வருமான வரித்துறை சோதனை ஆதாரங்களை வெளியிட்ட செல்வப்பெருந்தகை

2 Min Read

சென்னை, ஏப். 25– தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதா? இல்லையா? என்ற சர்ச்சை தமிழ்நாடு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

“நாங்கள் சோதனை நடத்தவே இல்லை” என்று வருமான வரித்துறை மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அதற்கான காட்சிப் பதிவு ஆதாரங்களை வெளியிட்டு செல்வப்பெருந்தகை அதிரடி காட்டியுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (24.4.2026) செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, தேர்தல் நேரத்தில் தங்களை முடக்க சதி நடந்ததாகக் கூறி சில காட்சிப் பதிவு காட்சிகளை வெளியிட்டார். அப்போது அவர் முன்வைத்த முக்கியக் கருத்துகள்:

“கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ராகுல் காந்தி கன்னியாகுமரிக்கு பிரச்சாரத்திற்கு வரவிருந்த நிலையில், நான் தங்கியிருந்த மணிமங்கலம் வீட்டை அதிகாரிகள் முற்றுகையிட்டனர். நான் அப்போது படப்பை பகுதியில் கட்சி நிர்வாகி மனோகரன் வீட்டில் இருந்தேன்.”

“தமிழ் பேசத் தெரியாத அதிகாரிகள் வந்து, சிசிடிவி கேமராக்களை அணைத்துவிட்டு சோதனை நடத்தினர். ‘பணம் எங்கே?’ என்று மிரட்டினார்கள். ஒன்றும் கிடைக்காததால் கையெழுத்து வாங்கிவிட்டுச் சென்றனர்.”

வெள்ளை அறிக்கை கோரிக்கை

“வருமான வரித்துறை பொய் சொல்கிறது. அவர்கள் எந்தெந்த இடங்களில் சோதனை நடத்தினார்கள், என்ன கைப்பற்றினார்கள் என்பது குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிட வேண்டும்.”

“தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்தி முடக்க நினைப்பது ஜனநாயக விரோதம்” என்று குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் தேசிய தலைமை வழங்கிய தேர்தல் செலவுத் தொகை குறித்தும் விளக்கம் அளித்தார். மேலும், “டில்லி தலைமை காழ்ப்புணர்வுடன் செயல்படுகிறது. அதிகாரிகளை வைத்து மிரட்டுவது ஒரு வகை தீவிரவாதம் தான் என்று மல்லிகார்ஜுனா கார்கே சரியாகவே சொல்லியிருக்கிறார்” என்றார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இச்சம்பவத்தை ‘நாடகம்’ என்று விமர்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலளித்த செல்வப்பெருந்தகை:

“அண்ணாமலையை எல்லாரும் அறிவார்ந்தவர் என்று சொல்கிறார்கள், ஆனால் அவர் பேசுவது உண்மையை மறைப்பதாக உள்ளது. அதிகாரிகள் சோதனை செய்தால் அதுகுறித்த தகவலை முறைப்படி ஏன் வெளியிடவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் போன்ற தலைவர்கள் இணையத் தயாராக இருப்பதாகவும், 5 மாநிலத் தேர்தலுக்குப் பிறகு ஒன்றிய அரசில் மாற்றம் ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதான நன்மதிப்பு உயர்ந்துள்ளதாகவும், மீண்டும் அவரே முதலமைச்சராவார் என்றும் அவர் கூறினார்.

இந்தச் சந்திப்பின் போது காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளான கோபண்ணா, உ.பலராமன், ரஞ்சன் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த காட்சிப் பதிவு ஆதாரங்கள் தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *