ஓராண்டிற்குள் 65 சொற்பொழிவை நடத்தவேண்டும்!

26 Min Read

புரட்சிக்கவிஞருடைய படைப்புகளை, அவருடைய கருத்துகளை நாடெங்கும் கொண்டு சேர்க்க வேண்டும்!
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 65 ஆண்டுகாலம் வாழ்ந்தார்;
அடுத்து ஓராண்டிற்குள் 65 சொற்பொழிவை நடத்தவேண்டும்!
தொடர்ந்து அதை செய்து பெரிய புத்தகமாகக் கொண்டு வரவேண்டும்!

பகுத்தறிவாளர் கழகம் நடத்திய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
பிறந்த நாள் சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு

சென்னை, ஏப்.30 ‘‘புரட்சிக்கவிஞருடைய படைப்புகளை, அவருடைய கருத்துகளை நாடெங்கும் கொண்டு சேர்க்க வேண்டும்!  அவர் 65 ஆண்டு காலம் வாழ்ந்தார் என்பதற்கு அடையாளமாக – 65 தொடர் சொற்பொழிவுகளைத் தொடர்ந்து அடுத்து ஓராண்டு அல்ல, நீண்டாலும் கூட பரவாயில்லை; விட்டுவிட்டு, வாய்ப்பு இருக்கும் போதெல்லாம், தொடர்ந்து நான் செய்து, அதை ஒரு பெரிய நூலாக ஆக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

நேற்று (29.4.2026) மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 136 ஆவது பிறந்த நாள் விழா சிறப்புக் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய பகுத்தறி வாளர் கழகத்தினுடைய மாநில தலைவரும், இந்நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய அருமைத் தோழருமான இரா.தமிழ்ச்செல்வன் அவர்களே, வரவேற்புரையாற்றிய பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் மானமிகு அம்மா வேண்மாள் நன்னன் அவர்களே, எனக்கு முன் மிக சிறப்பாக சுருக்கமாகவும், ஆழமாகவும் இங்கே புரட்சிக்கவிஞருடைய ஆற்றல், கவிதை, தெளிவு, இன்றைய தேவை, அன்றைக்கே தொலைநோக்கு – இவை அத்தனையும் அவருடைய பொழிவிலே உள்ளடக்கி சிறப்புரையாக ஆற்றிய கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அன்புத் தோழர் அருள்மொழி அவர்களே,

இந்த நிகழ்ச்சியிலே நன்றியுரை கூற இருக்கக்கூடிய பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு தோழர் வெங்கடேசன் அவர்களே, பல்வேறு தரப்புகளில் இருந்து வந்திருக்கக்கூடிய கழகத்தினுடைய முக்கிய பொறுப்பாளர்கள், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள், சான்றோர்கள் எல்லோரையுமே நான் வாழ்த்தி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தவிர்த்து விடக்கூடாது என்பதற்காகத்தான்!

இந்த நிகழ்ச்சியை மிக ஆழமாக, விரிவாக நடத்த முடியாத ஒரு சூழல். காரணம் நம்முடைய பல தோழர்கள், கவிஞர் போன்றவர்கள், மற்றவர்கள் எல்லோருமே ஒவ்வொரு இடத்திலே எல்லோருக்கும் தொடர் பணியாக இருந்து கொண்டிருக்கிறது. என்றாலும் நாங்கள் இருவர் இங்கே வசமாகச் சிக்கிக் கொண்டோம். ஆகவே, அந்த வகையிலே, ‘‘பரவாயில்லை புரட்சிக்கவிஞர் அவர்களுடைய பிறந்த நாளில், நாம் ஒரு நிகழ்ச்சியை நடத்துவது தவிர்த்து விடக்கூடாது என்பதற்காகத்தான் – நாங்கள்  இருந்து அதைச் சிறப்பாக செய்யப் போகி றோம்’’ என்று நான் சொன்னேன்.

கள்ளக்குறிச்சியில்
பெரியாரியல் பிரச்சாரப் பயிற்சி வகுப்புகள்

நான் இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, தஞ்சையிலே நாளைக்குப் பல்கலைக் கழகத்தில் நடைபெறவிருக்கின்ற புரட்சிக்கவிஞர் விழாவிலே கலந்து கொள்ளக்கூடிய நிலை இருக்கிறது. அதற்கடுத்து மூன்று நிகழ்ச்சிகளை முடித்து,  கள்ளக்குறிச்சியிலே பெரியாரியல் பிரச்சாரப் பயிற்சி வகுப்புகள் இருக்கின்றன.

இப்படி தொடர்ந்து நிகழ்ச்சிகள் அடர்த்தியாக இருக்கின்ற காரணத்தால், என்னுடைய உரை என்பது எட்டு மணிக்குள் முடியும். அதிக நேரம் பேச, சரக்கு இருக்கிறது. ஆசை இருக்கிறது. கேட்பதற்கு நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால், இவ்வளவு வாய்ப்புகள் இருந்தாலும், நேரம் இல்லை. ஆனாலும், இதை ஒரு முன்னுரை போல வைத்துக்கொண்டு, இரண்டு, மூன்று அறிவிப்புகளைச் செய்கிறேன். குறுகிய காலத்தில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும்,  அற்புத மான அவையினர் – இந்த அவையினரைப் பார்க்கும்போது மகிழ்ச்சி அடைகிறோம். அதுமட்டுமல்ல இன்றைக்குப் பார்த்தீர்களேயானால், பெரியார் மாணாக்கனுக்குத் திருமண நாள்; அதேபோல நம்முடைய தங்க. தனலட்சுமி – தங்கமணி அவர்களுக்கு 36 ஆவது திருமண நாள். அவர்களுக்கெல்லாம் இந்த அவையின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

‘பெரியார் உலக’த்திற்கு
ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை!

ஆகவே, புரட்சிக்கவிஞர் பிறந்தநாளும் மகிழ்ச்சிக்கு ரியது; இவர்களுடைய மண நாளும் மிகவும் மகிழ்ச்சிக்கு ரியது. அப்படி இயக்கத் தோழர்கள் உற்சாகத்தோடு இருக்கிறார்கள். ‘பெரியார் உலக’த்திற்கு அவர்கள் இருவரும் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்தி ருக்கிறார்கள்.  பெரியார் மாணாக்கன் எப்போதும் கொடுத்துக் கொண்டே இருக்கக்கூடியவர். திட்ட மிட்டு அவர்  தவணைக் முறையிலே கொடுத்து கொண்டி ருக்கக் கூடியவர்.

ஆகவே, அவர்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றியை, நம் அனைவருடைய பாராட்டை, மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறோம்.

உலகம் முழுவதும் பரப்ப வேண்டியது
நம்முடைய கடமை!

அருமை நண்பர்களே, புரட்சிக்கவிஞருடைய இந்த பிறந்த நாள் விழாவில், அவரது பல கருத்துகளை ஊன்றி நாம் உணருகின்ற அளவுக்கு, நம்முடைய அருள்மொழி அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். புரட்சிக்கவிஞர் அவர்களுடைய பெருமையை, சிறப்பை, அறிவை, ஆழத்தை, செறிவை உலகம் முழுவதும் பரப்ப வேண்டியது நம்முடைய கடமை, அதை மறந்துவிடக்கூடாது. எதிர்காலத் தலைமுறையினர் எங்கெங்கோ போகின்றார்கள். ஒரு கவிஞர் – 20 ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்த ஒரு கவிஞர், அதுவும் ஆரம்ப காலத்திலே வைதீகராக,  மூடநம்பிக்கைப் பற்றுள்ள ஒருவராக இருந்த கவிஞர் – எப்படி தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதை இயக்கம் ஈர்த்ததன் காரணமாக, ஒரு பெரிய இலக்கிய எரிமலையாக அவர்கள் இருந்தார்கள் என்பதை நினைக்கிறபோது, வியப்பு! வியப்பு! வியப்பு!! அந்த அளவிற்கு அவர்களுடைய பணியும், எழுதிய கவிதைகளும் இருக்கின்றன. அது மட்டுமே அல்ல, வேண்மாள் அவர்கள்  வரவேற்புரையிலே சொல்லுகிற போது, ஒன்றைச் சுட்டிக்காட்டினார். இன்றைக்கு அவரைப் பெரும்பாலும் ‘பாவேந்தர் பாரதிதாசன்’ என்று மோனைக்காக சொல்லுகிறார்கள், எதேச்சையாகப் பேசுகிறார்களே தவிர, பாவேந்தர்கள் எவர் வேண்டுமானாலும் வரலாம்; ஆனால், புரட்சிக்கவிஞர் ஒரே ஒருவர்தான். இதுதான் அவருடைய தனிச்சிறப்பு.

புரட்சிக்கவிஞரை தவிர, வேறு எந்தக் கவிஞரையும் தந்தை பெரியார் பாராட்டியது கிடையாது!

இது நான் சொல்கிற கருத்து மட்டுமல்ல; நம்முடைய அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் இதுவரை எந்தக் கவிஞரையும் இப்படிப் பாராட்டியதே இல்லை.  கவிஞர்களைக் கண்டாலே அய்யாவுக்குக் கோபம். காரணம் என்னவென்றால், அவர்கள்  மூட நம்பிக்கைகளைப் பரப்புவார்கள். இலக்கியத்தைத் திருப்பிப் திருப்பிப் படித்து, அரைத்த மாவையே  அரைத்துக் கொண்டிருப்பார்கள். சொன்ன கருத்தையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இரண்டாவது மனிதர்களைப் பற்றி அவர்கள் சிந்தித்தது இல்லை. இந்த உலகத்தைப் பற்றி அவர்கள் கவலைப்பட்டதை விட, வேறு உலகத்தைப் பற்றித்தான்  – கண்காணாத கற்பனை உலகத்தைப் பற்றித்தான் அவர்கள் கவலைப்பட்டிருக்கிறார்களே தவிர, வேறல்ல. ஆனால், புரட்சிக்கவிஞர் ஒருவர்தான் இந்த உலகத்தைப் பற்றி மட்டுமல்ல, வெண்நிலவைப் போன்று பார்த்து, அதையும் கூட அளந்து, ஆய்ந்து பார்க்கக்கூடிய அளவிற்கு அறிவு பெற்று, மக்களை அழைத்துப் போன ஒரு தனித்தன்மையான புரட்சிக்கவிஞர்.

சுருக்கமாகச் சொன்னால், தந்தை பெரியார் அவர்க ளும்,  அறிஞர் அண்ணா அவர்களும் அவர்களைப் பற்றிச் சொன்ன ஒரு கருத்தை இந்த நேரத்திலே நான் நினைவூட்டுகிறேன்.

எல்லாத் துறைகளிலும்
அவருடைய கவிதை பாயாத இடமே இல்லை!

அய்யா அவர்கள் பேசும்போது சொல்லுகிறார்.

அதற்கு முன் இன்னொன்றைச் சொல்கிறேன், புரட்சிக்கவிஞர் அவர்களுடைய படைப்புகளை ஆழமாகப் படித்துப் படித்துச் சுவைக்கக் கூடிய செய்திகள் அதில் ஏராளம் இருக்கின்றன. பழைய செய்திகள், பழைய கவிதைகளை மட்டுமே தான் நாம் படித்திருக்கின்றேமே தவிர, அவர், எல்லாத் துறைகளிலும் அவருடைய கவிதை பாயாத இடமே இல்லை. காற்று எப்படி எல்லா இடங்களிலும் இருக்கிறதோ, அதுபோல, புரட்சிக்கவிஞர் அவர்கள் எந்தப் பிரச்சினையையும் ஆழமாகப் பார்த்திருக்கிறார்கள்.

ஆகவேதான், இந்த ஆண்டிலே அதற்கு ஒரு பெரிய வாய்ப்பு என்னவென்றால், அவருடைய பிறந்த நாளை ஒரு வாரம் கொண்டாடக்கூடிய அளவிற்கு – அந்த உத்தரவு போட்ட பெருமை ‘திராவிட மாடல்’ ஆட்சி யினுடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையே சாரும். இந்த அய்ந்தாண்டு கால சாதனையோடு, அடுத்துத் தொடரக்கூடிய சாதனையும் முதல் தகவலாக தற்போது வந்திருக்கிறது,  அப்படிப்பட்ட ஒரு பெரிய வாய்ப்பு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால்தான் இன்றைக்கு இந்த விழாவினை ஒரு வாரம்  உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.

புரட்சிக்கவிஞர் பிறந்த நாளை –
தமிழ் வாரமாக கொண்டாடுகிறார்கள்!

உலகத் தமிழர்கள் எல்லாரும் வேண்டுகோள் வைத்தார்கள். மொழி நாளாக – மறுமலர்ச்சி நாளாக – தமிழ் மறுமலர்ச்சிக்குரிய வாய்ப்பாக உருவாக்குங்கள் என்று சொன்ன உடனே, தமிழ் வாரமாகவே எல்லா நாடு களிலும் கொண்டாடக்கூடிய அளவிற்கு இருக்கிறார்கள்.

எனவே, இது ஒரு பன்னாட்டுத் திருவிழா. தென்னாட்டுத் திருவிழா மட்டுமல்ல, பன்னாட்டுத் திருவிழா – நன்றாக நினைத்துப் பார்க்க வேண்டும் நீங்கள். அப்படிப்பட்ட ஓர் அற்புதமான சூழ்நிலையில், புரட்சிக்கவிஞர் அவர்களைப் பற்றி நிறைய செய்தி கள். அவருடைய நாடகங்கள் மக்களுக்கு இடையே நடிக்கப்பட்டு,  நடிப்புத் துறை மூலமாக கொண்டுவரப்பட வேண்டும். இசை மூலமாக அவருடைய பாடல்கள் வரவேண்டும். இப்படி எல்லாத் துறைகளிலும் இடைவிடாது திராவிட இயக்கத்திற்கு மட்டுமல்ல, இந்த நாட்டிற்கே உலகத்திற்கே அறிவுரை வழங்கியவர்.

அய்க்கிய நாடு சபையை சோளக்கொல்லை பொம்மைபோல வைத்திருக்கிறார்கள்!

