டெக்சாஸ் பல்கலை.க்கு டெல் இணையர் ரூ.7,000 கோடி நன்கொடை
வாசிங்டன், ஏப். 24- உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சிஇஓ மைக்கேல் டெல், அவரது மனைவி சூசன் டெல் இணைந்து வறுமையில் வாழும் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும், கல்வி, சுகாதார மேம்பாட்டிற்காகவும் டெல் அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர். இந்த அறக்கட்டளை மூலம் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள குழந்தைகளுக்கான டிரம்ப் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு நிதியளிக்க சுமார் ரூ.55 ஆயிரம் கோடி நன்கொடை அளிப்பதாக உறுதி அளித்தனர்.
இந்நிலையில், தற்போது ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைகழகத்திற்கு ரூ.7000 கோடி நன்கொடை வழங்கி உள்ளனர். இந்த நன்கொடை மூலம் பல்கலைக்கழகத்தில் புதிய புற்றுநோய் மருத்துவ மய்யமும், ஆராய்ச்சி வளாகமும் கட்டப்பட உள்ளது. இப்பணிகள் 2030ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும்.
ஊதிய உயர்வு, போனஸ் உச்ச வரம்பை நீக்க வலியுறுத்தல்
40 ஆயிரம் சாம்சங் தொழிலாளர்கள் தென்கொரியாவில் போராட்டம்
பியோங்டேக், ஏப். 24- தென்கொரியாவில் உள்ள சாம்சங் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மே 21 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
தென்கொரியாவின் பியோங்டேக் என்ற பகுதியில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 74,000க்கும் மேற்பட்டோர் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனம் எஸ்கே ஹைனிக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து மெமரி சிப்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது.
தற்போது செயற்கை நுண்ணறிவுக்கு முக்கியமான மெமரி சிப்களின் தேவை அதிகரித்து வருவதால் சாம்சங் நிறுவனம் அதிக லாபம் ஈட்டி வருகிறது. ஆனால், தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் போதிய போனஸ் தரவில்லை என சாம்சங் தொழிற்சங்கம் குற்றம்சாட்டி உள்ளது. எனவே, தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு தர வேண்டும், போனஸ் கணக்கீட்டில் வௌிப்படைத்தன்மை மற்றும் போனஸ் மீதான உச்ச வரம்பை நீக்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதற்கிடையே கோரிக்கை குறித்து நிர்வாகத்துடன் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியுற்றால் அடுத்த மாதம் 21ஆம் தேதி முதல் 18 நாள்களுக்கு வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.
இதன் முதற்கட்டமாக நேற்று போராட்டம் நடத்தினர். இதனால் கைப்பேசி மற்றும் மெமரி சிப்கள் தயாரிப்பு பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 74,000 தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சாம்சங் தொழிற்சங்கம், நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடு இருந்தபோதிலும், போதுமான ஊதியத்தை வழங்கத் தவறிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
உக்ரைன் வழியே ஸ்லோவேக்கியாவிற்கு மீண்டும் ரஷ்ய எண்ணெய் வழங்கல்

பிராட்டிஸ்லாவா, ஏப். 24- உக்ரைன் வழியாக ட்ரூஸ்பா குழாய் மூலம் ஸ்லோவேக்கியாவிற்கு மீண்டும் ரஷ்யா எண்ணெய் வழங்கும் பணி மீண்டும் துவங்கி உள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே 5 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் தங்கள் இருப்பிடம், உடமைகளை இழந்து இடம் பெயர்ந்துள்ளனர். அய்ரோப்பாவில் உள்ள ஹங்கேரி, ஸ்லோவேக்கியா நாடுகளுக்கு ரஷ்ய எண்ணெய் வழங்கப்பட்டு வந்தது.
ட்ரூஸ்பா குழாய் மூலம் உக்ரைன் வழியாக எண்ணெய் வழங்கப்படுகிறது. கடந்த ஜனவரியில் எண்ணெய் குழாயில் சேதம் ஏற்பட்டதின் காரணமாக எண்ணெய் வழங்குவது நிறுத்தப்பட்டது. குழாய் சேதத்திற்கு,உக்ரைன் தான் காரணம் என்று ஹங்கேரி, ஸ்லோவேக்கியா நாடுகள் குற்றம்சாட்டின. ஆனால் இதனை மறுத்த உக்ரைன் ரஷ்யாவின் டிரோன் தாக்குதலால் குழாய் சேதமடைந்தது என்று தெரிவித்தது.
அண்மையில் நடந்த தேர்தலில் தோல்வியடைந்த ஹங்கேரியின் தேசியவாதப் பிரதமர் விக்டர் ஆர்பன் , குழாய் பழுதுபார்ப்புப் பணிகளை உக்ரைன் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.
குழாயை சீரமைக்க உக்ரைன் தவறிவிட்டதாக இரு நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன . இந்தப் பிரச்சினை யைக் காரணம் காட்டி, உக்ரைனுக்கான அய்ரோப்பிய ஒன்றியத்தின் மாபெரும் கடனை ஹங்கேரி தடுத்தது.
அதே நேரத்தில், வழங்கும் பணி மீண்டும் தொடங்கும் வரை ரஷ்யாவுக்கு எதிரான புதிய தடைகளை ஆதரிக்க ஸ்லோவாக்கியா மறுத்துவிட்டது. போரினால் சீரழிந்த பொருளாதாரத்தை மேம்படுத்தவும், ரஷ்யப் படைகளின் தாக்குதலை தடுத்து நிறுத்தவும் உக்ரைனுக்கு 9 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது.இந்த நிலையில் ட்ரூஸ்பா குழாய் மூலம் ரஷ்ய எண்ணெய் வழங்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. இதை ஸ்லோவேக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ வரவேற்றுள்ளார்.

