தடைக்கற்களை வெற்றிக்கான படிக்கற்களாக மாற்றிக்கொண்ட மருத்துவர் ஆதிரா

3 Min Read

“எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்” – ஆதிரா போன்ற தன்னம்பிக்கைக்குப் பேர் போனவர்கள்தான் இந்த குறளுக்கு சரியான உதாரணம்.

தனது இருபது வயதில் பல் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விபத்தில் சிக்கி, வெண்டிலேட்டரில் இருந்து மீண்டும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, 2 ஆண்டுகள் தன் சுயநினைவையே இழந்தபோதும், தன் தன்னம்பிக்கையால் மீண்டும் தொடக்கத்தில் இருந்து ஆரம்பித்து, மருத்துவம் படித்து முடித்து, இன்று தனது 30 வயதில் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று அய்ஏஎஸ் ஆக இருக்கிறார் ஆதிரா.

இதைப் படிக்கின்ற உங்களுக்கே, ‘அப்பப்பா.. இத்தனை சோதனைகளா…’ என தலை சுற்றுகிறது என்றால், அவற்றை எல்லாம் தடைக்கற்களாக கருதாமல், தன் வெற்றிக்கான படிக்கற்களாக மாற்றிக் கொண்ட ஆதிராவைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. நிச்சயம் ஆதிராவின் கதை, ‘இத்தோடு வாழ்க்கை முடிந்து விட்டது என மூலையில் உட்காருபவர்களுக்கும், தவறான முடிவுகளை எடுப்பவர் களுக்கும்’ தன்னம்பிக்கை தரும் டானிக் என்பதில் சந்தேகமேயில்லை.

விபத்தால் மாறிய ஆதிராவின் வாழ்க்கை

கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் உள்ள பெருவயல் பகுதியைச் சேர்ந்தவர்தான் இந்த ஆதிரா. இவரது பெற்றோர்களான சுகதனும், மினியும் எல்அய்சி முகவர்கள். மருத்துவம் படிப்பதுதான் ஆதிராவின் கனவாக இருந்தது. அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு நிறைவு செய்த அவர், நினைத்தது போலவே, பெங்களூருவில் பல் மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் சேர்ந்தார்.

நன்றாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் 2016ஆம் ஆண்டு விபத்து வடிவில் சதி செய்தது. நண்பர்களோடு சேர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற போது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார் ஆதிரா. மோசமான அந்த விபத்தால், வெண்டிலேட்டர் சிகிச்சைக்கு செல்லும் அளவிற்கு மோசமானது அவரது உடல்நிலை. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பால், கொஞ்சம் கொஞ்சமாக அவரது உடல்நிலை தேறினாலும், பழைய நினைவுகளை இழந்தது அவரது மூளை. கூடவே அவரது கால்களும் பக்கவாதத்தால் செயலிழந்தன.

சுமார் 2 ஆண்டுகள் தன்னைப் பற்றிய நினைவுகள் எதுவும் இன்றி, அம்னீசியாவின் பிடியில், சக்கர நாற்காலியில் சிக்கித் தவித்தார் ஆதிரா. இம்முறை ஆயுர்வேத மருத்துவம் அவருக்குக் கை கொடுத்தது. கொஞ்சம் கொஞ்சமாக பழைய நினைவுகள் திரும்பி வர ஆரம்பித்தன. “எனக்கு இது ஏறக்குறைய மறுபிறவிதான். எனவே, நினைவு திரும்பியதும், மீண்டும் பிடிஎஸ் படிப்பைத் தொடர முடிவு செய்து பெங்களூருவுக்குத் திரும்பினேன். என்னைக் கவனித்துக் கொள்வதற்காக எனது குடும்பத்தினர் ஒரு பராமரிப்பாளரை ஏற்பாடு செய்தனர்.”

முதல் மூன்று ஆண்டுகள் நான் படித்தது மறந்து போனாலும், மீண்டும் அவற்றை நினைவிற்கு கொண்டு வந்து, எனது இறுதி ஆண்டுத் தேர்வுகளை வெற்றிகரமாக எழுதினேன். எனது விடாமுயற்சியின் பலனாக, வெற்றிகரமாக பிடிஎஸ் படிப்பை நிறைவு செய்து, 2020ஆம் ஆண்டு கோழிக்கோடு திரும்பினேன். “கரோனா பெருந்தொற்றுக் காலமான அப்போது ஒரு அரசு சாரா நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் சந்தித்த மனிதர்களும், அதில் கிடைத்த அனுபவங்களும்தான் என்னை சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுத காரணமாக அமைந்தது,” என பல் மருத்துவரான தன்னை, ஆட்சியராக மாறத் தூண்டிய சம்பவங்களை விவரிக்கிறார் ஆதிரா.

சிவில் சர்வீஸ் ஆசை

சவால்களும், தடைகளும் ஆதிராவுக்கு பழக்கமானவை கள்தான் என்பதால், மருத்துவராக இருந்து கொண்டே, சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கும் அவர் ஆயத்தமாகத் தொடங்கினார். தனது நான்காவது முயற்சியில், இந்தாண்டு வெற்றிகரமாக யுபிஎஸ்சி தேர்வில் 483ஆவது இடத்தைப் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ஆதிராவின் இந்த வெற்றியில், அவரது குடும்பத்தினருக்கும், குறிப்பாக அவரது தங்கை அனகாவிற்கும் பெரும் பங்கு உண்டு. விபத்திற்குப் பிறகு ஆதிராவிற்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, தான் படித்து வந்த பி.எஸ்சி சைக்காலஜி படிப்பைப் பாதியில் விட்டு விட்டு, பி.எஸ்சி நர்சிங் சேர்ந்து படித்துள்ளார் அவரது தங்கை.

“எனது வெற்றிக்கு பின் எனது தங்கையின் தியாகமும், மாபெரும் அர்ப்பணிப்பும் உள்ளது. அவர் எனது தங்கை மட்டுமல்ல… எனது சிறந்த தோழியும் ஆவார். யுபிஎஸ்சி நேர்காணலில் போது கூட, எனது சிறந்த தோழி யார் என்ற கேள்விக்கு, நான் என் தங்கையின் பெயரைத்தான் கூறினேன்,” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஆதிரா.  ஆட்சியராக வேண்டும் என்பதுதான் ஆதிராவின் கனவு. எனவே, இம்முறை அய்ஏஎஸ் கிடைக்காவிட்டால், மீண்டும் ஒருமுறை முயற்சி செய்ய இருப்பதாக அவர் கூறுகிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *