்தரை நீங்கள் போற்ற வேண்டும் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
தோழர்களே, அய்யா எனக்கு ஒரு தலைப்பு கொடுத்தார். ஆசிரியர் அய்யாவிடம் எனக்கு இருக்கிற மயக்கம் எல்லாம், அவர் பேசுவதை 100 சதவீதம் நீங்கள் நம்பலாம். இதை நான் சொல்வதற்கு, எனக்கு எவ்வளவு திராணி வேண்டும் – அவரைப் பற்றிச் சொல்வதற்கு! அவருக்கு எவ்வளவு ‘ஞானம்’ வேண்டும். மேடையில் சொல்கிற கருத்துகளை எல்லாம், ஒரு சமூகம் நம்பி விடுமா? அடுத்த கேள்வி கேட்கிறேன் – நம்பலாமா? நம்பவும் கூடாது, நம்பிவிடவும் கூடாது. மேடையில் பேசுகிறவன் எல்லாம், அவனவன் ஆசையைப் பேசு கிறான்.
மாணவர்களே, உங்கள் ‘ரோல் மாடலாக’ உங்கள் வேந்தரை எடுத்துக் கொள்ளுங்கள்!
அவனவன் குறைந்த அறிவை வெளிச்சம் போடுகிறான். அவனது அறியாமைக்கு ஒலிபெருக்கி யைப் பயன்படுத்திக் கொள்கிறான். ஆனால், ஆசிரியர் வந்து, இந்த இடத்தில் ஒலிபெருக்கி முன் நின்று பேசினால், அவர் பேசுகிற ஒவ்வொரு சொல்லும், சத்தியம், நேர்மை, வாய்மை. காரணம், சிந்தனை இல்லாமல், பகுத்தறிவு இல்லாமல், ஆதாரம் இல்லாமல், அவர் எதையும் பேசுவதில்லை. அதனால் தோழர்களே, உங்கள் வாழ்க்கையில் யாரையாவது, நீங்கள் ‘ரோல் மாடல்’ எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும் என்றால், உங்கள் வேந்தரை எடுத்துக் கொள்ளுங்கள்.
எவன் ஒருவன், வாசித்துக் கொண்டே இருக்கிறானோ – எவன் ஒருவன், யோசித்துக் கொண்டே இருக்கிறானோ – அவன் நினைவாற்றல் வளரும்!
இவருடைய பண்பு நலன், ஆற்றல் – அவருக்கு 93 வயது. 93 வயதில் அவருடைய நினைவாற்றலைப் பார்த்தால், இவருக்கு வயது 53 என்று தான் தோன்றும். அவர் நினைவாற்றலைப் பார்த்து, நான் வியக்கிறேன். கலைஞரின் நினைவாற்றலைப் பார்த்து, நான் வியந்திருக்கிறேன். கலைஞரின் நினைவாற்றல், பெரியாரால் வந்தது. பெரியாரின் நினைவாற்றலை, வாங்கி வைத்திருக்கிற இன்னொருவர், வேந்தர் அவர்கள். பெரியார், கலைஞர், வேந்தர் வீரமணி இவர்களுக்கெல்லாம் நினைவாற்றல் கொட்டிக் கிடக்கிறது என்றால், என்ன பொருள்? மூன்று பேருக்கும் ஒரே ஒரு குணம் இருக்கிறது. அந்தக் குணம்தான் அவர்கள் நினைவாற்றலை, அப்படி வைத்திருக்கிறது. எவன் ஒருவன், சிந்தித்துக் கொண்டே இருக்கிறானோ – எவன் ஒருவன், வாசித்துக் கொண்டே இருக்கிறானோ – எவன் ஒருவன், யோசித்துக் கொண்டே இருக்கிறானோ – அவன் நினைவாற்றல் வளரும். இந்த மூவரும், அந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள். நீங்களும், அந்த ஜாதிக்கு மாற வேண்டும்.
இந்தச் சமூகத்தையே புரட்டிப் போட்ட பேச்சாளர் நீங்கள், எனக்கு வழிவிடுகிறீர்களே!
நண்பர்களே! உங்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ‘இப்போது வைரமுத்து பேசுவார்’ என்று அறிவிப்பு வந்ததும், நான் விசுக்கென்று எழுந்தேன். எழுந்ததும், வேந்தர் அவர்கள், என் காதருகே சொன்னார், ‘‘வைரமுத்து, நான் சுருக்கமாகப் பேசப் போகிறேன். உங்களுக்கு வழிவிடுகிறேன். நீங்கள் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அவ்வளவு நேரம் பேசலாம்’’ என்று காதோரம் கிசுகிசுத்தார். நான் நினைத்துக் கொண்டேன், ‘எவ்வளவுப் பேச்சு பேசியவர்கள் நீங்கள்; இந்தச் சமூகத்தையே புரட்டிப் போட்ட பேச்சாளர் நீங்கள், எனக்கு வழிவிடுகிறீர்களே அய்யா’ என்று நினைத்துக் கொண்டேன். ஆனாலும், நண்பர்களே, தோழிமார்களே, பேராசிரியர்களே, ஆசிரியர் எனக்குக் கொடுத்த சுதந்திரத்தை, இந்தியா வாங்கிய சுதந்திரம் போல, நான் ‘மிஸ்யூஸ்’ பண்ண மாட்டேன். நான் சரியாகத்தான் பயன்படுத்துவேன். எனக்குத் தெரியும், ஒரு சபையில் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்பது! உங்கள் உடல் மொழியில் தெரியும். உங்கள் நகர்வில் தெரியும். உங்கள் நாற்காலி நகர்கிறதா, உங்கள் உடல் நகர்கிறதா, உங்கள் கண்கள் என் கண்களை மொய்த்திருக்கிறதா? உங்கள் செவிகள், என் வார்த்தைக்குப் பக்கத்தில் விளைத்து நிற்கின்றனவா? உங்கள் இருதயம், என் இருதயத்திற்குப் பக்கத்தில் துடித்துக் கொண்டிருக்கிறதா, இல்லையா? என்பது தெரியும். அப்படித் தெரிந்தால் கொஞ்சம் பேசுவேன். இதில், ஒன்று குறைந்தாலும், ‘வணக்கம்’, ‘நன்றி’ என்று நிறுத்துவேன். இதுதான் என் பழக்கம். நான் கொஞ்ச நேரம் பேசலாமா, இல்லையா? என்பது ஒலிபெருக்கியின் கையில் இல்லை. என் கையில் இல்லை. ஆசிரியரின் சொற்களில் இல்லை. உங்கள் உடல் மொழியில் இருக்கிறது. அது என்ன கருப்புச் சட்டை போட்டவர்கள் மட்டும் கைதட்டுகிறீர்கள்; மற்றவர்கள் அதிலிருந்து விலக்கப்பட்டு இருக்கி றார்களா? எனக்குத் தெரியவில்லை. மாணவச் செல்வங்களே, நீங்கள் கைதட்டினால், எங்கள் ஆசிரியர் உங்களுக்கு ஒன்றும் ‘மெமோ’ கொடுக்க மாட்டார். உங்கள்மீது விசாரணைக் கமிஷன் அமைக்கமாட்டார். நீங்கள் தைரியமாகக் கைதட்டலாம். அட, வீட்டில் தான் கைதட்ட முடியவில்லை; அரங்கத்திலாவது கை தட்டுங்கள், தோழர்களே, தோழிகளே கைதட்டுங்கள்!
‘புரட்சிக் கவிஞரின் புது உலகம்!’
எனக்கு அவர் தந்திருக்கின்ற தலைப்பு, ‘புரட்சிக் கவிஞரின் புது உலகம்!’ எப்படி அய்யா, இப்படி தலைப்புக் கொடுக்கிறீர்கள். மோனையோடு! புரட்சிக்கவிஞரின் புது உலகம்! அந்த மோனையோடு ஒரு கவிஞன் கொடுக்கிற தலைப்பு! ஒரு சமூகப் பிரக்ஞை உள்ளவன் கொடுக்கிற தலைப்பு! ஒரு பல்கலைக்கழக வேந்தன் கொடுக்கிற தலைப்பு! இது தலைப்பு அல்ல, ஒரு கவிஞனுக்கு, வேந்தர் இடுகிற கட்டளை. அந்தக் கட்டளையை, நான் புரிந்து கொண்டு, சற்று நேரம் உங்களோடு உரையாட விரும்புகிறேன். உரையாற்றுதல் வேறு; உரையாடுதல் வேறு. உரையாற்றுதல் என்பது, அவனுக்குத் தெரிந்ததைச் சொல்லிவிட்டுப் போவது. உரையாடுதல் என்பது, உங்களுக்குத் தெரிய வேண்டி யதைச் சொல்லிவிட்டுப் போவது.
பழைய உலகைத் தெரிந்து கொண்டால் தான், நீங்கள் புது உலகத்தில் வாழ முடியும்!