‘போரற்ற புது உலகம்’ அதைப் பற்றிதான் சொன்னார்கள். அய்க்கிய நாடுகள் சபை என்று சொன்னார்கள்; அதில் அய்க்கியமும் இல்லை, நாடுகளும் இல்லை. சோளக்கொல்லை பொம்மை வைத்திருப்பது போன்று, அவர்கள் வைத்திருக்கிறார்கள். மக்கள் இப்போது அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா! இஸ்ரேல் – அமெரிக்கா இணைந்து ஈரான்மீது போர் தொடுத்திருக்கிறார்கள். அமெரிக்காவில், இப்போதுதான் தலைசிறந்த அறிவாளி ஒருவர் குடியரசுத் தலைவராக வந்திருக்கிறார். அதனுடைய விளைவுதான் மிக முக்கியமாக இருக்கிறது. நாளுக்கு ஒரு பேச்சு; ஒவ்வொரு விதமான நடை. அதாவது  அவருடைய பேச்சு முன்னுக்கு முரணாக இருக்கிறது. அதனால் பிரச்சினைகள் தீர்வதற்குப் பதிலாக, பிரச்சினைகளை சிக்கலாக்கிக் கொண்டிருக்கக்கூடியதால், மக்களுடைய அன்றாட வாழ்க்கை – சம்பந்தமே இல்லாதவர்களுடைய வாழ்க்கை எல்லாம் பாழாகிக் கொண்டிருக்கிறது.

எவ்வளவு காலத்துக்கு முன்னால் புரட்சிக்கவிஞர் பாடினார், ‘‘புதியதோர் உலகு செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’’ என்றார். அப்படி இருந்திருந்தால் இன்றைக்கு இவ்வளவு தூரம் நாம் பெட்ரோலுக்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய இல்லத்தரசிகளுடைய கேஸ் அடுப்பெல்லாம் இன்றைக்குப் பூனை இருக்கக்கூடிய அளவிற்கு வந்திருக்காது. ஆகவே அதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

65 தொடர் சொற்பொழிவுகள் நடத்தி –
ஒரு பெரிய புத்தகமாக்க வேண்டும்!

சுற்றுச்சூழல்தான், இந்த வெப்ப நிலைக்குக் காரணம்.  சுற்றுச்சூழல் இயற்கை வளமோடு இருக்கும்போது, அது காற்றைத் தூய்மையாக்கும். இப்படி அவர் சொன்ன கருத்துகளை எல்லாம் எடுத்து வைத்துப் பார்க்கிற போது நாம் வியப்படைவோம். அதனால், இந்த அவைக்கு ஒரு மிக முக்கியமான மகிழ்ச்சிச் செய்தி. நீண்ட நாளாக நான் நினைத்துக் கொண்டிருந்ததும் கூட, புரட்சிக்கவிஞர் அவர்களுடைய படைப்புகளை, அவருடைய கருத்துகளை, நாடெங்கும் கொண்டு சேர்க்கவேண்டும்.  அவர் 65 ஆண்டு காலம் வாழ்ந்தார் என்பதற்கு அடையாளமாக, 65 தொடர் சொற்பொழிவுகளைத் தொடர்ந்து அடுத்து ஓராண்டு அல்ல, நீண்டாலும் கூட பரவாயில்லை; விட்டுவிட்டு, வாய்ப்பு இருக்கும் போதெல்லாம், தொடர்ந்து நான் செய்து, அதை ஒரு பெரிய நூலாக ஆக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

ஒவ்வொரு  இளைஞர்களுக்கும் புரட்சிக்கவிஞரின் கருத்துகள் போயச் சேரவேண்டும்

ஆகவே, இந்தக் கருத்து நீண்ட நாள்களாக என் மனதில் கருத்தூன்றியிருந்ததாகும். அதன் காரணம், தேவை என்னவென்றால், ஒவ்வொரு  இளைஞர்களுக்கும் புரட்சிக்கவிஞரின் கருத்துகள் போயச் சேரவேண்டும். மற்றவர்களுக்குப் பதிய வேண்டும்.

கம்பனைப் பாருங்கள்; கம்பன் அடிப்பொடி என்றெல்லாம் கூறி,  கம்பராமாயணத்தை மிகப்பெரிய அளவுக்கு உயர்த்திக் காட்டுகிறார்கள். அதுபோல, பாரதியாரைப் பற்றிக் காட்டுகிறார்கள்.  ஆனால், அதே நேரத்தில், அது சமுதாயத்திற்கு எந்த அளவிற்குப் பயன்படப் போகிறது?

புரட்சிக்கவிஞர் தேசிய கவி அல்ல; உலகக் கவி!

ஆனால், சமுதாயத்தினுடைய அறிவை கூர்மைப்ப டுத்தக்கூடிய அளவிற்கு, இரண்டே வரிகள் – ‘‘அறிவை விரிவுசெய் – அகண்டமாக்கு; விசாலப் பார்வையால் விழுங்கு உலகத்தை.’’ எனவே, உலகப்  பார்வை. மற்றவர்கள் தேசிய கவி, தேசிய கவி என்று சொன்னார்கள். இவர் சாதாரண கவி இல்லை என்று சொன்னோம். அதற்கு நீண்ட நாள்களுக்கு முன்பே நான் பதில் சொன்னேன். அவர் தேசிய கவி அல்ல; உலகக் கவி, அதுதான் மிக முக்கியம்.  அந்தக் காலத்திலயே ‘உலகப்பன் பாட்டு’ எல்லாமே ‘உலகம் உலகம் உலகம்’ என்று வருமே! அதுதான் நாடு அல்ல, உலகம் – உலகத்தைத் தாண்டி, விண்வெளியையும் பற்றிப் பாடி இருக்கிறார். நிலவில் இறங்குவதைப் பற்றியும் பாடி இருக்கிறார்.

தந்தை பெரியாரின் பாராட்டைப் பெற்றவர்கள்– என்றைக்கும் வீழ்ந்தவர்கள் அல்ல; எழுந்தவர்கள்தான்!

தந்தை பெரியார் அவர்களாலே இவ்வளவு பாராட்டைப் பெற்ற ஒரு கவிஞர், பெரியார் பாராட்டுகிறார் என்றால், என்ன அர்த்தம்? அவர் எடை போடுவதை சாதாரணமாக எடை போடமாட்டார்; துல்லியமாக எடை போட்டுப் பார்ப்பார். ஆகவே, யோசித்துப் பேசுவார். அது மட்டுமல்ல, அவருடைய பாராட்டு பெற்றவர்கள் என்றைக்கும் வீழ்ந்தவர்கள் அல்ல; எழுந்தவர்கள்தான் – வரலாற்றில் இடம்பெற்றவர்கள்தான் தந்தை பெரியார் அவர்களாலே அடையாளம் காட்டப்பட்டவர்கள். அப்படிப்பட்ட அருமையான ஒரு கருத்து – இங்கே அய்யாவினுடைய கருத்தையே முன்னுரையாகவே வைக்கிறேன்.

தந்தை பெரியார் பேசுகிறார், கேளுங்கள்!

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களைப் பற்றித் தெளிவாகப் பேச வேண்டுமானால், பகுத்தறிவுக் கூட்டத்தில் தான் பேச முடியும்.

எவ்வளவு அழகாகச் சொல்கிறார் பெரியார், எளிய முறையில் பேச வேண்டுமானால் பகுத்தறிவுக் கூட்டத்தில் தான் பேச முடியும். அப்படி இல்லாது, கடவுள், மதம், மூடநம்பிக்கைக்கு ஆட்பட்ட இடங்களில் பேசுவது என்றால், ‘வழவழா, கொழ கொழா’ என்றுதான் பேசவேண்டி இருக்கும்.

எதார்த்தத்தைச் சொல்கிறார் பாருங்கள்.  சில ஆட்கள் நம்மைக் கூட கூப்பிட்ட உடனே என்ன செய்வார்கள் என்றால்,  பாரதிதாசனைப்பற்றிப் பேச வேண்டும் என்றால்,  மிக முக்கியமாக ‘அழகின் சிரிப்பு’பற்றிக் குறிப்பிட்டு, அதில் எங்கேயாவது, எதையாவது எடுத்துக்கொண்டு, அதைப்பற்றியே குறிப்பிடுவார்கள்.  ஆனால், அவர் எல்லா துறையும்பற்றிப் பாடி இருக்கிறார். ஆனால், அதை மட்டும் மீடியாவில் விளம்பரப்படுத்துவார்கள். புரட்சிக் கவிஞர் என்பதற்கு என்ன அடையாளம்? என்ன புரட்சி அவர் செய்தார்? என்று  ஒரு கேள்வி கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தந்தை பெரியார் சொல்லுகிறார்.

‘‘புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களைப் பற்றி தெளிவாகப் பேச வேண்டுமானால் பகுத்தறிவுக் கூட்டத்தில்தான் பேச முடியும்.அப்படிக்கில்லாது கடவுள், மதம், மூடநம்பிக்கைக்கு ஆட்பட்ட இடங்களில் பேசுவது என்றால் வழ வழா கொழ கொழா அன்றுதான் பேச வேண்டி வரும்.

முதல் கவிஞரும், கடைசிக் கவிஞரும் ஆவார்!

பாரதிதாசன் அவர்கள் புரட்சிகரமான கருத்துகளை வெளிப்படுத்திய முதல் கவிஞரும், கடைசிக் கவிஞரும் ஆவார். அவருக்கு ஈடாக வேறு எந்தக் கவிஞரும் தோன்றவே  இல்லை.தோன்றியவர்களும், தோன்றுகிறவர்களும் பழைமைக் கருத்துகளைக் கொண்டவர்கள் தான் ஆகும்.

இன்றைக்கு நம் நாட்டில் இவரோடு குறிப்பிடத்தக்க வேறு புலவர்கள் இருந்தார்கள் என்றோ இருக்கிறார்கள் என்றோ சொல்லுவதற்கு இல்லை. நமது தமிழ்ப் புலவர்கள் வள்ளுவரைக் கூறுவார்கள்; அடுத்து ஜாதிச் செல்வாக்கும், அரசியல் செல்வாக்கும் கொண்ட பாரதியாரைக் கூறுவார்கள்’’ என்கிறார் தந்தை பெரியார்.

புதுமை வேறு; புரட்சி வேறு!

புதுமை வேறு; புரட்சி வேறு. அதுதான் மிக முக்கியம்.  நான் அடிக்கடி  விளக்கமாக ஒன்றைச் சொல்வேன்.  பெண்களுக்கெல்லாம், நம்முடைய மகளி ரைப்பற்றி பேசும்போது பாரதியார் பெண் விடுதலைப்பற்றி எல்லாம் எழுதியிருக்கிறார். ஆனால், அதே பாரதியார் என்ன சொல்கிறார், ‘‘அரசியல் ராஜ்ஜியத்துக்கு, ராஜ்ஜிய அரசியலுக்கு பெண்கள் வரக்கூடாது’’ என்று எழுதியிருக்கார் வசனத்தில். நிறைய பேருக்கு இது தெரியாது. அதனால்தான், ‘‘பாரதி கண்ட புதுமைப் பெண்’’ என்று  இந்த வார்த்தையை  பேராசிரியராக இருப்பவர் சொல்வார்கள். அதை நாங்கள் மறுக்கவில்லை.

பாரதி கண்டது புதுமைப் பெண்;
பெரியார் கண்டது புரட்சிப் பெண்!

ஒரு நிகழ்ச்சியில் நான் பேசும்போது சொன்னேன், ‘‘நீங்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்; ஆனால், எங்கள் பெண்கள் யார் தெரியுமா? பெரியார் கண்ட புரட்சிப் பெண்கள். புரட்சி பெண் தானே தவிர, புதுமைப் பெண் இல்லை. புதுமை என்பதற்கு விளக்கங்களை  யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஒரு காலத்தில் புதுமை; அடுத்த காலத்தில், அது பழைமையாகப் போய்விடும். செல்போனே போன மாடலை விட, இந்த மாடல் பின்னால் போய்விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை உண்டு’’  என்று கூறினேன்.

மேலும், தந்தை பெரியார் சொல்கிறார்,

‘‘இவர்கள் எல்லாம் பழைமைக் கருத்துகளைக் கொண்டவர்கள், பெரிதும் மக்கள் இன்று ஒத்துக் கொள்ளத்தக்கவோ, பின்பற்றத் தக்கவோ கூடிய கருத்துகளைக் கூறவில்லை. பாரதிதாசன் அப்படி அல்லவே; அவர் புதுமைக் கருத்துகளையும், புரட்சிக் கருத்துகளையும், மக்கள் சமுதாயத்திற்குத் தேவையான சமதர்மக். கருத்துகளையும் துணிந்து வெளியிட்டுள்ளார்.’’

புரட்சிக்கவிஞர் புகழைக் கூட
தூக்கி எறிந்துவிட்டார்!

அதற்கு ஒரு துணிவு வேண்டும். துணிவை விட, இன்னொரு தேவை உண்டு. எல்லாரும் எதைச் சேர்க்க வேண்டும் என்று விரும்புவார்கள்? நீங்கள் நன்றாக நினைத்துப் பாருங்கள். மனித குலத்தில், எதைச் சேர்க்க வேண்டும் என்றால், உடனே பதில் சொல்லுவீர்கள், ‘‘செல்வம்’’ என்று.  ஆனால், அதைவிட இன்னும் சிறப்பானது – சேர்க்க வேண்டும் என்பது மனித இயல்பு, புகழ்.  எல்லாவற்றையும் விரும்பாதவர்கள் கூட, புகழை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. மனிதருடைய ஜீவ சுவாபம் என்று அய்யா சொல்கிற மாதிரி, இயல்பானது. ஆனால், புரட்சிக்கவிஞர் புகழைக் கூட தூக்கி எறிந்துவிட்டார். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், எப்படி, தந்தை பெரியார் அவர்கள், தன்னைப் புகழ வேண்டும் என்று மற்றவர்களுக்காக கருத்துச் சொல்ல வேண்டும் என்றால், எவ்வளவோ கருத்தைச் சொல்லியிருக்கலாம். அவர் புகழை விரும்பியது இல்லை. அந்தப் புகழை அவர்கள் தூக்கி எறிந்துவிட்டு, உண்மையைச் சொல்லியாக வேண்டும்; மக்களைத் திருத்த வேண்டும். மக்களுக்கு மிக ஆழமான, அறிவைக் கொடுக்க வேண்டும் என்ற உணர்வை எப்படி பெற்றார்களோ, அதே கருத்தை – அதை அடிப்படையில் வைத்து அப்படிச் சொன்னார்கள்.

தந்தை பெரியார் தொடர்கிறார்,

‘‘அவருக்கு அனுசரணையாக சுயமரியாதை இயக்கமும் திராவிடர் இயக்கமும் இருந்தன. சுருங்கச் சொன்னால், அவர்போல் தீவிரமான கருத்துகளை அவருக்கு முன்பும், பின்பும் எடுத்துச் சொன்னவர்கள் இன்னார் என்று எடுத்துக்காட்ட ஆளே இல்லையே! அவர் கடவுள், மதம், சாஸ்திரம், பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள் இவைகளைக் கண்டித்து நன்றாகப்பாடி யுள்ளார்.

பாரதிதாசன் புதுமைக் கவிஞர் – புரட்சிக்கவிஞர் – புரட்சிகரமான கருத்துகளைக் கொண்டவர்!

பாரதியாருக்கோ, வள்ளுவருக்கோ கொடுக்கின்ற மரியாதையை நமது பாரதிதாசனுக்கு நம் மக்கள் கொடுக்கத் தவறி விட்டார்கள், காரணம், பாரதிதாசன் புதுமைக் கவிஞர்; புரட்சிக்கவிஞர்; புரட்சிகரமான கருத்துகளைக் கொண்டவர் என்பதால் தான். மற்ற கவிஞர்கள் பழைமை விரும்பிகள். ஆனதினால், பழைமையில் பற்றுக் கொண்ட மக்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்; போற்றுகிறார்கள். நமது முட்டாள் தனத்துக்கு உதாரணமே வள்ளுவரைப் பாராட்டுவது ஒன்றேபோதுமே!

‘வள்ளுவர். எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்

அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு’ என்றும்

‘எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய் பொருள்காண்பது அறிவு’ என்றும் பாடியுள்ளார்.

எனவே, அவர் பகுத்தறிவுவாதி; யார் எதைச் சொன்னாலும் அறிவு கொண்டு ஆராய்ந்து உணர வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார் என்று கூறுவார்கள்,

தோழர்களே! வள்ளுவர் இப்படிக் கூறி இருந்தாலும். அது அவர் கொள்கை அல்ல! ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னார். அவ்வளவு தான். மற்றபடி அந்தப் பழைமை விரும்பியே, ‘உலகத்தார் உண்டென் பவை இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப்படும்’ என்று கூறியுள்ளாரே!’’

ஆகவே, வள்ளுவருக்கு விளக்கம் கேட்டால், சந்தேகம் கேட்டால், வள்ளுவர் குறளையே எடுத்துப் பயன்படுத்துகிறார். ஆகவே, பெரியார் எவ்வளவு ஆழமாகப் படித்தவர் – அவர்  மேலெழுந்தவாரியாகப் படித்தவர்  அல்ல. அதை  நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பகுத்தறிவாளர்கள் எடுத்துச் சொல்லத்தக்க சாதனமாகப் புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாடல்கள்!

‘‘அப்படிப்பட்ட பாரதிதாசன் எந்த இடத்திலும், எந்தச் சந்தர்ப்பத்திலும் பகுத்தறிவுக்குப் புறம்பான கருத்துகளை பாட முற்படவே இல்லை. சமுதாய மாற்றத்திற்கான கருத்துகளைத் துணிந்து கூறிய பெரும்புலவர் அவர். இன்றைக்குப் பகுத்தறிவாளர்களுக்கு எடுத்துச் சொல்லத்தக்க சாதனமாகப் புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் அமைந்துள்ளன. (அத னால்தான் பகுத்தறிவாளர் கழகம் இதனைக் கொண்டாடுவது மிகவும் பொருத்தமாகும்.)  நமது மக்கள் இப்படிப்பட்டவருக்கு பாராட்டும், பெருமையும் அளிக்க வேண்டிய அளவுக்கு அளிக்காதது வருந்ததக்கதாகும்.  காரணம் அவர் பகுத்தறிவாதி ஆனபடியால், அவருடைய பணிக்குக் கிடைக்க வேண்டிய மதிப்பு கிடைக்கவில்லை. பாரதிதாசனைப் போன்ற ஒரு புதிய கருத்துகள் என்று சொல்லி, பரப்ப ஆளே இல்லையே! பாரதி தாசன் போல நம் நாட்டில் புரட்சிப் பாவலர்கள் தோன்றி இருந்திருப்பார்களேயானால், நமக்கு 2000, 3000 ஆண்டுகளாக வரும் இழிதன்மை இருந்து வந்திருக்குமா?’’ இந்தக் கேள்வி சிந்திக்க, அப்படியே விட்டுவிட்டார்.

‘‘இல்லை என்பேன் நானடா! –
அத் தில்லை கண்டு தானடா!’’

தண்டபாணி தேசிகர் நம் உணர்வு உள்ளவர்தான். அப்படிப்பட்டவர் எழுதுகிறார்.  ‘‘இல்லை என்போன் யாரடா? தில்லை சென்று பாரடா!’’

இந்தப் பாட்டை கேட்ட புரட்சிக்கவிஞர் கோபத்தோடு, ‘‘இல்லை என்பேன் நானடா! – அத் தில்லை கண்டு தானடா!’’  இப்படி அடித்தால், பாட்டு எழுதுகிறவர், அய்யோ இதை எழுதினால் என்ன சொல்லுவார்கள்? அவர் கோபித்துக் கொள்வாரே? நமக்கு இவ்வளவு பெருமை வராதே? நம்மைப் பற்றி விமர்சனம் செய்வாரே?’’ அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், கடுமையான வார்த்தைகளைப் பாடல்களில் எழுதுவார்.

ஆகவேதான், புரட்சி கவிஞர் அவர்கள் அவ்வளவு பெரிய செய்திகளைச் சொன்னார். இந்தத் துணிச்சல் சாதாரணமானதல்ல.  உடனே தைரியமாக, அதைப் பற்றி கவலையே படாமல்,  பாடுகிறார்.

இன்றைய ‘விடுதலை’யில் வெளிவந்திருக்கின்ற புரட்சிக்கவிஞரின் கவிதை!

‘‘சீச்சி! இந்த நாயும், பிழைக்கும் பிழைப்பு!  ஒவ்வொரு செய்தியையும் எடுத்துச் சொல்ல வேண்டுமானால், அவர் எல்லாத் துறைகளிலும் எடுத்துச் சொன்னார். இன்றைய ‘விடுதலை’யில் கூட ஒரு கவிதை எடுத்துப் போட்டு இருக்கோம். பல பேர் அந்தக் கவிதையைப் படித்திருக்க மாட்டார்கள்.

அது மட்டுமல்ல, ‘குடிஅரசு’ பத்திரிக்கையின் ஆரம்பக் காலத்திேலயே, அந்தப் பத்திரிகையில் அவர் சேர்ந்த உடனே, எட்டாவது ஆண்டு, ஏழாவது ஆண்டு ‘குடிஅரசு’ அந்த நிலைகள் வந்ததற்கெல்லாம், விளக்கங்களை மிகப்பெரிய அளவிற்குச்  சொல்லி இருக்கிறார்.

தாலாட்டில் கூட பகுத்தறிவைச் சொன்னவர் புரட்சிக்கவிஞர்!

ஒரு சின்ன உதாரணம். ‘குடிஅரசை’ வாழ்த்தி இருக்கிறார். ‘குடிஅரசு’தான் அவருக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறது.  அது மாத்திரமல்ல, மிகப்பெரிய அளவிற்கு ஒரு மகிழ்ச்சி – சின்ன பிள்ளைகளுக்குக்கூட  அந்தத் தாலாட்டில் கூட பகுத்தறிவைச் சொன்னவர் புரட்சிக்கவிஞர்.

பெண் குழந்தை தாலாட்டு – ஆண் குழந்தை தாலாட்டு!  தாலாட்டில் என்ன பெண் குழந்தை, ஆண் குழந்தை?

உலகப் பார்வையில் இருந்து தொட்டில் வரைக்கும் அதுதான் மிக முக்கியம். அந்தத் தொட்டில்பற்றிச் சொல்லும்போது, ‘‘சாணிக்குப் பொட்டிட்டு சாமி என்பார் செய்கைக்கு நாணி உறங்கு; நகைத்து நீ கண்ணுறங்கு!’’  அவ்வளவுதான்.

அந்தக் குழந்தைகளுக்குக் கூட  ஒவ்வொரு சொல்லும் மிக வேகமாகச் சொல்லக்கூடிய அந்த சொற்கள் –  ஆழமான சொற்கள்.

புரட்சிக்கவிஞருக்கு
அண்ணா கொடுத்த பணமுடிப்பு!

அது மட்டுமல்ல,  அண்ணா அவர்கள் சொல்லும்போது ஒரு கருத்தைச் சொன்னார்.  அண்ணாதான் அவருக்குப் பணமுடிப்பு கொடுத்து, மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்பு எல்லாம் கொடுத்தார்.

தந்தை பெரியார் எப்படி சிந்தித்தார்களோ, அந்த வழியிலே சிந்தித்தவர்தான் பேரறிஞர் அண்ணா. சென்னையில் நடைபெற்ற விழாவில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்குப் பணமுடிப்புக் கொடுத்தார் அண்ணா. தந்தை பெரியார்தான் முதல் முதலில், 100 ரூபாயை அந்தக் காலத்திலேயே ‘குடிஅரசு’ இதழில் அறிவித்தார்கள்.  அப்படிப்பட்ட அற்புதமான அண்ணா அவர்கள்,  அந்த நிகழ்ச்சியில்  பேசிய பேச்சு,  நீண்ட காலத்திற்கு முன்பே 1946 ஆம் ஆண்டு உரையாற்றுகிறார் அண்ணா அவர்கள் பணமுடிப்பு கொடுத்து.

பழைய செய்திகள் எல்லாம் வரலாற்றிலே பதிவு செய்யப்பட வேண்டிய செய்திகளாகும்.

‘‘வானுலகிலே வீதியிலே சுற்றி தேவர்தம் வடிவழகைக் கண்டு வருபவரே கவிஞர். அதுவே, கலை என்று இருந்த நிலை மாறி, கவி நம்முடனேயே இருப்பார்; நமது உலகத்தில்தான் உலவுவார்.  நாம் காண்பனவற்றையே காண்பார். ஆனால். அவைகளைப் பற்றி நாம் கூறத்  தயங்குவோம்; இயலாததால் அவர் கூறுவார். அறிவுத் தெளிவால், கலைத் திறனால், இந்தப் புரட்சியை செய்தார் பாரதிதாசன்.

வென்றார், வெல்கிறார்,
வெற்றி பெற்றபடியே இருப்பார்!

புரட்சி துறையில் ஈடுபட்டவர்கள் பெரிதும் துவக்கத்தில், பூவால் அர்சிக்கப்படுவதில்லை. புண்மொழிகளையே வீசப் பெறுவர். அதிலும் மொழி வீசும் துறையில் ஈடுபட்ட புலவர்கள், உலகிலே புத்தம் புதிய புரட்சியை ஒருவர் வெற்றிகரமாக செய்து வருவதைக் கண்டால், பொச்சரிப்பின் விளைவாக, புண்மொழி மாரி போல் பொழியத்தான் செய்வார்கள். பாரதிதாசன் இந்த மாரியை சட்டை செய்யவில்லை. புரட்சியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இதற்கு நேரம் ஏது?  போரிட்டார்! போரிட்டார்! போரிட்டுக் கொண்டே இருக்கிறார். வென்றார், வெல்கிறார், வெற்றி பெற்றபடியே இருப்பார். அவர் பெற்ற வெற்றிகளிலே ஒன்று, அவருடைய கவிதைகளை இன்று மக்கள் அறிந்து கொண்டார்கள்; ரசிக்கிறார்கள், பயன்பெறுகிறார்கள். நாளைக்கு என்ன நடக்கும் என்பதை எண்ணும்போது, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அய்யமில்லை என்று அனைவரும் கூட முடிகிறது. அவர் போர்முகாம் அமைத்துவிட்டார், போர் வீரர்களைக் கூட்டிவிட்டார்.  படைக்கலங்களும் தயார்  – முரசும் கொட்டிவிட்டுக் கூப்பிடுகிறார்.

‘‘கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே’’ என்று, அந்தக் குரல் காற்றில் மிதந்து வரும் கீதமாக  மட்டுமின்றி, கிண்கிணி சத்தத்தோடு இணைந்து வரும் கீத மொழியாக மட்டுமின்றி, கேட்போரின் வளைந்த முதுகை நிமிர்த்திவிடும் வீரக் குரலாகிவிட்டது. எனவேதான், நமக்கு ஒரு வால்டேர் கிடைத்துவிட்டார்; நமக்கு ஒரு ெஷல்லி கிடைத்துவிட்டார்; நமக்கு ஒரு கவிஞர் கிடைத்துவிட்டார். அவர் நம்மோடு இருக்கிறார், நமக்காக இருக்கிறார். நம் வேலையைச் செய்கிறார். நம்மை வாழ வைக்க அமைக்கிறார். அவர் வாழ்க! அவர் திறன் ஓங்குக!’’ என்று மிகச் சிறப்பாக சொன்னார் அண்ணா அவர்கள்.

புரட்சிக்கவிஞரி்ன ‘இசையமுது!’

எல்லாவற்றையும் விட நண்பர்களே, நிறைவாக ஒன்று சொல்கிறேன். இதுவரையில், அவர் பாடாத விஷயங்களே இல்லை. ‘இசையமுது’ என்ற ஒரு சிறிய புத்தகத்தை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், தெருவில் இருக்கின்ற அத்தனைப் பேரைப்பற்றியும் பாடி இருக்கிறார். இந்த மாதிரி எந்தக் கவிஞரும் பாடியதில்லை.

கடவுளை பற்றி, பார்க்காத கடவுளைப்பற்றிப் பாடினார்கள். பத்துத் தலை இருக்கிறது; ஏழு தலை இருக்கிறது; அதில் எட்டு பூதம் இருக்கிறது; அவர் அப்படி இருக்கிறார், இவர் இப்படி  இருக்கிறார் என்றெல்லாம்  கவிதைகளைப் பாடி இருப்பார்கள், திரும்பத் திரும்ப. ஆனால், எளிய முறையில், குழந்தைகள் பாடக்கூடிய அளவுக்கு  அவர் உண்டாக்கிய  ‘இசையமுது’ இருக்கிறது பாருங்கள், இதில், ‘காதல் பகுதி’ என்று  மேலே போட்டிருப்பார்கள்.  ‘காதல் பகுதி’ என்றால், வெறும் காதலைப்பற்றிப் பேசியிருப்பார் என்று நினைப்பார்கள்.  ஆனால் புரட்சிக் கவிஞர் எப்படி சொல்கிறார் பாருங்கள்,

‘வண்டிக்காரன்’

‘வண்டிக்காரன்’ தலைப்பில்,

‘‘அதோபாரடி அவரே என் கணவர் –

அதோ பாரடி!

புதுமாட்டு வண்டி ஓட்டிப்

போகின்றார் என்னை வாட்டி!

அதோபாரடி

இருப்பவர் உள்ளே முதலாளி செட்டி

ஏறுகால் மேல்தானென் சர்க்கரைக் கட்டி

தெரிய வில்லையோடி தலையில் துப்பட்டி?

சேரனே அவர் என்றால் அதில் என்ன அட்டி?

அதோ பாரடி!

அய்ந்து பணத்தினை என்னிடம் தந்தார்

அடிசாயும் முன்னே வரவு மிசைந்தார்

அந்தி வராவிட்டால் பெண்ணே இந்தா

‘‘ஆசைமுத்தம்’’ என்று தந்து நடந்தார்!

அதோபாரடி!’’

அதற்குப் பிறகு ‘‘மாடு மேய்ப்பவன்’’, ‘‘பாவோடும் பெண்கள்’’.

‘‘தறித் தொழிலாளி நினைவு!’’

‘‘தறித் தொழிலாளி நினைவு!’’ தலைப்பில்,

இழை யெலாம் அவள் பூங்

குழலோ! கைத்தறியின் —

பிழைசெய்தாள் என்றுதாய் துரத்தினாள்- என்

விழியெலாம் அவளையே பொருத்தினாள்

தொழில் முடிந்ததும் உணவுண்டு- நான்

தூங்கு முன்னே எனைக்கண்டு-மங்கை

‘‘எழுதினீர்களா மேற்கொண்டு-பதில்

என்தாய்க்’’ கென்று கேட்டதுண்டு-தேன்

பிழியும் அவளிதழ் தின்றதா பிழை? அவள்

பின்னும் என்னிடம் நின்றதா பிழை?

தார்கொண்ட நாடாவைக் கையினால்-நான்

தறியில்கோப்பதும் தேவை – அன்றோ?

பார்கொண்ட மானத்தை நான்

பாதுகாப்பதும் தேவை- மிகச்

சீர்கொண்ட என்குளிர்ப் பூங்காவை நான்

சேரவும் கேட்க வேண்டும் அம்மாவை!

அடுத்ததாக ‘உழவன் பாட்டு’, அதற்கடுத்து ‘உழத்தி.’

‘ஆலைத்தொழிலாளி’

‘ஆலைத்தொழிலாளி’, என்ற தலைப்பில்,

‘‘ஆலையின் சங்கே நீ ஊதாயோ? மணி

அய்ந்தான பின்னும் பஞ்சாலையின்…

சங்கே…

காலை முதல் அவர் நெஞ்சம் கொதிக்கவே,

வேலை செய்தாரே என் வீட்டை மிதிக்கவே

ஆலையின் சங்கே…

மேலைத் திசைகளில் வெய்யிலும் சாய்ந்ததே

வீதி பார்த்திருந்த என் கண்ணும் ஓய்ந்ததே!

மேலும் அவர்சொல் ஒவ்வொன்றும் இன்பம் வாய்ந்ததே

விண்ணைப் பிளக்கும் உன் தொண்டையேன் காய்ந்ததே

ஆலையின் சங்கே…

குளிக்க ஒரு நாழிகை யாகிலும் கழியும்

குந்திப் பேச இரு நாழிகை ஒழியும்

விளைத்த உணவிற் கொஞ்ச நேரமும் அழியும்

வெள்ளி முளைக்கு மட்டும் காதல்தேன் பொழியும்

ஆலையின் சங்கே….’’

அடுத்ததாக, ‘இரும்பாலைத் தொழிலாளி’,  ‘கோடாலிக்காரன்’,  ‘கூடை முறம் கட்டுவோர்’ ‘பூக்காரி’, ‘குறவர்’, ‘தபால்காரன்’, ‘சுண்ணாம்பிடிக்கும் பெண்கள்’, ‘ஓவியக்காரன்.’

இன்பம்’

சிறுவர் பகுதியில், ‘இன்பம்’ என்ற தலைப்பில்,

பசி என்று வந்தால் ஒருபிடி சோறு

புசி என்று தந்துபார் அப்பா!

பசி என்று வந்தால்…

பசையற்ற உன்நெஞ்சில் இன்பம் உண்டாகும்.

பாருக் குழைப்பதே மேலான போகம்!

பசி என்று வந்தால்…

அறத்தால் வருவதே இன்பம்-அப்பா,

அதுவலால் பிறவெலாம் துன்பம்!

திறத்தால் அறிந்திடுக அறம்இன்ன தென்று

செப்புநூல் அந்தந்த நாளுக்கு நன்று!

பசி என்று வந்தால்…

மனுவின்மொழி அறமான தொருநாள்- அதை

மாற்று நாளே தமிழர் திருநாள்

சினம், அவா, சாதி, மதம் புலைநாறும் யாகம்

தீர்ப்பதே இந்நாளில் நல்லறம் ஆகும்!

பசி என்று வந்தால்… மிக அழகாகப் பாடியிருக்கிறார்.

‘‘மனுவின்மொழி அறமான தொருநாள்’’ இப்பொழுது போராட்டமே அதுதான்.

‘‘அதை மாற்று நாளே தமிழர் திருநாள்’’ – அதை மாற்றும் ஆட்சி வந்தால், அதுதான் நமக்குத் திருநாள். அதைத்தான் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இங்கே சொன்னார்.

மு.க.ஸ்டாலினை உள்வாங்கியிருக்கிறார்கள்!

பொதுவாக நான் கருத்துக் கணிப்பை நூற்றுக்கு நூறு நம்புவதில்லை. ஆனால்,  பல தொகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்தித்திருக்கின்றோம். மக்கள் கணிப்புதான் இறுதியானதாகும். ஆகவே, நாம் மக்களைக் கணித்திருக்கின்றோம், கருத்தைக் கணிப்பதைவிட, மக்களுடைய உணர்வைப் பார்த்திருக்கிறோம். மு.க.ஸ்டாலினை உள்வாங்கியிருக்கிறார்கள்.

இதுவரையில், நம்முடைய இயக்கத்தினுடைய வெற்றி என்னவென்பதை தேர்தல் பிரச்சாரத்தில் நான் பார்த்தேன். பெண்கள் பெருந்திரளாக வந்து கேட்டதும் கிடையாது; உள்வாங்கியதும் கிடையாது. இது ஒரு பெரிய புரட்சி – அமைதிப் புரட்சியாகும்.

நிச்சயம் மீண்டும்
‘திராவிட மாடல்’ ஆட்சிதான்!

நம்முடைய கொள்கைகளைப்பற்றி சொல்லும்போதும், ‘‘யாதும் ஊரே’’ என்று நான் வேனில் இருந்து சொல்லும்போது, கீழே இருக்கும் பெண்கள், ‘‘யாவரும் கேளிர்’’ என்று சொல்கிறார்கள்.  அந்த அளவிற்கு, மக்கள் மத்தியில் உள்வாங்கி, ஓர் எழுச்சியை உண்டாக்கக் கூடிய அளவிற்குத் ‘திராவிட மாடல்’ ஆட்சி சாதித்திருக்கிறது. அதைப் பார்க்கும்போது, நிச்சயம் மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி வருவதைத் தவிர வேற வழியே இல்லை அவர்களுக்கு.

ஊடகக்காரர்கள் எதை வேண்டுமானாலும் எழுதுவார்கள். அதைப்பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. ‘‘மனக்கோட்டை மற்றவர்களுக்கு; சென்னை கோட்டை திராவிட மாடல் ஆட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு’’ என்று செய்தியாளர்களிடம் சொன்னேன்.

புரட்சிக்கவிஞர் பாடலில்,

‘‘சினம், அவா, சாதி, மதம் புலைநாறும் யாகம்

தீர்ப்பதே இந்நாளில் நல்லறம் ஆகும்!’’ என்றார்.

புரட்சிக்கவிஞருடைய அறம், தொண்டறம். அதைச் சிறப்பாக எடுத்துச் சொல்லி, எல்லாவற்றிலும் ஒரு புதிய பார்வை, புதிய எழுச்சியை செய்திருக்கிறார்.

கடைசியில், ‘‘பெரியார் உலகமயம் உலகம் பெரியார் மயம்’’ என்று சொல்லக்கூடிய அந்த உணர்வோடு இருக்கக்கூடிய வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம். இதில், ஒரே ஒரு செய்தியை சொல்கிறேன்.

எல்லாவற்றிலும் நவீன அறிவியல் சிந்தனை – எல்லாத் துறைகளிலும் புரட்சிக்கவிஞருடைய கருத்துகள் என்பது முழுக்க முழுக்க அறிவியல் கருத்துகள். இந்த அறிவியல் கருத்துகளில், சிறப்பாகச் சொல்ல வேண்டுமானால், மகளிருக்கு இந்த உரிமைகளைக் கொடுக்கிறார்கள்; மகளிர் அந்த உரிமைகளைப் பெற வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரே ஒரு நிலையை சுட்டிக்காட்ட வேண்டும்.

இங்கே மிக முக்கியமான ஒரு செய்தி, நிலவுக்குப் போகிற பெண்ணைப்பற்றி பேசுகிறார்.

‘‘பெரியார் முகத்தை அங்கே பார்க்க!’’

முதலில், நம்முடைய பெண்கள் படித்தார்கள். அதனால், பெரிய இடத்திற்குப் போய்விட்டார்கள். அதுமட்டுமல்ல, நிலவில் இறங்கக்கூடிய பெண், விண்வெளி பயணம் செய்யவேண்டும். இதுவரையில், எந்தக் கவிஞரும் எழுதவில்லை. புரட்சிக்கவிஞர் எழுதிய காலத்திற்குப் பிறகு அது நடந்துவிட்டது. அதை எப்படி முடிக்கிறார் என்பதுதான் மிக முக்கியமான பகுதியாகும்.

விண்வெளிக்குப் பெண்கள் போனார்கள், ‘‘பெரியார் முகத்தை அங்கே பார்க்க’’ என்று முடிக்கிறார்.

தந்தை பெரியாரை விண்வெளியில்
நிலை நிறுத்தியிருக்கிறார் புரட்சிக்கவிஞர்!

பெரியாரை நாமெல்லாம் உலக மயமாக்கி இருக்கிறோம். ஆனால், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள், உலகத்தைத் தாண்டி, விண்வெளியில் நிலை நிறுத்தியிருக்கிறார்.  இதற்கு முன் மற்றவர்கள்  ‘விண் உலகம்’ என்று சொன்னார்கள். விண்வுலகம் கற்பனையானது; விண்வெளி இயல்பானது. பார்க்கக்கூடியது. ஆகவேதான், செவ்வாய்த் தோஷம் சொன்ன நாட்டில், செவ்வாய்க் கோளுக்கே மனிதன் போய் இறங்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருப்பதை மனதில் வைத்துக்கொண்டு சிறப்பாகச் சொன்னார்.

புரட்சிக்கவிஞரின் இலக்கியப் புதையல், புரட்சிப் படையல்கள்–
நமக்குக் கிடைத்திட்ட மாமருந்துகள்!

இப்படி ஏராளமான, ஒரு சுரங்கம் மாதிரி, புதையல் மாதிரி இருக்கிறது.  இலக்கியப் புதையல் மட்டுமல்ல, புரட்சிப் படையல்கள். அதெல்லாம் நமக்குக் கிடைத்திட்ட மாமருந்துகள். நம்முடைய அறிவுக்கு விருந்துகள்

வாய்ப்பு இருக்கும் போதெல்லாம்
நான் தேதி கொடுக்கிறேன்!

ஆகவே, அதைப் பற்றித் தொடர்வோம். தொடர் சொற்பொழிவில், இதை முதல் முன்னுரையாக எடுத்துக்கொண்டு, அந்தச் சொற்பொழிவை நம்முடைய ‘புதுமை தென்றல்’  ‘பெரியார் நூலக வாசகர் வட்டம்’ ‘திராவிடர் கழகம்’ வாய்ப்பு இருக்கும் போதெல்லாம் நான் தேதி கொடுக்கிறேன். அந்த நேரத்தைப் பயன்படுத்தி, எல்லாவற்றையும் ஒரு பெரிய அளவுக்கு ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் மிக முக்கியம். இந்த கருத்துகள்  ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

ஒரு கவிதையைப் படிப்பதை விட, அந்தக் கவிதையினுடைய சுவையும், தேவையும், அதனுடைய தாக்கமும் எப்படி சமுதாயத்தில் ஏற்பட வேண்டும் என்பதுதான் மிக முக்கியமானது. ஆகவே, அதை செய்வோம்!

மீண்டும் சந்திப்போம்!

நன்றி, வணக்கம்

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  சிறப்புரை
யாற்றினார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *