விசாரணை நீதிமன்றங்களில் 3.50 கோடி குற்றவியல் வழக்குகள் தேக்கம்! உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்

2 Min Read

சேலம், ஏப்.27- நாடு முழுவதும் 3.50 கோடி குற்றவியல் வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. விசாரணை நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்க மடையாமல் இருக்க வழக்குரைஞர்களும் நீதிமன்றமும் அரசும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வலியுறுத்தியுள்ளார்.

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ.59.43 கோடியில் கட்டப்பட்ட நீதிமன்ற கட்டடத் திறப்பு விழா நேற்று (26.4.2026) நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், இளந்திரையன், ஜெயச்சந்திரன், குமரப்பன் பங்கேற்றனர்.

விழாவில், உயர் நீதிமன்றதலைமை நீதிபதி தர்மாதிகாரி பேசியதாவது:

நீதித்துறையும் அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் மக்களின் பாதுகாப்பு கேடயமாகத் திகழ்கிறது. நீதித்துறை அதிகாரம் மற்றும் செல்வாக்கு போன்றவற்றுக்கு பணியாமல் நீதியை நிலைநாட்டி வருகிறது.

3.50 கோடி குற்றவியல் வழக்கு

நீதியின் மாண்பை போற்றும் வகையில், நீதி பரிபாலனம் அமைய வேண்டும் என்றார்.

புதிய நீதிமன்ற கட்டடத்தை திறந்து வைத்து நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது: நாடு முழுவதும் 4.81 கோடி வழக்குகள் தேங்கியுள்ளன.

அவற்றில் 4.18 கோடி வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களில் உள்ளன. இந்த வழக்குகளில் குற்றவியல் வழக்குகள் மட்டும் 3.50 கோடியாகும். குற்றவியல் வழக்குகள் குறைந்திருக்க வேண்டும். உரிமையியல் வழக்குகள் அதிகமாக இருக்க வேண்டும். குற்றவியல் வழக்குகளில், 7 ஆண்டுகள் தண்டனை வழங்கக் கூடிய வழக்குகள் எண்ணிக்கை மட்டும் 2.50 கோடி.

விசாரணை நீதிமன்றங்களில் மட்டும் 2.25 கோடி வழக்குகள் தேங்கியுள்ளன. இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தெரிவித்தபோது, கமிட்டி அமைத்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

தமிழ்நாட்டில் மாநில அரசு, வழக் குரைஞர்கள், நீதித்துறை இணைந்து கமிட்டி அமைக்கப்பட்டது. வழக்குகள் தேக்க மடையாமல் இருக்க வழக்குரைஞர்களும் நீதிமன்றமும் அரசும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாகும்.

நாடு முழுவதும் தேங்கிக் கிடக்கும் 3.50 கோடி குற்றவியல் வழக்குகளில் பெரும்பான்மையானவை முடிக்கப்பட வேண்டியவை. ஆனால், சரியான அணுகுமுறை இல்லாததால் வழக்குகள் தேக்கமடைந்துள்ளன.

குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை கொடுத்து, குற்றங்கள் நிகழாமல் தடுப்பதே நீதித்துறை பணி. குறிப்பிட்ட இடங்களில் நடைபெறும் குற்றங்கள், ஒரே வகையாக நிகழ்வது ஏன், குற்றங்கள் நிகழ கல்வியறிவு போதாமையா, செல்வமின்மையா என குற்றங்களுக்கான அடிப்படையை கண்டறிய வேண்டும்.

குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தி தண்டனை கொடுத்தால் அந்த நபரின் வழிதோன்றல்களும் அதே வழியில் செல்லும் ஆபத்தும் உள்ளது.

அவர்களையும் குற்றம் செய்யும் நிலைக்கு தள்ளிவிடக் கூடாது. எனவே, தேங்கிக் கிடக்கும் குற்றவியல் வழக்குகளை முடிக்க அனைவரது ஒத்துழைப்பும் அவசியம். முதல் ஒத்துழைப்பு அரசிடமிருந்து வரவேண்டும். இவ்வாறு பேசினார்.

விழாவில், சேலம் ஆட்சியர் அருண் தம்புராஜ், மாநகர காவல் ஆணையர் அனில் குமார் கிரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல், சேலம் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் விவேகானந்தன், செயலாளர் நரேஷ் பாபு, குற்றவியல் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் இமயவர்மன், செயலாளர் முருகன் உள்படபலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் தலைமை நீதித்துறை நடுவர் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *