150 கோடி ஆண்டுகள் சேமிக்கப்படும் ‘பனிக்கட்டி’… செவ்வாய் கிரக பயணத்தின் பெட்ரோல் பங்க் ஆக மாறும் நிலவு?

2 Min Read

நிலவின் துருவப் பகுதிகளில் 150 கோடி ஆண்டுகளாக பனிக்கட்டி சேமிக்கப்பட்டு வருவதை புதிய ஆய்வு உறுதி செய்துள்ளது. இது எதிர்கால செவ்வாய் கிரகப் பயணங்களுக்கு ஒரு ‘எரிபொருள் நிலையமாக’ எப்படி பயன்படும்?

நிலவின் துருவப் பகுதிகளில் உள்ள நிழல் பிரதேசங்களில் (Permanently Shadowed Regions – PSRs) சுமார் 150 கோடி ஆண்டு களாக பனிக்கட்டி படிப்படியாக சேர்ந்து வருவதை நேச்சர் அஸ்ட்ரோனமி (Nature Astronomy) இதழில் வெளியான புதிய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. நாசாவின் லூனார் ரிகனைசன்ஸ் ஆர்பிட்டர் வழங்கிய தரவுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, நிலவின் வரலாறு மற்றும் எதிர்கால விண்வெளித் திட்டங்கள் குறித்த முக்கியத் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

150 கோடி ஆண்டுகள்

நிலவின் மீது மோதிய வால்நட்சத்திரங்கள் (Comets) மற்றும் சூரியக் காற்று (Solar Wind) வழியாகக் கொண்டுவரப்பட்ட நீர் மூலக்கூறுகள், நிலவின் அதீத குளிரான பகுதிகளில் சிக்கிக்கொண்டன. கடந்த 150 கோடி ஆண்டுகளாக இந்தச் செயல்முறை சீராக நடைபெற்று வருகிறது. நிலவின் அச்சு சாய்வு (Axial tilt) காலப்போக்கில் மாறியதால், இந்தப் பனிப் பொறிகள் (Cold traps) அளவில் விரிவடைந்து, அதிகப்படியான நீரைச் சேமிக்கத் தொடங்கியுள்ளன.

நிலவின் சுழற்சி மற்றும் நிறை விநியோகத்தில் ஏற்படும் மாற்றங்களால் அதன் அச்சு சாய்வுகோணம் மாறுகிறது. இதனை ‘உண்மையான துருவ நகர்வு’ (True polar wander) என்கின்றனர். சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான இளம் நிழல் பிரதேசங்களில், பனிக்கட்டிகள் மேற்பரப்பிலேயே காணப்படுகின்றன. 150 கோடி ஆண்டுகள் பழமையான பகுதிகளில், பனிக்கட்டிகள் மண்ணால் (Regolith) மூடப்பட்டு பாதுகாப்பாகப் புதைந்துள்ளன. குளிர் பொறிகளில் வெப்பநிலை மைனஸ் 261 டிகிரி ஃபாரன்ஹீட் (-110 கெல்வின்) க்கும் குறைவாக இருப்பதால், பனிக்கட்டிகள் பில்லியன் கணக்கான ஆண்டுகளாகச் சிதையாமல் அப்படியே உள்ளன.

பனிக்கட்டி பிரிந்து ராக்கெட் எரிபொருள்

150 கோடி ஆண்டு பழமையான பனிக்கட்டி இருப்பு, நாசாவின் ஆர்டெமிஸ் திட்டத்திற்குப் புதிய பாதையை வகுத்து கொடுத்துள்ளது. இந்தப் பனிக்கட்டியை மின்னாற்பகுப்பு (Electrolysis) செய்வதன் மூலம் மனிதர்களுக்குத் தேவையான ஆக்சிஜனை உருவாக்க முடியும். இதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை ராக்கெட் எரிபொருளாகப் பயன்படுத்தலாம். நிலவின் மேற்பரப்பில் உள்ள பனிக்கட்டி இருப்பு, செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்கலங்களுக்கு ‘விண்வெளி எரிபொருள் நிரப்பும் நிலையமாக’ செயல்படும். நிலவின் துருவப் பகுதிகளில் சிதறிக்கிடக்கும் இந்த வளங்களை சேகரிப்பதன் மூலம், மனிதர்கள் நிலவில் தங்கி ஆய்வு செய்ய வாய்ப்பு அதிகரிப்பதுடன், ஆழமான விண்வெளி ஆய்வுகளையும் எளிதாக மேற்கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *