எதிர்க்கட்சியே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தி.மு.க. மிகப்பெரிய வெற்றியைப் பெறும்! நாடு முழுவதும் சுற்றிய அளவில் இதைச் சொல்லுகிறேன்!

4 Min Read

ஒரத்தநாடு, ஏப்.21 தமிழ்நாடு முழுவதும் சுற்றிப் பிரச்சாரம் செய்த அளவில் சொல்லுகிறேன், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி என்ற ஒன்றே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தி.மு.க. சட்டப் பேரவைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெறும்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

ஒரத்தநாட்டில் செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்

நேற்று (20.4.2026) தேர்தல் பரப்புரைக்காக ஒரத்தநாட்டிற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமறு:

அ.தி.மு.க.வைவிட, பா.ஜ.க.வைத்தான்
அதிகமாக எதிர்க்கிறார்களே?

செய்தியாளர்: தேர்தல் பிரச்சாரத்தின்போது, அ.தி.மு.க.வைவிட, பா.ஜ.க.வைத்தான் அதிகமாக எதிர்க்கிறார்கள்; அது அவசியமானதா?

தமிழர் தலைவர்: அதற்குக் காரணம் என்னவென்றால், முகமூடியைப் பற்றி கவலைப்படுவதைவிட, அதனுள் புகுந்திருக்கும் எதிரிகள் யார்? என்பதைப்பற்றித்தான் அதிகம் சொல்லவேண்டி இருக்கிறது.

எனவேதான், அ.தி.மு.க. என்பது வெளியில் தெரி கின்ற புறத் தோற்றம், கவர். அதுமட்டுமல்ல, அது அடமானம் போட்ட பொருள். ஆகவே, அடமானத்தை யார் வாங்கி இருக்கிறார்களோ, அவர்களை மக்கள் மத்தியில் வெளிக் கொண்டு வரவேண்டும் என்ப தற்காகத்தான் பா.ஜ.க.வைப்பற்றி அதிகமாகப் பேச வேண்டிய அவசியம் எல்லோருக்கும் இருக்கிறது.

பாம்புதான் மிக முக்கியமே தவிர,
பாம்பின் தோலைப்பற்றி கவலையில்லை!

அதுமட்டுமல்ல, பாம்புதான் மிக முக்கியமே தவிர, பாம்பின் தோலைப்பற்றி கவலையில்லை. மகுடியைப்பற்றிக் கவலையில்லை. அ.தி.மு.க.வும், தோழமைக் கட்சியினரும் வசமாக பா.ஜ.க. வலையில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள்.

எனவேதான், பாம்பினுடைய விஷப் பல் எங்கே இருக்கின்றது என்று பார்க்கிறோம். பாம்பின் தோலைப்பற்றி நாங்கள் கவலைப்படமாட்டோம். அதனால்தான், பா.ஜ.க. எதிர்ப்புப் பிரச்சாரத்தை அதிகம் செய்யவேண்டி இருக்கிறது.

நோயை குணப்படுத்தவேண்டும் என்றால், அந்தக் கிருமிகளை அழிக்கவேண்டும்; நோயின் புறத் தோற்றம் முக்கியமல்ல. ஆகவேதான், அந்தப் பணியை எல்லோரும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஏனென்றால், முழுக்க முழுக்க இந்தத் தேர்தலில் எப்படியாவது தமிழ்நாட்டை தங்கள் அடிமை நாடாக ஆக்கவேண்டும் என்பதற்காக எல்லாவிதமான முயற்சிகளையும் பா.ஜ.க.வினர் செய்துவிட்டார்கள். கடைசியாக ஒரு தந்திரத்தைக் கையாண்டார்கள். அதில், அவர்களுக்கு எதிர்விளைவுதான் ஏற்பட்டதே தவிர, வேறு கிடையாது.

அவர்களுக்கு எதிர்விளைவுதான் அதிகமாயிற்று!

தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டு வருவதற்காக, மகளிர் மசோதாவையும் சேர்த்துக் கொண்டு வந்தனர். அதன்மூலமாக அவர்களுக்கு எதிர்விளைவுதான் அதிகமாயிற்று.

வெடிகுண்டைத் தூக்கிக் கொண்டு ஓரிடத்தில் வைப்பதற்குச் செல்லும்போதே அக்குண்டு வெடித்தால், தூக்கிக் கொண்டு போனவருக்கு என்ன ஆபத்து ஏற்படுமோ, அந்த ஆபத்தை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதைத் திசை திருப்பவேண்டும் என்று பார்க்கிறார்கள். ஆகவேதான், எளிய மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நீண்ட காலமாக பா.ஜ.க. எதிர்ப்புப் பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருக்கின்றோம்.

இது காலத்தின் கட்டாயம்; அவசரம், அவசியம் என்பதால்!

234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற அளவிற்கு இருக்கிறது!

செய்தியாளர்: தி.மு.க. கூட்டணி எத்தனைத் தொகுதிகளில் வெற்றி பெறும்?

தமிழர் தலைவர்: இதுவரை 200 தொகுதிகளில்தான் தி.மு.க. வெற்றி பெறும் என்று இருந்த நிலை மாறி, இப்போது 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற அளவிற்கு இருக்கிறது. ஆனால், அந்த நிலை வரக்கூடாது.

ஏனென்று கேட்டால், எதிர்க்கட்சி என்று ஒன்று வேண்டும்!

தி.மு.க.வே எதிர்க்கட்சியை நியமிக்கக் கூடிய நிலை வந்தாலும் வரலாம். ஏனென்றால், மக்கள் அந்த அளவிற்குத் தெளிவாக இருக்கிறார்கள்.

குறிப்பாக, ஸ்டாலின் அவர்களுடைய ஆற்றல், தமிழ்நாட்டைத் தாண்டி, தென்மாநிலங்களைத் தாண்டி, டில்லிக்குப் போய் இருக்கக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறது.

ஆகவேதான், நடைபெறவிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

இதுவரை தி.மு.க. 184 இடங்களில் வெற்றி பெற்றது தான், கலைஞர் காலத்தில் செய்த சாதனை!

மக்களுடைய நாடியைப்
பிடித்துப் பார்த்துச் சொல்கிறோம்!

அந்தச் சாதனையை, மு.க.ஸ்டாலின் ஆட்சி முறி யடித்துக் காட்டி, அதைவிட அதிக இடங்களில் வெற்றி பெறுகின்ற அளவிற்கு வரும்.

இதை நாங்கள், ஆருடம் சொல்லவில்லை; எங்கள் ஆசையை சொல்லவில்லை. மக்களுடைய நாடியைப் பிடித்துப் பார்த்துச் சொல்கிறோம்.

மகளிர், இந்த அளவிற்கு உற்சாகத்தோடு கூட்டங்க ளைக் கேட்டது எப்போதும் கிடையாது.

ஆகவேதான், ஒரு பெரிய மாறுதல் என்பது வந்துள்ளது. மே 4 ஆம் தேதிக்குப் பிறகு, மீண்டும் ஸ்டாலின் ஆட்சி என்பது மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர் பதவிகூட நிச்சயமாக எடப்பாடியாருக்குக் கிடைக்காது.

வேண்டுமானால், டில்லிக்கு ஆளுநராகச் செல்ல லாம்; அதே பதவிக்கு மற்ற மாநிலங்களுக்குச் செல்லலாம். இனிமேல், அ.தி.மு.க. என்ற அமைப்பிற்கே எதிர்காலம் இல்லை என்ற அளவிற்குத்தான் இருக்கிறது. இதை எல்லோரும் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அதற்கு ஆதாரம்.

செய்தியாளர்: த.வெ.க. தலைவர் விஜய், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதால், அவருடைய அலை வீசும் என்று சொல்கிறார்களே?

அது வெறும் வாணவேடிக்கைதான்!

தமிழர் தலைவர்: அவருடைய அலையே மாறிப் போயிருக்கிறது. ஏனென்றால், அவர் தொடர்ந்து பிரச்சாரத்திற்கு  வரமாட்டார்; அவருடைய கட்சிக்குக் கொள்கை கிடையாது. வாணவேடிக்கை மிக அழகாக இருக்கும். அதுவே நிரந்தர ஒளியைத் தராது. அது வெறும் வாணவேடிக்கைதான்.

அவருக்காக எங்களுடைய நேரத்தைச் செல வழிப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை!!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *