தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்:
மீண்டும் ‘திராவிட மாடல்’ – மு.க.ஸ்டாலின் ஆட்சியே!
தஞ்சை, ஏப்.22 ‘‘மீண்டும் ‘திராவிட மாடல்’ – மு.க.ஸ்டாலின் ஆட்சியே’’ என்று தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்றார் தஞ்சையில் தி.மு.க. வேட்பாளர் சண்.ராமநாதனுக்கு வாக்குச் சேகரித்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தஞ்சையில் தி.மு.க. வேட்பாளர் சண்.ராமநாதனை ஆதரித்துத் தமிழர் தலைவர் ஆசிரியர் தேர்தல் பரப்புரை
நேற்று (21.4.2026) மாலை தஞ்சை தொகுதி சட்டமன்ற தி.மு.க. வேட்பாளர் சண்.ராமநாதனை ஆதரித்து, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பரப்புரையாற்றினார்.
அவரது தேர்தல் பரப்புரை வருமாறு:
பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய தஞ்சை வாழ் வாக்காளப் பெருமக்களே! எப்போதுமே தேர்தல்க ளில் இறுதி உரையாக, கடைசி உரையாக தஞ்சை மாநகரத்தில் என்னுடைய உரைதான் இருக்கும் என்பது தஞ்சையிலே நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதனுடைய தொடர்ச்சியாகத்தான் சென்ற முறை கூட நாடாளுமன்றத் தேர்தலில் நம்முடைய முரசொலி அவர்களுக்காகத் தேர்தல் பரப்புரையில் இங்கு உரையாற்றினேன்.
இந்தக் கடும் வெயில், கோடை வெப்பம்; அதை உணர்ந்துதான் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தாய்மார்களுக்கு வருகிற உரிமைத் தொகையில் கூட ரூ.2000அய் அதிகப்படுத்தி கோடை வெப்பத்தைச் சமாளிக்க வேண்டும் என்று அவர்களுக்கு வழங்கினார்.
இந்தியா மட்டுமல்ல, இன்றைக்கு உலகமே ஆச்சரியப்படுகிறது!
நம்முடைய தஞ்சை சட்டமன்றத் தொகுதியினுடைய வேட்பாளர் அருமைத்தோழர் மேயர் சண். இராமநாதன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலே வாக்குக் கேட்டுத்தான் இங்கு வந்துள்ளோம்! மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர், நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சரைப் பார்த்து, இந்தியா மட்டு மல்ல, உலகமே இன்றைக்கு ‘இப்படி ஒரு தலைவரா?’ என்று ஆச்சரியப்படுகிறது! ‘இதோ ஒரு தலைவன் வருகிறான்’ என்று பாராட்டிப் பாடுகின்ற அளவிற்கு, பாட்டுடைத் தலைவனாக, ஆட்சித் தலைவனாக ஆகி பெருமை சேர்க்கக்கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால், நிறுத்தப்பட்டு இருக்கின்ற வேட்பாளர்தான் அருமைத் தோழர் சண்.இராமநாதன் அவர்கள்!

நிச்சயமாகத் தாய்மார்களே, உங்களுக்குத் தெரியும். இந்தக் கூட்டத்திற்கு, அய்ந்து மணி வரையில்தான் அனுமதி! இப்பொழுது என்னுடைய கடிகாரத்தில் 4.15 மணி ஆகிறது. தேர்தல் ஆணையத்தின் கடிகாரமும், நம்முடைய கடிகாரமும் ஒரே நேரத்தைக் காட்டும் என்று சொல்ல முடியாது. அதனால், மிகக் குறைவான நேரம்தான் இருக்கிறது. குறைவான நேரம் என்றாலும், இங்கே நீங்கள் எல்லாம் தயாராகிவிட்டீர்கள்! இங்கே மட்டுமல்ல, நான் தென்கோடியில் இருந்து பரப்புரை செய்துகொண்டு வருகிறேன்; நாங்கள் சென்னைவாசியாக இருந்தாலும், எல்லா தொகுதிகளுக்கும் சென்றுவிட்டு, தஞ்சாவூர்காரராகத்தான் எங்களை ஆக்கிக் கொண்டி ருக்கிறோம்; டெல்டாக்காரராகத்தான் ஆக்கிக் கொண்டி ருக்கிறோம். விவசாயிகளோடுதான் இருக்கிறோம். எங்களுடைய உறவுகள் எங்கே இருக்கிறார்கள் என்றால், இங்கே இருக்கிறார்கள்; தாய்மார்கள் இருக்கிறார்கள்; சகோதரிகள் இருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய வாய்ப்பினாலே இங்கு வந்திருக்கிறோம். உங்களிடத்தில் அதிகம் பேச வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எல்லாம் முடிவு செய்துவிட்டீர்கள். இங்கே இருக்கிற மக்கள் மட்டுமல்ல, வீட்டில் இருக்கின்ற தாய்மார்கள் உட்பட அனைவரும் முடிவு செய்துவிட்டார்கள்.
அத்தகைய வாய்ப்பைப் பெற்றிருக்கின்ற நேரத்தில், இந்த அருமையான பிரச்சாரக் கூட்டத்தை நடத்துகின்ற மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் அவர்களே, வரவேற்புரையாற்றிய தமிழ்ச்செல்வன் அவர்களே, மாவட்டக் காப்பாளர் அய்யனார் அவர்களே, மாவட்டச் செயலாளர் அருணகிரி அவர்களே, மாவட்ட துணைத் தலைவர் நரேந்திரன் அவர்களே, மாநகரச் செயலாளர் வீரகுமார் அவர்களே, பெருமைக்குரிய நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி அவர்களே, அதைவிட மிகச் சிறப்பாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து, இந்தத் தஞ்சைப் பகுதியிலே சரித்திர சாதனைகளைச் செய்திருக்கக்கூடிய நம்முடைய அன்பிற்குரிய சகோதரர் டி.ஏ.ஜி.நீலமேகம் அவர்களே, துணை மேயர் அருமை டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே, நண்பர்களே, ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார் அவர்களே, இர.குணசேகரன் அவர்களே, கூட்டணிக் கட்சித் தோழர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
அருள் கூர்ந்து என்னைப் பாருங்கள்; இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையிலே, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமையில் அமைந்திருக்கிற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்பது வெற்றிக் கூட்டணியாகும். நாங்கள் மக்களைச் சந்திக்கிறோம். மக்கள் இவ்வளவு ஈர்ப்போடு வந்திருக்கிறீர்கள்; நான் 17 சட்டமன்றத் தேர்தல்களைப் பார்த்தவன்; 18 நாடாளுமன்றத் தேர்தலைப் பார்த்தவன். இந்தத் தேர்தல்கள் எல்லாம் எப்படி இருந்தன என்பதைப் பதிவு செய்தவன். இந்தத் தேர்தலில், தாய்மார்களுடைய உற்சாகத்திற்கு அளவே இல்லை. ஆண்களை விட தாய்மார்கள்தான் முன்னணியில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் முடிவு செய்துவிட்டார்கள். யாரும் அவர்களின் எண்ணங்களை மாற்ற முடியாது; அவர்களை யாரும் ஏமாற்றவும் முடியாது. அதற்குக் காரணம் என்ன? ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைத் திட்டங்கள்தான்! அவற்றைப்பற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியும் என்பதால், விரிவாக சொல்ல வேண்டியதில்லை.
நீங்கள் அனுபவிக்கின்ற ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’’ மூலமாக, ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதம் ஒன்றுக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டது. மே 4 ஆம் தேதிக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் அவர்கள் கோட்டைக்குப் போகப் போகிறார். ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் மீண்டும் வரப்போகிறது. இந்த ஆட்சி தொடருகின்றபோது, தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டதுபோல, உங்களுக்கெல்லாம் மாதா மாதம் 2000 ரூபாய் கிடைக்கவிருக்கிறது. ‘‘நாங்கள் லட்சம் ரூபாய் கொடுப்போம்’’ என்று மற்றவர்கள் சொன்னால் கூட நீங்கள் அதை நம்பத் தயாராக இல்லை. ஏனென்றால், நிறைவேற்றுவதற்கு யாருக்கு வாய்ப்பு இருக்கிறதோ, அவர்கள் சொன்னால்தான், அதற்கு மரியாதை! மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்யக்கூடியவர்; சொன்ன தைச் செய்யக்கூடியவர் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்யக்கூடியவர்.
அப்படிப்பட்ட திட்டம்தான் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கான ‘‘காலைச் சிற்றுண்டித் திட்டம்’’ என்ற அனைவராலும் பாராட்டப்படக்கூடிய திட்டமாகும்.
தடுக்கிறவர்கள் வேண்டுமா? கொடுக்கிறவர்கள் வேண்டுமா?
‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது மக்களுக்குக் ‘கொடுக்கின்ற ஆட்சி’. மோடி ஆட்சி என்பது, சூழ்ச்சி செய்து, அதைத் ‘தடுக்கின்ற ஆட்சி’. தடுக்கிறவர்கள் வேண்டுமா? கொடுக்கிறவர்கள் வேண்டுமா? என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
மகளிர் உரிமைத் தொகையை எப்படியாவது தேர்தல் காலகட்டத்தில் முடக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளவிருந்த சதித் திட்டத்தைத் தெரிந்துகொண்ட நம்முடைய முதலமைச்சர் அவர்கள், அதை வெற்றிகரமாக முறியடித்தார். எப்படி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாரோ, அதுபோன்றே அந்த சதித்திட்டத்தை முறி யடித்தார்.
யாருக்கும் தெரியாது, தாய்மார்களுக்கும் தெரியாது; எதிரிகளுக்கும் தெரியாது. திடீரென்று ஒரு நாள் பொழுது விடிவதற்குள், உதய சூரியன் உதிப்பதற்கு முன்பே, உங்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் வந்தது? 5000 ரூபாய். அப்படி 5000 ரூபாய் வங்கிக் கணக்கில் வந்த உடனே மகளிர் எல்லாம் வியப்பில் ஆழ்ந்தனர். மூன்று மாதத்திற்குரிய மகளிர் உரிமைத் தொகை ரூ.3000–மும், கோடையின் கடும் வெப்பத்தைச் சமாளிக்க ரூ.2000–மும் சேர்த்து ஆக மொத்தம் ரூ.5000 ரூபாய் கொடுத்தார்.
‘திராவிட மாடல்’ என்பது ‘‘கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு மாடல்!’’
அது மட்டுமல்ல, அடுக்கடுக்கான திட்டங்கள் ‘திராவிட மாடல்’ ஆட்சியில்! ஏற்கெனவே உங்களுக்குத் தெரியும், ‘விடியல் பயணத் திட்டம்.’ இந்தத் திட்டத்தால், பேருந்துகளில் மகளிர் நிறைய பேர் பயணிக்கிறார்கள்; இதைப் பார்த்து மற்றவர்கள் காப்பி அடிக்கிறார்களே தவிர தவிர்க்க முடியாது. காப்பி அடிப்பவர்கள் என்றுகூட நான் சொல்ல மாட்டேன்; பின்பற்றவேண்டிய அளவிற்கு இருக்கிறார்கள். ‘திராவிட மாடல்’தான். அது வெற்றுக் காட்சி அல்ல; வெற்று இடம் இல்லை. ‘‘கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு மாடல்.’’
‘விடியல் பயணத் திட்டம்’, ‘காலை உணவுத் திட்டம்’ இந்தியாவில் இருக்கிற வேறு எந்த மாநிலத்திலாவது இதுபோன்ற திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்களா?
35 லட்சம் மாணவர்களுக்கு வாய்ப்பு!
காலை உணவுத் திட்டத்தால், பள்ளிப் பிள்ளைகள் எல்லாம் மகிழ்ச்சியாக, வரிசையாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். அந்த மகிழ்ச்சியில் இன்னொன்று, வெறும் வயிற்றுப் பசியை ஆற்றுகிறார்கள் என்று மட்டும் சொல்ல முடியாது. அதையும் தாண்டி, அப்படி அவர்கள் சாப்பிடும்போது, ஜாதி இல்லை, மதம் இல்லை. பிஞ்சு உள்ளங்களில், நாம் அனைவரும் ஒன்றே; ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதை அங்கே நம்முடைய முதலமைச்சர் நடைமுறைப்படுத்திக் காட்டியுள்ளார். அதுதான் மிகவும் முக்கியமானதாகும்.
அப்படிப்பட்ட திட்டமான அந்தக் காலை உணவுத் திட்டத்தை, விரிவுபடுத்த உள்ளார். வருகிற மே 4ஆம் தேதிக்குப் பிறகு ஆட்சிக் கோட்டையில் அவர் அமர்ந்த உடனே, முதல் கையெழுத்துப் போடுகிற கோப்பு எது? காலை உணவுத் திட்டம் என்பது 5ஆம் வகுப்பு வரையில் இருப்பதை, 8 ஆம் வகுப்பு வரையில் விரிவுபடுத்துகின்ற திட்டத்தில்தான் கையெழுத்திடவுள்ளார். இதனால், 35 லட்சம் மாணவர்களுக்கு வாய்ப்பு.
8000 ரூபாய் கூப்பன் வழங்கும் திட்டம்!
அடுத்தது, உங்களுக்குத் தெரியும்! ‘இல்லத்தரசி திட்டம்’ என்று 8000 ரூபாய் கூப்பன் வழங்கும் திட்டம். ஆட்சிக்கு வந்த உடனே, ஒரு கூப்பன் கொடுப்பார்கள். அந்தக் கூப்பனில், வீட்டிற்குத் தேவையான வாஷிங் மிஷின், மைக்ரோ ஓவன், பிரிட்ஜ் போன்ற பொருள்களை வாங்குவதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தாய்மார்களே, சகோதரிகளே, இதுவரையில் என்ன சொன்னார்கள்? ‘அடுப்பு ஊதுகிறப் பெண்களுக்குப் படிப்பதற்கு?’ என்று கேட்டார்கள். பெரியார்தான் கேட்டார், ‘‘ஏன் அவர்கள் அடுப்பூத வேண்டும்? படிக்காததினால்தானே! அந்தப் பெண்களைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புங்கள்; கல்லூரிக்கு அனுப்புங்கள்; பல்கலைக் கழகத்துக்கு அனுப்புங்கள்’’ என்று சொன்னார். பெரியார் வழிவந்த முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராவுடன், ஊதுகிற அடுப்பு வேண்டாம்; பட்டனைத் திருகியவுடன் எரிகின்ற எரிவாயு அடுப்பைக் கொடுத்தார். இப்பொழுது மகளிர் எல்லாம் புகையில்லாத அடுப்பில், ஊதுகின்ற வேலையில்லாத அடுப்பில் சமைக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், இப்பொழுது இருக்கின்ற மகளிருக்கு ஊதாங்குழல் என்றால் என்னவென்றே தெரியாது. அந்த அளவிற்கு கேஸ் ஸ்டவ் கொடுத்தார் கலைஞர் அவர்கள்.
ஆனால், மோடி ஆட்சியில், இப்பொழுது மீண்டும் பழைய அடுப்பைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள். அது மட்டுமல்ல, ஒன்றிய அரசினர் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ஏற்றாமல் இருக்கிறார்கள். ஏனென்றால், 23ஆம் தேதிக்கு ஒரே நாள்தான் இடைவெளி. நீங்கள் ஓட்டு போட்டவுடனே, ஒன்றிய அரசு எல்லாவற்றுக்கும் விலையேற்றப் போகிறது. வித்தைகளைக் காட்டப் போகிறது.
பெண் பிள்ளைகளுக்கு
ஆயிரம் ரூபாய் வழங்குகிற திட்டம்!
ஆனால், நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியில், மகளிருக்கு எவ்வளவு உரிமைகள்? புதுமைப்பெண் திட்டம். கல்லூரிக்குப் போகும் பெண் பிள்ளைகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குகிற திட்டம். ஏனென்றால், பெண்களைப் பள்ளிக் கல்வியோடு நிறுத்திவிடக் கூடாது; அவர்களை உயர்கல்வி கற்கக் கல்லூரிக்கு அனுப்ப வேண்டும். ‘நான் ஏழை, என்னிடம் வசதி இல்லையே, என்னால் எப்படிப் படிக்க முடியும்?’ என்று பிள்ளைகள் தயங்கக் கூடாது. கல்லூரிக்குச் சென்றால்தான் அவர்கள் மருத்துவர் போன்ற உயர்ந்த நிலைகளை அடைய முடியும். அவர்களின் முன்னேற்றத்திற்கு உயர்கல்வியே அடித்தளம்.
இதோ உங்கள் துணை மேயர் இருக்கிறார். ஒன்றும் பாரம்பரியமான பணக்காரக் குடும்பத்தைச் சார்ந்தவர் அல்ல; ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்துப் பெண்ணாக இருந்து, இன்று மிகுந்த ஆற்றல் கொண்ட ஒரு துணை மேயராக உயர்ந்திருக்கிறார். இதற்கு அவர் பெற்ற மருத்துவக் கல்விதான் மிக முக்கியக் காரணம்.
இதேபோன்று, அனைத்துத் துறைகளிலும் நம் பிள்ளைகள் முன்னேறி வர வேண்டும் என்பதற்காகத்தான் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் பல்வேறு வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக, ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்கள் மூலம் ஒவ்வொரு துறையிலும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அந்தச் சாதனைகளின் பட்டியலை முன்வைத்துத்தான், பெறப் போகின்ற வெற்றிகளைப் பற்றிப் பேசுகிறார்கள். இது நம்முடைய அணி.
தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள். இன்று தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி காலூன்ற முடியாத, காலூன்ற அனுமதிக்கக் கூடாத ஒரு கட்சியாக இருக்கிறது. இதை நாம் ஆழமாக எண்ணிப் பார்க்க வேண்டும். ஏனெனில், இது சாதாரணத் தாமரை அல்ல; மிகவும் ஆபத்தான ‘விஷத் தாமரை’.
தமிழ்நாட்டுக்கு பிஜேபி செய்தது என்ன?
பிரதமர் மோடியும், வடநாட்டு அமைச்சர்களும் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகிறார்களே, அவர்கள் தமிழ்நாட்டிற்குச் செய்த நன்மை என்ன? எந்தத் திட்டத்தைக் கொடுத்திருக்கிறார்கள்? மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மோடி அவர்களே வந்து அடிக்கல் நாட்டினார். ஆனால், பல ஆண்டுகள் ஆகியும் இன்று வரை பணிகள் முடிவடையவில்லை.
‘அவர்களால் வேதனை’தான் தமிழ்நாட்டிற்கு என்று சொல்லும் அளவிற்குச் சூழல் நிலவுகிறது. ‘நீட்’ தேர்வினால் நம் பிள்ளைகள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது உங்களுக்கே தெரியும். ‘அந்த நீட் தேர்வை நாங்களும்தான் எதிர்க்கிறோம்’ என்று கூறும் அ.தி.மு.க. நண்பர்களே… உங்கள் கட்சியின் தலைவர் இதற்கு இதுவரை பதில் சொல்லியிருக்கிறாரா? தி.மு.க. அணியினர் அதற்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
‘நீட்’டை ஒழிக்க
அதிமுக செய்தது என்ன?
‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து தொடர்பான கோப்பில்தான் முதல் கையெழுத்திடுவோம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினாரே, அதைச் செய்தாரா?’ என்று எதிர்க்கட்சியினர் கேட்கிறார்கள். அவர்களைப் பார்த்து நான் திரும்பிக் கேட்கிறேன், ‘சரி, அவர் முதல் கையெழுத்துப் போட்டார். ஆர்.என்.ரவி என்று ஓர் ஆளுநரை வைத்துக்கொண்டு, ஆர்.எஸ்.எஸ். அமைப்புத் தடுத்ததினால், ஆளுநர் அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருந்தார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பினார்கள். பின்னர் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடுத்ததினால், உள்துறை அமைச்சகத்திற்கும், குடியரசுத் தலைவருக்கும் அந்த மசோதா அனுப்பப்பட்டது. அவர்கள் அதைக் கட்டுப் போட்டு உட்கார வைத்துவிட்டார்கள். இதுதான் உண்மை! உண்மை நிலை இப்படி இருக்கும்போது, இதைக் கேட்பதற்கு வெட்கப்பட வேண்டாமா அ.தி.மு.க. அணியினர்?
நீட் தேர்வை ஒழிப்பதற்கு உங்கள் கொள்கையும் உண்மையாக இருந்தால், நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? கூட்டணிக்காக ஒப்பந்தம் போட்டீர்கள் அல்லவா, அப்பொழுது நீங்கள் ஒன்றிய பா.ஜ.க. அரசிடம், ‘‘தமிழ்நாட்டில் நீட் தேர்வை ஒழியுங்கள்’’ என்று சொல்லியிருந்தால், அதற்காக உங்களை நாங்கள் பாராட்டியிருப்போம்.
ஆனால், நீங்கள் என்ன செய்தீர்கள்? அவர்கள் என்ன சொன்னாலும், ‘‘டில்லி சரணம், டில்லி சரணம்’’ என்று பாடுகிறீர்கள். இந்தப் பக்கத்தில் பக்தர்கள் அய்யப்பா சரணம் பாடுகிறார்கள், அங்கே போனால் டில்லி சரணம் பாடுகின்ற அடிமைகளாக அ.தி.மு.க.வினர் இருக்கிறார்கள்.
ஆகவே, அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில், மிக முக்கியமாக டில்லி என்ன சொன்னாலும், அவர்களுக்கு அதுபற்றிக் கவலையில்லை. நம் மாநிலத்திலிருந்து ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி பணம் வாங்குகிறார்கள். மற்ற மற்ற வரிகள் வாங்குகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான வரிப் பணம் ஒன்றிய அரசுக்குப் போகிறது. ஆனால், நமக்கு அவர்கள் எவ்வளவு திருப்பிக் கொடுக்கிறார்கள்? ஒரு ரூபாய்க்கு 29 காசுதான் திருப்பிக் கொடுக்கிறார்கள்! நாம் அள்ளிக் கொடுக்கிறோம்; அவர்கள் கிள்ளிக் கூட கொடுப்பதில்லை. அவர்கள் இங்கே காலூன்ற வரலாமா? அது நியாயமா? ‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் வரக் கூடாது என்று பாஜகவினர் நினைக்கிறார்களே, அது நியாயமா? என்பதை தயவு செய்து நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
பண்பாட்டுப் பாதுகாப்பு
ஹிந்தி எதிர்ப்பு என்பது வெறும் மொழிக்காக அல்ல; ஹிந்தித் திணிப்பு ஒரு கலாச்சாரத் திணிப்பு – பண்பாட்டு அழிப்பு. தமிழ்ப் பண்பாட்டை அழிக்க வேண்டும் என்பதற்காக வந்திருக்கக்கூடிய மிகப்பெரிய வேதனையாகும். அப்படிப்பட்ட அந்த மொழித் திணிப்பை, ‘‘நாங்களும்தான் ஹிந்தியை எதிர்க்கிறோம்’’ என்று அ.தி.மு.க.வினர் சொல்கிறார்களே, அது உண்மையா? ஒன்றிய பா.ஜ.க. அரசு, ‘‘மும்மொழித் திட்டத்தை ஏற்றால்தான் பள்ளிக் கல்விக்காக கொடுக்க வேண்டிய 2,152 கோடி ரூபாய் பணத்தைக் கொடுப்போம் என்று சொன்னது.
மற்றவர்களாக இருந்தால், அதற்கு ‘சலாம்’ போட்டி ருப்பார்கள். ‘அய்யா பணம் வந்தால் போதும்’ என்று நினைத்திருப்பார்கள்.
ஆனால், ‘‘2500 கோடி ரூபாய் அல்ல; 10,000 கோடி ரூபாய் கொடுத்தாலும், தமிழ்நாட்டில் நாங்கள் ஒருபோதும் தலை வணங்க மாட்டோம்’’ என்று மிகத் தெளிவாக முதுகெலும்போடு சொல்லக்கூடிய முதலமைச்சருக்குப் பெயர்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அதனால்தான், தமிழ்நாட்டைப் பார்த்து எல்லோரும் வியப்படைகிறார்கள். இப்படி ஒரு முதல மைச்சரா? என்று ஆச்சரியப்படுகிறார்கள்.
‘‘ஸ்டாலின் அவர்களே,
நீங்கள் தனிமனிதர் அல்ல; இந்தியாவே உங்கள் பின்னால் இருக்கிறது!
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே அவர்கள், 80 வயதுக்கு மேற்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்திருக்கிற ஓர் அரசியல் அனுபவசாலி. அப்பேர்ப்பட்டவர், சில நாள்களுக்கு முன் ஓசூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரை யாற்றும்போது மிகத் தெளிவாகச் சொன்னார், ‘‘ஸ்டாலின் அவர்களே, நீங்கள் தனிமனிதர் அல்ல; இந்தியாவே உங்கள் பின்னால் இருக்கிறது’’ என்று.
இதை யார் சொல்வது? அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சொல்கிறார். இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவர் இருக்கிறார்.
அதேபோல, நம்முடைய ராகுல் காந்தி அவர்கள், இளந்தலைவராக இருக்கிற அவர் என்ன சொன்னார் தெரியுமா? மோடியைப் பார்த்து நேருக்கு நேர் நாடாளு மன்றத்திலே, ‘‘மோடிஜி அவர்களே, நீங்கள் எத்தனை கஜகரணம் போட்டாலும், நூறு ஆண்டுகள் ஆனாலும் உங்களால் தமிழ்நாட்டைப் பிடிக்க முடியாது’’ என்று சொன்னாரே!
தமிழ்நாட்டைக் கப்பம் கட்டும் சிற்றரசு போன்று ஆக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஓர் அடிமை மாநிலமாக ஆக்க வேண்டும் என்பதற்காகத்தான், இங்கே சில அடிமைகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
எவ்வளவு துணிவிருந்தால், தஞ்சையில் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பார்கள்? மக்களே, பா.ஜ.க. டெபாசிட் கூட வாங்கக் கூடாது! கட்டிய பணத்தை அவர்கள் திருப்பி வாங்கக் கூடாது! இன்றைக்குத் தமிழ்நாட்டில் எங்கே பார்த்தாலும் ஸ்டாலின் அலை வீசுகிறது.
எந்த அலை வீசுகிறது? (மக்கள் திரும்பச் சொல்கி றார்கள்)
ஸ்டாலின் அலை வீசுகிறது.
காரணம் என்னவென்றால், அவருடைய உழைப்பு தான்.
தாய்க் கழகத்திற்கும்,
தாய்க் கழகம் நாங்கள்!
மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகத் தமிழ்நாட்டில் நுழைந்திருக்கின்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், மோடி கம்பெனி, அமித்ஷா போன்றவர்களைப் பார்த்து, இங்கே இருக்கக்கூடியவர்கள் ‘சலாம்’ போட்டுக் கொண்டி ருக்கிறார்கள்; அதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. நாங்கள் தாய்க் கழகத்திற்கும், தாய்க் கழகம். அப்படிப்பட்ட எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது. ஏனென்று கேட்டால், ஒரு காலத்தில், அ.தி.மு.க. என்ற கட்சியை எம்.ஜி.ஆர். அவர்கள் ஆரம்பித்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். ‘அண்ணா தி.மு.க. என்பது அண்ணாவழியில்தான் – அதே கொள்கைதான். அதில் மாற்றமில்லை’ என்று சொல்லி அவர் அந்தக் கட்சியைத் தொடங்கினார்.
எடப்பாடியாருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவிகூட கிடைக்கப் போவதில்லை
ஆனால், இப்பொழுது அந்தக் கட்சியின் நிலை என்ன? அந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று யாராவது நினைத்தால், அவர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும். முக்கியமாக அந்தக் கூட்டணிக்கு வாக்களிக்கலாமா? என்று யோசிக்க வேண்டும். ‘கூடா நட்பு கேடாய் முடியும்’ என்று சொல்வார்கள். மே 4 ஆம் தேதிக்குப் பிறகு, எடப்பாடியாருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவிகூட கிடைக்கப் போவதில்லை.
எடப்பாடியார்பற்றி, சசிகலா அம்மையார் என்ன சொல்கிறார் தெரியுமா? ‘தப்பித் தவறிகூட இவர் வெற்றி பெற்றுவிடக் கூடாது’ என்கிறார். அந்த அம்மையாரிடம் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்துதான், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியைப் பெற்றார். இதை நான் சொல்வதற்கு வருத்தப்படுகிறேன். எப்படி அவர் பதவிக்கு வந்தாலும், வந்த பிறகு அந்த அம்மையாரின் காலை வாரிவிட்டார்.
காலில் விழுகின்ற கலாச்சாரமே இருக்கக்கூடாது என்று பெரியார் சொன்னார். பிறகு காலைப் பிடித்து வாரிவிடுகின்ற நிலை வரும்.
டில்லிக்குச் சென்றிருந்த எம்.ஜி.ஆர். அவர்களின் கைகளைப் பிடித்து முறுக்கியவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் என்பதை மறந்துவிடக் கூடாது.
ஜெயலலிதா அம்மையார் அ.தி.மு.க. பொதுச்செய லாளராகி, முதலமைச்சரானவுடன், ‘‘உங்களோடு கூட்டணி வைக்கவேண்டும்’’ என்று பா.ஜ.க.வினர் கேட்டனர்.
அப்போது இந்த அம்மையார் என்ன சொன்னார்கள் தெரியுமா? ‘‘போயஸ் கார்டனுக்கு வாங்க’’ என்று சொன்னார். ஒருபோதும் அந்த அம்மையார் டில்லிக்குச் சென்றதில்லை! டில்லிதான் அவரது வீட்டுக்கு வந்தி ருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், “26 வகை கறியோடு, ஒரு வகையாக ‘கூட்டு’ வச்சிருக்கேன்; அதை சாப்பிட்டுவிட்டுப் போங்கள்” என்று சொன்னார்களே தவிர, மற்றபடி கூட்டணி என்று சொல்லவில்லை.
கடைசியாகக் கூட ‘‘மோடியா, லேடியா?’’ என்று அந்த அம்மையார் துணிச்சலாகக் கேட்டார். அப்படிப்பட்ட ஒரு கட்சியைக் கொண்டு போய், அமித்ஷாவிடம் அடகு வைத்துவிட்டார்கள்; அடகு வைத்ததோடு மட்டுமல்லாமல், தங்களை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். எப்படிப் பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் பாதிப் பாதியாகப் பிரித்து விற்கிறார்களோ, அதுபோலத்தான், அந்தக் கட்சியினர் பாதி பாதியாக ஆனார்கள். இப்பொழுது இருப்பது பழைய அ.தி.மு.க. இல்லை என்று தெளிவாகப் புரிந்து விட்டது. இந்த மகானுபாவர்கள் வந்த உடனே, ஒரு முழுத் தேங்காயை உடைத்தால், எப்படி அது சிதறு தேங்காயாக ஆகுமோ, அது மாதிரி, பலரும் அந்த இயக்கத்தை விட்டு, கட்சியை விட்டு வெளியே வரக்கூடிய நிலை ஏற்பட்டது.
ஆனால், தேர்தல் நேரத்தில், என்ன செய்கிறார்கள்? அபாண்டமான அவதூறுகளைப் பரப்பக்கூடிய வகையில் தன்னிலை தாழ்ந்து பேசுகிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்.
“முதலமைச்சர் அவர்கள், உயிரோடு இருந்திருக்க மாட்டார், போயிருப்பார்” என்றெல்லாம் சொல்லக்கூடிய அளவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பற்றித் தனி மனித விமர்சனம் செய்தார். தரம் தாழ்ந்து பேசினார். அது மட்டுமல்ல, துணை முதலமைச்சர் உதயநிதியைத் தாக்கி, தனிப்பட்ட முறையில் பேசுகிறார்கள். தேர்தல் ஆணையமும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
பா.ஜ.க. சொல்லுகிற குற்றச்சாட்டுகள் என்ன? பிரதமர் அவர்களோ, பொத்தாம் பொதுவில் அவிழ்த்துவிடுகிறார். அவர் என்ன சொல்கிறார்? ‘‘அய்யோ தமிழ்நாடு, போதைப் பொருள் மயமாக ஆகிவிட்டது’’ என்று. போதைப் பொருள் ஒழிப்பிற்காகவே தனிப் பிரிவு காவல் துறையில் இருக்கிறது. ஆனால், இந்தப் போதைப் பொருளுக்காகவே ‘குட்கா’ என்று ஒன்றைக் கொண்டு வந்து, அதன் இறக்குமதிக்கு லஞ்சம் கொடுத்தார்கள். அந்தப் பணத்தில் இருந்து, யார் யாருக்குக் கொடுக்கப்பட்டது என்று அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் எழுதி வைத்த டைரியைக் கைப்பற்றினார்கள். சி.பி.அய்.யும் வழக்குத் தொடுத்திருக்கிறது. அந்த வழக்கும் நிலுவையில் இருக்கிறது.
அதை மறக்கடிக்க கூடிய அளவிற்கு இன்றைக்குப் பிரச்சாரம் செய்கிறார்கள். அதுமட்டுமல்ல, போதைப் பொருள் எப்படி வருகிறது? என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும். போதைப் பொருள்கள் விமான நிலையங்கள் மூலம் – துறைமுகங்கள் மூலம் – சாலை மார்க்கமாக வருகின்றன.
அதிகமான போதைப் பொருள்கள் எந்த மாநி லத்தில் இருந்து வருகின்றன தெரியுமா? குஜராத் மாநிலத்திலிருந்து, மோடியினுடைய சொந்த மாநிலத்திலிருந்து வருகின்றன. பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்திலிருந்துதான்! தமிழ்நாட்டில் உற்பத்தியாகவில்லை. யாருடைய துறைமுகங்கள் வழியாக போதைப் பொருள் வருகின்றன தெரியுமா? அதானியிடம் இருக்கும் துறைமுகங்கள், டாட்டாவிடம் கொடுக்கப்பட்ட விமான நிலையங்கள் மூலமாகத்தான். அதே மாதிரி பொதுத்துறை நிறுவனங்கள் எல்லா வற்றையும் தனியார் உடைமையாக அடிமாட்டு விலைக்கோ அல்லது குத்தகைக்கோ விற்றுவிட்டார்கள். இதைத்தான் இவர்கள் செய்திருக்கிறார்களே தவிர, காங்கிரஸ் ஆட்சியிலே, நேரு காலத்திலே தொடங்கி நடந்த போது, எத்தனை எத்தனை திட்டங்கள்? எவ்வளவு ஆக்கப்பூர்வமான பொதுத்துறை நிறுவனங்கள்? அந்தப் பொதுத்துறை நிறுவனங்கள் இப்போது இல்லை. வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, அவரிடம் கொஞ்சம் நாணயம் இருந்தது. அவர் ‘‘பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்காகவே’’ ஒரு துணை அமைச்சரை நியமித்தார்.
ஆனால், இப்பொழுது உள்ள ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியினர், வெளிப்படையாக இல்லாமல், எல்லா வற்றையும் மறைத்து வைத்துச் செயல்படுகிறார்கள்.
போதைப் பொருள் பிரச்சினையில், ஒன்றிய பா.ஜ.க. அரசு கொடுத்த புள்ளி விவரங்களில், போதைப் பொருள்கள் நடமாட்டத்தில் அதிகம் உள்ள 10 மாநிலங்களில், ஏழு மாநிலங்களில் நடப்பது பா.ஜ.க. ஆட்சிதான். மறுக்க முடியுமா?
‘திராவிட மாடல்’ ஆட்சியின்மீது ஒரு குற்றச்சாட்டைச் சொல்கிறார்கள், மகளிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று! பொள்ளச்சி சம்பவம் யார் ஆட்சியில் நடைபெற்றது? என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
புள்ளிவரத்தோடு வந்திருக்கிற அறிக்கையில், (கட்சி சார்பானது அல்ல) அந்த அறிக்கையில் சொல்லுகிறார்கள், பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்களில், முதல் மூன்று இடங்களில், இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது.
சும்மா அடிச்சுவிடுவார் – ‘அரோகரா’ அண்ணாமலை அவர்கள்! பொய்யைத் தவிர இவர்கள் யாரும் துளி உண்மை பேசுவதில்லை. மாறாக, உண்மை கலப்பில்லாத பொய்யைப் பேசுவார்கள். அதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். உங்களுக்குத் தெரிந்ததையே சொல்கிறேன். திருக்காட்டுப்பள்ளிக்குப் பக்கத்தில் மைக்கேல் பட்டியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டார்.
உடனே அங்க போய், ‘‘ஆகா, மதம் மாறச் சொல்லி, கிறிஸ்தவர்கள் சொன்னார்கள்; அதனால்தான் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார்’’ என்று பெரிய ஆர்ப்பாட்டத்தினைச் செய்தார்கள். என்ன உண்மை என்பதைக் கண்டுபிடிக்க சிபிஅய் விசாரணை செய்யவேண்டும் என்று சொன்னார்கள். அதன்படியே சிபிஅய் விசாரணை நடந்தது. விசாரணையின் முடிவில், ‘மதமாற்றத்திற்கும், அந்தப் பெண்ணினுடைய தற்கொலைக்கும் சம்பந்தம் இல்லை’ என்று மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டது. அண்ணாமலை சொன்னது அப்பட்டமான பொய் என்பதைத் தெளிவாக நிரூபித்தார்கள்.
இந்தியாவின் தலைநகரான டில்லியில்தான், தற்போது பெண்கள் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஒரு காலத்தில், பெண்களுக்குப் போதிய துணிச்சல் இல்லாததாலும், சமூக அவமானங்களுக்குப் பயந்தும் தங்களுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்தும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கத் தயங்கினார்கள். ஆனால், இன்றைய சூழல் மாறியுள்ளது.
தற்போதைய கல்வி அறிவு, பொது அறிவு மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வு காரணமாக அவர்கள் துணிச்சலுடன் முன்வந்து புகார் அளிக்கிறார்கள். இந்த ஆட்சியின் கீழ் பெண்களுக்குக் கிடைத்துள்ள துணிச்சலால், ஒரு சம்பவம் நடந்தவுடன் உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்க ளின்படி, 2025 ஆம் ஆண்டில் மட்டும் டில்லியில் சுமார் 15,000 பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இது ஏதோ மேடைப் பேச்சிற்காகச் சொல்லப்படும் தகவல் அல்ல; அரசாங்கமே வெளியிட்ட புள்ளிவிவரம் இது.
காணாமல் போனவர்கள்: 15,000 பெண்கள்.
இதில் சுமார் 9,000 வழக்குகள் இன்னும் விசார ணையில் அல்லது நிலுவையில் உள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அப் பெண்கள் மீட்கப்படவில்லை.
அதே நேரத்திலே சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்று அண்ணாமலையில் இருந்து, அவரைக் காப்பியடித்துக் கொண்டு போகக்கூடிய நம்முடைய எடப்பாடியார் உட்பட, பிஜேபியினர் அளந்து விடு கிறார்கள். முதலமைச்சர்மீது குற்றம் சொல்வதற்கு வழி இல்லாததனால், பிரதமரே ஓடோடி வருகிறார். அவர் பொத்தாம் பொதுவில் ஏதேதோ பேசுகிறார்; ஆனால், அது மக்களிடம் எடுபடவில்லை.
நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அறிவார்ந்த விவரம் தெரிந்த பகுதி தஞ்சாவூர். இங்கே இருப்பவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. டில்லிதானே நாட்டின் தலைநகரம். அப்படிப்பட்ட டில்லி தலைநகரத்தில் என்ன நடந்தது? செங்கோட்டை மீதே தாக்குதல் நிகழ்வு நடந்தது. சட்டம் – ஒழுங்கு யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது என்றால், ஒன்றிய உள்துறை அமைச்சரான அமித்ஷா தலைமையில் தானே இருந்தது; இருக்கிறது. அந்த குண்டு வெடிப்புக்குப் பொறுப்பு யார்?
அதே மாதிரி, உங்களுக்கெல்லாம் தெரியும். ‘புல்டோசர் ஆட்சி’ என்று உச்சநீதிமன்றம் உத்தரப்பிர சேத்தைச் சொன்னது. ஏழை, எளிய மக்களின் வீடுகளை இடிக்கிறார்கள் என்று!
எடப்பாடியாருடைய ஆட்சியின் லட்சணம் என்ன? கொடநாடு கொலைகள் எப்போது நடந்தன? இதை நான் சொல்வதைவிட, சசிகலா அம்மையார் கேள்வி கேட்கிறார். அதைவிட இன்னும் மிக முக்கியமானது. தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்ததுபற்றி உங்களுக்கெல்லாம் தெரியும். அப்பொழுது முதல மைச்சராக இருந்த எடப்பாடியாரிடம், ‘‘துப்பாக்கி சூடு’’ பற்றி செய்தியாளர்கள் கேட்கிறார்கள்; உடனே எடப்பாடியார் சொல்கிறார், ‘‘ஆமாம், டிவியில் பார்த்துத் தெரிந்துகொண்டேன்’’ என்கிறார். இவர்தானா முத லமைச்சர்?!
திருப்புவனத்தைச் சேர்ந்த 27 வயதான அஜித் குமார் என்ற இளைஞர், ஒரு திருட்டு வழக்கு என்று விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது காவல்துறையினரின் சித்திர வதையால் உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. அந்நிகழ்விற்காக, அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியபோது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரிடம் தொலைபேசி வாயிலாகப் பேசினார். அப்போது அஜித் குமாரின் தாய் மாலதியிடம், “இதற்குச் சரியான பரிகாரம் தேடுவேன், அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று மிகப்பெரிய மனதோடு கூறினார். இந்த இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! இங்கே எப்படிப்பட்ட ஒரு நல்லாட்சி நடக்கிறது, மக்கள் மீது அக்கறை கொண்ட சூழல் நிலவுகிறது என்பதையெல்லாம் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அடுத்து தோழர்களே, தாய்மார்களே, நண்பர்களே… எங்கு பார்த்தாலும் ‘ஊழல், ஊழல், ஊழல்’ என்று ஊளையிடுகிறார்கள். நான் அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன், ஊழலைப் பற்றிப் பேசும் நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?
இன்று எதிர்க்கட்சிகளை மிரட்டித் தங்கள் அணிக்குக் கொண்டு வருவதற்காகவே ஒரு ‘திரிசூலத்தை’ ஏந்தியிருக்கிறார்கள். அந்தத் திரிசூலத்தின் மூன்று முனைகள் எவை தெரியுமா? ஒன்று வருமான வரித்துறை (IT), இன்னொன்று சிபிஅய் (CBI), மற்றொன்று அமலாக்கத்துறை (ED). இந்த மூன்றையும் காட்டித்தான் மற்றவர்களை மிரட்டுகிறார்கள்.
இப்போது அவர்களோடு கூட்டணியில் இருப்பவர்கள் எல்லாம் யார்? யாரை ஊழல்வாதிகள் என்று இவர்கள் வழக்குப் போட்டார்களோ, அவர்கள்தான் இன்று பிரதமர் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.
தற்போது சிதறு தேங்காயைப் போலப் பிரிந்து போய் அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளைப் பாருங்கள். அவர்கள் மீது வழக்குகள் இல்லையா?
ஒருவர்மீது சி.பி.அய். வழக்கு இருக்கிறது.
இன்னொருவர் மீது ‘டோக்கன்’ ஊழல் வழக்கு இருக்கிறது.
மற்றொருவர் மீது தேர்தல் ஆணையத்திற்கே லஞ்சம் கொடுத்ததாக வழக்கு இருக்கிறது.
இன்னும் ஒரு முக்கியப் புள்ளி, அவர் அமைச்சராக இருந்தபோது மருத்துவ உபகரணங்கள் (Medical Kits) வாங்கியதில் முறைகேடு செய்ததாக சி.பி.அய். வழக்கு இருக்கிறது.
இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இன்று பிரதமர் மோடியின் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்கள்!
இந்த யோக்கியர்கள்தான் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். சென்ற முறை நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு டில்லியில் இருந்து வந்தபோதும், ‘‘இதே பாட்டுப் பாடினார்கள்.’’ ஆனால், காரைக்குடி சிவகங்கையில் வேட்பாளராகப் பிரதமர் பக்கத்தில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். மக்கள் பணத்தை 500 கோடி ரூபாய் ‘சாப்பிட்டார்’ என்பதற்காக மயிலாப்பூர் பண்ட் பிரச்சினையில் இப்பொழுது கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார். பொதுவாக மக்களுக்குப் புரிகின்ற வார்த்தையில் சொல்லவேண்டுமானால், முதலில், பணத்தை எண்ணினார். இப்பொழுது கம்பியை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
அதுவும் பிரதமர் பக்கத்தில் அமர்ந்தவர் அவர்! எந்த முகத்தோடு தி.மு.க.வை பார்த்து ‘ஊழல், ஊழல்’ என்று இவர்கள் சொல்கிறார்கள்? தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் மீது அழி வழக்குத் தொடர்ந்தார்களே, அதில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்களா? உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன், பொன்முடிமீது வழக்குப் போட்டார்கள். அது ஒன்றும் இல்லை என்று ஆனது. அதுமட்டுமல்ல, 86 கோடி ரூபாயை அமலாக்கத் துறை என்ற பெயரால், ஜெகத்ரட்சகன் எம்.பி.யிடம் இருந்து எடுத்துக் கொண்டு போனார்கள்; அமலாக்கத் துறை சொன்னதில் உண்மை இல்லை என்று ஆனது.
ஆகவே, சரக்கு இல்லாமல், சும்மா ஏதோ பொத்தாம் பொதுவில் குற்றம் சுமத்துகிறார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்து விட்டது.
என்ன செய்தாலும் தமிழ்நாட்டைக் கைப்பற்ற முடியாது என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. இனிமேல் உங்களுடைய அந்தக் காவி அடுப்பு எரியாது; அதில் பருப்பு வேகாது.
இன்னொன்றை உங்களுக்குச் சொல்கிறேன். இது விவசாயப் பகுதி – ஒரு செய்தியை சொல்ல வேண்டும். நாம் எல்லோரும் விவசாயிகள் டெல்டாவில். அதற்காக நம்முடைய ஸ்டாலின் ஆட்சியில், திராவிட மாடல் ஆட்சியில்தான் நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு 2500 ரூபாய் ஊக்கத்தொகை கொடுத்தார்கள். அதை இப்பொழுது 2500 கோடி ரூபாயிலிருந்து, 3500 ரூபாயாக உயர்த்தித் தரப்படும் என்று இந்தத் தேர்தல் அறிக்கையில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சொல்லியிருக்கிறார்.
ஏற்கெனவே நான் சொன்னேன் பாருங்கள், கொடுக்கிற ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சி. அதைத் ‘தடுக்கிற ஆட்சி’ டில்லி ஆட்சி என்று – நான் சொன்னது ஒரு நிதர்சனமான, ஆதாரப்பூர்வமான உண்மை என்பதற்கு, ஜனவரி மாதத்தில், தமிழ்நாடு அரசுக்கு ஒரு கடிதம் வருகிறது டில்லியிலிருந்து. அது என்ன தெரியுமா? ‘விவசாயிகளுக்கு நீங்கள் ஊக்கத் தொகை கொடுப்பதினால், ஏராளமான நெல் உற்பத்தி ஆகிறது. அதை எப்படியாவது தடுக்க வேண்டும். ஆகவே, அதை நிறுத்துங்கள் என்று உங்களுக்கு அறிவுறுத்துகிறோம். உங்களுக்கு அறிவுரை மாதிரி சொல்கிறோம்’ என்று அந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. எப்படி இருக்கிறது பாருங்கள். ஆனால், நம்முடைய முதலமைச்சர் அப்படி செய்ய முடியாது என்று சொல்லிவிடுவார். ஆனால், இங்கே மோடி வரும்போது என்ன பேசுவார்?
‘‘வரப்புயர நீர் உயரும்; நீர் உயர, நெல் உயரும்’’ என்று பாட்டுப் பாடுவார்.
அது மட்டுமல்ல, தொகுதி மறுசீரமைப்பு என்று அவர்கள் சொல்வதில் மிகப்பெரிய சூழ்ச்சி அடங்கி யுள்ளது. அந்த மசோதாவை எதிர்த்துக் குரல் கொடுத்தது தென்மாநிலங்கள்தான். முதல் குரல் கொடுத்தவர் திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்கள்தான். தமிழ்நாட்டிற்கு அதனால் பாதிப்பு வரும் என்று சொன்னார்.
தொகுதி மறுசீரமைப்பு ஆபத்து!
எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடியார், அதனால் எந்தவித ஆபத்தும் வராது என்று சொன்னார். ஆனால், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்திலேயே ஒப்புக்கொண்டார் தமிழ்நாடு இதனால் பாதிக்கப்படும் என்று!
தொகுதி மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலமாக, ஹிந்தி பேசுகின்ற மாநிலங்கள், ஹிந்தி பேசாத மாநிலங்களாகப் பிரிக்கலாம் என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு நினைத்தது. அந்தத் திட்டத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து தோற்க டிக்கச் செய்தனர்.
என்ன செய்தாலும், தமிழ்நாட்டைப் பிடிக்க முடியவில்லை என்பதால், இந்த ஆட்சிக்குப் பெண்கள் எல்லாம் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதால், அவர்களை ஏமாற்றுவதற்காக 2023ஆம் ஆண்டு ஒரு திட்டத்தை 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவை, கொண்டு வந்தார்கள். ஆனால், இன்னும் அதை நடைமுறைப்படுத்தவில்லை. தொகுதி மறுசீரமைப்பு மசோதாவோடு, பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவையும் கொண்டு வந்து ஒரு முகமூடித் திட்டம் போல் செயல்படுத்தலாம் என்று நினைத்தார்கள். அவர்கள் நினைத்தது நடக்கவில்லை. உடனே, ‘‘பெண்கள் மசோதாவைத் தோற்கடித்துவிட்டார்கள் எதிர்க்கட்சியினர்’’ என்ற ஒரு பொய்யானப் பிரச்சாரத்தை மேற்கொள்ளலாம் என்று நினைத்தார்கள். அந்த முயற்சியும் எடுபடவில்லை! தி.மு.க. சார்பில், நாடாளுமன்றத்தில் பி.வில்சன் அவர்கள், தனி நபர் மசோதாவைக் கொண்டு வந்து, ‘பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வாருங்கள்’ என்றார்.
தமிழ்நாட்டில் வந்து கற்றுக்கொள்ளுங்கள்!
எங்களைப் பொறுத்தவரையில் மகளிருக்கு இட ஒதுக்கீட்டினைப் பற்றி நீங்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டாம். எங்களிடமிருந்து கற்றுக்கொண்டு போக வேண்டும். தமிழ்நாடு பெரியார் மண்; இந்தப் பெரியார் மண்தான் எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறது.
பெரியார் சொன்னார், பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று!
போராடாமலேயே, பெண்கள் கேட்காமலேயே இந்தியாவிலேயே முதன்முதலில் சட்டம் செய்த மாநிலம் தமிழ்நாடுதான். மிகப்பெரிய புரட்சி செய்த ஆட்சி மு.க.ஸ்டாலின் ஆட்சிதான். மேயர், துணை மேயர் நகர் மன்றத் தலைவர்கள் என்று உள்ளாட்சித் துறைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு அல்ல; 50 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினார். அப்படிப்பட்ட ஆட்சியின்மீதுதான் வேண்டுமென்றே ஓர் அவப்பெயரை உண்டாக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டு, தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் காலகட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவைக் கொண்டு வருவதற்காக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியது ஒன்றிய பா.ஜக. அரசு.
அதனைக் கண்டித்து, நம்முடைய திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு இறுதி எச்சரிக்கை அறிக்கை விடுத்தார். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொருவரும் கருப்புச் சட்டை அணிந்து, கருப்புக் கொடியேற்றி, அந்த மசோதாவின் நகலை தீ வைத்துக் கொளுத்துமாறும் வேண்டுகோள் விடுத்தார். அவரும், அன்றைக்குக் கருப்புச் சட்டை அணிந்து, கருப்புக் கொடி ஏற்றி, அந்த மசோதாவின் நகலைத் தீயிட்டுக் கொளுத்தினார். தமிழ்நாடு முழுவதும் அந்தத் தீ பற்றிக் கொண்டது. அந்த மசோதாவும் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.
ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கின்ற பெண்க ளுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டு சட்டத்திலும் ஒரு திருத்தம் செய்யவேண்டும். பிற்படுத்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு அதில் இட ஒதுக்கீடு இல்லை. அந்தத் திருத்தத்தை செய்துவிட்டு, அச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆகவே, எப்போதும் தமிழ்நாடு பெண்ணுரிமையில் முதலிடத்திலிருந்து, மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டும்.
தாய்மார்களே, பெரியோர்களே, உங்கள் எல்லோ ருக்கும் கடைசியாக ஒன்றைச் சொல்கிறேன். எனக்கு 93 வயதாகிறது. நாங்கள் தேர்தலில் நிற்காதவர்கள். ஒரு மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்பது அவருக்காக அல்ல; அல்லது சண்.ராமநாதன் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்பது அவருக்காக அல்ல. இந்தக் கட்சி எவ்வளவு தெளிவாக இருக்கிறது; கட்சிக் கட்டுப்பாடு உள்ள கட்சி என்பதற்கு அடையாளம், இவருக்காக யார் வேலை செய்கிறார்கள்? சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்ற நீலமேகம் வேலை செய்கிறார். வேறு யாராவது இருந்தால், வேறு ஒரு கட்சிக்கு ஓடிப் போயிருப்பார்கள். இது தி.மு.க.! கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு உள்ள ஓர் இயக்கம். பதவி முக்கியமல்ல, கொள்கை முக்கியம்.
எனவே, தாய்மார்களே, பெரியோர்களே, நண்பர்களே, உங்களுக்காக வந்திருக்கிறோம். முடிவு செய்யுங்கள் – 23ஆம் தேதி செல்லுங்கள்! வாக்குச் சாவடிக்குச் சென்று, சண்.ராமநாதனுக்கு ‘உதயசூரியன்’ என்கிற பொத்தானைக் கவனமாகப் பார்த்து அழுத்துங்கள். விரலை எடுத்துவிடாதீர்கள். அங்கே விளக்கு எரிகிறதா என்று பாருங்கள். அங்கே விளக்கு எரிந்தால், அங்கே மட்டும் விளக்கெரியாது; உங்கள் வீட்டில் விளக்கு எரியும்; நாட்டில் விளக்கு எரியும். வெற்றி உதயசூரியன் – மீண்டும் உதய சூரியன் – மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – மீண்டும் உங்களுக்கு எல்லாம் விடியல் வரும் – இருட்டுப் போகும். விடாதீர்கள், காவிக்கு வேலை இல்லை; சூரியனுக்குதான் வேலை. சூரியன் சுட்டெரிக்கக் கூடியதாக இருந்தாலும், அதுதான் நம்மை வாழவைக்க கூடியது என்று கூறி, வாய்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, மறவாதீர், மறவாதீர் – உதயசூரியனுக்கு வெற்றி வெற்றி என்று சொல்லக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தாருங்கள்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தேர்தல் பரப்புரையாற்றினார்.

