நான் ஓர் அழிவு வேலைக்காரன்
இந்தச் சமுதாயம் பாழடைந்துபோன பழைய கட்டடம்; இடிந்தும் உடைந்தும் நொறுங்கிக் கிடக்கிறது. இதைக் கொத்துவேலை செய்தோ. மராமத்துப் பார்த்தோ குடியிருக்கத் தகுதியாக்க முடியாது. வெறும் சீர்திருத்தம் செய்வதால் பயனில்லை. மொத்தமாகத் தரையோடு தரையாக இடித்துக் கட்ட வேண்டும் என்று முடிவெடுத்த பெரியார் அறிவித்தார். ‘நான் ஓர் அழிவு வேலைக்காரன்’. மனிதனை அடிமையாக்கியதன் தொடக்கத்தை ஆராய்ந்தார். வறுமை நிலை ஒழிக்க வகுப்பு வாரி உரிமை; அறியாமை நீக்க வருணாசிரம விடுதலை என் அடிமை நிலை தொடங்கிய இடத்திலேயே தோண்டத் தொடங்கினார்.
மக்கள் தொகையில் 3% இருக்கும் பார்ப்பான் 97% கல்வி, அரசுப்பணி பெறுவதையும் 97% இருக்கும் தமிழர் 3% மட்டுமே பெறுவதையும் ஆதாரக் கணக்குகளுடன் அறிவித்தார் பெரியார், அரசின் உயர்நிலை அலு வலர்கள், காவல்துறைத் தலைவர்கள், நீதியரசர்களில் ஒருவர்கூடத் தமிழர் இல்லை என்பதை உணர வைத்தார். ஒரு குடும்பத்தின் முழுச் சொத்தையும் மக்களில் ஒருவனே அனுபவித்துக் கொண்டிருப்பதும், மற்றவர்கள் ஏமாற்றப்பட்டு ஏழ்மையில் தவிப்பதும் சரியா? பாகம் பிரி, பங்குவை உன் பங்கை மட்டும் நீ எடு: எங்கள் உரிமையை எம்மிடம் விடு எனப் பாகப்பிரிவினை கேட்கத் தொடங்கினார் பெரியார். நியாயம் பிறப்பதற்காகக் கலகத்தைப் பிறப்பித்தார்.
வகுப்பு வாரி உரிமை என்றால் என்ன?
சமூகத்தில் மேற்ஜாதி, கீழ்ஜாதி இரு வகுப்பினரிடையே பகைமை நீங்கி நம்பிக்கை ஏற்படவும், ஒருவர் பாத்தியதையில் மற்றொருவர் பிரவேசிக்காதபடி பந்தோபஸ்து ஏற்படுத்துவதும்தான் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம்
என்று தூய தமிழில் சொல்லாமல் புரியும் தமிழில் பெரியார் கூறிய விளக்கத்தை ஊன்றிப் படியுங்கள். இருவருக்கிடையில் பகைமை நீங்க வேண்டும் என்பதில், எதிரியாக வேண்டாம்: உடன்பிறப்பு உறவோடு பாகப்பிரிவினை செய்யலாம் என்ற மனிதநேயமும், ஒருவர் பாத்தியதையில் மற்றொருவர் புகக்கூடாது என்பதில், இருபக்கத்தாரையும் மதிக்கும் நேர்மையும் பெரியாருக்கே உரியன.
வகுப்புவாரி உரிமை இந்திய மக்கள் அனைவரும் ஒன்றே என்ற தேச ஒற்றுமையில் பிளவை ஏற்படுத்திவிடும் என்று வகுப்புவாரி உரிமைக்கு எதிராகப் பேசியவர்கள் அன்றும் இருந்தார்கள். அவர்களுக்குப் புரியும்படிதான் ‘குடும்பச் சொத்தை ஒருவனே அனுபவிப்பது கொடுமை’ என்றும், குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் ‘பாத்தியதை’ உண்டு என்றும், ஒருவன் பங்கில் மற்றவன் தலையிடாதபடி ‘பந்தோபஸ்து’ செய்யவேண்டும் என்றும் பெரியார் கூறினார். ஒவ்வொருவருக்கும் உரிய பாத்தியதையைச் சட்டப்படி பந்தோபஸ்து (சட்டப் பாதுகாப்பு) செய்வதுதான் பெரியார் விரும்பிய வகுப்புவாரி உரிமைச் சட்டம். இந்தக் கருத்தின் தொடர்ச்சியாகத்தான் பெண்ணுக்கும் சொத்துரிமை கொடுக்கப் போராடியவர் பெரியார்.
இட ஒதுக்கீடு வரலாறு
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழ் நாட்டில் பார்ப்பனரால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கங்கள் பற்பல, ஆங்காங்கே தோன்றலாயின. இக்கருத்தின் வடிவாக்கத்தில் எழுந்த பெரிய இயக்கம்தான் நீதிக்கட்சி என்ற ஜஸ்டிஸ் பார்ட்டி. இந்தச் சமயத்தில் இந்தியா ஆங்கில அரசின் நேரடி ஆட்சியில் இருந்தாலும், உள்ளூர் நிர்வாகத்திற்கான ஆட்சியையும் அமைச்சரவையையும் இந்தியரே அமைத்துக் கொள்ள ஜனநாயகத் தேர்தல்களை ஆங்கில ஆட்சியாளர் அறிமுகம் செய்திருந்தனர். இந்த ஏற்பாட்டில் தமிழ் நாட்டில் பெரியார் ஆதரவு பெற்ற நீதிக்கட்சியின் ஆட்சி நடைபெற்றது.
நீதிக்கட்சி ஆட்சியில்தான் தமிழ் நாட்டில் முதல் முதலாக வகுப்புவாரி உரிமைச் சட்டம் 1928ஆம் ஆண்டில் அமைச்சர் முத்தையா என்பவரால் கொண்டுவரப்பட்டது. இதன் பயனாய்க் கல்வி, அரசுப்பணிகளில் பார்ப்பனரல்லாதவர்களுக்கு வாய்ப்புப் பெருகியது. நாடு விடுதலை பெற்று அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும்வரை (1950 வரை) ஆங்கிலேயர் ஆட்சியில் நீதிக்கட்சி உருவாக்கிய இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது.
காங்கிரஸ் கட்சியில்
இட ஒதுக்கீட்டிற்குத் தடை
1950இல் இட ஒதுக்கீடு காரணமாகப் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்காத பார்ப்பன மாணவர் சார்பாக (அவர் வழக்குத் தொடுக்காமலே) சில பார்ப்பன வழக்கறிஞர்கள் உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். சென்னை அரசாங்கத்தின் இட ஒதுக்கீட்டுச் சட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்ற அவர்கள் வாதத்தை ஏற்ற உயர்நீதி மன்றம் இடஒதுக்கீட்டுச் சட்டத்திற்குத் தடை விதித்தது. டில்லி உச்சநீதிமன்றமும் இந்தத் தடையை உறுதி செய்தது. நினைத்துப் பாருங்கள் 1928 முதல் இருபதாண்டுகள் ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழருக்குக் கிடைத்த உரிமை. காங்கிரஸ்காரர் ஆட்சியில் பறிக்கப்பட்டது என்றால் இவர்களில் யார் அந்நியர்? என்ற பெரியாரின் கேள்வி சரியானது தானே?
பெரியார் வெகுண்டெழுந்தார்
உச்சநீதி மன்றத் தீர்ப்பையறிந்து பெரியார் கொதித்தெழுந்தார். தமிழகம் முழுவதும் போராட்டம், கடையடைப்பு, அரசு அலுவலக மறியல் என இயல்பு வாழ்க்கை தடம்புரண்டது. தமிழ் நாட்டார். வட நாட்டார் பேத உணர்ச்சி தலை தூக்கியது. அன்றைய இந்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலுக்கு இட ஒதுக்கீடுக் கொள்கையில் உணர்வு பூர்வமாக உடன்பாடிருந்தது. பெரியார் தலைமையில் பெருங்கிளர்ச்சி செய்த தமிழ் நாட்டு மக்களுணர்வை இந்திய அரசு எற்றது. 1951ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தமாக இட ஒதுக்கீட்டுக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் முன் னேற்றத்திற்கு அரசு செய்யும் எந்த ஏற்பாட்டையும் அரசியலமைப்புச் சட்டம் தடை செய்யாது
என்பதே இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்ட அரசியலமைப்புச் சட்ட திருத்த வரிகள். பெரியார் இல்லாதிருந்தால் இன்று எழுதுகோல் பிடித்து எழுதிக்கொண்டிருக்கும் எண்ணற்ற தமிழர்களின் கைகள் இன்றும் அவரவர் தொழில் கருவியைத்தான் தூக்கியிருக்கும்

