நீதிமன்றங்களின் நடுநிலைமை! சவாலுக்கு உள்ளாகும் அரசியலமைப்புச் சட்டம்?-பாணன்

7 Min Read

டில்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா ஆகியோருக்கு இடையிலான தற்போதைய சூழல், இந்திய நீதித் துறை வரலாற்றில் ஒரு முக்கிய மற்றும் அசாதாரணமான நிகழ்வாகப் பார்க்கப் படுகிறது.

நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகி, “சத்யாகிரகம்” என்ற போராட்ட வடிவத்தை ஒரு மாநிலத்தின் மேனாள் முதலமைச்சர் கையில் எடுத்திருப்பது நீதித்துறை மீதான நம்பகத்தன்மை குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.

டில்லி மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஅய் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா விசாரித்து வருகிறார். இந்த விசாரணையில் இருந்து நீதிபதி விலக வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், கடந்த
ஏப்ரல் 20, 2026 அன்று இந்த மனுவை நிராகரித்த நீதிபதி, “தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” என்று கூறி விசாரணையைத் தொடர்ந்தார்.

நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா மீது கெஜ்ரிவால் முன்வைத்த முக்கிய புகார்:

நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா, பா.ஜ.க. மற்றும்
ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுடன்  தொடர்புடையதாகக் கருதப்படும் ‘அகில பாரதிய வழக்குரைஞர்கள் பரிஷத்’ (ABAP) நடத்திய நிகழ்வுகளில் நான்கு முறை பங்கேற்றதை கெஜ்ரிவால் சுட்டிக்காட்டினார்.

இது ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தின் மீதான ஈடுபாட்டைக் காட்டுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

நீதிபதியின் இரண்டு மகன்களும் ஒன்றிய அரசின் வழக்குரைஞர்கள் குழுவில்  இடம் பெற்றுள்ளதாகவும்,  அவர்களின் நியமனத்தில் ஒன்றிய அரசு அனைத்து விதிகளையும் மாற்றி அவர்களை பணி அமர்த்தி உள்ளது என்று கெஜ்ரிவால்  கூறினார்.

கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிரான மனு மற்றும் சஞ்சய் சிங், கவிதா போன்றோரின் பிணை மனுக்களில் இந்த நீதிபதி வழங்கிய  தீர்ப்புகள் தமக்கு எதிராகவே இருப்பதாக அவர்  கூறினார்.

“சத்யாகிரகம்” – கெஜ்ரிவாலின்
நூதனப் போராட்டம்

நீதிபதி விலக மறுத்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 2026 இறுதியில் கெஜ்ரிவால் நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் பின்வருவனவற்றைத் தெரிவித்தார்:

“தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை முற்றிலுமாக சிதைந்துவிட்டது” என்று கூறிய கெஜ்ரிவால், இனி அந்த நீதிபதியின் அமர்வில் நேரிடையாகவோ அல்லது வழக்குரைஞர்கள் மூலமாகவோ ஆஜராகப்போவதில்லை என அறிவித்தார்.

தான் காந்தியாரின் “சத்யாகிரகம்” வழியைப் பின்பற்றுவதாகவும், இதற்காக சட்டரீதியான பின் விளைவுகளை நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்டவற்றைச் சந்திக்கத் தயார் என்றும் அவர் கூறினார்.

“தவறான முறையில் நீதி வழங்கப்படுவதாகத் தெரிந்தும் அதில் பங்கேற்பது எனது மனசாட்சிக்கும், நாட்டு மக்களுக்கும் செய்யும் துரோகம்” என அவர் குறிப்பிட்டார்.

நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா தனது 115 பக்கத் தீர்ப்பில் கெஜ்ரிவாலின் வாதங்களை கடுமையாக மறுத்தார்.

ஒரு நீதிபதி ஏதோ ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பது அவரது நடுநிலைமையைப் பாதிக்காது.

அரசியல்வாதிகள் தங்களுக்குச் சாதகமான நீதிபதிகளைத் தேர்வு செய்ய முயல்வது கண்டிக்கத் தக்கது.

“இன்று நான் ஒரு வழக்கை விசாரிக்கவில்லை; இந்த நீதித்துறை நிறுவனமே விசாரணையில் வைக்கப் பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த மோதல் இந்திய நீதித்துறையில் ஒரு பெரும் அவநம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

ஒரு முக்கிய அரசியல் தலைவர் உயர்நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி விசாரணையைப் புறக்கணிப்பது, நீதிமன்றங்களின் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

“நீதி வழங்கப் படுவது மட்டும் போதாது, அது வழங்கப்படுவது போலத் தெரியவும் வேண்டும்” (Justice must not only be done, but must also be seen to be done) என்ற தத்துவத்தை கெஜ்ரிவால் தரப்பு முன்னிறுத்துகிறது.

கெஜ்ரிவால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகப்போவதாக அறிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் வழங்கும் முடிவே இந்த முரண்பாட்டிற்கு இறுதித் தீர்வாக அமையும்.

யார் இந்த  நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா

தீவிர இந்துத்துவ கொள்கைவாதி, ஆர்.எஸ்.எஸ். அதன் சிறிய அமைப்புகளின் பல நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கெடுப்பவர்.

ஆனால், அவர் இதை நேரடியாக கூறாமல் கல்வி நிறுவனத்தில் நடந்த மத நிகழ்வு, என்று சாக்குப்போக்கு கூறுவார்.

2024 மே மாதம் வராணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீட்  பல்கலைக்கழகத்தின் சட்டப் பீடம்  ஏற்பாடு செய்த ஒரு நாள் தேசியப் பட்டறை  நிகழ்ச்சியில் பேசியதாவது:

கட்டுரை, ஞாயிறு மலர்

“…நீங்கள் முதன்முதலில் என்னை இங்கு அழைத்தபோது நான் வெறும் செஷன்ஸ் ஜட்ஜ் ஆக இருந்தேன். அடுத்த ஆண்டு நீங்கள் அழைத்தபோது குடும்ப நீதிமன்ற நீதிபதி ஆனேன். அதற்கு அடுத்த ஆண்டு  மாவட்டம் மற்றும் செஷன்ஸ் நீதிபதி ஆனேன்.

இன்று நீங்கள் மீண்டும் அழைத்திருக்கும் இந்த நேரத்தில்  நான் உயர்நீதிமன்ற நீதிபதி பதவி உயர்வு பெற்றுள்ளேன்.

நீங்கள் என்னை தொடர்ந்து அழைப்பதற்கும், இறைவன் அருளால் தொடர்ந்து பதவி உயர்வு பெறுவதற்கும் நன்றி…” என்று கூறியுள்ளார்.

இது இன்றும் யுடூயூப் சேனலில் உள்ளது.

இந்தியாவில் பல நீதிபதிகள் ஒரு படியில் இருந்து மறுபடிக்குச் செல்ல நீண்ட ஆண்டுகள் காத்திருக்கும் சூழல் உள்ளது. அது மட்டுமா? மாவட்ட நீதிபதி பதவியில் இருந்து உயர்நீதிமன்றம் செல்ல நூற்றுக்கணக்கான நீதிபதிகள் காத்திருந்து பதவி ஓய்வுடன் செல்லும் நிலைதான் இன்றும் உள்ளது. இது தொடர்பாக நீதியரசர் முரளிதரன் தனது நூல் ஆன  ‘Poverty and Legal Aid: Access to Criminal Justice’ என்ற நூலில் மறைமுகமாக சுட்டிக்காட்டி இருந்தார்.

ஆனால் இவருக்கு (ஸ்வர்ணகாந்தா) ஒவ்வொரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அடுத்து அடுத்து பதவி உயர்வு என்பது காட்சிப் பதிவு விளையாட்டில் (வீடியோ கேமில்) போனஸ் காயின்கள் பெற்று அடுத்த அடுத்த படிக்கு செல்வது போன்று எளிதாக உள்ளது.

கட்டுரை, ஞாயிறு மலர்

நீதித்துறையில் குறிப்பிட்ட அமைப்பு குறிப்பிட்ட மதம் சார்பான நீதிபதிகள் நடவடிக்கை குறித்து அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது.

மேற்கு வங்க நீதிபதி ஒருவர் தான் பதவி விலகிய அன்றே பாஜகவில் இணைந்து, அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது போன்றவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

சில நீதிபதிகளின் நடவடிக்கைகள்

நீதிபதி சேகர் குமார் (Justice Shekhar Kumar)

அலகாபாத் உயர் நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி சேகர் குமார் பல சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறியுள்ளார்.

குறிப்பாக இந்து பெரும் பான்மைவாதம், யூனிஃபார்ம் சிவில் கோட் முஸ்லிம் சமூகத்தை இலக்காகக் கொண்ட கருத்துகள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ்ச்சி ஆகியவை அடங்கும். இவை நீதித்துறையின் நடுநிலைத்தன்மை மற்றும் அரசியலமைப்பு மதச்சார் பின்மைக்கு எதிரானவை  ஆகும்

2024 டிசம்பர் 8 அன்று விஷ்வ இந்து பரிஷத் (VHP) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

“இது இந்து நாடு… இந்த நாடு (பெரும்பான்மை இந்துக்களின் விருப்பப்படி இயங்கும்” என்று கூறினார்.

“ஒரு இந்து மட்டுமே இந்த நாட்டை தலைமை ஏற்கமுடியும்” என்றும் பேசினார். ஒரு  நீதிபதி இப்படிப் பேசுவது இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பின்மைக்கு எதிரானது  ஆகும்.

இஸ்லாமிய சமூகத்துக்கு எதிரான கருத்துகள்:

மதநிகழ்வு ஒன்றில் பேசும் போது “ஹமாரி கீதா, ஆப்கி குர்ஆன்” எங்களின் கீதை, அவர்களின் குர்ஆன் என்று பிரித்துக் காட்டினார்.

இஸ்லாமியர்களில் குழந்தைகளிடம் கூட அன்பு மற்றும் கருணை எதிர்பாக்க முடியாது காரணம் அவர்களின் முன்னால் மாடுகளை அறுக்கும் பழக்கம் காரணமாக  அவர்கள் மனிதர்களாக இருக்க முடியாது என்று கூறினார்.

இஸ்லாமியர்களை சுன்னத் செய்தவர்கள் என்பதை கொச்சையாக “கட்முல்லா” (kathmullah – என்ற சொல்லைப் பயன்படுத்தி, “அவர்கள் நாட்டுக்கு ஆபத்து” என்றார்.

பசு, ராம், கிருஷ்ணர் பற்றிய கருத்துகள்

நீதிமன்றத் தீர்ப்புகளிலும் உரைகளிலும் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும், ராம் மற்றும் கிருஷ்ணருக்கு தேசிய மரியாதை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். உலகில் ஒரே ஒரு விலங்கு மட்டுமே இந்தியாவின் நாட்டுப் பசு ஆக்ஸிஜனை வெளியிடுவதாகவும் கூறியுள்ளார்.மயில் தனது கண்ணீரை பெண் மயிலுக்கு ஊட்டுவிடுவதன் மூலம் முட்டையிடுகிறது என்றும் கூறியவர் இவர்தான்.

மோடியின் மீதான அதீத பக்தி

அவர் மோடி அரசின் கொள்கைகளை (குறிப்பாக கரோனா கால நடவடிக்கைகள்) பாராட்டியுள்ளார். சில தீர்ப்புகளில் மோடி அரசுக்கு ஆதரவாகக் கருத்துகள் கூறினார்.

அவர் தான் ஒரு தீவிர மோடி பக்தன் என்று வெளிப்படையாகவே பேசி இதற்கு நான் வெட்கப்படப்போவதில்லை ஒரு நல்ல இந்துவை தலைவனாக கொண்டதை கொண்டாட வேண்டும் என்று கூறினார்.

விஎச்பி நிகழ்ச்சியிலும் இந்துத்துவா சார்பு நிலைப்பாடு வெளிப்பட்டது. யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

55-க்கும் மேற்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி மனு அளித்தனர். எதிர்க்கட்சிகள் இதை “வெறுப்புப் பேச்சு” என்று கண்டித்தனர்.

உச்ச நீதிமன்ற கொலிஜியம் அவரை அழைத்து “அவரது கருத்துகள் தவிர்க்கக்கூடியவை” என்று எச்சரித்தது.  உள்ளிருப்பு விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையில் நான் அப்படித்தான் பேசுவேன், கருத்து தெரிவிப்பேன், அது என்னுடைய தனிப்பட்ட விவகாரம் என்று கூறிவிட்டார்.

ஓய்வு: 2026 ஏப்ரல் 15 அன்று ஓய்வு பெற்றார். இம்பீச்மெண்ட் நடவடிக்கை முழுமை பெறவில்லை என்றாலும், இது நீதித்துறையின் நடுநிலைத்தன்மை குறித்த விவாதத்தைத் தூண்டியது

பார் அசோசியேஷன் உள்ளிட்ட அமைப்புகள் மன்னிப்பு கோர வலியுறுத்தின. சிலர் இதை நீதித் துறையில் “காவிமயமாக்கல்” என்று விமர்சித்தனர்.

நீதிபதி சேகர் குமாரின் கருத்துகள் நீதிபதிகள் அரசியல் அல்லது மதச் சார்புடன் பேசக் கூடாது என்ற நெறிமுறையை மீறியவை ஆகும்

மத அடிப்படையில் பிரிவினை, அவமதிப்பு சொற்கள் மற்றும் பெரும்பான்மைவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பது நீதித்துறையின் நம்பகத்தன்மையை பாதிக்கும். இந்த சம்பவம் இந்திய நீதிமன்றங்களில் நடுநிலைத்தன்மை, பொறுப்புக்கூறல் ஆகியவை குறித்த முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *