• காலை உணவுத் திட்டம் உதித்தது எப்படி?
• இந்தத் தேர்தலில் உங்களுக்கு எதிரி யார்?
• விஜய் பற்றி நீங்கள் விமர்சிக்காதது ஏன்?
• இந்தத் தேர்தலில் மிக முக்கியமான பேசுபொருள் என்ன?
• மக்கள் உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?
‘டபுள் இன்ஜின்’ ஆட்சி முறையால் தான் மாநிலங்கள்
வளர்ச்சி அடையுமென்றால் பீகார் ஏன் வளர்ச்சி அடையவில்லை?
பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களை வகுத்தது காலத்தின் கட்டாயம்!
• இந்தத் தேர்தலில் உங்களுக்கு எதிரி யார்?
• விஜய் பற்றி நீங்கள் விமர்சிக்காதது ஏன்?
• இந்தத் தேர்தலில் மிக முக்கியமான பேசுபொருள் என்ன?
• மக்கள் உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?
‘டபுள் இன்ஜின்’ ஆட்சி முறையால் தான் மாநிலங்கள்
வளர்ச்சி அடையுமென்றால் பீகார் ஏன் வளர்ச்சி அடையவில்லை?
பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களை வகுத்தது காலத்தின் கட்டாயம்!
சென்னை, ஏப். 23 பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களை வகுத்து செயல்படுத்தியது காலத்தின் தேவையே! பெண்களுக்குச் சொத்துரிமை அளிக்கவேண்டும் என்றார் தந்தை பெரியார்; கலைஞர் ஆட்சியில் அது கொண்டு வரப்பட்டது. மேலும் பல திட்டங்களைப் பெண்கள் வளர்ச்சிக்காக இந்த ஆட்சியில் கொண்டு வந்தோம் என்று ‘சன்’ நிறுவன தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துக் கூறினார்.
- • காலை உணவுத் திட்டம் உதித்தது எப்படி? • இந்தத் தேர்தலில் உங்களுக்கு எதிரி யார்? • விஜய் பற்றி நீங்கள் விமர்சிக்காதது ஏன்? • இந்தத் தேர்தலில் மிக முக்கியமான பேசுபொருள் என்ன? • மக்கள் உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? ‘டபுள் இன்ஜின்’ ஆட்சி முறையால் தான் மாநிலங்கள் வளர்ச்சி அடையுமென்றால் பீகார் ஏன் வளர்ச்சி அடையவில்லை? பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களை வகுத்தது காலத்தின் கட்டாயம்!
- ‘சன்’ நியூஸ் தொலைக்காட்சிக்குத் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்த நேர்காணல்!
- தேர்தல் பரப்புரை என்று வந்தால் உங்களுக்கு உற்சாகம் வருவது ஏன்?
- முதல் அமைச்சர் ஆனவுடன் போட்ட முதல் கையொப்பம்!
- தேர்தல் பரப்புரையில் உங்களின் முதன்மையான எதிரி யார்?
- பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் உதித்தது எப்படி?
- பெண்களுக்கு அதிகப் பாதுகாப்பு தமிழ்நாட்டில் தான்!
- கடந்த 5 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகத் திட்டங்கள்
- விஜய் பற்றி அதிகம் விமர்சிக்காதது ஏன்?
- டில்லியோடு இணக்கமாக இருந்தால் தான் மாநிலங்கள் வளர்ச்சி அடைய முடியுமா?
- தலைவர் கலைஞரிடம் கற்றுக் கொண்டது
- இந்தத் தேர்தலில் மிக முக்கியமாக பேசு பொருள் என்ன?
- தொகுதி மறுவரையறை சட்டத்தை எதிர்ப்பது ஏன்?
- தொகுதி மறுவரையறை பிரச்சினையில் எந்தவித ஆலோசனைகளையும் பிரதமர் நடத்தாது பற்றி…
- பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு – இதில் உள்ள பிரச்சினை என்ன?
- நீங்கள் சந்தித்த தலைவர்கள் – பார்த்த பிம்பங்கள் பற்றி…
- மக்கள் ஏன் உங்களுக்கு ஓட்டுப் போட வேண்டும்?
‘சன்’ நியூஸ் தொலைக்காட்சிக்குத் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்த நேர்காணல்!
‘சன்’ நியூஸ் தொலைக்காட்சிக்குத் தி.மு.க. தலைவரும், ‘திராவிட மாடல்’ முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்த நேர்காணல் விவரம் வருமாறு:
கேள்வி: தமிழ்நாடு சட்டமன்றத்தினுடைய தேர்தல் பரப்புரை அனல் பறக்க நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்த பரப்புரையில் முழு வீச்சில் ஈடுபட்டிருக்கக்கூடிய தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை, அவருடைய பரப்புரைக்கு மத்தியில் நாம் சந்திக்கிறோம்.
கேள்வி: வணக்கம்!
பதில்: வணக்கம்!
தேர்தல் பரப்புரை என்று வந்தால் உங்களுக்கு உற்சாகம் வருவது ஏன்?
கேள்வி: 200 தொகுதிகளுக்கு மேல் சுற்றி வந்துட்டீங்க. இது உங்களுக்கு முதல் தேர்தல் பரப்புரை அனுபவம் இல்லை. தேர்தல் பரப்புரை என்று வந்தால், ஒரு உற்சாகம் உங்களுக்கு வந்துவிடுகிறதே?
பதில்: பல தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறேன் நான். இந்தத் தேர்தல் பிரச்சாரம் என்பது, நான் முதலமைச்சராக இருந்து, நான் செய்திருக்கின்ற சாதனைகள், என் தலைமையில் அமைந்த ஆட்சியின்மூலமாக செய்திருக்கின்ற திட்டங்கள் எல்லாம், மக்கள் மத்தியில் ரொம்ப எழுச்சியாகச் சேர்ந்திருக்கிறது. அந்த எழுச்சியோடு மக்கள் வரவேற்கிறார்கள். அதனால், ஒரு புத்துணர்ச்சியோடு போனேன்; ரொம்ப மிகச் சிறப்பாக வந்தது. ஏற்கெனவே பலமுறை போயிருக்கும் போது, அங்கொன்று, இங்கொன்று என்று சில குறைகள் எல்லாம் கூட இருக்கும். ஆனால், இந்த முறை எந்தக் குறைகளும் சொல்லாமல், மக்கள் ஆர்வத்தோடு, பெண்கள் மிக உற்சாகத்தோடு வரவேற்றனர். இளைஞர்கள், மாணவர்கள் அத்தனை பேருமே மிகவும் உற்சாகத்தோடு வரவேற்றனர்.
கேள்வி: கடந்த தேர்தல்களில் எல்லாம், எதிர்கட்சியாக இருக்கும்போது ஆளுங்கட்சியை விமர்சனம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்திருப்பீர்கள். கடந்த கால திமுக அரசு, கலைஞர் அவர்களுடைய அரசு செய்த சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்டுருப்பீர்கள். இதுதான், முதல் முறையாக ஒரு முதலமைச்சராக உங்கள் சாதனைகளைச் சொல்லி ஓட்டுக் கேட்கிற தேர்தல் பிரச்சாரம். அதில் முதன்மையாக எதை நீங்கள், உங்களுடைய ‘‘மிகப்பெரிய சாதனையாக’’ எதைப் பார்க்கிறீர்கள்?
முதல் அமைச்சர் ஆனவுடன்
போட்ட முதல் கையொப்பம்!
போட்ட முதல் கையொப்பம்!
பதில்: ‘விடியல் பயணம்’. அதுதான் முதலமைச்சராகப் பதவியேற்றவுடன், கோட்டைக்குச் சென்று அந்தக் கோப்பில், கையெழுத்து போட்டதுதான் விடியல் பயணம்தான்.
கேள்வி: முதல் நாள், முதல் கையெழுத்தா?
பதில்: முதல் நாள், முதல் கையெழுத்து. அப்படிப் போடும்பொழுது பெண்களுடைய முன்னேற்றத்தை மனதில் வைத்துக்கொண்டு போட்டேன்.
தந்தை பெரியார், சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை கொடுக்கவேண்டும். மக்கள் தொகையில் பாதி அளவு நாட்டில் பெண்கள்தான் இருக்கிறார்கள். அந்தப் பெண்களுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகப் போராடினார் அவர். தலைவர் கலைஞர் அவர்கள், பெண்களுக்கு சொத்துரிமையை சட்டமாக்கிக் கொடுத்தார். அதேபோல மகளிர் சுய உதவிக் குழு என்று, அவர் காலத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டது. அதே அடிப்படையில்தான், நான் பின்பற்றி, பெண்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதைத் ‘டிக்’ செய்தேன்.
அதைத்தான் தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தோம். பிறகு முதலமைச்சரானவுடன், அதிகாரிகள், ‘‘இப்பொழுது இருக்கின்ற சூழ்நிலையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது கஷ்டமாயிற்றே’’ என்று சொன்னார்கள். ஏற்கனவே போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னார்கள்.
பொதுவாக அண்ணா அவர்கள், போக்குவரத்துக் கழகங்களைப் பொறுத்தவரைக்கும் நஷ்டத்தில் இயங்கினாலும்கூட கவலைப்படாதீங்க; ஆனால், அது மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதுதான் முக்கியம் என்று சொல்லிருக்கார். அந்த அடிப்படையில்தான், கலைஞருடைய வழியிலே நின்று, நான் அதைச் செயல்படுத்தவேண்டும்; என்ன ஆனாலும், அதை செயல்படுத்தவேண்டும் என்று நினைத்து, முதல் கையெழுத்தை அந்தக் கோப்பில் போட்டேன்.
கேள்வி: விடியல் பயணம் கோப்பில் கையெழுத்தைப் போட்டீர்கள். அந்தத் திட்டத்தை இன்றைக்குப் பல மாநிலங்களும் அதனைச் செயல்படுத்துகின்ற தன்மையைப் பார்க்கிறோம். தேர்தல் பரப்புரை என்ற ஒன்றை, இன்றைக்கு நீங்கள் 70 வயதைக் கடந்து விட்டீர்கள். காலையில் ஓர் ஊரில் இருக்கிறீர்கள். மாலையில் இரண்டு கூட்டங்களில் பேசுகிறீர்ள். மறுநாள் காலையில் நடைபயிற்சி செல்லும்போது, வாக்கு சேகரிக்கப் போகிறீர்கள். இந்த ‘எனர்ஜி’ உங்களுக்கு எங்கே இருந்து வருகிறது?
பதில்: பொதுவாகவே உடற்பயிற்சி செய்து, சாப்பாட்டில் கட்டுப்பாடு என்பது ஒரு காரணம். அதையும் மீறி, இந்தத் தேர்தலைப் பொறுத்தவரைக்கும் மக்கள் வரவேற்பு கொடுப்பதால் எனக்கு அதிகமான உற்சாகம் ஏற்படுகிறது. அதனால், எனக்கு அலுப்பு, சலிப்பு, களிப்பு தெரியவில்லை. நான் தொடர்ந்து பிரச்சாரத்தை மேற்கொள்கிறேன்.

தேர்தல் பரப்புரையில் உங்களின் முதன்மையான எதிரி யார்?
கேள்வி: இந்தப் பரப்புரையில், உங்களுடைய முதன்மையான எதிரி, அரசியல் ரீதியாக உங்களுக்கு களத்தில் இன்றைக்கு யாரை நீங்கள் உங்களுடைய முதன்மையான எதிரியாகப் பார்க்கிறீர்கள்?
பதில்: நான் யாரையும் எதிரியாகப் பார்ப்பதில்லை. எல்லோரையும் நண்பர்களாகத்தான் பார்க்கிறேன். எதிரிகளாக இதுவரைக்கும் யாரையும் பார்த்தது இல்லை. அதுதான் என்னுடைய சுபாவம்.
கேள்வி: உங்கள் ஆட்சியில், கடந்த அய்ந்தாண்டு கால ஆட்சியில், அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்றால், அது கல்விக்கும், பெண்கள் நலத் திட்டங்களுக்கும்தான். நிகழ்ச்சிகளிலேயும், கல்வி பற்றி அதிகமாகப் பேசுகிறீர்கள். ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கல்விக்கு?
பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் உதித்தது எப்படி?
பதில்: பெருந்தவர் காமராஜரை, ‘‘கல்வித் தந்தை’’ என்று சொல்வார்கள். அதுமாதிரி, தலைவர் கலைஞர் அவர்கள், கல்லூரி கல்வியை உயர்த்தினார். அது என்னுடைய மனதில் இருந்தது. ஏனென்றால், ஒருவருக்குக் கல்வி கிடைத்துவிட்டால், அவன் எப்படி இருந்தாலும், அவனுடைய வாழ்க்கையை சமாளித்துவிடலாம். அதனால்தான், கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதனால்தான் ஒன்றாம் வகுப்பு முதல், அய்ந்தாம் வகுப்பு வரைக்கும் படிக்கக்கூடிய பிள்ளைகளுக்கு, காலை உணவுத் திட்டம் கொண்டு வந்தோம். காமராஜர் எப்படி மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கினாரோ, எம்.ஜி.ஆர். அதை சத்துணவுத் திட்டம் என்று மாற்றி செய்தாரோ, கலைஞர் வந்து, முட்டையுடன் கூடிய சத்துணவு கொடுத்தாரோ, அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தியது. அதை யாராலும் மாற்ற முடியவில்லை. அவர்களைத் தொடர்ந்து வருகிறார்கள் எல்லாம், அதை விரிவாக்கம்தான் செய்ய முடிகிறது.
ஒரு நாள் அதுகுறித்து யோசித்தேன்; ஒரு நாள் கலைஞர் கருணாநிதி நகரில் இருக்கிற ஒரு பள்ளிக்கூடத்திற்குச் சென்று, ஆய்வு செய்தேன். அப்பொழுது இரண்டு பிள்ளைகள், மிகவும் சோர்வாக இருந்தார்கள். அவர்களிடம் சென்று, ‘‘ஏம்பா, சோர்வாக இருக்கிறீர்கள், சாப்பிடவில்லையா?’’ என்று கேட்டேன்.
ஆமாம் என்றார்கள்!
அதைக் கேட்டவுடன், எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது!
ஏன் சாப்பிடவில்லை? என்று கேட்டேன்.
எங்களுடைய அம்மா, கூலி வேலைக்குப் போய்விட்டார்கள் என்று சொன்னார்கள்.
உடனே என்னுடைய மனதில் ஒரு திட்டம் தோன்றியது. உடனே அலுவலகத்திற்கு வந்து, அதிகாரிகளை அழைத்து, இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தால், எப்படி இருக்கும்? என்று அதற்குரிய கணக்கீடுகளைச் செய்யச் சொன்னேன்.
அதேபோன்று, அதிகாரிகளும் கணக்கீடுகளைச் செய்து சொன்னார்கள்.
‘‘காலைச் சிற்றுண்டித் திட்ட’’த்தைக் கொண்டு வந்தவுடன், இன்றைக்கு மாணவர்களின் வருகையும் அதிகமாகி இருக்கிறது. பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையும் அதிகமாகி இருக்கிறது.
கேள்வி: இந்தத் தேர்தல் பரப்புரையில், உங்கள் ஆட்சியின் மேல் சொல்கிற மிக முக்கியமான குற்றச்சாட்டு என்பது, தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதுதான்?
பதில்: வேடிக்கையாக இருக்கிறது. குறிப்பாக, பழனிசாமிதான் இதை அதிகமாகச் சொல்லிக் கொண்டு இருக்கார். அவரும், பல கூட்டங்களுக்குப் போய்க்கொண்டுதான் இருக்கிறார் பிரச்சாரத்துக்காக. அங்கே பெண்களே வருவது இல்லையா? பாதுகாப்பு இருந்தால்தானே பெண்கள் வர முடியும். அது மாதிரி, எங்கள் கூட்டங்களுக்கும் ஆயிரக்கணக்கில் பெண்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கூட்டத்திற்கு வந்துவிட்டு, நிம்மதியாகப் திரும்பிப் போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இன்றைக்குத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும், கல்லூரிகளுக்குப் போவதற்கும் பெண்கள் அதிகம் போகிறார்கள். அதே மாதிரி வேலைகளுக்குப் போகிற பெண்கள்தான் இன்றைக்கு 44 சதவிகிதத்திற்குமேல் பெண்கள்தான் இன்றைக்கு வேலைக்குப் போகிறார்கள். ஆக, பெண்களுக்கு உரிய பாதுப்பு இங்கேதான் இருக்கிறது.
கேள்வி: பெண்கள் அதிக அளவிற்கு வேலைக்குப் போகிறார்கள்; அதிகம் கல்வி நிறுவனங்களுக்குப் போகிறார்கள். அதனால், பெண்களுக்குப் பாதுகாப்பு என்கிறீர்கள். ஆனால், எதிர்கட்சிகளுடைய பரப்புரையாக மட்டுமல்ல – திரு. எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல; பொதுவாகவே பலர், எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல தரப்பினரும், பி.ஜே.பி.யிலிருந்து இருந்து டில்லியில் இருந்து வரக்கூடிய தலைவர்களும் அதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிற ஒன்றாகப் பார்க்கிறோம்?
பெண்களுக்கு அதிகப் பாதுகாப்பு தமிழ்நாட்டில் தான்!
பதில்: நீங்கள், ஒன்றிய அரசு கொடுத்திருக்கின்ற அறிக்கையை எடுத்துப் பார்த்தீர்களேயானால், பெண்களுக்கு எங்கே பாதுகாப்பு அதிகம் இருக்கிறது என்று பாத்தீர்கள் என்றால், தமிழ்நாட்டில் தான் அதிகமாகப் பாதுகாப்புக் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். எந்தவிதமான சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இல்லாமல் இருக்கிறது என்று அவர்களுடைய ஆய்வு அறிக்கையே சொல்கிறது. ஆனால், வேண்டுமென்றே திட்டமிட்டு, இதுபோன்று பரப்பப்படுகிறது. அங்கொன்றும், இங்கொன்றும் தனிப்பட்ட முறையில் ஏதாவது ஒரு பிரச்சினை நடந்தால், அதைப் பெரிதாக்குகிறார்கள்.
ஆனால், அந்தப் பிரச்சினையையும் உரிய முறையில் கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்கிறோம். உடனே தண்டனை வாங்கிக் கொடுக்கிறோம். அதுவும் நடந்திருக்கிறது நம்முடைய ஆட்சியில்.
இன்றைக்குக் கல்லூரி நிறுவனங்களில் பணி யாற்றும் பெண்களாக இருந்தாலும் சரி, அதே மாதிரி தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற பெண்களாக இருந்தாலும் சரி, எல்லோரும் பாதுகாப்புடன்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான், ‘தோழி விடுதி’ என்கிற பெயரில், எல்லா மாவட்டத்திலேயும் அதற்காக விடுதிகளைக் கட்டிக் கொண்டிருக்கிறோம். அந்தத் திட்டம் பாதி நிறைவடைந்திருக்கிறது; அடுத்து, ஆட்சிக்கு வந்த பிறகு, அந்தத் திட்டம் முழுமையடையும் என்று தேர்தல் அறிக்கையிலேயும் கொடுத்திருக்கிறோம்.
கேள்வி: நீங்கள் பங்கேற்கின்ற கூட்டங்களில் எழுச்சி எப்படி இருக்கிறது? நேற்றைக்குக்கூட கமல்ஹாசன், பிரேமலதா ஆகியோருடன் ஒரு பேரணி நடத்தினீர்கள். உங்கள் கூட்டங்களில், எழுச்சி எப்படி இருக்கிறது?
பதில்: மிகச் சிறப்பாக இருக்கிறது. கடந்த தேர்தலின்போது சொன்ன தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கறோம். 100–க்கு 85 இல் இருந்து 90% நிறைவேற்றிருக்கிறோம். ஒன்று, இரண்டு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது, ஒன்றிய அரசினுடைய ஒத்துழைப்பு இல்லாததால்தான். அதனால்தான், 5 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாமல் தடைபட்டு நிற்கிறது.
அதனால், மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. தி.மு.க. சொல்கிற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
கேள்வி: இந்தத் தேர்தல் பரப்புரைக்கு இடையிலே யேயும் கிரிக்கெட் பார்க்கிறீர்கள்; பரப்புரையின் நேரத்தில் கூட கிரிக்கெட் பார்க்கிறீர்கள் என்று ஒரு கமெண்ட் கூட எதிர்க்கட்சித் தலைவர் சொல்லியிருக்கிறாரே?
பதில்: வண்டியில் பயணம் செய்யும்போது பார்ப்பேன். பிரச்சாரத்துக்குப் போகும்போது, லேப்டாப்பில் பார்ப்பேன். ஒரு ஊரிலிருந்து, இன்னொரு ஊருக்குச் செல்லும் இடைப்பட்ட நேரத்தில், பார்ப்பனேரே தவிர, வேறொன்றும் கிடையாது.

கடந்த 5 ஆண்டு தி.மு.க.
ஆட்சியில் ஆண்களைவிட
பெண்களுக்கு அதிகத் திட்டங்கள்
ஆட்சியில் ஆண்களைவிட
பெண்களுக்கு அதிகத் திட்டங்கள்
கேள்வி: பெண்களை மய்யப்படுத்தித் திட்டங்கள் என்பது கடந்த அய்ந்தாண்டு ஆண்டு கால ஆட்சியில் தொடர்ந்து பார்த்தால், பெண்களுக்கான திட்டங்கள் அதிகமாக இருக்கிறது. ஆண்களைவிட, பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்களா?
பதில்: பெண்களுக்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். ஒரு பெண் கல்வி அறிவில் படித்து முன்னுக்கு வந்தார்கள் என்றால், அந்தக் குடும்பம் மட்டுமல்ல, அந்த நாடே முன்னேறும் என்று படித்திருக்கிறேன். அதனால்,பெண்களுக்குரிய முக்கியத்துவத்தை நாம் கொடுத்து கொண்டிருக்கிறோம்.
கேள்வி: நீங்கள் அறிவிக்கின்ற ‘இல்லத்தரசி திட்டம்’ அல்லது ‘உரிமைத் தொகை’ போன்ற வாக்குறுதிகளைப் போட்டி போட்டுக் கொண்டு அ.தி.மு.க.வும் மற்ற கட்சிகளும் தருகிறார்களே?
பதில்: அதை மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை. காரணம், தி.மு.க. பொறுத்தவரைக்கும், கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில், ‘கலர் டி.வி.’ கொடுப்போம் என்று சொன்னார். அந்த வாக்குறுதியை முழுதாக நிறைவேற்றினார். தி.மு.க. வாக்குறுதி கொடுத்தால், நிறைவேற்றுவார்கள் என்று மக்களிடம் நம்பிக்கை இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி சொல்வதையெல்லாம் மக்கள் நம்பத் தயாராக இல்லை.
கலைஞர் முழுசா நிறைவேத்தினாரு. அதே மாதிரி திமுக ஆட்சிக்கு வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை இருக்கு. எடப்பாடி பழனிசாமி சொல்றதையெல்லாம் மக்கள் நம்பத் தயாராக இல்லை.
விஜய் பற்றி அதிகம் விமர்சிக்காதது ஏன்?
கேள்வி: நீங்கள் இபிஎஸ்சை கடுமையாக எதிர்த்துப் பேசுகிறீர்கள். ஆனால், நடிகர் விஜய், உங்களை மிகக் கடுமையாக விமர்சனம் செய்கிறார், இந்தத் தேர்தல் களத்தில். ஆனால், நீங்கள் பதிலே சொல்லாமல் தவிர்க்கிறீர்களே?
பதில்: இபிஎஸ்சைக்கூட நான் கடுமையாக பேசுவதில்லை. அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதினால், அவர் கேள்விகளைக் கேட்கும்போது, சில பிரச்சினைகளைச் சொல்லும்போது, அதற்குத் தகுந்த பதிலைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான், அவரைக் கடுமையாகவோ, விமர்சனமோ அதிகம் சொல்வதில்லை.
அதே மாதிரி, நீங்கள் விஜய்யைப் பற்றி கேட்கிறீர்கள்; திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரைக்கும், புதிதாக யாராவது கட்சித் தொடங்குகிறவர்கள், அரசியல் செய்யவேண்டும் என்று நினைக்கிறவர்கள் எல்லாம், தி.மு.க.வை விமர்சனம் செய்துதான் பேசுகிற வழக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதை நானும் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், இன்றைக்கு தி.மு.க.வை எதிர்த்துப் பேசுகிறவர்களைப்பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. உலக நாடுகள் பலவற்றிற்குச் செல்லும்போது, அங்கே இருக்கின்ற தமிழர்களைப் பார்க்கும்போது, ‘‘தி.மு.க.வினால்தான் நான் இங்கே வந்து வேலை செய்கிறேன். கலைஞரால்தான், எனக்கு வேலை கிடைத்திருக்கிறது. எனக்கு இட ஒதுக்கீடு கொடுத்து, வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார்’’ என்று சொல்கிறார்கள். உலகம் முழுவதும் இன்றைக்கு எங்கே போனாலும், தி.மு.க.பற்றித்தான் புகழ்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க. தான் நமக்கு உந்து சக்தியாக இருக்கிறது என்கிற உணர்வு வந்திருக்கிறது நாட்டில். அதனால், புதிதாக யார் வந்தாலும், தி.மு.க.வை எதிர்த்தால்தான், தி.மு.க.வை விமர்சனம் செய்தால்தான் வளர முடியும் என்று நினைக்கிறார்கள். அது தவறு. தி.மு.க. ஒரு ஆக்கச் சக்தி. இன்றைக்குப் பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் வந்திருக்கிறது என்றால், அதற்குக் காரணமே தி.மு.க.தான். தி.மு.க. ஓர் ஆக்க சக்தியாக இருந்து, தி.மு.க. ஆட்சியில் இருந்த நேரத்தில் கொண்டு வந்ததால்தான்.
கேள்வி: ‘‘Stalin is more Dangerous’’ என்பது ஒரு ஸ்டேட்மெண்ட். அந்த ஸ்டேட்மெண்ட்டை எச். ராஜா சொல்லும்போது, அவர் என்ன உணர்வில் சொன்னார் என்று தெரியவில்லை. அப்பொழுது நீங்கள் அதிகாரத்திலேயும் இல்லை. அந்த ஸ்டேட்மெண்ட்டைச் சொல்லும்போது உங்களுக்கு என்ன உணர்வு வந்தது?
பதில்: அவர் என்ன அர்த்தத்தில் சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. என்ன அர்த்தத்தில் சொல்லிருப்பார் என்றும் நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், அதை நான் பெருமையாக நினைக்கிறேன்.
ஏனென்றால், ஒரு பொறுப்பில் இருக்கும்போது, அதை அவர் சொல்லும்போது, கலைஞரை விட டேஞ்சரஸ் என்று சொல்லும்போது, கலைஞர் நிறைய செய்திருக்கிறார். இப்பொழுது அதைவிட நாமும் அதிகமாகச் செய்ய வேண்டும் எதிர்பார்க்கிறாரா? அப்படித்தான் நானும் நினைக்கிறேன். இன்னும் அதைச் சொல்லட்டும், நான் இன்னும் மேற்கொண்டு என்னுடைய பொறுப்புணர்வை நான் வெளியே காட்டுகிறேன்.
டில்லியோடு இணக்கமாக இருந்தால் தான் மாநிலங்கள் வளர்ச்சி
அடைய முடியுமா?
அடைய முடியுமா?
கேள்வி: பிரதமர் தொடங்கி, டில்லியிலிருந்து எந்தத் தலைவர்கள் வந்தாலும், டில்லியிலேயும், ஒன்றியத்திலேயும் ஒரே ஆட்சி இருக்க வேண்டும். தமிழ்நாட்டிலும், அதே ஆட்சி இருக்க வேண்டும். டபுள் என்ஜின் சர்க்கார் என்று பேசுகிறார்கள். வளர்ச்சி அதனால் குன்றிப் போய்விட்டது. டில்லியோடு இணக்கமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்களே?
பதில்: மணிப்பூரில் டபுள் இன்ஜின் தான்; பீகாரில் டபுள் இன்ஜின் தான்; பிஜேபி ஆளக்கூடிய மாநிலங்களில் டபுள் இன்ஜின் தான். டபுள் இன்ஜின் மாநிலத்திலிருந்து என்ன வளர்ச்சியைத் பார்த்துவிட்டார்கள்?
டபுள் இன்ஜின் இல்லாத தமிழ்நாட்டில், இன்றைக்கு நாங்கள் சாதனை செய்திருக்கிறோம். அதே மாதிரி கேரளா ஆகட்டும். அதாவது பி.ஜே.பி. ஆட்சி இல்லாத மாநிலங்களில் பார்த்தீர்கள் என்றால், அங்கேதான் வளர்ச்சி இருக்கிறதே தவிர, பி.ஜே.பி. ஆளக்கூடிய மாநிலங்களில் எங்கேயும் வளர்ச்சி இல்லை. அது ஒரு டப்பா இன்ஜின்தான்.
கேள்வி: மக்களுக்கு ஒரு சர்ப்ரைஸா ஒன்று நடந்தது. திடீரென்று ஒரு நாள் காலையில் 5000 ரூபாய் பணம், ஒரு கோடியே 31 லட்சம் பேரின் கணக்கில் வந்து விழுந்தது. அது எப்படி ரகசியமாக வைத்திருந்து, விடியற்காலையில் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தீர்கள்?
பதில்: எங்களுக்கு ஏற்கெனவே செய்தி கிடைத்தது. இப்படி நீதிமன்றத்துக்குந் போகப் போகிறார்கள். இந்தத் திட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். தேர்தலுக்காக இதைப் பயன்படுத்துகிறோம் என்று அவர்கள் பயந்து போய், வழக்குத் தொடுப்பதற்கு முயற்சி செய்தார்கள். இந்தச் செய்தியை கேள்விப்பட்வுடனே, நான் அதிகாரிகளை அழைத்துப் பேசி, உடனே இதை எப்படிச் செய்யலாம் என்பதைப்பற்றி ஆலோசனை செய்தோம்.
எனக்கும், அந்தத் துறையினுடைய அதிகாரிக்கு மட்டும்தான் தெரியும். எவ்வளவு போடுவது? எப்பொழுது போடுவது? என்று.
ஆலோசனை செய்தபடி, உடனடியாக ஒவ்வொருவரு டைய வங்கிக் கணக்கிலும் அந்தப் பணத்தைப் போட்டோம். அதற்குப் பிறகு 6.30 மணிக்கு மேல், நான் அது சம்பந்தமாக ஒரு வீடியோ செய்தி வெளியிட்டு, அது வெளியில் வந்தது.
தலைவர் கலைஞரிடம்
கற்றுக் கொண்டது
கற்றுக் கொண்டது
கேள்வி: ஒரு திட்டத்தை எடுத்துக்கொண்டால், அதை, மிக நுணுக்கமாக சில நேரங்களில் பின்பற்றுவதைப் பார்க்க முடிகிறது. இப்பொழுது ஒரு பெண் வீடு கேட்டு, வீடு இல்லை என்று சொல்லி, கோரிக்கை வைக்கிறார். அவருக்கு வீடு ‘சாங்கஷன்’ செய்கிறீர்கள். அதற்குப் பிறகு, திருநெல்வேலிக்குச் செல்லும்போது, அந்த வீட்டைப் போய்ப் பார்க்கிறீர்கள். அந்த வீட்டைக் கட்டுகிறார்களா என்று பின்பற்றிப் பார்க்கிறீர்கள். அதற்குப் பிறகு அந்த வீட்டிற்குப் போகிறீர்கள்.
ஒரு விஷயத்தைத் தொடர்ந்து பின்பற்றுகிறீர்கள். இந்தப் பின்பற்றுதல் என்பதை இந்தத் திட்டத்திற்கு மட்டும் செய்கிறீர்களா? அல்லது பொதுவாக உங்களுடைய இயல்பா?
பதில்: பொதுவாகவே என்னுடைய இயல்பு அது தான். தலைவரிடம் கற்றுக் கொண்டது அது. தலைவர் ஒரு காரியத்தை எங்களிடம் செய்யச் சொல்லுவார். அப்படி எங்களிடம் சொல்லிட்டு, அதற்கு முன்பே தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிவிடுவார்.
உதாரணத்திற்கு, நான் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது, பேப்பரில் ஒரு செய்தி வரும். அதைப் பார்த்துவிட்டு, என்னிடம் சொல்லுவார். சரிப்பா, நான் அதைக் கவனிக்கிறேன் என்று சொல்வேன். ஆனால், எனக்கு முன்பே, மாநகராட்சி ஆணையரிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, அந்த விஷயத்தைப்பற்றி பேசியிருப்பார்.
இதை அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். அந்த அடிப்படையில்தான், எந்த வேலையாக இருந்தாலும், நான் உடனே பார்த்து, தினேஷிடம் சொல்லிருக்கிறேன். சம்பந்தப்பட்ட என்னுடைய உதவியாளர்களிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால், அந்த அதிகாரியை நானே தொலைப்பேசியில் தொடர்பு கொள்வேன்.
உதாரணமா சுற்றுப்பயணம் செய்யும்போது பெட்டிஷன் கொடுப்பார்கள். அதை வாங்கிப் பார்ப்பேன். சில பெட்டிஷன் பெரிய ‘ஸ்கீமாக’ இருக்கும். நீதிமன்றப் பிரச்சினை அல்லது காவல் நிலையப் பிரச்சினைகள் இருக்கும். சில பெட்டிஷன், படித்துவிட்டு, வேலையில்லாமல் இருக்கின்ற, பாதிக்கப்பட்ட பெண்ணாக இருக்கும். அந்தப் பெட்டிஷனைப் பார்த்தவுடனே, அங்கே இருக்கின்ற மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அதைக் கொடுத்து, இந்த மனுவைப் பாருங்கள் என்பேன். உடனே மாவட்ட ஆட்சியர் , நான் நிகழ்ச்சி முடிந்து போவதற்குள், அந்தப் பெண்ணுக்கு வேலை கொடுத்தாகிவிட்டது; அல்லது வீடு கொடுத்தாகிவிட்டது என்று சொல்வார். அவர்களுடைய தொலைப்பேசி எண்ணைக் கேட்டு வாங்கி, அவர்களைத் தொடர்பு கொண்டு பேசுவேன். அல்லது அந்தப் பக்கம் செல்லும்போது, அவர்களை நேரில் சென்று பார்ப்பேன். அப்படியே பழகிவிட்டேன்; தொடர்ந்து அதுபோன்றே செயல்பட்டு வருகிறேன்.
இந்தத் தேர்தலில்
மிக முக்கியமாக பேசு பொருள் என்ன?
மிக முக்கியமாக பேசு பொருள் என்ன?
கேள்வி: இந்தத் தேர்தலினுடைய ஒரு முக்கியமான பேசு பொருள், நீங்கள் பிஜேபிக்கு எதிராக பேசுகிற ஒன்று. குறிப்பாக பிரதமர் மோடி, உள்துறை அமித் ஷா போன்றவர்களைப்பற்றி பேசும்போது, கடுமையாக விமர்சனம் செய்கிறீர்கள். தமிழ்நாட்டை வஞ்சிக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். ஒரு முதலமைச்சராக, உங்களை மிகவும் பாதித்த விஷயம் எது?
பதில்: பள்ளி குழந்தைகள், அவர்கள் படிப்பதற்காக ஒன்றிய அரசு கொடுக்கின்ற நிதி – ஹிந்தியைக் கற்றுக் கொண்டால்தான், அந்த நிதியைக் கொடுப்போம் என்று சொன்னார்கள் பாருங்கள், அது என்னை மிகவும் பாதித்த விஷயம். ஏனென்றால், படிக்கின்ற பிள்ளைகளுக்கு நிதி தருகின்ற எத்தனையோ அரசு, ஒன்றியத்தில் இருந்திருக்கிறது. அவர்கள் எல்லாம், ஹிந்தியைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள் என்று கட்டாயப்படுத்துவார்களே தவிர, இப்பொழுது உள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசு போன்று நிதியை நிறுத்தியது கிடையாது.
கேள்வி: ஹிந்தியைத் திணிக்க முயற்சி செய்வார்கள்?
பதில்: திணிக்க முயற்சி செய்வார்கள். ஆனால், இப்போது உள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசு நிதியே கொடுக்க மாட்டேன் என்று சொன்னதுதான் என்னை மிகவும் பாதித்தது.
கேள்வி: நாகரிக அரசியல் செய்கிறீர்கள் நீங்கள் என்று உங்கள்மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளதே?
பதில்: நாகரிக அரசியல் செய்வதைக் குற்றச்சாட்டு என்று சொன்னால், அதைத் தொடர்ந்து நான் செய்வேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், தலைவர் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செய்துவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்தபொழுது நான் சொன்ன முதல் வார்த்தை என்னவென்றால், ‘‘எனக்கு வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடையவேண்டும்; எனக்கு வாக்கு அளிக்கத் தவறியவர்கள், ‘‘இவருக்கு வாக்களிக்கமால் விட்டுவிட்டோமே’’ என்று வருந்தவேண்டும்’’ என்று சொன்னேன். அதைத்தான் நான் பெருமையாக நினைக்கிறேன்.
கேள்வி: பொதுவாக பல அரசியல்வாதிகளுக்கு, அதிகாரம் கைக்கு வந்தவுடன், அந்த அதிகாரத்தைத் தங்களை வளர்த்துக் கொள்ள பயன்படுத்துவார்கள். அல்லது தங்களுடைய எதிரிகளை ஒழிப்பதற்கு அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவார்கள். ஆனால், நீங்கள் அப்படி இல்லை என்று சொல்கிறீர்கள். அந்தப் பண்பு உங்களுக்கு எப்படி வந்தது?
பதில்: அது என்னுடைய அப்பாவிடம் இருந்து வந்தது. அதெல்லாம் நல்ல பண்புதானே!
தொகுதி மறுவரையறை சட்டத்தை
எதிர்ப்பது ஏன்?
எதிர்ப்பது ஏன்?
கேள்வி: தொகுதி மறு வரையறை சட்டம் தோல்வி அடைந்திருக்கிறது. இதற்கு எதிராக முதலில் ஒரு போர்க்கொடி உயர்த்தியது தமிழ்நாடுதான். நீங்கள்தான் ‘ஒரு பைனல் வார்னிங்’ என்று சொன்னீர்கள்.. அந்த மசோதாவின் நகலை தீ வைத்து எரிக்கவும் செய்தீர்கள். ஒரு பெரிய கிளர்ச்சி வெடிக்கும் என்றும் அறிவித்தீர்கள். அந்த சட்ட மசோதா தோல்வி அடைந்தவுடன், அதைக் கொண்டாடவும் செய்தீர்கள். பட்டாசு வெடித்து இந்தப் போராட்டத்தை பெரிதாக செய்யவேண்டும் எ்னறு ஏன் நினைத்தீர்கள். இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கும் என்று நினைத்தீர்களா, இந்தக் கிளர்ச்சியை அறிவித்தபொழுது?
பதில்: இந்தப் போராட்ட நாளன்று நான் கருப்புச் சட்டை அணிந்தேன். தி.மு.க. தோழர்கள், தோழமைக் கட்சிக்காரர்களும் கருப்புச் சட்டை அணிந்தார்கள். அன்றைக்கு நான் நாமக்கல்லில் இருந்தேன். அங்கே இயக்கத் தோழரின் வீட்டின் அருகே கருப்புக் கொடி ஏற்றி வைத்து, அந்த மசோதாவின் நகலை தீ வைத்து எரித்தேன். அந்தத் தீ தமிழ்நாடு முழுவதும் நன்றாகப் பற்றிக் கொண்டது. அன்று மாலை செய்தி வந்தது, அந்த மசோதா தோற்றுப் போய்விட்டது என்று. ‘‘தமிழ்நாட்டின் உரிமை பாதுகாக்கப்பட்டு இருக்கிறது’’ என்பதை நினைத்து மகிழ்ச்சியடைந்தேன்.
கேள்வி: இந்தக் கிளர்ச்சி அறிவித்தபொழுது, இந்தியா முழுவதும் உள்ள எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றுபடுவார்கள், இதைத் தடுத்து நிறுத்துவதற்கு முன் வருவார்கள் என்று எதிர்பார்த்தீர்களா? மோடி அரசு தோல்வியைச் சந்திக்கும், அந்த மசோதா தோல்வியடையும் என்று நினைத்தீர்களா?
பதில்: அது என்ன நிலை வருதோ, இல்லையோ! தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் நாங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதாக முடிவு செய்தோம். இது சம்பந்தமாக ராகுல் காந்தியிடம் பேசினேன். அன்னை சோனியா காந்தியிடம் பேசினேன். காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. கார்கேவிடம் பேசினேன். அதுமட்டும் இல்லாமல், அகிலேஷிடம் பேசினேன். மம்தா அவர்களிடம் பேசினேன். தெலங்கானா முதலமைச்சரிடம் பேசினேன். கேரளா முதலமைச்சரிடம் பேசினேன். எல்லோரிடமும் பேசி ஒருங்கிணைத்தோம். அதுமட்டும் இல்லாமல், எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தொடர்பு கொண்டு, அது ஒரு லாபியைச் செய்தோம்.
அதனால், மோடியைப் பொறுத்தவரைக்கும் இதில் பெரிய தோல்வி. எங்களைப் பொறுத்தவரைக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் நாங்கள்.
தொகுதி மறுவரையறை பிரச்சினையில் எந்தவித ஆலோசனைகளையும்
பிரதமர் நடத்தாது பற்றி…
பிரதமர் நடத்தாது பற்றி…
கேள்வி: பொதுவாக, பிரதமருக்குக் கடிதம் எழுதினால், அவரிடம் இருந்து பதில் வருவது, நேரம் கொடுப்பது; முக்கியமான ஒரு பிரச்சினை என்றால், ஆலோசனை செய்யலாம் வாருங்கள் என்று முதலமைச்சர்களை அழைப்பது ஒரு மரபாக இருக்கும். இந்தப் பிரச்சினையில், அது மாதிரியான எந்த ஆலோசனையும் நடக்கவில்லையா?
பதில்: திமுக மட்டும் இல்லை; எந்த மாநிலத்தின் முதலமைச்சரிடமும் பேசவில்லை. எந்தக் கட்சித் தலைவரிடமும் பேசவில்லை. அதுகுறித்த எந்த ஆலோசனையும் கிடையாது. இது எவ்வளவு பெரிய விஷம் – அதைப்பற்றி ஆலோசனை செய்யாமல், திடீரென்று அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, ஒரு பெரிய பெரிய சர்வாதிகாரமாக நடந்துகொண்டார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
கேள்வி: பிஜேபி இதில் முன் வைக்கிற ஒரு விமர்சனம், பெண்களுக்கு இட ஒதுக்கீடு தருவதற்கு நாங்கள் சட்டம் கொண்டு வந்தோம். திமுக, காங்கிரஸ், இந்தியாவில் இருக்கிற எல்லா எதிர்க்கட்சிகளும், பெண்கள் முன்னேறுவதை விரும்பவில்லை. அதனால், அந்தச் சட்டத்தை எதிர்த்துத் தோற்கடித்துவிட்டார்கள் என்று ஒரு பரப்புரையை செய்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டிற்கு உங்கள் பதில் என்ன?
பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு – இதில் உள்ள பிரச்சினை என்ன?
பதில்: பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்பதை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, 2023 ஆம் ஆண்டில் 33% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று சொல்லி, அன்றைக்கே கொண்டு வந்தாயிற்று. அப்பொழுதே அதை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கவேண்டும். ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளைக் கடத்திவிட்டார்கள்.
அதை எல்லாருமே ஆதரித்தோம். அந்தப் பெண்கள் இட ஒதுக்கீட்டை எல்லா கட்சியும் ஆதரித்தது.. திமுகவும் மனப்பூர்வமாக ஆதரித்தது. ஏற்கெனவே தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு மட்டும் இல்லை, 50% இட ஒதுக்கீட்டினை மாநகராட்சிகளில் கொடுத்திருக்கிறோம். நகராட்சியில் கொடுத்திருக்கிறோம். 50 சதவிகிதத்திற்கும் மேலே தமிழ்நாட்டில் பெண் மேயர்கள் இருக்கிறார்கள். ஒன்றிய பா.ஜ.க. அரசு, தொகுதி மறுவரையைக் கொண்டு வருவதற்காக, ஒரு முகமூடியைத் தயார் செய்து, அந்த முகமூடியாகத்தான் பெண்கள் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தினார்களே தவிர, வேறு ஒன்றும் இல்லை.
கேள்வி: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில், கடந்த 10, 12 ஆண்டுகளாக எந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாலும், நரேந்திர மோடி அரசு கொண்டு வந்தால், அதை நிறைவேற்றிவிடுவார்கள். அது 370 ஆக இருக்கலாம்; காஷ்மீராக இருக்கலாம். சர்ச்சைக்குரிய எந்த மசோதாவாக இருந்தாலும், அவர்களுக்கு இருக்கும் மெஜாரிட்டியால் அதை நிறைவேற்றி விடுவார்கள். முதல் முறையாக ஒரு பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறார் மோடி. இதற்கு அரசியல் முக்கியத்துவம் என்ன?
பதில்: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைதான், இதனுடைய வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது. வட இந்தியா – தென்னிந்தியா என்று சொல்லிப் பிரிக்கப் பார்த்தார்கள். ஆனால், இந்தப் பிரச்சினையில், எல்லாரும் ஒற்றுமையாக இருந்து, அந்த வேறுபாடு பார்க்காமல், ஒத்துமையாக இருந்ததினால்தான் இதில் வெற்றி அடைந்திருக்கிறோம்.
இதில், உத்தரப்பிரதேசத்திற்கு அதிகமான தொகுதி கிடைக்கிறது என்று அகிலேஷ் ஏமாந்து போய்விட வில்லை. அதில் உள்ள சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு, அவரும் அந்த மசோதவைக் கடுமையாக எதிர்த்தார். ஆனால், இங்கே இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி, ‘சப்போர்ட்’ செய்தார். அமித்ஷா சொல்வதுதான் சரி; அதைத்தான் கேட்கவேண்டும் என்கிற மாதிரி அவர் ஒரு பிரச்சாரம் செய்தார்.
ஆக, மோடியைப் பொறுத்தவரையில், இது அவருக்குத் தோல்வி; எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரைக்கும் இது பெரிய துரோகம்.
நீங்கள் சந்தித்த தலைவர்கள் –
பார்த்த பிம்பங்கள் பற்றி…
பார்த்த பிம்பங்கள் பற்றி…
கேள்வி: மிகத் தீவிரமான அரசியலைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அதற்கிடையில், நீங்கள் சந்தித்த தலைவர்கள், நீங்கள் பார்க்கின்ற பிரபலங்கள், அவர்களைப்பற்றி உங்கள் எண்ணம் என்னவென்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். ஒரு வரியில் சொன்னால் போதும்?
பிரதமர் மோடி!
பதில்: பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எதையும் செய்யாத ஒரே பிரதமர்.
கேள்வி: சோனியா காந்தி?
பதில்: சோனியா காந்தி, எல்லோரையும் அரவணைத்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கக்கூடியவர்.
கேள்வி: ராகுல் காந்தி?
பதில்: நம்பிக்கை நட்சத்திரம்; ஒரு சிறந்த போராளி!
கேள்வி: எடப்பாடி பழனிசாமி?
பதில்: எடப்பாடி பழனிசாமி, தமிழர்களுக்கான உரிமையை இதுவரை கேட்காத ஒரு தமிழர்.
கேள்வி: சீமான்?
பதில்: சீமான், ஒரு நல்ல பேச்சாளர்.
கேள்வி: விஜய்?
பதில்: ஒரு நல்ல நடிகர்.
கேள்வி: ரஜினிகாந்த்?
பதில்: என்றென்றும் சூப்பர் ஸ்டார். நான் அடிக்கடி பேசுகின்ற ஒரு நல்ல நண்பர்.
கேள்வி: கமல்ஹாசன்?
பதில்: உள்ளூரை பேசுகின்ற உலக நாயகன்.
கேள்வி: பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தால், என்ன கேட்பீர்கள்?
பதில்: எய்ம்சை சீக்கிரம் கட்டி, திறப்பதற்கு வாருங்கள் என்று கேட்பேன். வெறுப்பில்லாத ஓர் அன்பான இந்தியாவை உருவாக்குங்கள் என்று கேட்பேன்.
மக்கள் ஏன் உங்களுக்கு
ஓட்டுப் போட வேண்டும்?
ஓட்டுப் போட வேண்டும்?
கேள்வி: இந்தத் தேர்தல் பரப்புரையில் ஒலிக்கிற இன்னொரு சொல், ‘‘மாற்றம்’’ அதற்கு உங்கள் பதில்?
பதில்: தேர்தலுக்குத் தேர்தல் சொல்லக்கூடிய வார்த்தைதான் இது. மாற்றம் என்பது முன்னேற்றமாக அமையவேண்டும். பின்னோக்கி செல்லக்கூடாது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு, எல்லாத் துறைகளிலேயும் பெரிய பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்து, பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறோம்.
கல்வித்துறையில், மருத்துவத் துறையில், பொருளாதாரத் துறையில், தொழில் துறையில் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாத் துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்திருக்கிறோம். அப்படிப்பட்ட மாற்றம்தான் தேவை நாட்டுக்கு. எங்களைத் தவிர, யார் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்?
கேள்வி: நிறைவாக ஒரு கேள்வி! மக்கள் ஏன் உங்களுக்கு ஓட்டுப் போட வேண்டும்? ‘‘மீண்டும் ஏன் ஸ்டாலின்?’’
பதில்: நான் பொறுப்புக்கு வந்து, கடந்த அய்ந்து ஆண்டுகளில், என்னென்ன வாக்குறுதிகளைக் கொடுத்தேனோ, அதையெல்லாம் முடிந்த வரைக்கும் செய்து முடித்துவிட்டேன். அதில் எனக்கு முழுத் திருப்தி. இருந்தாலும், கட்டமைப்பை மிக உறுதியாகக் கட்டிவிட்டோம். இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது; அதையும் செய்வோம். செய்யத்தான் போகிறோம், அது உறுதி! அதற்காகத்தான் இந்த ஸ்டாலின் உங்களுக்கு மீண்டும் வேண்டும்!
– இவ்வாறு தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சன் நியூஸ் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார்.

