சின்னவடவாடி கா.அறிவழகன் மறைவு
கழகத் தலைவர் இரங்கல்!
கடலூர் மாவட்டம், விருத் தாசலம் கழக மாவட்டம், விருத்தாசலம் ஒன்றியத்தைச் சேர்ந்த சின்னவடவாடி கிராமத்தைச் சேர்ந்த
கா. அறிவழகன் (வயது 30), நேற்று (27.4.2026) அதிகாலை சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறோம்.
கடந்த மார்ச் 18-ஆம் தேதி, குள்ளஞ்சாவடி அருகே விபத்துக்குள்ளானார். இதில் தலையில் பலத்த காயம் (மூளை எலும்பு முறிவு) ஏற்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்ரல் 27, திங்கட்கிழமை) அதிகாலை உயிரிழந்தார்.
அறிவழகன் கழகத்தின் மீது மிகுந்த பற்றும், கொள்கைப் பிடிப்பும் கொண்டவர்.புதுவையிலிருந்து சேலம் வரை நடைபெற்ற நீட் எதிர்ப்பு’ இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.கழகத்தின் சார்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களிலும், நிகழ்வுகளிலும் பங்கேற்ற சிறந்த செயல்வீரர்.
அவருடைய மறைவு அவரது குடும்பத் தினருக்கும். கழகத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தனது இளம் வயதிலேயே நம்மை விட்டுப் பிரிந்த கா.அறிவழகன் அவர்களுக்கு நமது வீரவணக்கத்தைச் செலுத்துவதோடு, அவரை இழந்து வாடும் அவரது சகோதரர் தோழர் கா. குமரேசன் (விருத்தாசலம் ஒன்றியச் செயலாளர்) மற்றும் குடும்பத்தினர். உறவினர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்