உங்களுக்குத் தெரிய வேண்டியதை நான் சொல்கி றேன். பாரதியும் – பாரதிதாசனும் பிறந்த காலத்தில், இந்த உலகம் எப்படி இருந்தது தெரியுமா? நீங்கள் எல்லாம் 90–களுக்குப் பிறகு பிறந்தவர்கள். 95 அதற்குள்ளே பிறந்தவர்களாக இருக்கக்கூடும். மாணவக் கண்மணிகள் உங்களுக்குப் பழைய உலகம் தெரியாது. பழைய உலகைத் தெரிந்து கொண்டால் தான், நீங்கள் புது உலகத்தில் வாழ முடியும். பழைய பெருமையை ஏன் தெரிந்து கொள்கிறோம் தெரியுமா தோழர்களே! நிகழ்காலத்தில் நிமிர்ந்து நிற்கத்தான், நீங்கள் பழைய உலகைத் தெரிந்து கொள்கிறீர்கள்!
செங்குட்டுவன் பெருமையை, கரிகால் பெரு வளத்தான் பெருமையை, மாமன்னன் ராஜராஜன் பெருமையை, சங்கப் புலவன் பெருமையை, கபிலர், பரணர் பெருமையை, கம்பன் பெருமையை, பாரதிதாசன் பெருமையை, கலைஞர் பெருமையை, பெரியார், அண்ணா பெருமையை, நீங்கள் தெரிந்து கொள்வது என்பது, நிகழ்காலத்தில் உங்கள் நெஞ்சு விரிவதற்கு, தோள்கள் உயர்வதற்கு, இதயம் துடிப்பதற்கு, வாழ்வு விரிவதற்கு, இந்த உலகத்தோடு போட்டி போடுவதற்கு நீங்கள் பழைய உலகத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அம்பேத்கர் எழுதியிருக்கிறார், தெரிந்துகொள்ளுங்கள்!
பழைய உலகம் எப்படி இருந்தது தெரியுமா? தோழர்களே! அம்பேத்கர் எழுதுகிறார், புனேயில் ஒரு தெருவில் போகிறார்கள் தாழ்த்தப்பட்டவர்கள், அந்தத் தெரு உயர்ஜாதி மக்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டவர்கள் குடியிருக்கிற தெரு. அந்தத் தெருவில் போகிறவர்கள், கையில் ஒரு பாத்திரத்தோடு போக வேண்டும். இது எழுதியது யார்? அறிஞர் பெருமகன் அம்பேத்கர். பூனாவில் அந்தத் தெருவுக்குள் போகிற தாழ்த்தப்பட்டவர்கள் கையில், ஒரு பாத்திரத்தோடு போக வேண்டும். ஏன் அந்த பாத்திரம் தெரியுமா? அந்தத் தெருவில், அவர்கள் மறந்தும் உமிழ்ந்து விடக்கூடாது. காரித் துப்புதல், எச்சில் துப்புதல், இருமல் வந்தால் துப்புதல், அந்தத் தெருவில் நேர்ந்து விடக்கூடாது. வீட்டிலிருந்து கக்கத்தில் பாத்திரம் எடுத்துக் கொண்டு வர வேண்டும். பாத்திரம் இல்லையா, தகர டப்பாக்களை இடுப்பில் கட்டிக்கொண்டு வரவேண்டும். எழுதி இருக்கிறார் அம்பேத்கர். நானும், ஆசிரியரைப் போலத்தான். ஆதாரம் இல்லாமல் பேச மாட்டேன்; பொய் எனக்குப் பிடிக்காதது – வாழ்க்கையிலும், மேடையிலும்! பொய் சொல்கிறவன் யார் தெரியுமா? யார் பொய் சொல்வான்? நேர்மையற்றவன் பொய் சொல்வான். கோழை பொய் சொல்வான். வஞ்சகன் பொய் சொல்வான். அறிவுக்குப் புறம்பாய், நேர்மைக்குப் புறம்பாய் ஆதாயம் தேடுகிறவன் பொய் சொல்வான். இந்த நான்கு இழி குணங்களும் எனக்கு இல்லை. ஆதலால், நான் பொய் சொல்ல மாட்டேன். இந்த ஆதாரம், அம்பேத்கரின் நூலில், நான் படித்தது.
நம் முன்னோர்களுக்கு நேர்ந்த அவலம், அவமானம் உங்களுக்கு இல்லை!
ஓர் ஊரில், ஒரு வீட்டில் ஒரு திருமணம் நடக்கிறது. அந்தத் திருமணத்தில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தவர்கள் எல்லாம், சாட்டையால் அடிக்கப்பட்டார்கள். இங்கே பாருங்கள், நம் முன்னோர்களுக்கு நேர்ந்த அவலம், அவமானம் உங்களுக்கு இல்லை. அதைத் துடைத்தவர் பெரியார், அதைத் துடைத்தவர் அண்ணா, அதைத் துடைத்தவர் கலைஞர், அதைத் துடைத்தவர் ஆசிரியர் வீரமணி அய்யா. அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறோம்.
ஒரு திருமண வீட்டில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தவர்கள், சாட்டையால் அடிக்கப்பட்டார்கள். ஏன் தெரியுமா? அந்த வீட்டு விருந்தில் அவர்கள், நெய் பரிமாறப்பட்ட உணவைச் சாப்பிட்டு விட்டு வந்துவிட்டார்களாம்! நெய் சாப்பிட்டதற்காக அடித்தி ருக்கிறார்கள்! உயர்ஜாதிகள் கருதுகிறார்கள், ‘நெய், வெண்ணெய் இவையெல்லாம் எங்கள் உணவுப் பொருள். எங்கள் உடம்போடு மட்டும்தான் சேரும். எங்கள் நரம்புகளைத்தான் அது சாரும். எங்கள் ரத்தம் மட்டும்தான் அதை ஏற்றுக்கொள்ளும். அந்தக் கொழுப்பு எங்களுக்கு மட்டும்தான் உரிமை’ என்று தாழ்த்தப்பட்டவர்கள் நெய் அருந்தக் கூடாது என்று சாட்டையால் அடிக்கப்பட்டார்கள். இதுதான் ஜாதி.
நண்பர்களே, பெரியார் ஒரு மேடையில் பேசிக் கொண்டிருக்கிறார், சீட்டுகள் வருகின்றன. பெரியாரிடம் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பெரும் குணம் உண்டு. அந்தக் குணத்தை இந்த இடத்தில் நான் பதிவு செய்கிறேன். நீங்கள் அதை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். பெரியாரிடம், யாரும், எந்தச் சமூகமும், எந்த அறிவாளியும், படித்தவனும், படிக்காதவனும் எந்தக் கேள்வியும் கேட்கலாம். நினைத்துப் பார்ப்பீர்களா? பத்திரிகையாளர்களை இதுவரைக்கும் சந்திக்காத தலைவர்களும், இதுவரைக்கும் சந்திக்கவே மறுக்கிற பெரியவர்களும், இதுவரைக்கும் சந்திக்க மாட்டேன் என்று சபதம் எடுத்துக் கொண்டவர்களும், இந்தியாவில் இன்றும் வாழ்கிறார்கள்.
பெரியார் சொல்கிறார், ‘‘கேள்!’’
‘‘எதைக் கேட்பது?’’
‘‘எதையும் கேள்!’’
‘‘உங்களை வருத்துகிற கேள்வியைக் கூடவா?’’
‘‘கேட்டுத் தொலை.’’
‘‘உங்களை அவமானப்படுத்துகிற கேள்வியையுமா?’’
‘‘கேட்டுப்பார்.’’
இப்படி ஒரு தலைவனை, வீரனை, ஞானியை, தெளிவான சிந்தனையாளனை, எதற்கும் அஞ்சாத சிங்கத்தை, நீங்கள் பார்த்திருக்க முடியுமா? பெரியார், மணியம்மையாரைத் திருமணம் செய்து கொண்ட பிறகு, ஒரு கூட்டத்திற்குப் போகிறார், கூட்டத்திலிருந்து ஒரு குசும்புக்காரன் கேள்வி கேட்கிறான். ‘‘திராவிடத் தந்தை வந்துவிட்டார்’, ‘திராவிடத் தாய்’ இப்போது சேர்ந்திருக்கிறாள்; ‘திராவிடக் குழந்தை’ எப்போது?’’
அவசரப்பட வேண்டாம். அதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன!
ஒரு பெரியவரைப் பார்த்து, ஒரு சிறியவன் கேட்கிற கேள்வி. இந்நேரம் இப்படி ஒரு கேள்வி கேட்டால், ‘‘நீ எந்த ஊர்க்காரன்? எந்தச் சேனல்? நீ எந்தப் பத்திரிகைக்காரன்? ஏய், இவனைக் கவனிச்சு அனுப்புங்கப்பா!’’ இதெல்லாம் இன்றைக்கு நடக்கும். பெரியார் சொன்னார், ‘‘இங்கே ஒரு சீடன், ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். ‘திராவிடத் தந்தை நீங்கள் இருக்கிறீர்கள், திராவிடத் தாய் வந்துவிட்டால், திராவிடக் குழந்தை எப்போது? அன்பர், அவசரப்பட வேண்டாம். அதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.’’ இப்படிச் சொல்லிக் கன்னத்தைக் கிழிக்கிற பதில், பல்லை உடைக்கிற பதில், அவன் நெஞ்சைக் கிழிக்கிற பதில். சொல்வதற்கு வேறு யார் இருக்கிறார்?
‘‘மதத்தை விட, ஜாதிதான் பெரிது!’’
இன்னொரு கூட்டம், ஒருவர் கேட்கிறார், ‘‘அய்யா தமிழ்நாட்டில், இந்தியாவில் மதம் பெரிதா? ஜாதி பெரிதா?’’ இந்தக் கேள்வி நீங்கள் எப்போதாவது நீங்கள் உங்களுக்குள் கேட்டிருக்கிறீர்களா? இப்படி கேள்விகளைக் கேட்டால்தான், நீங்கள் சிந்தனைக்கு வருவீர்கள். நீங்கள் சிந்தனையாளர் ஆக வேண்டும் என்றால், இப்படிப்பட்ட கேள்விகளை உங்கள் நெஞ்சில் உருட்டிப் பார்க்க வேண்டும். பாடப் புத்தகம் கிடக்கட்டும், பாடப் புத்தகம். தேர்வு எழுதி முடித்தவுடன், அவை விலைக்குப் போடுகிற வெள்ளைத்தாள்கள், அவ்வளவுதான்.
பாடப் புத்தகம் என்பது, அறிவுக்கான அறிமுகம். அறிவு வெளியே, இருக்கிறது. அறிவு, நூலகத்தில் இருக்கிறது. அறிவு, வாழ்க்கையில் இருக்கிறது. அறிவு, அனுபவத்தில் இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், நல்ல அறிவு, தோல்வியில் இருக்கிறது. நல்ல அறிவு, கண்ணீரில் இருக்கிறது. நல்ல அறிவு, இரத்தத்தில் இருக்கிறது. நல்ல அறிவு, துயரத்தில் இருக்கிறது. அதைத் தேடி, நீங்கள் பயணப்பட வேண்டும். இந்தக் கேள்விக்குப் பெரியார் சொன்ன பதில், ‘‘இந்தியாவில் ஜாதி பெரிதா? மதம் பெரிதா?’’ என்று கேட்டிருக்கிறார்கள். ‘‘மதத்தை விட, ஜாதிதான் பெரிது’’ என்று சொன்னார் –திகைத்துப் போனார்கள்.
நீ நினைத்தால், உன்னால் மதம் மாற முடியும்; உன்னால் ஜாதி மாற முடியுமா?
‘‘மதம் என்பது உலக அமைப்பு. மதம் என்பது பன்னாட்டு நிறுவனம். ஜாதி என்பது உள்ளூர் அமைப்பு. இந்த உள்ளூர் ஜாதியை விட, உலக அமைப்பு சிறிய தாகிவிட்டதா? அல்லது உலக அமைப்பான மதத்தை விட, உள்ளூர் ஜாதி எப்படி பெரியதாகி விடுகிறது?’’ என்று கேட்டார்கள். அதற்குப் பெரியார் சொன்னார், ‘நீ நினைத்தால், உன்னால் மதம் மாற முடியும். உன்னால் ஜாதி மாற முடியுமா? முனியன் நினைத்தால், முகமது ஆகிவிட முடியும். சந்திரன் நினைத்தால், ஜார்ஜ் ஆகிவிட முடியும். பிரேமா நினைத்தால், பேகமாகி விட முடியும். ஆனால், ஒரு நாடார் தேவர் ஆக முடியுமா? நாயுடு, பிள்ளையாக முடியுமா? நான், பிராமணன் ஆக முடியுமா? நீங்கள் எல்லாரும் நான், ‘‘இன்று முதல் நான் பிராமணன்’’ என்றால், சர்டிபிகேட் கொடுப்பார்களா? இன்று முதல் நான், தலித் என்று ஒரு சர்டிபிகேட் வாங்கிவிட முடியுமா? மதம் என்ற அமைப்பு எளிமையாக இருக்கிறது. ஜாதி என்ற அமைப்பு வலிமையாக இருக்கிறது. ஜாதியைத்தான் நீங்கள் ஒழிக்க வேண்டும் என்று பெரியார் சொன்னார்.
அதைத்தான் எங்கள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சொல்லுகிறார்,
‘‘இருட்டறையில் உள்ளதடா உலகம் – ஜாதி
இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே
மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே
வாயடியும் கையடியும் ஓய்வதெந்நாள்
சுருட்டுகிறார் தம் கையில் கிடைத்தவற்றை
சொத்தெல்லாம் தமக்கென்று சொல்வார் தம்மை
வெருட்டுவது பகுத்தறிவே – இல்லையாயின்
விடுதலையும் கெடுதலையும் ஒன்றே ஆகும்!’’
மற்றவர்களுக்கும், பாரதிதாசனுக்கும்
ஒரு வேறுபாடு இருக்கிறது!
‘‘வணக்கம் அய்யா! புரட்சிக்கவிஞர் அய்யா! நீர் பிறந்து 136 ஆண்டுகளுக்குப் பிறகு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில், உனக்குப் பின்பு வந்த, உன் வழிவந்த, ஒரு சின்னக் கவிஞன், உன் பாடலைப் இந்த மன்றத்திற்குப் பாடிக் காட்டுகிறானே, இது போதும்! இதுதான், நீ தமிழுக்குச் செய்த தொண்டு! சமூகத்துக்குச் செய்த தொண்டு!’’
மற்றவர்களுக்கும், பாரதிதாசனுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது; ஒரு சோலையை, ஒரு கவிஞன் பார்க்கிறான். என்னென்ன நினைவுகள் வரும்? சோலை என்று சொன்னவுடன், பூக்கள் நினைவுக்கு வரும். அசைகின்ற இலைகள் நினைவுக்கு வரும். கண்ணுக்கு குளிர்ச்சியான பச்சை வண்ணம் நினைவுக்கு வரும். அந்தச் சோலையின் நிழல் தரும் மரங்கள் தரையில் படர்ந்திருப்பதைப் பார்க்கத் தோன்றும். அந்த மரத்தில் கூடு கட்டுகிற பறவைகள் பாடும் கீதம் கேட்கும். அங்கு காதலியோடு வந்தால், எப்படி இருக்கும்? என்று கனவு தோன்றும். அங்கே மரத்தடியில் அமர்ந்து, ஒரு பாடல் பாடினால், எப்படி இருக்கும்? என்று எண்ணத் தோன்றும். ஆனால், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்கு, ஒரு சோலையைப் பார்த்தவுடன், அதை நிர்மாணித்த தொழிலாளி ஞாபகத்துக்கு வருகிறார். இதுதான் மானுடம்! இதுதான் நேசம்! இதுதான் சமூக சமத்துவம்! இதுதான் ஒரு கவிஞன், ஒரு சமூகத்துக்குச் செய்ய வேண்டிய தொண்டு!
‘‘சித்திரச் சோலைகளே
உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள்
ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே…!’’
அந்தச் சோலையைப் பார்க்கிற போது, சோலையை உருவாக்குவதற்கு, என் தொழிலாளி பட்ட துயரம் நினைவுக்கு வருகிறது! ‘தாமரை பூத்தத் தடாகங்களே’ – தாமரை பூவைப் பார்த்த உடனே, உங்களுக்கு என்னென்ன ஞாபகம் வரும்? தாமரைப் பூவைப் பார்த்தவுடன், ஓர் ஆன்மீகவாதிக்கு, அது சாமியினுடைய ஆசனம் என்று ஞாபகத்திற்கு வரும். புத்த பகவான், பற்று உள்ளவனுக்கு, புத்தருக்குப் பூஜை செய்வதற்கு ஒரு மலர் என்று தோன்றும். அரசியல் கட்சிக்காரர்களுக்கு, ஒரு கட்சியின் சின்னம் என்று தோன்றும். ஒரு காதலனுக்கு, இதை காதலிக்குக் கொண்டு போய், அவள் பாதத்தில் வைத்து, பாதத்தின் நிறத்துக்கும், தாமரையின் நிறத்துக்கும் வேறுபாடு இல்லையேன என் தோழி, இதோ பார் என்று காட்டி, அவளிடம் ஒரு கள்ள முத்தம் பெற வேண்டும் என்று தோன்றும்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்கு என்ன தோன்றியது?
‘‘தாமரை பூத்த தடாகங்களே
உமை தந்த அக்காலத்திலே
எங்கள் தூய்மைச் சகோதரர்
தூர்ந்து மறைந்ததைச் சொல்லவோ இந்த ஞாலத்திலே’’
என்று பாடுகிறான் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
பொருள்முதல்வாதத்தை வைத்து, இந்த உலகத்தைப் பார்த்தால், புதிய புதிய உலகம் தோன்றும்!
மலர்களைப் பார்த்தவுடன், அவனுக்குக் காமம் வந்துவிடவில்லை. மலர்களைப் பார்த்தவுடன், அவனுக்கு நிறம் வந்துவிடவில்லை. மலர்களைப் பார்த்தவுடன், உழைத்துச் சிவந்த தொழிலாளிகளின் கரங்கள் ஞாபகம் வருகிறது. இப்படிப் பார்த்துப் பழகுங்கள். வாழ்க்கையில் எதைப் பார்த்தாலும், அழகியலோடு பார்ப்பது ஒரு வகை. பொருளியலோடு பார்ப்பது இன்னொரு வகை. பொருள் முதல் வாதத்தை வைத்து, இந்த உலகத்தைப் பார்த்தால், உங்களுக்குப் புதிய புதிய உலகம் தோன்றும் என்று நான் நினைக்கிறேன்.
சமத்துவத்தைச் சொன்னவன், பகுத்தறிவைச் சொன்னான். பகுத்தறிவைச் சொல்வதற்கு அவன் தேர்ந்தெடுத்தது, பெண் பிள்ளைகளை! பெண் பிள்ளைகளைப் பார்த்து ஒரு பாட்டுப் பாடுகிறார்.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின்
பகுத்தறிவுப் பாட்டு!
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், ‘அரசிளங்குமரி’ என்ற படத்தில், ஒரு பாட்டு எழுதி இருப்பார். ‘‘சின்னப் பயலே, சின்னப் பயலே சேதி கேளடா!’’ என்ற பாட்டு. உங்களில் கேட்காதவர் இருக்க முடியாது. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாட்டு, ஜி.ராமநாதன் இசையமைத்த பாட்டு, எம்.ஜி.ஆர். வாயசைத்துப் பாடுகிற பாட்டு – டி.எம்.சவுந்தரராஜன் பாடிய பாட்டு. கேட்கக் கூடாதவர்கள், கேட்டுப் பழகுங்கள், பகுத்தறிவுப் பாட்டு!
அதில் சொல்லுகிறார், ‘‘வேப்ப மர உச்சியில் நின்னு, பேய் ஒன்னு ஆடுதுன்னு, விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க! உன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க. வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை, வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே! நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிவிடாதே!’’
வேப்ப மர உச்சியில் ‘பேய்’ ஆடுது என்பது ஒரு மூட நம்பிக்கை! ‘பேயா ஆடுகிறது?’ காற்று ஆட வைக்கிறது. வேப்ப மரத்தில் ‘பேய்’ பிடித்துவிட்டது என்பது என்ன பொருளில்? வேப்ப மரத்துக்குக் கீழே, இரவில் ஒருவன் படுத்திருந்தால், இங்குதான் பகுத்தறிவு முனைகிறது. பகுத்தறிவு தன் வேலையைக் காண்பிக்கிறது இந்த இடத்தில். வேப்ப மரத்துக்கு அடியில், இரவில் ஒருவன் படுத்திருந்தான்; காலையில் அவன் செத்துக் கிடந்தான். ‘வேப்ப மரத்து முனி அடித்துவிட்டது, செத்துப் போனான்’ என்று உலகம் தீர்ப்பெழுதியது.
விஞ்ஞானத்தை நீங்கள்
விளம்பரப்படுத்த வேண்டும்!
இப்போது தெரிந்து கொள்ளுங்கள், பல்கலைக் கழகத்து மாணவர்களாகப் படிக்க வந்திருக்கிறீர்கள். மரங்கள் பகலில் ஒரு வேலை செய்யும்; இரவில் ஒரு வேலை செய்யும். மரங்கள் பகலில் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி, ஆக்சிஜனை வெளியேற்றும். இரவில் ஆக்சிஜனை உள்வாங்கி, கார்பன் டை-ஆக்சைடை வெளியேற்றும். பகல் நேரத்தில் மரத்திற்கு கீழே படுத்திருந்தால், சுகமான தூக்கம் வரும். எவனும் செத்துப் போக மாட்டான், மரங்கள் அதிகமான ஆக்சிஜனை வெளியேற்றுவதால்! அதே மரத்தடியில், இரவில் ஒருவன் படுத்திருந்தால், அதிகமான கார்பன் டைஆக்சைடை வாங்கி, இதயத்தை இயக்குவதற்கு ஆக்சிஜன் போதாமல், மாரடைத்து இறந்து போயிருப்பான் என்பது விஞ்ஞானம். இந்த விஞ்ஞானத்தை நீங்கள் விளம்பரப்படுத்த வேண்டும். இந்த விஞ்ஞானத்தை வீட்டில் சொல்ல வேண்டும். உங்கள் தோழர்களுக்குச் சொல்ல வேண்டும். தோழிகளுக்குச் சொல்ல வேண்டும். இதைத்தான் பட்டுக்கோட்டை பாடுகிறார். பட்டுக்கோட்டை பாடுவது, சின்னப்பயலோடு! பாரதிதாசன், தன் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை எங்கு ஆரம்பித்தார் தெரியுமா? தொட்டிலுக்குள் கிடக்கிற பிள்ளையோடு! தொட்டிலுக்குள் பெண் குழந்தைக்கு தாலாட்டுப் பாடுகிறார்.
‘‘சாணிக்குப் பொட்டிட்டு சாமி என்பார் செய்கைக்கு
நாணி உறங்கு; நகைத்து நீ கண்ணுறங்கு!’’
பிள்ளைப் பருவத்திலேயே பகுத்தறிவைத் தொட வேண்டும் என்ற லட்சிய வெறியில், பேனா பிடித்து எழுதியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். புரட்சிக்கவி ஞரைப் படியுங்கள்!
வாரத்தில் ஒரு நாள், ஒரு வகுப்பு,
பாரதிதாசன் வகுப்பு!
பேராசிரியப் பெருமக்களே, உங்களுக்கு ஒரு வேண்டுகோள்! வாரத்தில் ஒரு நாள், ஒரு வகுப்பு, பாரதிதாசன் வகுப்பு. பத்து மாணவர்கள், பத்துப் பாடல்கள் பாடுவார்கள்; வாசித்துக் காட்டுவார்கள். 100 மாணவர்கள் செவி கொடுப்பார்கள். பாரதிதாசன் பாடலைச் சமூகப்படுத்துவதற்கு, இதுதான் வழி!
காலத்தின் நீட்சியோடு,
புரட்சிக்கவிஞரைக் கொண்டு செல்லுங்கள்!
வாசித்துக் காட்டுவதற்குப் பத்து பேர். கேட்பதற்கு நூறு பேர். அதைத் திருப்பிச் சொல்வதற்கு பத்துப் பேர். இப்படி, புரட்சிக்கவிஞரை நீங்கள் மக்கள் மயப்ப டுத்துங்கள். காலத்தின் நீட்சியோடு, புரட்சிக்கவிஞரைக் கொண்டு செல்லுங்கள். மிக்க மகிழ்ச்சி!
என் பேச்சின் நிறைவுப் பகுதிக்கு வந்துவிட்டேன். மாணவக் கண்மணிகளே, உங்களுக்கு என் வாழ்த்து!
‘தகைசால் தமிழர்’ அய்யா வீரமணி அவர்களே, உங்களுக்கு என் நன்றி!
அன்புராஜ் அவர்களே, உங்களுக்கு என் வணக்கம்!
உங்களில் சிலபேர், என் உள்ளங்கை தொட்டு உரைத்தால், அதுதான் இந்தச் சொற்பொழிவின் வெற்றி!
மாணவக் கண்மணிகளே, உங்களுக்குச் சொல்லுகிற வார்த்தையோடு, நான் என் உரையை நிறைவு செய்யப் போகிறேன். இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, 15 ஆண்டுகளுக்குப் பிறகு, உங்களை நான் எங்காவது சந்திப்பேன். ஒரு விமானத்தில், ரயில டியில், ஒரு மேடையில், ஒரு சொற்பொழிவில், ஒரு கார் பயணத்தில், வெளிநாட்டில், உள்நாட்டில், எங்காவது, நான் உங்களைச் சந்திப்பேன். அல்லது நீங்கள் என்னை சந்திப்பீர்கள். அப்படி சந்தித்தால், என்னோடு பேசுவதற்குத் தயங்காதீர்கள்! அப்போது, யார் ஓரிருவர், என்னோடு வந்து, ‘‘பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில், நீங்கள் சொற்பொழிவாற்றினீர்கள். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பற்றி நீங்கள் சொற்பொழி வாற்றினீர்கள். அந்தச் சொற்பொழிவில், பற்ற வைக்கப்பட்ட சுயமரியாதைச் சுடர் நான்! இன்று நான் வளர்ந்து நிற்கிறேன், வாழ்கிறேன், கல்வி கற்று இருக்கிறேன், பதவியில் இருக்கிறேன்; அதற்கு நீங்களும் ஒரு காரணம்’’ என்று, உங்களில் சிலபேர், என் உள்ளங்கை தொட்டு உரைத்தால், அதுதான் இந்தச் சொற்பொழிவின் வெற்றி!
வாழ்க புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!
வாழ்க தந்தை பெரியார்!
வாழ்க மணியம்மை!
வளர்க இந்தப் பல்கலைக்கழகம்!
வெல்க எங்கள் வேந்தர் வீரமணி!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சிறப்புரையாற்றினார்.
